search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru Rain"

    • பெல்லந்தூரில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழை நீர் நிரம்பியது.
    • கனமழையால் எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. பரவலாக பெய்த கனமழையால் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக, பெங்களூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வர்தூர் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒயிட்பீல்ட் டவுன்ஷிப் பகுதியில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. பல மழைநீர் வடிகால்கள் நிரம்பி அருகில் உள்ள பகுதிகளில் மழைநீர்புகுந்தது.

    மழை காரணமாக பெல்லந்தூர் ஏரி மட்டுமின்றி, ஹல்லேநாயக்கனஹள்ளி, வர்தூர் ஏரிகளும் நிரம்பின. கனமழையால் சாலைகள் தண்ணீரில் மூழ்கின. பெங்களூரு மாரத்தஹள்ளியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடுபிசனஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் தண்ணீர் புகுந்து பரபரப்பு ஏற்பட்டது.

    பெல்லந்தூரில் சாலைகள் தெரியாத அளவுக்கு மழை நீர் நிரம்பியது. கனமழையால் எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வர்தூரில் பெய்த கனமழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி தெருவே ஆறு போல் காட்சியளித்தது.

    மழையால் வர்த்தூர் சுற்றுவட்டாரப் பகுதிக்கு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், டவுன்ஹால், மாநகராட்சியை சுற்றிலும் மழை பெய்ததால், இரவில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பெங்களூருவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடம், தெற்கு உள்நாடு பெங்களூரு கிராமப்புறங்கள், பெங்களூரு நகரம், சிக்கபள்ளாப்பூர், கோலார் போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

    அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகா கடற்கரையில் மணிக்கு 40-45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பருவமழை காலத்துக்கு முன்கூட்டியே மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூருவில் கடந்த ஒரு மாதக்காலமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பேய் மழை கொட்டி வருகிறது. விடாமல் பெய்த மழையால் பெங்களூருவில் பல முக்கிய இடங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் எங்கும் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல, பல சுரங்கப் பாதைகளும் மழை நீரில் முழுவதுமாக மூழ்கியதால் அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கே.ஆர். சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை நிரம்பியிருந்த மழை நீரில் மூழ்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது பெய்து வரும் மழையாலும் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது போன்ற சம்பவங்களில் சிலர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.

    பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. மழையுடன் சேர்ந்து சூறைக்காற்றும் வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சரிந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்களும் சேதம் அடைந்ததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவாசிகள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இன்றும் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. பெங்களூரு மட்டுமின்றி, பழைய மைசூரு பகுதியும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் கிளைகள் உயர் அழுத்த மின்கம்பிகளில் மோதியதால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெங்களூருவின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சிலிக்கான் சிட்டி பகுதியில் 4 அடி ஆழ பள்ளம் உருவானது. இது கடந்த 15 நாட்களில் உருவாகும் மூன்றாவது பள்ளமாகும். இந்த பள்ளங்களால், நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நகரின் போக்குவரத்து பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. கன மழை காரணமாக கடந்த 3 மாதங்களில் 56 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த மழை பாதிப்பில் இருந்து பெங்களூரு மக்களை மீட்பதற்காக போர்க்கால நடவடிக்கைகளை தொடங்குமாறு நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். மேலும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் 60-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு அறைகளை திறக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

    அதன்படி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த கட்டுப்பாட்டு அறைகளில் தொடக்கத்தில் 63 துணைப்பிரிவு அலகுகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜூன் 1-ந் தேதிக்குள் அவை செயல்பாட்டுக்கு வரும்.

    • பெங்களூரு இந்திராநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • பெங்களூரு மத்திகெரே பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழை பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

    வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சர்ஜாப்புரா ரோட்டில் சாலையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரெயின்போ லே-அவுட் அருகே உள்ள ஒரு கிரானைட் கற்கள் விற்பனை கடையில் வெள்ளம் புகுந்ததால் அந்த கடை முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதுபோல பஸ் நிறுத்தமும் தண்ணீரில் மிதக்கிறது. சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    விப்ரோ நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 50 கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதுபோல சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள கன்ட்ரிசைட் என்ற அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியும் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் அந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளன. சர்ஜாப்புரா ரோட்டில் தேங்கி இருந்த மழைநீரில் ஒரு சொகுசு கார் சிக்கி கொண்டது. இதனால் அந்த காரில் வந்தவர்கள் காரை சாலையில் விட்டுவிட்டு சென்று விட்டனர். பெங்களூருவை பொறுத்தவரை கோடீஸ்வரர்களின் உலகம் எனலாம். 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், கோடீஸ்வரர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர். இந்த பெரும் பணக்காரர்களையும் கன மழை வெள்ளம் அவர்களை சாதாரண மக்களை போல தத்தளிக்கும் நிலைக்கு ஏற்படுத்திவிட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த தொழில் அதிபர்கள் பெரும்பாலோர் படகுகளில் மீட்கப்பட்டனர்.

    அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இவர்கள் அறை எடுத்து குடும்பத்தோடு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் முக்கிய ஓட்டல்கள் 10 முதல் 15 நாட்களுக்கு முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓட்டல்களில் அறைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஒரு தொழிலதிபர் ஒரு ஹோட்டலில் நான்கு பேருக்கு ஒரு இரவுக்கு ரூ.42ஆயிரம் கொடுத்து தங்கினார்.

    மழை வெள்ளம் அதிகமாகி உள்ளதால் மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களின் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேரை இவர்கள் மீட்டனர்.

