என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    • இந்த ஆண்டு, 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் 4K தொழில்நுட்பத்தில் வெளியாகின.
    • ரசிகர்களின் நாஸ்டால்ஜியாவை தூண்டிய இந்த ரீ-ரிலீஸ்கள், பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்தன.

    2025 ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு தனித்துவமான ஆண்டாக அமைந்தது. புதிய படங்களின் வரவு ஒருபுறம் இருந்தாலும், கிளாசிக் படங்களின் ரீ-ரிலீஸ் அலை மறுபுறம் ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுத்தது.

    இந்த ஆண்டு, 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையில் ஜொலித்தன. ரசிகர்களின் நாஸ்டால்ஜியாவை தூண்டிய இந்த ரீ-ரிலீஸ்கள், பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்தன.

    சூப்பர்ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், போன்ற உச்ச நட்சத்திரங்களின் ரீரிலீஸ் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை திரையரங்குகளில் கொண்டாட வைத்தன.

    அவ்வ்கையில் இந்தாண்டு ரிலீசான ரீரிலீஸ் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    1. படையப்பா:

    நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். ரீரிலீஸுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    ரஜினியின் ஸ்டைல், சௌந்தர்யாவின் அழகு, ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனம் ஆகிய அனைத்தும் புதிய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்தன. இப்படம் ரூ.15 கோடிக்கும் மேல் வசூல் செய்து, ரீ-ரிலீஸ் சாதனை படைத்தது.

    2. பாட்ஷா:

    1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் 'பாட்ஷா'. இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்து வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், ஜூலை 18ம் தேதி அப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் தங்களுக்கு மிகவும் பிடித்த பாட்ஷா படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்தனர்.


    3. சச்சின்:

    ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'சச்சின்'. படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், பிபாசா பாசு ஆகியோர் நடித்து இருந்தனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரித்து இருக்கிறார். படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'சச்சின்' படம் மீண்டும் ஏப்ரல் 18-ந்தேதி திரைக்கு வந்தது. சுமார் 300 தியேட்டர்களில் உலக அளவில் வெளியான 'சச்சின்' படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடினர்.

    கிட்டத்தட்ட ரூ.13 கோடிக்கும் மேல் வசூலித்து இந்தாண்டு ரீரிலீஸ் படங்களில் படையப்பா படத்திற்கு அடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


    4. குஷி:

    2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் இந்தாண்டு ரீரிலீஸ் ஆனது. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    இப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.


    5. ப்ரண்ட்ஸ்:

    விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ் கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.

    நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், காமெடி காட்சிகளும் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பது உள்பட படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.

    இந்நிலையில் 'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது.


    6. அட்டகாசம்:

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம். தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில் அட்டகாசம்' திரைப்படம் நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை குவித்தது. வசூல் ரீதியாக படையப்பா, சச்சின் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்தது.


    7. வீரம்:

    கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது வீரம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

    இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க விதார்த், பாலா, சந்தானம், நாசர்,பிரதீப் ரவாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார்.

    திரைப்படம் வெளியாகி 11 வருடங்கள் நிறைவு பெற்றதையொட்டி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். இந்தாண்டு ரீரிலீஸ் படங்களில் அதிக வசூல் பெற்ற படங்களில் இப்படம் 4 ஆம் இடம் பிடித்தது.


    8. அஞ்சான்:

    நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.

    லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வசூலில் சறுக்கியது.

    இந்நிலையில், அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.


    9. புதுப்பேட்டை:

    நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'புதுப்பேட்டை' திரைப்படம் இந்தாண்டு ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆனது.

    2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.

    புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.


    10. எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி:

    2004-ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் நடிப்பில் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படம்.

    இந்தப் படம் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியிலாகவும் நல்ல வெற்றி திரைப்படமாக இருந்தது. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட். பலரும் ரிப்பீட் மோடில் கேட்டது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்தாண்டு இபபடம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.


