என் மலர்
2025 - ஒரு பார்வை
- சமூக பிரச்சினைகளை தொடும் ஸ்கிரிப்ட்கள் என எல்லாமே ரசிகர்களை கவர்ந்தன.
- இந்த படங்கள் நம் வாழ்க்கையின் உண்மைகளை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்தது. புதிய இயக்குநர்களின் பிரமிப்பூட்டும் கதைகள், அனுபவமிக்க நட்சத்திரங்களின் சிறப்பான நடிப்பு, சமூக பிரச்சினைகளை தொடும் ஸ்கிரிப்ட்கள் என எல்லாமே ரசிகர்களை கவர்ந்தன.
இந்தாண்டு IMDb-யின் பயனர் லிஸ்ட் அடிப்படையில், உயர் ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் படங்களைப் பார்ப்போம்.
இந்த படங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அவை வாழ்க்கையின் உண்மைகளை பிரதிபலிக்கும் கண்ணாடிகள். வாருங்கள், இந்த ஆண்டின் சினிமா ஜெம்ஸ்களை அலசுவோம்!

1. டூரிஸ்ட் ஃபேமிலி - 8.2
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.
இப்படம் உலகளவில் ரூ.90 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்தது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்துது. மக்களின் அமோக வரவேற்பால் இப்பட்டியலில் இப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

2. டிராகன் - 7.8
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.
லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. நல்ல விமர்சங்களை பெற்ற இப்படம் இப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

3. பைசன் காளமாடன் - 7.8
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. அணைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டை பெற்ற இப்படம் இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

4. காந்தா - 7.6
துல்கர் சல்மான் நடிப்பில் இந்தாண்டு இறுதியில் வெளியான படம் 'காந்தா'. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மிக நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் இப்பட்டியலில் 3 ஆம் டைம் பிடித்துள்ளது.

5. லெவன் - 7.4
லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் இடம் பெற்ற ஃப்ளாஷ் பேக் போர்ஷன் மற்றும் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் மக்கள் பலரால் பேசப்பட்டது. ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு இப்படத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். இதன் காரணமாக இப்படம் இப்பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.

6. மாரீசன் - 7.4
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. ஓடிடி வெளியீட்டில் இப்படத்தை மக்கள் கொண்டாடினர். இதன் காரணமாக இப்படம் இப்பட்டியலில் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.

7. 3BHK - 7.4
சித்தார்த் 40-வது திரைப்படமாக வெளியான 3 BHK மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார். இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ஓடிடியில் வெளியாகியும் மக்களிடம் பாராட்டை பெற்றது. இதன் காரணமாக இப்பட்டியலில் 7 ஆம் இடம் பிடித்துள்ளது.

8. குடும்பஸ்தன் - 7.3
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தில் சான்வி மேகனா கதாநாயகியாக நடித்திருந்தார்.ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டது.
வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.28 கோடி வசூலை குவித்து சிறிய படங்களும் பெரிய வசூலை குவிக்கும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் எடுத்துக்காட்டியது. இதன் காரணமாக இப்பட்டியலில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.

9. வீர தீர சூரன் - 6.9
'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் சீயான் விக்ரம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது. நீண்ட நாள் பிறகு ஒரு பக்கா சீயான் ஸ்டைலில் ஒரு கமெர்ஷியல் திரைப்படம் பார்த்த மன நிம்மதி ரசிகர்களுக்கு கிடைத்தது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ஓடிடியில் வெளியாகியும் மக்களிடம் பாராட்டை பெற்றது. இதன் காரணமாக இப்பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.

10. மதராஸி - 6.7
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் வெளியான இப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. மக்களிடம் பாராட்டை பெற்ற இப்படம் இப்பட்டியலில் இப்படம் 10 ஆம் பிடித்துள்ளது.
முடிவுரை:
இந்த படங்கள் 2025-ஐ தமிழ் சினிமாவின் தங்க ஆண்டாக மாற்றின. இந்த படங்களின் கதைகள் புதுமையானவை. IMDb ரேட்டிங்ஸ் அடிப்படையில் இவை தான் டாப். அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் நாய்க்கடி சம்பவங்களைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கும், விலங்குகளுக்கும் உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்திடும் வகையில் அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையினையும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் வழங்குதல் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து கண்காணித்தல் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதள சேவையினை மேயர் ஆர்.பிரியா அக்.3-ந்தேதி தொடங்கி வைத்தார்.
செல்லப் பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 உரிமக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெறலாம்.
செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (www.chennaicorporation.gov.in-ல் Pet Animal Licence) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்தது.
செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிட்புல், ராட்வீலர் இன நாய்களுக்கு புதிதாக உரிமம் வழங்குவதை நிறுத்தவும், ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் செல்லப்பிராணியை வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம். இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மேற்கண்ட 2 நாய்களின் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. உரிமம் இல்லாமல் பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்ததையடுத்து அதன் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர்.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெற பதிவு செய்துள்ளனர். இதில், 57 ஆயிரம் பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
- மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால்...
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

2024 அக்டோபரில் ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.

