என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும்.
    • தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கடலூர்:

    கடலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம், டாக்டர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், போக, போக தெரியும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், நான் அரசியல் வியாதியும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. சமூக சீர்திருத்தவாதி என்றார்.

    முன்னதாக கடலூர் அருகே ராமாபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டாக்டர் அன்புமணி பற்றிய கேள்விக்கு, சொல்வதற்கு ஏதும் இல்லை. எதுவும் இல்லை. அரசியல் விஷயங்கள் எல்லாம் போக, போக தெரியும். எதுவும் சொல்லக்கூடாது என்றார்.

    அதைத்தொடர்ந்து பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபிநாத் வீட்டுக்கு சென்ற அவர் அவரது இரட்டை குழந்தைகளில், ஒன்றை எடுத்து கொஞ்சியபடி தாலாட்டு பாடினார். காலை எழும் சூரியனே , ஆராரோ, ஆரிராரோ என்று பாடினார்.

    இந்த தாலாட்டு பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
    • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்கிறது.

    வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வந்த நிலையில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    அதனை அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா முழுவதும் பரவி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக் கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும்.
    • உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.

    பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,

    கட்டாய உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வை எழுதி தகுதி பெற வேண்டும்.

    தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்றதாக கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். சில குறைபாடுகளால் தேர்வை எழுத முடியாத ஆசிரியர்களின் கோரிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

    ஆசிரியராக பணியில் சேர விரும்புவோரும், ஆசிரியர் பணியில் உயர்வை விரும்புவோரும் இந்த தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * டெட் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் ஆசிரியர்களை ஒருபோதும் தமிழக அரசு கைவிடாது.

    * உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.

    * உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.
    • மனம் திறந்து பேசப்போகிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

    இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், வருகிற 5-ந்தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    மேலும், என்ன கருத்து சொல்லப்போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம், அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

    • நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இது பெரும்பாலும் மலைகள் நிறைந்த இடமாகும்.

    இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை ஆகும். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

    நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,500 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் பெஹிர் தெரிவித்துள்ளார்.

    • மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
    • நடிகர் சவுபின் சாகிருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கோர்ட்டு விதித்திருந்தது.

    தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.

    அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து இருந்தார். தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த படி, 40 சதவீத லாப பங்கு கிடைக்கவில்லை என்றும், இந்த மோசடியால் ரூ.47 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையில் இறங்கியது. மஞ்சுமெல் பாய்ஸ் பட புகார் குறித்தும், படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கறுப்பு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தது.

    இந்த நிலையில் அந்த படத்தின் நடிகரும், மற்றொரு தயாரிப்பாளருமான சவுபின் சாகிரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.

    நிதி மோசடி வழக்கில் கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே அவருக்கு முன்ஜாமின் வழங்கியிருந்ததால் போலீசார் அவரை விடுவித்தனர். மேலும் அந்த வழக்கில் நடிகர் சவுபின் சாகிருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கோர்ட்டு விதித்திருந்தது.

    இந்தநிலையில் துபாயில் நடக்க உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர் சவுபின் சாகிர் திட்டமிட்டார். அதில் பங்கேற்பதற்கு துபாய் செல்ல அனுமதிக்குமாறு கொச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஆனால் அவரது மனுவை கோர்ட்டு நிராகரித்தது. நடிகர் சவுபின் சாகிர் துபாய் செல்ல கோர்ட்டு தடை விதித்தது. "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தின் தயாரிப்பில் நடந்த நிதி மோசடி வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்திருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சவுபின் சாகிர் துபாய் செல்ல கோர்ட்டு தடை விதித்துள்ளது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே கேரள உயர்நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்து வெளிநாடு செல்ல அனுமதி கோர சௌபின் சாகிர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
    • அகவிலைப்படி அதிகரிப்புடன், பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப் படியும் அதிகரிக்கும்.

    புதுடெல்லி:

    7-வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும்.

    மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

    அதன்படி 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். தொழிலாளர் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் விலைக் குறியீடு 145 ஆக இருந்தது. 2024ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் 2025 ஜூன் மாதம் வரையிலான 12 மாத சராசரி குறியீடு 143.6 ஆகும்.

    மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

    கடந்த ஜனவரிக்குப் பின் புள்ளியியல் துறை எடுத்த கணக்கீடுப்படி, விலைக்குறியீடானது ஜனவரியில் 56.3 என்று இருந்தது. பிப்ரவரியில் 56.6 என்றும், மார்ச்சில் 57.0 ஆகவும், ஏப்ரலில் 57.6 ஆகவும், மே மாதத்தில் 57.8 ஆகவும் உயர்ந்தது. ஜூனில் இது 58.17 ஆக அதிகரித்து உள்ளது. எனவே இவ்விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.

    இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் ஜூலை 1 முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையாக வழங்கப்படும். ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுடைய சம்பளம் பெரிய அளவில் உயரும். அகவிலைப்படி அதிகரிப்புடன், பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப் படியும் அதிகரிக்கும்.

    இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும்.

    இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர்மட்டத்துக்கேற்ப வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் நீர்வரத்து காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து 4 முறை வீராணம் ஏரி நிரம்பியது. அதனை தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பியது மற்றும் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக குறைந்தது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டனர்.

    தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 2 அடியில் இருந்த கீழணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 9 அடியை எட்டியது.

    அதனை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.

    இதன் மூலம் நடப்பாண்டில் 5-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கீழணை, வீராணம் ஏரியில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். 

    • செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
    • தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோபி:

    அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.

    மீண்டும் 2011 ஆம் ஆண்டு வரை விவசாயத் துறை அமைச்சராக இருந்தார். அதை த்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

    இப்படி அ.தி.மு.க.வின் மிக முக்கிய தலைவராக இருந்து வந்த செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த பாராட்டு விழாவில், விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அனைத்து இடங்களிலும் பேசி வந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறைமுகமாகவே மேடைகளில் பேசி வந்தார்.

    இதற்காக கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறிப்பாக ஜெயலலிதா, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இருந்த காலகட்டங்களில் அப்போதைய கூட்டணிகள் தொடங்கி கடந்த காலங்கள் வரைக்கும் குறிப்பிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார்.

    ஆனால் அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கிய போது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார்.

    கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம் வரும் 5-ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார்.

    மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2, 3 மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ.செங்கோட்டையனின் தற்போதைய நிலைப்பாட்டால் அ.தி.மு.க.வில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது. அவர் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதற்கிடையே இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் வந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,725-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 36ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280

    28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    30-08-2025- ஒரு கிராம் ரூ.134

    29-08-2025- ஒரு கிராம் ரூ.131

    28-08-2025- ஒரு கிராம் ரூ.130

    • இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை அடிக்கடி சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த கிராம மக்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    ×