    11. கேப்டன் பிரபாகரன்:

    தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

    1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு மக்கள் மத்தியில் 'கேப்டன்' என்ற அடையாளப் பெயரைப் பெற்றுத் தந்தது, அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் நிலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    12. ஆட்டோகிராப்:

    சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் இந்தாண்டு ரீரிலீஸ் செய்யப்பட்டது.

    21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    முடிவுரை:

    கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு, ரசிகர்கள் பழைய படங்களை திரையில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 4K ரீமாஸ்டர் இதை சாத்தியமாக்கியது.

    பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள்: சச்சின், படையப்பா போன்ற படங்கள் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தன.

    இந்தாண்டு வெளியான ரீ-ரிலீஸ்கள், பழைய நினைவுகளை மீட்டெடுத்து, புதிய தலைமுறையை சினிமாவுடன் இணைத்தன.

    • தமிழர்களின் தொன்மையான பொருட்கள் தொல்லியல் துறை சார்பில் ரூ.6 கோடி செலவில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தி உள்ளனர்.
    • அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை உலகறிய செய்யும் வகையில் கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகே மலைச்சாலையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 18.5.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56.60 கோடி செலவில் 7 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

    இதில் ஆதிச்சநல்லூருக்கு ஏ, பி என 2 கட்டிடங்கள் 16,486 சதுர அடியில், தரைதளம் மற்றும் முதல் தளமாக கட்டப்பட்டு உள்ளது. சிவகளை கட்டிடம் 8,991 சதுர அடியில் தரைதளம், முதல் தளமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கொற்கை பகுதி ஏ, பி என 2 கட்டிடங்கள் 17,429 சதுர அடியில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த 5 கட்டிடங்களிலும் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் தொன்மையான பொருட்கள் தொல்லியல் துறை சார்பில் ரூ.6 கோடி செலவில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தி உள்ளனர். இதுதவிர நிர்வாக கட்டிடம் மற்றும் சுகாதார வளாகம் என 2 கட்டிடங்கள் உள்ளன.

     

    மேலும், ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. செல்லும் பாதையில் அழகு நிறைந்த குளம், குளத்தின் மீது பாலம், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீரூற்று அமைக்கப்பட்டு உள்ளன.

    2 தியேட்டர்கள், சுற்றுச்சூழல் திறந்தவெளி திரையரங்கு அமைப்புகள், திறந்தவெளி கூட்டரங்கம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள் அனைத்து கூடங்களுக்கும் சென்று பார்க்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

    டிஜிட்டல் முறையில் உருவகப்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு செயல்முறை, 5-டி முறையில் தமிழ் நிலங்களின் வழியாக உணர்வு பயணம், பாண்டி விளையாட்டு, தரை ஒளிபடக் காட்சி, தொல்லியல் வரலாற்று பின்புலம் குறித்த ஆவணப் படம், படகில் செல்வது போன்ற இருக்கை வசதி தியேட்டர், ஆற்று பள்ளத்தாக்கு நாகரிகங்களின் தொடுதிரை காட்சி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    கொற்கை துறைமுகத்தில் பழங்கால தமிழர்கள் முத்துகுளித்து விலை உயர்ந்த முத்துக்களை ரோமாபுரி வரை விற்பனை செய்ததை விளக்கும் காட்சிகள், சிவகளை பகுதியில் கிடைத்த இரும்பு பொருட்களை மும்பை மற்றும் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆய்வு செய்த போது, அதன் வயது 5,300 ஆண்டுகள் என்று உறுதி செய்ததை விளக்கும் காட்சிகளை ஒளிபரப்பு செய்யவும் தனி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

     

    அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்நாட்டு பெரியவர்களுக்கு ரூ.20-ம், உள்நாட்டு சிறியவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. வெளிநாட்டு பெரியவர்களுக்கு ரூ.50-ம், வெளிநாட்டு சிறியவர்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கேமிரா கொண்டு செல்ல தனியாக ரூ.30-ம், வீடியோ கேமிரா கொண்டு செல்ல ரூ.100-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    மேலும் அங்கு 5-டி தியேட்டரில் ஐந்திணைகள் குறித்து விளக்கும் காட்சிகளை கண்டுகளிக்க ரூ.25-ம், 7-டி தியேட்டரில் காட்சிகளை கண்டுகளிக்க ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது.

    • பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.
    • ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு கடந்த 2024-ம் ஆண்டு டிச. 23-ந்தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். பின்னர், அவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஞானசேகரனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டார்.

     

    ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 70க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது.

    பின், இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு, கடந்த மார்ச் 7-ந்தேதி மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள், கடந்த நிறைவு பெற்றதை அடுத்து, கடந்த மே 28-ந்தேதி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

     

    இந்த வழக்கில் ஜூன் 2-ந்தேதி தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவித்தது.

    ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்றனர். விரைவான விசாரணைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின், ஞானசேகரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை காவல் ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாயார் கங்காதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அடிப்படையாக வைத்தே ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், அந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    மேலும், ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உள்ளிட்ட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு அளிக்க தாமதம் ஆனாலும் குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது அனைத்து தரப்பிலும் வரவேற்கப்பட்டது.

    • அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
    • ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க் கைகொடுத்தார்.

    சுனிதா வில்லியம்ஸ்

    உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.

    ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.

    அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக்கொண்டது.

    2006 ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார். விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். அவரது சாதனையை பாடப்புத்தகங்கள் பேசின.

    2024-25 பயணம்:

    கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் நாசாவின் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.

    அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 286 நாட்கள் (9 மாதங்கள்) விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    டிராகன் 

    ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உடைய டிராகன் ப்ரீடம் விண்கலம் மூலம் இந்த ஆண்டு இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

    அன்றைய தினம் அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

    அதன் பின் 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் அவர்கள் இருந்தனர். இதன்பின் அமெரிக்க அதிபர் மாளிகையில் டிரம்ப் அவர்களை அழைத்துப் பாராட்டினார்.

    அனுபவம்

    தனது விண்வெளி அனுபவம் பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்த சுனிதா, "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.

    கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்" என்று தெரிவித்தார்.

    விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.

    விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார்.

    சுனிதா வில்லியம்ஸ் இந்த பயணத்தின்போது ஜனவரி 2025-ல் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். விண்வெளியில் அதிக நேரம் 'விண்நடை' மேற்கொண்ட வீராங்கனை என்ற பெக்கி விட்சனின் சாதனையை சுனிதா முறியடித்தார்.

    அவர் மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்தார். 

    • பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.
    • நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

    ஒரு கட்சியின் வலிமையையும், அந்த கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதுதான் தேர்தல்கள். அந்த வகையில் 2014-ல் அசுர பலத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா. தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடம் பதித்து நாடு முழுவதும் தனது வளர்ச்சியை ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தி வருகிறது.

    இப்போதைக்கு அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்று தன்னை நிலை நிறுத்தி கொண்டது. காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் பிடியில் இருக்கும் மலையாள சேதத்தில் தாமரை மலர என்றுமே வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

    ஆனால் கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.

    2 நகராட்சிகளையும் தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றி இருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் முடிவும் காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையையும், இடது சாரிகளுக்கு தளர்ந்துவிடாத மனநிலையை கொடுத்தாலும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட கேரளாவில் பா.ஜ.கவும் வேகமாக வளர்ந்து வருவதை நிரூபித்துள்ளது.

    எனவேதான் இந்த உள்ளாட்சி தேர்தலை 'மாற்றத்திற்கான தருணம்' என்று பிரதமர் மோடி கூறினார். இந்த மாற்றம் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

    நாட்டின் தென் பகுதியில் பா.ஜ.க தனது வெற்றி சரித்திரத்தை பதிவு செய்துள்ளது என்ற பேச்சு அடங்குவதற்குள் நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று வெளியானது.