    பெங்களூரு இந்திராநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் உண்டானது. பெங்களூரு மத்திகெரே பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இதில் மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார்கள் சேதம் அடைந்தன. பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கனமழை பெய்து வருவதால் பெங்களூரு மகாதேவபுரா பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. அப்பகுதியில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம் அடைந்தன. இதனால் கடந்த 3 நாட்களாக மகாதேவபுராவில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு அருகே அமைந்துள்ளது நந்தி பெட்டா மலைப்பகுதி. இந்த பகுதி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது. இந்த மலையில் கனமழையால் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    துமகூரு மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் சேலூரில் 11 வீடுகள், சி.எஸ்.புராவில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மதுகிரி தாலுகாவில் 170 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. ஷிரா தாலுகா கல்லம்பெல்லாவிலும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

    கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகா தொண்டேஹல்லா கிராமத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் பெயர்கள் மகேஷ், நிங்கப்பா ஆகும். இவர்கள் 2 பேரும் கதக் மாவட்டம் முண்டரகி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.

    எலபுர்காவில் நடந்த விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிக்கு வந்துவிட்டு திரும்பிய போது அவர்கள் உயிரிழந்து உள்ளனர். பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் பெய்த கனமழைக்கு கோழி பண்ணையில் தண்ணீர் புகுந்ததால் 12 ஆயிரம் கோழிகள் செத்தன.

    அதுபோல கே.ஆர்.புரத்தில் பெய்து வரும் கனமழைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. விதான சவுதாவின் தரைதளத்திற்கு கீழ் உணவகத்தில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் விதான சவுதா வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் போலீஸ் நிலைய கட்டிடங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது.

    இதனால் அங்கு இருந்த மருந்து-மாத்திரைகள் மற்றும் பொருட்கள் நீரில் கலந்து சேதம் அடைந்தன.

    ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள ஷிலவந்தகெரே, வர்த்தூர் ஆகிய ஏரிகள் உடைந்தன. இதனால் ஏரிகளில் இருந்து வெள்ளம் சீறிப்பாய்ந்த தண்ணீர் டி-சைட் அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்தது. இதனால் தரைமட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதுபற்றி அறிந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று அந்த குடியிருப்பில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். பரிசல்கள், பொக்லைன் எந்திரங்களும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்கள் மூலமும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் மீட்கப்பட்டனர். சில இடங்களில் டிராக்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

    ஏரிகள் உடைப்பு காரணமாக பெல்லந்தூர், காடுகோடி, சர்ஜாப்புரா ரோடு, ராமகொண்டனஹள்ளி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இதனால் அந்த குடியிருப்புகள் தீவு போல் காட்சி அளிக்கிறது. அந்த குடியிருப்புகளில் உள்ள சுமார் 4 ஆயிரம் வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோல உரமாவு பகுதியில் சாய் லே-அவுட்டில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பெங்களூரு-சென்னை சாலையில் உள்ள ஏராளமான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் 2 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது.

    கர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 15 மாவட்ட கலெக்டர்களுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். உத்தர கர்நாடகா, தக்சின் கர்நாடகாவிற்கு இன்று தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட். பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரில் அதிக டிராபிக் ஏற்படும் முக்கிய சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் தேங்கியது.
    • பாலத்திலேயே பல்வேறு வாகனங்கள் சிக்கின. இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் மழை கொட்டித்தீர்த்தது.

    இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பின. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனமழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து அந்த நகருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    கடந்த 30-ந் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. லேசான மழை பெய்தாலே இங்கு தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று இரவு 3 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 125 மிமீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் மழை பெய்த சில நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் நேற்று அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    பெங்களூரில் இன்று 3-வது நாளாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று அலுவலகம் சென்ற பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பெங்களூரில் அதிக டிராபிக் ஏற்படும் முக்கிய சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பாலத்திலேயே பல்வேறு வாகனங்கள் சிக்கின.

    இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாகப் பெங்களூரில் பல முக்கிய பகுதிகளில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சில கி.மீ. தூரத்தைக் கடக்கவே மணிக்கணக்கில் நேரம் ஆனது.

    மேலும், பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிக்கள் போதிய அளவு இல்லாததால் நகரமே முடங்கியது. சாலைகளில் நீர் அதிகம் தேங்கி இருந்ததால், மக்களால் நடந்தும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. டிராக்டர் செல்ல முடியாத இடங்களில் சிறிய படகுகள் மூலம் மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 8 ஆண்டுகளில் அங்கு ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையில் இருந்தே பெங்களூர் இப்போது தான் மெல்ல மீண்டு வந்த நிலையில், இது மற்றொரு அடியாக விழுந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலைகளில் வாகனங்களே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த கனமழையால் சில ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என முன்கூட்டியே அறிவித்துவிட்டது.

    ஆனால், பல நிறுவனங்கள் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லை இதனால் பல ஐ.டி. ஊழியர்கள் வேறு வழியின்றி அலுவலகத்திற்குச் சென்றனர். பெங்களூரில் பல பகுதிகளில் இருக்கும் ஐ.டி. ஊழியர்கள் டிராக்டர்களில் தான் அலுவலகம் சென்றுள்ளனர். இதற்காக டிராக்டர்கள் ஒரு நபருக்கு தலா ரூ.50 வசூலித்தனர்.

    கர்நாடகத்தில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கர்நாடக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 நாட்கள் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, வட கர்நாடகத்தில் பாகல்கோட்டை, பெலகாவி, பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, தென்மாவட்டங்களில் பல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்புரா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×