என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
- கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார்.
சட்டசபை தேர்தலை சந்திக்க விஜயின் த.வெ.க. ஆயத்தமாகி வருகிறது. களத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பிரசார அணி ஆகியவை நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த கூட்டங்களில் தேர்தலில் வெற்றிக்காக எப்படி பணியாற்றுவது? பூத் கமிட்டிகளை எவ்வாறு அமைப்பது? தொண்டர்களை அரவணைத்து கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.
முதல்கட்டமாக சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.சந்திரா அரங்கில் நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார். இதில் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.
அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
- இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள்.
- இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் 'பிங்க்' பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு 50 பொலீரோ வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகளிர் விடியல் பயணம் திட்டம் (கட்டணமில்லா பஸ்) கடந்த மே 2021-ல் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று, 5 வழித்தடங்களில் ஒவ்வொரு வழித்தடத்திலும் 2 பஸ்கள் என மொத்தம் 10 பஸ்கள் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பஸ்களின் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
இப்பஸ்கள், பிராட்வே முதல் எண்ணூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம், செங்குன்றம் முதல் வள்ளலார் நகர் பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளது.
அதேபோல், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு பிரத்யேகமாக 50 பொலீரோ 4 சக்கர வாகனங்கள் மற்றும் 5 பிங்க் ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- இந்த புதிய அதிநவீன ஆஸ்பத்திரி கட்டுமானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார்.
- நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
சென்னை:
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் குழந்தைகளுக்கான உயர்சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி பிரிவு கட்டப்படுகிறது.
6.5 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த அதிநவீன ஆஸ்பத்திரியில் 750 படுக்கை வசதிகள் இருக்கும்.
குழந்தை மருத்துவ முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு, கதிரியக்க நோயறிதல் மற்றும் உள்நோயாளிகள் வார்டுகள் கட்டிடம் போன்றவற்றின் கட்டுமானம் ஏ.பிளாக்கில் இடம்பெறும். இது ரூ.125 கோடியில் கட்டப்படுகிறது.
பி.பிளாக்கில் வெளி நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சிறப்பு வார்டுகள் கட்டிடம், காத்திருப்பு கொட்டகை, பம்ப் அறை, உயர் மின்னழுத்த அறை போன்றவை ரூ.119 கோடியில் கட்டப்படுகிறது.
சி.பிளாக்கில் பேராசிரியர்களுக்கான குடியிருப்பு வளாகம், முதுகலை மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான தங்குமிட வளாகம் மற்றும் பிற வசதிகள் கொண்ட கட்டிடங்கள் ரூ.94 கோடியில் கட்டப்படுகிறது.
இதன் மொத்த மதிப்பு ரூ.338.70 கோடி ஆகும். தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த ஆஸ்பத்திரி அமைகிறது.
இந்த புதிய அதிநவீன ஆஸ்பத்திரி கட்டுமானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசாரம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-ந் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசாரம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திர பேச்சாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிர பிரசார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும். இவ்வாறு தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பேசுபவர்கள் பட்டியலையும் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
- மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மேலும் மதுக்கடைகள் மூடப்படும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தஞ்சை மத்திய, வடக்கு ,தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அனைத்து தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அறிந்து மனு வாங்கினார் .
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக, தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் முதலமைச்சர் அனுப்பியிருக்கிறார். அதை ஒட்டி, முதலிலே ஓசூரிலே இந்த தேர்தல் அறிக்கை குழு சென்று அங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.
இன்று தஞ்சை, திருவாரூர் ,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தஞ்சையில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் விவசாயிகள், வியாபாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து மனு வாங்கி உள்ளோம். இன்று மாலை திருச்சியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்று அங்கிருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து, இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக உருவாக்குவதற்கு உண்டான வேலைகளைச் செய்து வருகிறோம்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். ஆனால் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது என்று. நிச்சயமாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமில்லாமல், அடுத்த ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றப்போவதும் நாங்கள் தான்.
கடந்த 2006-ல் தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்கப்பட்டது. இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு தொடர்ந்து போராடி வருகிறது. நிச்சயமாக ஒன்றியத்திலே ஆட்சி மாற்றம் வரும் பொழுது, அதிலே நாங்கள் சொல்லக்கூடிய நிலையில் நிச்சயமாக மாற்றத்தை எங்களால் பண்ண முடியும். அதுவரை நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்.
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மேலும் மதுக்கடைகள் மூடப்படும்.