    286 நகராட்சிகளில் 245 நகராட்சிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது.

    அதேபோல் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 859 கவுன்சிலர் பதவிகளில் 3 ஆயிரத்து 300 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 372 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல் மட்டுமல்ல இந்த ஆண்டில் நடந்து முடிந்த பல தேர்தல்களில் பா.ஜ.கவே வெற்றி வாகை சூடி இருக்கிறது.

    தலைநகர் டெல்லியை 1998-ல் பா.ஜ.க ஆண் டது. அதன் பிறகு 27 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் பா.ஜ.கவால் வெற்றிக் கனியை ருசிக்க முடியவில்லை. 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத பலத்து டன் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் (பிப்.5) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க முடிவுரை எழுதியது.

    மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் தலைநகர் ஆட்சியை கைப்பற்றியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.

    நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் பா.ஜ.க மகத்தான சாதனை படைத்தது. கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது.

    மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றியது. அதுமட்டுமல்ல பீகார் மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 89 இடங் களை பா.ஜனதா கைப்பற்றி சாதித்தது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் நிதிஷ்கு மார் கட்சி 85 இடங்களை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.கவே கோலோச்சியது. சத்தீஸ்கரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிக ளையும் பா.ஜ.க கைப் பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 173 இடங்களில் 126 இடங்கள் பா.ஜ.க வசமானது.

    உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகர் மாநகராட்சிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.கவே வென்றது.

    உத்தரபிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை தோற் கடித்து பா.ஜ.க வென்றது.

    இதே போல் ராய்ப்பூர் மாநகராட்சி தேர்தலிலும் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ.க 60 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியது.

    பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.கவுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிர சுக்கு இந்த ஆண்டும் ராசி இல்லாத ஆண்டாகவே தொடங்கி முடிய போகிறது.

    அடுத்ததாக பிறக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தல்களிலும் எந்த கட்சி சாதிக்கும்? எந்த கட்சி சறுக்கும்? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் தங்கள் ஒரு விரல் புரட்சி மூலம் முடிவு செய் வார்கள்.

    • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக் நீக்கப்பட்டார்.
    • ஆசிய கோப்பையில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

    இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்தியின் மூலம் காணலாம்..

    இந்திய ரசிகர்களின் கனவு தகர்ந்தது

    2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி கண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் கால்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணியை காண நினைத்த ரசிகர்களின் கனவு தகர்ந்து போனது.

    இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கி இந்திய கால்பந்து சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    ஆசிய கோப்பையில் தோல்வி

    ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் இந்தியா 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றது.

    ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக ஆடிய இந்தியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த போட்டிகளிலும் இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது.

    சுனில் சேத்ரி ஓய்வு:

    இந்தியாவில் கால்பந்தாட்டம் என்றால் அதன் ஹீரோவாக கருதப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு பலராலும் பெரிதும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி. 

    உலக அளவில் அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் போர்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக, சுனில் சேத்ரி 83 கோல்களுடன் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார். தனது அபார திறமையால் கால்பந்து உலகில் தனக்கென தனி இடம் பிடித்த சுனில் சேத்ரி, இந்த ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .

    • இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.
    • பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.

    புதுடெல்லி:

    'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும்' என்பது பழமொழி. அதுபோல, இறைவன் கொடுப்பதாக இருந்தால் எந்தத் தடையையும் மீறி, மிக பிரம்மாண்டமாக, எதிர்பாராத வழிகளில் வந்து கொடுப்பார் என்பதை உணர்த்துவதே இந்தப் பழமொழி.

    அதுபோல, பிரபலமான ஒரு இளம்பெண்ணின் பிளாஷ்பேக்தான் இது.

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது கும்பமேளா. 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா.

    அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைந்தது.


    இந்நிலையில், மகா கும்பமேளாவில் வீதி வீதியாக ருத்ராட்ச மாலைகள், பாசிமணி விற்றுக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் தனது காந்த விழி கண்களால் இந்திய அளவில் பிரபலமானார். அவரது வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.