லடாக் எல்லையில் நிலவிய நான்கு ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வாக, ரோந்து பணிகளை மீண்டும் தொடங்குவது மற்றும் தத்தமது படைகளை தங்கள் எல்லைக்குள் மீண்டும் பின்வாங்க செய்வது உள்ளிட்டவை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் 2025-ல் செயல்படுத்தப்பட்டன.
அதேநேரம் இந்த ஆண்டில் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அங்கு நடந்த சந்திப்பில் ஓரளவு உறுதியான சில முடிவுகள் எட்டப்பட்டன என்றே சொல்லலாம். 2018-க்குப் பிறகு பிரதமர் இந்த ஆண்டுதான் மீண்டும் சீனா சென்றிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் நேரடி விளைவாக மோதல் மற்றும் கொரோனாவால் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா- சீனா நேரடி விமான சேவை கடந்த அக்டோபரில் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 26 அன்று இண்டிகோ நிறுவனம் கொல்கத்தா மற்றும் குவாங்சூ இடையே தனது சேவையைத் தொடங்கியது.

மேலும் லிபுலேக் மற்றும் நாது லா போன்ற முக்கியமான கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்தியா சீனா நெருங்குவதற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியே ஆகும்.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிக் கட்டுப்பாடுகள், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் தங்களுக்குள் வர்த்தகத்தை புதுப்பித்துக்கொள்ள செய்தது.
இந்த சந்திப்புகள் மூலம் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் முழுமையான நண்பர்களாக மாறவில்லை என்றாலும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய ஒற்றுமைக்காகவும் முயற்சியாக அமைந்தது.
ஆனால் இதுதவிர பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக 2024 இல் முடிவெடுக்கப்பட்டபடி தத்தமது படைகளை விலக்கிக் கொண்டாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இன்னும் சில இடங்களில் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை.
எல்லைப் பிரச்சனையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏரியில் தங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டமைப்புகளை சீனா உருவாக்கி வருவதும் சாட்டிலைட் ஆதாரம் மூலம் தெரியவந்துள்ளது.

எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கும் சீனா:
திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது கடந்த அக்டோபரில் வெளியான செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.
2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
அருணாச்சல பிரதேச பெண்ணின் கசப்பான அனுபவம்:
அதேநேரம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தங்களுடையது என்றும் சீனா வெளிப்படையாக தெரிவித்தும், வரைபடம் வெளியிட்டும், இந்திய பகுதிகளுக்கு சீன பெயர்களை சூட்டியும் வருகிறது. 2025 மே மாதம், சுமார் 27 இடங்களுக்குச் சீனா புதிய பெயர்களை அறிவித்ததை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. "பெயர்களை மாற்றுவதால் உண்மை மாறிவிடாது, அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி" என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.
ஆனால் இதன் உச்சமாக கடந்த மாதம் லண்டனில் இருந்து ஜப்பான் செல்ல இணைப்பு விமானம் ஏற சீனாவின் ஷாங்காய் விமான நிலயத்தில் காத்திருந்த இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை சீன அதிகாரிகள் 18 மணிநேரம் தடுத்து வைத்தனர். அருணாசல பிரதேசம் சீனாவின் பகுதி என்பதால் அப்பெண்ணின் பாஸ்போர்ட் செல்லாதாம்.. இதில் சீன பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணுங்க என கூறி அப்பெண்ணை கிண்டல் வேறு செய்துள்ளனர் சீன அதிகாரிகள்.
அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அப்பெண், சீனாவில் உள்ள இந்திய தூதரக தலையீட்டின் பின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதோடு நிற்கவில்லை சீனா.

