என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடகா மழை"
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
- கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர்:
கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது.
இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. பின்னர் ஜூலை 20-ந் தேதி 3-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து ஜூலை மாதம் 25-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மேட்டூர் அணை 5-வது முறையாக நிரம்பியது.
பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக குறைந்தது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயரத்தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 6-வது முறையாக இன்று காலை நிரம்பியது. அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணை வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் அணை 6-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியும் என மொத்தம் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணையை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
- பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி கொட்டி வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் தட்சிணகன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மற்றும் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்தமழை கொட்டி வருகிறது. இதனால் அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் மலையோர மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள பல்குனி ஆறு, குமாரதாரா ஆறு, நேத்ராவதி ஆறுகளிலும் தண்ணீர் இருகரைகளை தொட்டப்படி கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகாவில் கொட்டி வரும் மழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கொட்டி வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி, ஹாரங்கி, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடம் மாவட்டம் புட்டிகே அருகே எருகுண்டி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் 6 பேர் பலத்த மழை காரணமாக பாறையில் சிக்கி கொண்டனர். இதையடுத்து அவர்களை உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து வடக்கு கர்நாடகாவின் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
மழை காரணமாக மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள எச்சகள்ளியில் மின் கம்பியை மிதித்த சித்தராஜூ (55), என்பவர் பலியானார். இதே போல் பெலகாவி மாவட்டம் கோகாக்காவின் மகாலிங்கேஷ்வர் காலனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கிருத்திகா நாகேஷ் பூஜாரி என்ற 3 வயது சிறுமி பலியானார்.
- மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
- பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு சாலைகளில் ஏற்பட்ட சேதத்தினால் வாகனம் ஓட்ட முடியாமல் உடல் மற்றும் மனா ரீதியாக பாதிப்பு அடைந்ததாக கூறி பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் "நான் வரி செலுத்தும் ஒரு குடிமகன். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நகரின் அடிப்படை உள்கட்டமைப்பை பராமரிக்க தவறியுள்ளது. பெங்களூரு நகரின் இந்த மோசமான சாலைகளில் பயணிக்கும்போது உடல் ரீதியான துன்பங்களையும் மன வேதனையையும் எதிர்கொண்டேன். இதனால் ஏற்பட்ட கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக, எலும்பியல் மருத்துவமனைக்கு ஐந்து முறை சென்றேன். எனக்கு 4 முறை அவசர சிகிச்சை அளித்தனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நோட்டீஸுக்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் எதுவும் வரவில்லை.
- மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை கொட்டிய கனமழை காரணமாக நகரமே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் ரெயில்வே பாலங்கள், முக்கிய சந்திப்புகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. இந்த மழையின் காரணமாக வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து பணிகள் முடுக்கி விடப்பட்டு சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம் அகற்றப்பட்டது. மேலும் மின் கம்பங்களும் சரி செய்யப்பட்டது. சாய்ந்து விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளும் வெட்டி அகற்றப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் போல் காட்சி அளித்தது. மேலும் சில சாலைகளில் பள்ளங்கள் தெரியாத அளவுக்கு 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்தன. வாகன ஓட்டிகளும் கீழே விழுந்த சம்பவங்கள் நடந்தது. நேற்று விடுமுறையை கொண்டாடிவிட்டு வீடுகளுக்கு திரும்பியவர்கள் மழையில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையின் காரணமாக எம்.ஜி.சாலை, விதான் சவுதா, சாந்தி நகர், கே.ஆர்.பகுதியைச் சுற்றி தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகளும் ஒடிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் மின் தடையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு வருகின்ற 22-ந் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், மழை பெய்யும்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பெங்களூருவில் பெய்து வரும் மழையின் காரணமாக சராசரி வெப்பநிலை குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இதேபோல் தார்வாட், உத்தர கன்னடம், பெல்லாரி, விஜயபுரா மற்றும் பெலகாவி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
- மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
- தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.
பெங்களூரு:
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. கர்நாடகாவின் தலைநகராக இருக்கும் பெங்களூரு ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவர் ராஜகால்வாயில் சென்ற வெள்ளத்தில் விழுந்தும் உயிரிழந்தனர்.
மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே பெங்களூரு, குடகு, சாம்ராஜ்நகர், துமகூரு, மண்டியா, சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ராமநகர் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. ராஜாஜிநகர், மல்லேசுவரம், ஜெயநகர், யஷ்வந்தபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது. பிற்பகலில் பெய்ய தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடைவிடாது கொட்டியது. இதனால் சுரங்க சாலைகளை மழைநீர் மூழ்கடித்தது.
மேலும் சாலைகளில் ஆறுபோல் மழை வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பானசவாடி பகுதியில் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் விஜயநகர், எச்.ஏ.எல். விமான நிலைய சாலைகளில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சாங்கி ரோட்டில் உள்ள சுரங்க சாலையில் வெள்ளநீர் தேங்கியது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சுரங்க சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
பெங்களூரு வெளிவட்ட சாலையில் மாரத்தஹள்ளி பகுதியில் சாலையில் சுமார் 2 அடிக்கு மழைநீர் தேங்கியது. அதில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிரமத்துடன் ஊர்ந்து சென்றன. மேலும் மகாலட்சுமி லே-அவுட், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சென்றதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே பெங்களூரில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. தற்போது பெங்களூரு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் அதாவது கர்நாடகாவின் தெற்கு உள்பகுதி மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 5 நாட்களில் கேரளா, லட்சத்தீவுகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான பரவலான மழையும், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் தென்பகுதிகளில் பரவலாக மழையும் பெய்யக்கூடும். கர்நாடகாவின் பெங்களூரு, குடகு, மைசூர், உடுப்பி, கலபுரகி, சிவமொக்கா, சித்ரதுர்கா, ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூர், தட்சின கன்னடா மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






