என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சசிகாந்த் செந்தில்
- சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
- சசிகாந்த் செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதம் இருந்த சசிகாந்த் செந்திலுக்கு கடந்த 30-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், 4 நாட்கள் நீடித்த உண்ணாவிரத போரட்டத்தை சசிகாந்த் செந்தில் நேற்று முடித்துக்கொண்டார்.
காங்கிரஸ் மேலிடம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சசிகாந்த் செந்தில் நேற்று இரவு உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தார்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மருத்துவமனைக்கு சென்று பழச்சாறு கொடுத்து நிலையில் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.