நேற்று தஞ்சை செங்கிப்பட்டியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமானதால் மாநாட்டுப் பந்தலுக்குள் கூட வர முடியாத அளவில் பெண்கள் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டார்கள். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாக, அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஒரு ஆட்சியாக இருக்கிறது. அதனால் பெண்கள் எங்களுடைய பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர்.நகர், விஜிஎன் சாந்தி நகர், மதுரவாயல்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
செம்பியம்: கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணாநகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கேகேஆர் எஸ்டேட், மிக்டிக் காலனி, கேகேஆர் நகர், கல்கத்தா ஷாப், விஓசி தெரு, நவின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் குடியிருப்பு, உடையார் தோட்டம், டிவிகே தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அயப்பாக்கம்: ஐசிஎஃப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, TNHB Phase I-III, TNHB 2394 குடியிருப்புகள், திருவேற்காடு மெயின் ரோடு, அம்பத்தூர், அத்திப்பேட்டை வழியாக வானகரம் சாலை, பாரதி மெட்டு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர்.நகர், விஜிஎன் சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஏடன் அவென்யூ, கோன்ராஜ் குப்பம், அக்ரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, செல்லியம்மன் நகர், ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
- முதலமைச்சரால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட இவ்வளவு அதிகக் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டதில்லை.
- அழுத்தங்களுக்கு அடிபணிவது திமுகவின் மரபணுக்களில் ஊறிப்போன ஒன்றாகும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் தான் போட்டி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதிமுக, பா.ம.க, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவானக் கூட்டணியை அமைத்த பிறகு, தோல்வி பயத்தில் தூக்கத்தைத் தொலைத்து விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதனால் ஏற்பட்ட மயக்கத்தில் வெளிப்படுத்திய உளறல்களாகத் தான் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கே திமுகவுக்கு தகுதி இல்லை. தமிழ்நாடு என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்ற அவப்பெயரைத் தேடித் தந்தது மட்டும் தான் திமுகவின் சாதனை. புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று வேட்டையாடியதை மறுக்க முடியுமா? அந்த மிருகத்துக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அந்த மிருகம் இருக்கும் புகைப்படங்கள் வெளியான பிறகு அந்த மிருகம் திமுகவின் அபிமானி என்று சப்பைக்கட்டு கட்டியதை மறக்க முடியுமா? பல்கலைக்கழக வளாகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத கஞ்சா போதை அரசின் முதலமைச்சருக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது?
* கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் நாள் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
* கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி இராமேஸ்வரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி, காதலிக்க மறுத்த காரணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
* கடந்த ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை நாம் எவரும் மறந்து விட முடியாது.
* கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி கஞ்சா போதையில் திரிந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
* கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள் திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர இளம்பெண், அவரது தாயின் கண் எதிரிலேயே இரு காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது.
* 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் திம்மாவரம் என்ற ஊரில் பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பால் விற்பனை செய்துவிட்டு வந்த இளம் பெண் மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
முதலமைச்சரால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட இவ்வளவு அதிகக் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டதில்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால் இவ்வளவுக்கு பிறகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான்.
2020-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ஆம் ஆண்டில் 6064 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 6580 ஆகவும், 2023-ஆம் ஆண்டில் 6968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 60.66% அதிகரித்திருக்கிறது. அதேபோல், போக்சோ சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும்போது இது 52.30% அதிகம் ஆகும்.
திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் மட்டும் 217 பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு மாய உலகில் வாழ்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்த பிறகும், அதன்பின் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு பிறகும் அதிமுக கூட்டணிக்கு எதிராக புதிய உற்சாகமும், மகிழ்ச்சியும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்கள் பக்கம் திரண்டிருக்கிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மைக் காலமாக அதிகமாக புலம்பத் தொடங்கியுள்ளார்; தோல்வி பயத்தில் எங்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.