அருணாச்சலப் பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேட்டி வேறு கொடுத்து இந்த செயலுக்கு விளக்கம் அளித்த கொடுமை நிகழ்ந்தது.
இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனியேனும் அருணாச்சல பிரதேச மக்களுக்கு இதுபோல ஏதும் சங்கடம் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.
எல்லையில் நிலவும் இந்த இழுபறி நிலை, இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஆழமான நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.
சரி, பொருளாதார உறவு எப்படி?
இந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம் சுமார் 127.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கொஞ்சம் பொறுங்கள்.. இதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது.
சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. அதாவது, வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 99.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
சீனாவிடமிருந்து மின்னணுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தியா அதிகம் நம்பியிருப்பது இந்தத் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு பக்கம் பிரதமர் மோடியிடம் ஜி ஜிங் பின் நட்பு முகம் காட்டும் வேலையில் மறுபுறம் சீனா தங்கள் நலன்களை முன்னிறுத்தி அதன் வேலையை தொடர்ந்து வருகிறது.
எனவே மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால், 2025-ல் இந்தியா-சீனா உறவு சந்திப்புகளில் இணக்கமாக தோன்றினாலும் செயல்கள் அதற்கு நேர்மாறாகவே இருந்து வருகிறது.
- டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது.
- ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நிதிநிலை அறிக்கை குறித்த முன்னோட்ட காணொலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 13-ந்தேதி அன்று வெளியிட்டார். அதில் இருந்த ஒரு படம், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை முன்னோட்ட காணொலியை வெளியிட்டார். இந்த காணொலியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் குறியீடாக 'ரூ'-வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்து நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் லோகோவில் தேவநாகிரி எழுத்தான '₹' குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ரூபாய் அதிகாரப்பூர்வமான பணமாக அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாய்க்கென தனி குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டி. உதயகுமார். டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த வரிசையில் இந்திய ரூபாயும் சேர்ந்தது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் வடிவமைத்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசுப் பயன்பாட்டில் சேர்த்தது. ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டுகூட தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு பட்ஜெட் இலச்சினை 'ரூ' என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.
மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தேசிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை என்றும், மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்பட்டது.

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான '₹'-ஐ தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
இதுகுறித்து அப்போதைய பா.ஜ.க. மாநில தலைவரான அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
- கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.
புதுடெல்லி:
பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இரவுக் காவலைக் குறிக்கும். காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவல் இருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
இந்தப் பாரி வேட்டையை நினைவுபடுத்துவதுபோல் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை குறித்து இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தியது குறித்து விவரித்தார்.
அதன்பின், அவரைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, முதலில் எந்த பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்ன நடந்தது, ராணுவம் என்ன செய்தது, விமானப்படை என்ன செய்தது என விரிவாக வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தனர்.
இதனால் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இணைய தளங்களிலும் இருவரும் வைரலாகினர்.
யார் இந்த சோபியா குரேஷி?
கர்னல் சோபியா குரேஷி குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவு அதிகாரியான கர்னல் சோபியா குரேஷி, வலுவான ராணுவப் பின்னணியை கொண்டவர். ஐ.நா. அமைதிப் பணிக்கான இந்தியப் படைக்கு தலைமையேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கு உரியவர். புனேவில் நடந்த பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் பிரிவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி.

