search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3-வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: ஐ.டி.ஊழியர்கள் டிராக்டரில் பணிக்கு சென்றனர்

    • பெங்களூரில் அதிக டிராபிக் ஏற்படும் முக்கிய சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் தேங்கியது.
    • பாலத்திலேயே பல்வேறு வாகனங்கள் சிக்கின. இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் மழை கொட்டித்தீர்த்தது.

    இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பின. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனமழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து அந்த நகருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    கடந்த 30-ந் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. லேசான மழை பெய்தாலே இங்கு தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று இரவு 3 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 125 மிமீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் மழை பெய்த சில நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் நேற்று அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    பெங்களூரில் இன்று 3-வது நாளாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று அலுவலகம் சென்ற பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பெங்களூரில் அதிக டிராபிக் ஏற்படும் முக்கிய சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பாலத்திலேயே பல்வேறு வாகனங்கள் சிக்கின.

    இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாகப் பெங்களூரில் பல முக்கிய பகுதிகளில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சில கி.மீ. தூரத்தைக் கடக்கவே மணிக்கணக்கில் நேரம் ஆனது.

    மேலும், பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிக்கள் போதிய அளவு இல்லாததால் நகரமே முடங்கியது. சாலைகளில் நீர் அதிகம் தேங்கி இருந்ததால், மக்களால் நடந்தும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. டிராக்டர் செல்ல முடியாத இடங்களில் சிறிய படகுகள் மூலம் மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 8 ஆண்டுகளில் அங்கு ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையில் இருந்தே பெங்களூர் இப்போது தான் மெல்ல மீண்டு வந்த நிலையில், இது மற்றொரு அடியாக விழுந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலைகளில் வாகனங்களே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த கனமழையால் சில ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என முன்கூட்டியே அறிவித்துவிட்டது.

    ஆனால், பல நிறுவனங்கள் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லை இதனால் பல ஐ.டி. ஊழியர்கள் வேறு வழியின்றி அலுவலகத்திற்குச் சென்றனர். பெங்களூரில் பல பகுதிகளில் இருக்கும் ஐ.டி. ஊழியர்கள் டிராக்டர்களில் தான் அலுவலகம் சென்றுள்ளனர். இதற்காக டிராக்டர்கள் ஒரு நபருக்கு தலா ரூ.50 வசூலித்தனர்.

    கர்நாடகத்தில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கர்நாடக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 நாட்கள் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, வட கர்நாடகத்தில் பாகல்கோட்டை, பெலகாவி, பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, தென்மாவட்டங்களில் பல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்புரா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×