என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
    • தொடர்ந்து 30-ந்தேதி வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டாக்டர் அன்புமணி தலைமையிலான பா.ம.க. இடம் பெற்றுள்ளது.

    இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தார்கள்.

    விருப்ப மனு கொடுத்திருந்தவர்களிடம் டாக்டர் அன்புமணி இன்று நேர்காணல் நடத்தினார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இன்று காலையில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.

    பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.

    நாளை (28-ந்தேதி) காலையில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும் மாலையில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும் நடக்கிறது.

    தொடர்ந்து 30-ந்தேதி வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.

    • தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
    • கூட்டுறவு வேளாண் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் 3 குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த குவாரிகளில் இருந்தும், அருகில் உள்ள ஓ.துலுக்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குவாரிகளில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.

    இந்த லாரிகள் அனைத்தும் மருதம்புத்தூர் வழியாக ஆலங்குளத்தை அடைந்து அங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை கண்டபட்டி விலக்கு பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து கனிமவளத்தை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று ஆலங்குளம் நோக்கி புறப்பட்டு சென்றது.

    கண்டபட்டி விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே வந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை லாரி டிரைவர் மீது வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் லாரியை ஓட்டிவந்த செங்கோட்டையை சேர்ந்த டிரைவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு லாரியில் இருந்த 2 டிரைவர்கள் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் ஓட்டி வந்த லாரியை அதே இடத்தில் விட்டு விட்டு சென்றால் மர்ம நபர்கள் அதனை சேதப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மருதம்புத்தூர் ஊருக்குள் மெயின்ரோட்டில் ஓரமாக நிறுத்திவிட்டு ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் இருக்கை தீயில் கருகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வேளாண் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த தாக்குதல் டிரைவர் மீது தனிப்பட்ட முறையிலான கோபத்தில் நடைபெற்றதா என்று கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருதம்புத்தூர் கிராமம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், அதனால் அவதியுறும் பொதுமக்களில் யாரேனும் இளைஞர்களை திரட்டி இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.
    • அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.

    நந்தம்பாக்கம்:

    சென்னை நந்தம்பாக்கத்தில் மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    * இந்தியாவிலேயே பெண்கள் அதிகளவில் பணிக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு.

    * ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகளவில் வெளியில் வரவேண்டும். புதிய துறைகளில் பெண்கள் இணைய வேண்டும்.

    * பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும்.

    * பெண்கள் தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்கள் முன்னேறாவிடில் நாடு முன்னேறாது.

    * பெண்களின் பாதுகாப்பிற்காக தோழி விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    * பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் என தி.மு.க. அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளது.

    * பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

    * புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் என பல...

    * கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.

    * அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.

    * பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

    * மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டம்.

    * கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    * இதுவரை 3 லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.

    * மார்பக புற்றுநோய் பிரத்யேக சிகிச்சைக்காக ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

    * பெண்கள் பணிக்கு செல்வதற்காக குழந்தைகள், வயதானவர்களை கவனிக்க பாதுகாப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

    • பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.

    முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு தெப்பத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் வழியாக சுவாமி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் எழுந்தருள தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன்.
    • மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தே.மு.தி.க. நிச்சயமாக செய்து கொடுக்கும்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் கேப்டன் ரத யாத்திரை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பிரசாரத்தில் விஜய பிரபாகரன் பேசுகையில், கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு நம் கையை விட்டு சென்றாலும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக தே.மு.தி.க. வெற்றி பெரும் என்றார்.

    அவரைத் தொடர்ந்து பிரேமலதா பேசியதாவது:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன். அவர் தொடங்கிய அன்னதானத் திட்டத்தை தற்பொழுது வரை கேப்டனின் கோவிலில் தினமும் நடைபெற்று வருகிறது. கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்ட மக்களின் சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தான் வெற்றி பெற்றார். ஆனால் அறிவிக்கப்பட்டது வேறொருவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கூடிய தொண்டர்கள் மூலம் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது.