பயோகெமிஸ்ட்ரி முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 1999-ல் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்றார்.
யார் இந்த வியோமிகா சிங்?
'வியோமிகா' என்ற அவரது பெயரின் அர்த்தம் 'வானத்தில் வசிப்பவள்' என்பது. தனது 6 ஆம் வகுப்பு முதலே விமானப் படையில் சேரும் ஆர்வம் கொண்டவர். விமானப் படையில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதில் வியோமிகா தீர்மானமாக இருந்தார்.
இந்திய விமானப் படையில் கடந்த 2019 டிசம்பர் 18-ம் தேதி விமானியாக சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் உயரமான மற்றும் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சேட்டக், சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். 2500-க்கும் மேற்பட்ட மணி நேரங்களை பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும் பல்வேறு மீட்புப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
பெண்களை சக்தியாகக் கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகாசக்திகளாக தலைமை தாங்கி விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது.
எனவே தான் சோபியா குரேஷியும் வியோமிகா சிங்கும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு அதிகளவு பேசப்பட்டு வருகின்றனர்.
- மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல்.
- மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல்.
2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாநில ஆளுநர்களின் மசோதா அதிகாரம் மற்றும் அவர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த தீர்ப்பில் சட்டப்பிரிவு 200க்கின் கீழ் ஆளுநருக்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தல். இதில், மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல். மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் அவற்றை நீண்ட காலம் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.
ஒரு மாநிலத்தில் ஆளுநர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என இரண்டு தனித்தனி அதிகார மையங்கள் இருக்க முடியாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நிச்சயமான காலக்கெடுவை நீதிமன்றம் விதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு காலக்கெடு நிர்ணயிப்பது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆளுநர் ஒரு மசோதா மீது எந்தக் காரணமும் இன்றி நீண்ட காலம் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று இந்தத் தீர்ப்பு அனுமதி அளித்துள்ளது.
ஆளுநரின் கையொப்பம் அல்லது ஒப்புதல் இல்லாமல், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதா நடைமுறைக்கு வந்த சட்டமாகக் கருதப்படாது என்பதையும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தத் தீர்ப்பு, மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நிலவி வந்த நீண்ட கால மோதல்களுக்கு ஒரு சட்டரீதியான தீர்வை வழங்கியுள்ளது.
- கம்பீர் தலைமையில் இந்திய அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் பொதுவாக வலுவாக செயல்பட்டது.
- டெஸ்ட் போட்டிகளில் வெற்றி விகிதம் குறைவாக உள்ளது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இருந்து வருகிறார். இவர் தலைமையில் 2025-ம் ஆண்டில் இந்திய அணி சாதித்ததும் சருக்கியது குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் காணலாம்.
அவரது தலைமையில் இந்திய அணி வெள்ளைப் பந்து (ODI, T20I) போட்டிகளில் பொதுவாக வலுவாக செயல்பட்டது, குறிப்பாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் கடுமையான சவால்களை எதிர்கொண்டது. 2025-ல் அணி மொத்தம் சுமார் 42 சர்வதேச போட்டிகளில் விளையாடி 32-ஐ வென்றது, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி விகிதம் குறைவாக இருந்தது.
இந்திய அணியின் முக்கிய வெற்றிகள்:ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 (பிப்ரவரி-மார்ச், பாகிஸ்தான்): இந்தியா சாம்பியன் ஆனது. இது கம்பீரின் முதல் மேஜர் ஐசிசி தொடர் வெற்றி.
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் (நவம்பர்-டிசம்பர்): 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் (டிசம்பர்): 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது (ஒரு போட்டி ரத்து).
ஆஸ்திரேலியா vs இந்தியா டி20 தொடர்: (அக்டோபர்-நவம்பர்): 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது (ஒரு போட்டி ரத்து).
இங்கிலாந்து சுற்றுப்பயணம் (ஜூன்-ஆகஸ்ட்): டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் (டிரா). ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா பெரும்பாலும் வென்றது.
மேற்கிந்திய தீவுகள் vs இந்தியா டெஸ்ட் தொடர் (அக்டோபர்): 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
ஆசியா கோப்பை 2025 (செப்டம்பர், யுஏஇ): இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
முக்கிய தோல்விகள்:
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் (நவம்பர்): 0-2 என்ற கணக்கில் தோல்வி (ஹோம் தொடர் வைட்வாஷ்).
பார்டர்-கவாஸ்கர் தொடர் (2024-25, ஆஸ்திரேலியா): மொத்தம் 1-3 தோல்வி (1 டிரா உடன்), 2025-ல் கடைசி போட்டி (சிட்னி) உட்பட சில தோல்விகள்.
இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர்: 2-2 டிரா, ஆனால் சில போட்டிகளில் தோல்வி.
வெள்ளைப் பந்து தொடர்களில் சில தனிப்பட்ட போட்டி தோல்விகள். உதாரணமாக தென் ஆப்பிரிக்கா vs இந்தியா 2-வது ஒருநாள்
மொத்த டெஸ்ட் ரெக்கார்ட் (கம்பீர் தலைமையில் 2024-25): 19 போட்டிகள், 7 வெற்றிகள், 10 தோல்விகள், 2 டிராக்கள் - இதில் 2025-ல் பெரும்பகுதி தோல்விகள் வந்தன.
வெள்ளைப் பந்தில் அணி வலுவாக இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சரிவு மற்றும் ஹோம் தோல்விகள் கம்பீருக்கு விமர்சனங்களை ஏற்படுத்தின.
- ஒரு படத்தையே ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.
- ஒரு புதிய முயற்சியாகத்தான் ‘மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
உலக சினிமா பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஒலி இல்லாத படமாக வெளிவந்து, தொழில்நுட்ப வளர்ச்சியடைந்து பேசும் படம் உருவானது. கருப்பு-வெள்ளை படத்தில் இருந்து ஈஸ்மெண்ட் கலர், பின்னர் கலர் திரைப்படங்கள் உருவாகின. சினிமாவை எடுக்கும் தொழில்நுட்பங்களிலும் பல்வேறு வளர்ச்சியை திரைத்துறை கண்டிருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளிலும் பல்வேறு படிநிலைகளை கடந்து வந்து விட்டோம். ஒரு படத்தையே 'ஏ.ஐ.' தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.
இந்த காலகட்டத்திலும் விருதுக்காகவும், பாராட்டுக்காகவும் மெனக்கெடும் திரை கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்கள் படத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி, அதன் மூலம் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகத்தான் 'மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்' திரைப்படம் உருவாகியிருக்கிறது.

மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்:
ஊமைப்படம், பேசும்படம் தொடங்கி, ஏ.ஐ. தொழில்நுட்ப சினிமா வரை வந்திருந்தாலும், இதுவரை எவரும் முகம் மறைத்து திரைப்படங்களை எடுத்ததில்லை. அந்தப் புதுமையை 'மெட்டா' திரைப்படம் செய்திருக்கிறது.
இது ஒரு இந்திய திரைப்படம், அவ்வளவுதான். இந்தப் படத்திற்கு தனி மொழி கிடையாது. ஆனால் திகில், மர்மம், சென்டிமெண்ட், திரில்லர், கற்பனை ஆகிய ஜானர்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஒற்றை கதாபாத்திரம்தான். அந்தப் பெண் கதாபாத்திரமும் முகம் காட்டாதபடி வந்துபோகிறது. படத்தில் எந்த வசனமும் கிடையாது. இப்படி ஒரு திரைப்படம் உலக அரங்கில் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள். இதுதான் முதல் முறையாம். அதைப் பெருமையாக படத்தின் தொடக்கத்திலேயே 'கார்டு' போட்டு சொல்லவும் செய்திருக்கிறார்கள். 'இந்தப் படம் உலகின் முதல் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற, ஒற்றை கதாபாத்திரம் உயிர்வாழும் படம், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்பதை பதிவு செய்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதைப்படி, மெட்டா என்ற இளம்பெண், தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறார். அவர் தனது அகழ்வாராய்ச்சிக்காக மலைப்பகுதி ஒன்றில், பழைய இடிபாடுகளைக் கொண்ட கட்டிடத்தைக் காண்கிறாள். அங்கே தங்கி தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்கிறாள். அப்போது அவளை அறியாமலேயே ஒரு சாபத்தில் சிக்கிக்கொள்கிறாள். அந்த சாபம் அவள் தலையை, ஒரு மாயப் பானையில் சிக்க வைக்கிறது. அந்தப் பெண், தன்னை அறியாமல் செய்த கர்ம விணை இயற்கை அளித்த பதிலடியாக இது அமைகிறது. ஒரு சாதாரண நாளில் அவளுக்கு ஏற்படும் இந்த எதிர்பாராத அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, மெட்டா எடுக்கும் அறிவு சார்ந்த மற்றும் சாகச முயற்சிதான், இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தை பிரசாந்த் மாம்புல்லி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒற்றை நபராக, எந்த காட்சியிலும் முகத்தை பதிவு செய்யாத கதாபாத்திரத்தில் பிரணிதா வாக்சவுரே என்பவர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட, இந்தப் பெண்ணின் தலையில் பானையை கவிழ்த்தி, அவர் முகம் தெரியாத வகையில்தான் அறிமுகம் செய்தனர். அதனால் அந்தப் படத்தில் நடித்த பெண் யார் என்பதில் கூட இன்றும் ஒரு தெளிவு இல்லாத நிலை இருக்கிறது. வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள இந்தத் திரைப்படம், முன்னதாக உலக திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு, விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.
'மெட்டா: திடேஸ்லிங் கேர்ள்' திரைப்படத்தை இயக்கியவர், பிரசாந்த் மாம்புல்லி. இவர் கேரள மாநிலம் குருவாயூரை பூர்வீகமாகக் கொண்டவர். 2009-ம் ஆண்டு மோகன்லாலை கதாநாயகனாக வைத்து, 'பகவான்' என்ற படத்தை இயக்கி, திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்தப் படத்தை அவர் 19 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்திருந்தார்.
அடுத்ததாக கன்னடத்தில் அறிமுகமான இவர், அங்கு சிவராஜ்குமாரை நாயகனாக வைத்து 'சுக்ரீவா' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தை 18 மணி நேரத்தில் எடுத்து முடித்தார். இதன் மூலம் தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்தார். இந்த சாதனையானது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இப்படி இதுவரை பிரசாந்த் மாம்புல்லி இயக்கிய 7 படங்களும் ஏதோ ஒரு வகையில் சாதனைக்குரிய படமாகவே அமைந்திருக்கிறது. அந்த வரிசையில்தான் இப்போது 'மெட்டா' திரைப்படம் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
- ராஜ்பவன் பெயரை, லோக் பவன் என்ற மக்கள் மாளிகை என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு வித்திட்டவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தான்.
- 'பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன் என்று சொல்லப்படும் ஆளுநர் மாளிகையின் பெயர், மக்கள் மாளிகை என பெயர் மாற்றப்படுவதாக கடந்த நவ.30-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் துணை நிலை ஆளுநர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில்,
கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த ஆளுநர் மாநாட்டில் ராஜ்பவன் என்பதனை லோக் பவன்கள் என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. ஏனென்றால் ராஜ்பவன் என்ற சொல் காலனித்துவத்தை நினைவூட்டுகிறது. எனவே அனைத்து ஆளுநர் அலுவலகங்களும், துணை நிலை ஆளுநர் அலுவலகங்களும் அதிகாரபூர்வமாக முறையே லோக் பவன், லோக் நிவாஸ் என பெயரிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர் மாளிகையின் பெயர்களும் லோக் பவன் என்று மாற்றப்படுகிறது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையும், ஆங்கிலத்தில் லோக் பவன் என்று பெயர் மாற்றப்படுகிறது. தமிழில் அது மக்கள் மாளிகை என்று அழைக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் அதிகாரபூர்வ இல்லமான ராஜ்பவன் பெயரை, லோக் பவன் என்ற மக்கள் மாளிகை என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு வித்திட்டவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தான். அவர் தான் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த ஆளுநர் மாநாட்டில் அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை மற்ற ஆளுநர்கள் அனைவரும் ஏற்று கொண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் கூறுகையில்,
ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி 'ராஜ்பவன்' என்பதை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதை அனைவரும் வரவேற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது.
நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல். அவரது கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார்.

