search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road damaged"

    • மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
    • எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி உள்ளது. தேனி-ஆண்டிபட்டி மெயின்ரோ ட்டில் இருந்து சுமார் ½ கி.மீ. தூரத்தில் கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரியில் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராள மான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் தார் சாலை பெயர்ந்து கற்கள் காணப்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டிகளின் டயர் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது
    • மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர் .

    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் கிராமத்தில் உள்ள இணைப்பு சாலை வழியாக பாண்டியன் கரடு , நல்லாறு, மயிலாடும்பாறை, முள்ளுப்பாடி உள்ளிட்ட இடங்களுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது .அதற்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சாலை பழுது அடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள தோட்டத்து சாலைகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர்.

    எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இங்குள்ள தடுப்பணையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது.
    • சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார்.

    குனியமுத்தூர்:

    கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி என்ற நாகம்மாள்(வயது70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்.

    இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து நாகம்மாள், தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மகன் ராஜபாண்டி தாயை காரில் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். கார் சக்தி நகர் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு டெம்போ சென்றது.

    கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சக்தி நகர் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சாலையில் பள்ளங்கள் இருப்பது எதுவுமே தெரியவில்லை.

    அப்போது எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

    பின்னால் காரில் நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்து கொண்டிருந்தார். டெம்போ சென்றால் தான் அந்த இடத்தை விட்டு நகர முடியும் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜபாண்டி தவித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் டெம்போ மீட்கப்பட்டது. அதன்பின்னரே ராஜபாண்டி தனது தாயை அழைத்து கொண்டு வேக, வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆனால் நாகம்மாள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காரிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதனை அறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்து விட்டால் இதில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கும். இது தொடர்பாக எவ்வளவோ முறை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலாவது இந்த சாலையை முறையாக சீரமைத்து தருவதற்கு மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மோசமான சாலையால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாலைகளை சேதப்படுத்தும் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சீர்காழி:

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்சசித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீர்காழி ஒன்றியம் மருவத்தூரில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35.85 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் முதல் குமாரநத்தம் வரையில் சாலை அமைக்கும் பணிகளையும், எடக்குடி வடபாதி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.85 லட்சம் மதிப்பீட்டில் தென்பாதி மேலத்தெரு சாலை அமைக்கும் பணிகளையும், காத்திருப்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.70 இரட்டைவாய்க்கால் தூர்வாரும் பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார். மேலும் திருவெண்காடு முத்தையா நகரில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு (2017-18) நிதியின்கீழ் ரூ.10.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்காடி கட்டிடத்தையும், திருவாலி முதல் நெப்பத்தூர் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு (2017-18) திட்டத்தின்கீழ் ரூ.133.35 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை சோதனை செய்தார்.

    நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வயல்களில் உழவு பணிகளுக்காக டிராக்டர்களில் இரும்பு சக்கரத்தினை பொருத்தி சாலைகளின் வழியாக வயல்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதால் சாலைகள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டரை எடுத்துச் செல்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். மீறி சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டர்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகை மாவட்ட செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினா ராணி, பொறியாளர் முத்துகுமார், ஓவர்சியர் சந்திரசேகர், சாலை ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
    ×