அழுத்தங்களுக்கு அடிபணிவது திமுகவின் மரபணுக்களில் ஊறிப்போன ஒன்றாகும். 1970-களில் திமுக அரசின் மீது எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தால் காவிரி நீர் உரிமைகளை அன்றைய முதலமைச்சர் கலைஞர் தாரை வார்த்ததையும், கச்சத்தீவு உரிமைகளை தாரை வார்க்கத் துணை போனதையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் சி.பி.ஐ. குழுவை அனுப்பி சோதனை நடத்திக் கொண்டே, தரைத் தளத்தில் திமுகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுகளை நடத்தியதும், 2ஜி வழக்கு மு.க.ஸ்டாலின் மீதும் பாய்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 64 தொகுதிகளை வாரி வழங்கி அன்றைய திமுக தலைமை மண்டியிட்டது வரலாறு. இத்தகைய அடிமை வரலாறு கொண்ட மு.க.ஸ்டாலின் வீர வசனங்களை பேசக்கூடாது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியால் கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்ட சீரழிவுகளுக்கு கணக்குத் தீர்க்க தமிழக மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இன்னும் இரு மாதங்களில் அவர்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவார்கள். அதனால், வரும் தேர்தலில் தமிழகத்திற்கு துரோகம் செய்த திமுக கூட்டணி மண்ணைக் கவ்வப் போவது உறுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வர முடியாது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைவர் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைவரும், நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற விடக்கூடாது என்பது தான் டி.டி.வி. தினகரன் மாறி மாறி பேசி வருகிறார். தமிழகத்தில் எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் விசிலடியுங்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை.
நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது. கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்பது விஜய்யின் பேராசையை காட்டுகிறது. தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாததை தமிழகம் மறக்கவில்லை.
இ.பி.எஸ். மீது எவ்வளவு குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என கூறி வந்த டி.டி.வி. தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லையென்று கூறுகிறார். பங்காளி சண்டை என்று கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. படர் தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம். பா.ஜ.க.வின் தாமரை நாட்டுக்கே நாசம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வரமுடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
- தொடர்ந்து 30-ந்தேதி வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டாக்டர் அன்புமணி தலைமையிலான பா.ம.க. இடம் பெற்றுள்ளது.
இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தார்கள்.
விருப்ப மனு கொடுத்திருந்தவர்களிடம் டாக்டர் அன்புமணி இன்று நேர்காணல் நடத்தினார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இன்று காலையில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.
பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
நாளை (28-ந்தேதி) காலையில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும் மாலையில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும் நடக்கிறது.
தொடர்ந்து 30-ந்தேதி வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.
- தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
- கூட்டுறவு வேளாண் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் 3 குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த குவாரிகளில் இருந்தும், அருகில் உள்ள ஓ.துலுக்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குவாரிகளில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த லாரிகள் அனைத்தும் மருதம்புத்தூர் வழியாக ஆலங்குளத்தை அடைந்து அங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை கண்டபட்டி விலக்கு பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து கனிமவளத்தை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று ஆலங்குளம் நோக்கி புறப்பட்டு சென்றது.
கண்டபட்டி விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே வந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை லாரி டிரைவர் மீது வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் லாரியை ஓட்டிவந்த செங்கோட்டையை சேர்ந்த டிரைவர் படுகாயம் அடைந்தார்.
அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு லாரியில் இருந்த 2 டிரைவர்கள் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் ஓட்டி வந்த லாரியை அதே இடத்தில் விட்டு விட்டு சென்றால் மர்ம நபர்கள் அதனை சேதப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மருதம்புத்தூர் ஊருக்குள் மெயின்ரோட்டில் ஓரமாக நிறுத்திவிட்டு ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் இருக்கை தீயில் கருகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வேளாண் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த தாக்குதல் டிரைவர் மீது தனிப்பட்ட முறையிலான கோபத்தில் நடைபெற்றதா என்று கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருதம்புத்தூர் கிராமம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், அதனால் அவதியுறும் பொதுமக்களில் யாரேனும் இளைஞர்களை திரட்டி இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.
- அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.
நந்தம்பாக்கம்:
சென்னை நந்தம்பாக்கத்தில் மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* இந்தியாவிலேயே பெண்கள் அதிகளவில் பணிக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு.
* ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகளவில் வெளியில் வரவேண்டும். புதிய துறைகளில் பெண்கள் இணைய வேண்டும்.
* பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும்.
* பெண்கள் தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு. மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்கள் முன்னேறாவிடில் நாடு முன்னேறாது.
* பெண்களின் பாதுகாப்பிற்காக தோழி விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
* பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் என தி.மு.க. அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளது.
* பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி.
* புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் என பல...
* கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது.
* அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர்.
* பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
* மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டம்.
* கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
* இதுவரை 3 லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.
* மார்பக புற்றுநோய் பிரத்யேக சிகிச்சைக்காக ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
* பெண்கள் பணிக்கு செல்வதற்காக குழந்தைகள், வயதானவர்களை கவனிக்க பாதுகாப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
- பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.
முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு தெப்பத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் வழியாக சுவாமி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் எழுந்தருள தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.