'மக்கள் பவன்' பெயர் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை' எனத் தெரிவித்தார்.
சட்டமன்றத்தை மதிக்காதவர்கள் 'மக்கள் மாளிகை' என பெயர் மாற்றுவது கண் துடைப்பா என்றும் மக்களாட்சி தத்துவத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காகவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் தற்போதைய தேவை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், ஆளுநர் மாளிகையின் பெயர் மாற்றம் தேவையற்றது என தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனை வரவேற்றார். அவர், 'ஆளுநர் மாளிகைக்கு இதுவரையில் ராஜ் பவன் என்று இருந்த பெயரை, இப்போது லோக் பவன் என பெயர் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது' எனத் தெரிவித்தார்.
- இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன
- பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். எனவே இட ஒதுக்கீடு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு
இருப்பினும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை மோசமான நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.
பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை என போற்றப்பட முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா 2009 முதல் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த நிலையில் அவரது 16 ஆண்டுகால ஆட்சி வெறும் 3 மாதகால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது.

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
ஷேக் ஹசீனாவால் அடக்குமுறையை சந்தித்த பலர் அவரது ரகசிய சிறையான கண்ணாடிகளின் வீட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக முகமது யூனுஸ் என்ற 84 வயது முதியவர் சிறையில் இருந்து விடுதலையானார். இவர் ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிகான நோபல் பரிசை பெற்றவர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் உருவானது.

யூனுஸ் ஆட்சியில்..
வங்கதேசத்தின் மறு உருவாக்கம் முற்றிலும் மகிழ்ச்சியானதாக அமைந்துவிடவில்லை. இஸ்லாமிய பெரும்பாண்மை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும் இதற்கு கண்டனம் கூறுவதை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்தற்கான சுவடுகள் எதுவும் இல்லை. இந்துக்களின் வழிபாடு தளங்கள் குறிவைக்கப்பட்டன.
இந்த சூழலில் வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.

