என் மலர்
உலகம்

ரோந்து கப்பலில் கச்சத்தீவு சென்ற இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே.
கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன் -இலங்கை அதிபர் திட்டவட்டம்
- இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது.
- இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்தார். இதையொட்டி அவர் யாழ்ப்பாணம் மயிலட்டி துறைமுகத்தை பார்வையிட்டு அங்கிருந்து நெடுந்தீவு சென்றார்.
நெடுந்தீவில் இருந்து கடற்படை ரோந்து கப்பல் மூலமாக இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் உள்ள கச்சத்தீவுக்கு அவர் சென்றார். அங்கு கச்சத்தீவை பார்வையிட்டார்.
பின்னர் அங்கு கடற்கரையோரம் மரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு குறித்து சிறிது நேரம் பேசினார். தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் புறப்பட்டு வந்தார்.
கச்சத்தீவு சென்ற இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே, அந்நாட்டு அதிகாரிகள், கடற்படையினருடன் ஆலோசனை நடத்திய காட்சி.
இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக்கூறி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடப்பதால் கச்சத்தீவை திரும்ப பெற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இலங்கை அதிபரின் கச்சத்தீவு வருகை பரபரப்பாக பேசப்படுகிறது.