    கேப்டன் விஜயகாந்த் விட்டுச்சென்ற பணியை இதுவரை அண்ணியாக இருந்து செயல்படுத்தி வந்த நான், இனிமேல் அம்மாவாக மக்களின் குறைதீர்க்க பாடுபடுவேன். மக்கள் விரும்பும் கூட்டணியையே தே.மு.தி.க. கையில் எடுக்கும் என்றும் தே.மு.தி.க. இணையும் கூட்டணியை நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும். அப்பொழுது மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தே.மு.தி.க. நிச்சயமாக செய்து கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொட்டுராஜா மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகள் உட்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
    • காவல்துறையினர் கொட்டு ராஜாவை மங்களமேடு சுங்கச்சாவடிக்கு அருகிலுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    என்கவுண்டர் குறித்த தகவல் அறிந்த மத்திய மண்டல போலீஸ் ஜ.ஜி. பால கிருஷ்ணன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனவரி 24-ந்தேதி, காவல் உதவி ஆய்வாளரும் ஒரு பாதுகாப்புப் படையினரும் குற்றம்சாட்டப்பட்ட வெள்ளைகாளியை திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அந்த அணி மதிய உணவிற்காக நின்றிருந்தபோது, வெள்ளைகாளி மீது ஒரு கும்பல் காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது.

    இந்தச் சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளைத் தேடுவதற்காக 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகளில் சிலர் ஊட்டியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் ஊட்டிக்குச் சென்று பலரை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

    அவர்களில் ஒருவர் கொட்டுராஜா என அடையாளம் காணப்பட்டார். அவர் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொட்டு ராஜாவிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் கைது செய்யப்பட்டார். மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை மீட்க, காவல்துறையினர் கொட்டு ராஜாவை மங்களமேடு சுங்கச்சாவடிக்கு அருகிலுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    ஆயுதங்களை மீட்கும் பணியின்போது, கொட்டு ராஜா காவல்துறையினர் மீது ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினார். அது ஒரு காவல் வாகனத்தின் மீது பட்டு சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் கொட்டுராஜா உதவி ஆய்வாளர் சங்கர் என்பரை ஆயுதத்தால் தாக்கி, அவரது கையில் காயத்தை ஏற்படுத்தினார். தற்காப்புக்காக, மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொட்டுராஜாவை சுட்டார்.

    கொட்டு ராஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் அறிவுரையின்பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் .
    • கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும்.

    தமிழக வெற்றிக்கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம், ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன்,

    யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் . என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தானே தெரியும். யாருடன் கூட்டணி பேச்சு என்பதை சொல்லாமல் இருப்பது தான் சரி.

    டி.டி.வி. தினகரன் சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம்.

    ராமதாசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இப்போதுதான் செய்தி வந்தது. கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும் என்றார். 

    • அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் இதை வீடியோவாக பதிவு செய்தனர்.
    • கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு மரத்தில் இருந்த சிறுத்தை கீழே இறங்கி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள், புலி, சிறுத்தை உலா வருவது வழக்கம் .

    சத்தியமங்கலம் அடுத்த புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அருகே சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    இங்குள்ள பண்ணாரி அம்மன் சோதனை சாவடியில் 24 மணி நேரமும் வனத்துறையினர், போலீசார் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே சாலையோரம் ஒரு மரத்தின் மீது சிறுத்தை அமர்ந்திருந்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த மரத்தின் மீது சிறுத்தை வெகு நேரமாக அமர்ந்திருந்தது.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் இதை வீடியோவாக பதிவு செய்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு மரத்தில் இருந்த சிறுத்தை கீழே இறங்கி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலை அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. முதன் முறையாக கடந்த மாதம் 15-ந்தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர், சற்று குறைந்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.

    கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.12,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக உயர்ந்து கடந்த 13-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்தை கடந்து ரூ.13,120 ஆக இருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக தங்கம் விலை ஏறு முகத்திலேயே பதிவாகி வருகிறது. அதன்படி, கடந்த 21-ந்தேதி கிராமுக்கு ரூ.515 உயர்ந்து ரூ.14 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் கிராம் ரூ.14,415-ம், சவரனுக்கு ரூ.1,15,320 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

    22-ந்தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கும், சவரன் ரூ.1,13,600 ஆகவும் விற்பனையானது. 23-ந்தேதி கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,550, சவரன் ரூ.1,16,400 என்று விற்பனை செய்யப்பட்டது. 24-ந்தேதி கிராம் ரூ.200 அதிகரித்து ரூ.14,750 ஆகவும், சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனையானது. 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது.

    வரலாற்றில் முதன் முறையாக நேற்று தங்கம் விலை கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2,200-ம் அதிகரித்தது. அதன்படி, கிராம் ரூ.15,025-க்கும், சவரன் ரூ.1,20,200-க்கும் விற்பனையானது.

    கடந்த 25 நாட்களில் (1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில்) தங்கம் விலை கிராமுக்கு ரூ.2,585-ம், சவரனுக்கு ரூ.20,680-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.387-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,200

    25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

    24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

    23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400

    22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-1-2026- ஒரு கிராம் ரூ.375

    25-1-2026- ஒரு கிராம் ரூ.365

    24-1-2026- ஒரு கிராம் ரூ.365

    23-1-2026- ஒரு கிராம் ரூ.345

    22-1-2026- ஒரு கிராம் ரூ.340

    • ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு அரசு செலவில் இன்சூரன்ஸ் செய்து தரப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தபின் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

    * ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு அரசு செலவில் இன்சூரன்ஸ் செய்து தரப்படும் என்றார்.

    முன்னதாக, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அதிக காளைகளை பிடித்து சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.
    • அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த மோசடி பத்திர பதிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது. இந்த நிலையில், இந்த விதி சட்டமாக இல்லாததால், அந்த விதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் தமிழக அரசு, அசல் ஆவணம் கட்டாயம் என்ற பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. அதனை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 9-ந்தேதி ஜனாதிபதி முர்மு, அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி, பத்திரப்பதிவின் போது அசல் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது செயலில் உள்ள பிற எந்தச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல், சொத்துகள் தொடர்பான ஒரு ஆவணம் பதிவு செய்ய முன்வைக்கப்படும் போது பதிவு அதிகாரி, அந்தச் சொத்தில் உரிமை பெற பயன்படுத்தப்பட்ட முந்தைய மூல ஆவணத்தையும், மேலும் சமர்ப்பிக்கும் தேதிக்கு முன் 10 நாட்களுக்குள் பெறப்பட்ட அந்தச் சொத்திற்கான வில்லங்க சான்றிதழையும் கொடுக்கவில்லை என்றால், அந்த ஆவணத்தை பதிவு செய்ய மாட்டார்.

    சொத்து குறித்த விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்படாதிருந்தால், அந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட செயல்பாடுடன் நிறைவேற்ற வழக்கு தொடரும் காலக்கெடு முடிவடையாத வரை பதிவு அதிகாரி புதிய ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கான சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

    * குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.

    * பூர்வீக சொத்தாக இருந்தால் முந்தைய மூல ஆவணம் இல்லை என்றால், அந்தச் சொத்திற்கான வருவாய்த் துறை வழங்கிய பட்டா வழங்கப்பட வேண்டும்.

    * அசல் ஆவணம் தொலைந்து விட்டால், போலீஸ் துறை வழங்கிய 'கண்டறிய முடியாத சான்றிதழ்' மற்றும் அந்த ஆவணம் இழந்ததை அறிவிக்கும் விதமாக நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

    * அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.

    இவ்வாறு புதிய சட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    சொத்தின் அடமானம் என்பது பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட சொத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

    ×