7 சகோதரிகள்
முகமது யூனுஸ் வங்கதேசத்தின் பாரம்பரியமான இந்திய சார்பில் இருந்து விலகி சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவை வளர்த்து வருகிறார். மேலும் இந்தியாவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். கடந்த ஏப்ரலில் சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த யூனுஸ் இரு நாடு உறவுகளை பற்றி விவாதித்தார்.
சீனாவில் நடந்த கூட்டத்தில் பேசிய யூனுஸ், "இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம்).
இந்த ஏழு மாநிலங்களும் இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார். இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் இணைத்து அவ்வப்போது அந்நாட்டு தலைவர்கள் சர்ச்சைக்குரிய படத்தை யூனுஸ்க்கு பரிசளித்து வருவதும் தொடர்கிறது.

ஷேக் ஹசீனாவின் தலைவிதி
இதற்கிடையே இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவையும் மீண்டும் வங்கதேசம் அனுப்ப யூனுஸ் அரசு இந்தியாவிற்கு கடிதங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு மாணவர் இயக்கத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டது போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
மேலும் அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இந்த மாத தொடக்கத்தில் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மருமகளும் பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்-க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.
வங்கதேச அரசின் தொடர் அழுத்தத்தின் படி அவரை நாடுகடத்துவது குறித்த கோரிக்கைக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷேக் ஹசீனா விரும்பும்பரை அவர் இந்தியாவில் இருக்கலாம் என்றும் அதுகுறித்து அவர்தான் முடிவெடிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
புதிய போராட்டம்
இந்த சூழலில் ஆண்டின் இறுதியான தற்போது வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.

கடந்த 20 ஆம் தேதி அதிகாலை, பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.
அங்கு தொடர்ந்து பாதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என யூனிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போராட்டத்தில் இந்திய எதிர்ப்பு மேலோங்கி காணப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
- டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.

தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.
தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.
பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.
காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.
பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.

சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.
பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
- இந்த ஆண்டில் அதிக சதம் அடித்தவர்களில் ஜோ ரூட் மற்றும் சுப்மன் கில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.
- இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் 5-வது இடத்தில் உள்ளார்.
2025-ம் ஆண்டு பல கிரிக்கெட் வீரர்களுக்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20) அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் மற்றும் சுப்மன் கில் இருவரும் 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

1. ஜோ ரூட் (இங்கிலாந்து) 7 சதம் 1540 ரன்கள்
2. சுப்மன் கில் (இந்தியா) 7 சதம் 1764 ரன்கள்
3. ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) 5 சதம் 1753 ரன்கள்
4. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) 4 சதம் 916 ரன்கள்
5. ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) 4 சதம் 1264 ரன்கள்
2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபி 81 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

1. ஜேக்கப் டஃபி (நியூசிலாந்து) 36 போட்டிகளில் 81 விக்கெட்டுகள்
2. முசரபானி ஆசீர்வாதம்(ஜிம்பாப்வே) 31 போட்டிகளில் 65 விக்கெட்டுகள்
3. மாட் ஹென்றி (நியூசிலாந்து) 27 போட்டிகளில் 65 விக்கெட்டுகள்
4. அலி தாவூத் (பக்ரைன்) 37 போட்டிகளில் 63 விக்கெட்டுகள்
5. குல்தீப் யாதவ் (இந்தியா ) 25 போட்டிகளில் 60 விக்கெட்டுகள்
2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர்களின் (விக்கெட் கீப்பர்கள் தவிர்த்து) பட்டியலிலும் இந்திய வீரர் இடம் பிடித்துள்ளார். அதன்படி முதல் இடத்தில் அபிஷேக் ஷர்மா உள்ளார். அதனை தொடர்ந்து நிசாகத் கான், எஸ்ஆர் முக்கமல்லா ஆகியோர் 21 கேட்ச்களுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.

அபிஷேக் சர்மா (இந்தியா) - 21 கேட்ச்கள் (21 போட்டிகள்)
நிஜகத் கான் (காங்காங்) - 21 கேட்ச்கள் (21 போட்டிகள்)
முக்கமல்லா (அமெரிக்கா) - 21 கேட்ச்கள் (21 போட்டிகள்)
ஜெய்ஸ்வால் (இந்தியா) - 20 கேட்ச்கள் (குறிப்பிடப்பட்டது)
முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 19 கேட்ச்கள் (19 போட்டிகள்)