    அந்த இளம்பெண்ணின் பெயர் மோனலிசா போஸ்லே. இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்தவர்.

    அவர் மாலை விற்பனை செய்யும் விதம், அவரது அழகான தோற்றம் ஆகியவை பக்தர்கள் மட்டுமின்றி மீடியாவிலும் அதிக கவனத்தை ஈர்த்தது. சமூக வலைதளங்களின் அனைத்துப் பக்கங்களிலும் மோனலிசா தோற்றம் வைரலானது. இதைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பும் கிடைத்தது.

    'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு ஓ.டி.டி. நிறுவனங்கள் அவரை வெப் தொடரில் நடிக்க வைப்பதற்கு போட்டி போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    அதுமட்டுமின்றி, பிரபல கடைகள் திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

    பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.

    • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது சில பொருட்களின் விலைகள் உயர்ந்தன.
    • இந்தியர்களின் சேமிப்பு வீதம் தொடர்ந்து குறைந்து, கடன் சுமை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    ஜிஎஸ்டி (GST) வரியை மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மசோதாவை தாக்கல் செய்தார்.

     

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் நான்கு அடுக்குகளின் கீழ் ஒரே விதமான வரி நிர்ணயம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ் ஒவ்வொரு மாதமும் இவ்வளவு வரி வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    இது மத்திய மற்றும் மாநிலங்களின் பல மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து, ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையை கொண்டு வந்த ஒரு பெரிய வரி சீர்திருத்தமாகும். இந்தச் சட்டம், அரசியலமைப்பின் 101-வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

     

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல மறைமுக வரிகளான கலால் வரி, சேவை வரி, VAT போன்றவற்றை ஒரே வரியின் கீழ் கொண்டு வந்து வரி அமைப்பை எளிமையாக்குவது.

    மத்திய ஜிஎஸ்டி (CGST), மாநில ஜிஎஸ்டி (SGST), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

     

    ஜிஎஸ்டி கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது, அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் ஆவார்.

    மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு ஆரம்பத்தில் பெரும் குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டது. குறிப்பாக, வரி விகிதங்கள் அடிக்கடி மாறியது. வாகனங்கள் போன்ற பொருட்களின் விலையில் எதிர்பார்த்த அளவுக்கு குறைவு ஏற்படாதது, சிறு வணிகர்களுக்கு சிக்கல்கள், வரி செலுத்துவதில் இருந்த சிக்கல்கள் போன்ற காரணங்களால் மக்களிடமும், வணிகர்களிடமும் எதிர்ப்புகள் கிளம்பின, எனினும் காலப்போக்கில் வரி சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு பலரும் பயனடைந்தனர்.

    ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது சில பொருட்களின் விலைகள் உயர்ந்தன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் வரி தாக்கல் செய்வது சவாலாக இருந்தது. சொகுசுப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.

    இந்தியர்களின் சேமிப்பு வீதம் தொடர்ந்து குறைந்து, கடன் சுமை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதனை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடியை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது, ஜி.எஸ்.டி. வரியிலும் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'ஜி.எஸ்.டி. 2.0' அமலுக்கு வந்ததால் பொருட்கள் விலை வெகுவாக குறைந்தது.

    அதன்படி ஏற்கனவே உள்ள 5, 12, 18, 28 என்ற நான்கு வரி விகிதங்கள் மாற்றப்பட்டு, இப்போது 5 மற்றும் 18 என்ற 2 வரி விகிதங்களாக எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிக்கும், 28 சதவீதத்தில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீதத்திற்கும் வருகின்றன.

    இந்த புதிய விகிதம் கடந்த செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்தது.

    உணவுப்பொருட்கள்

    • 18 சதவீதம் இருந்த ரெடிமேட் பரோட்டா, 5 சதவீதத்தில் இருந்த சப்பாத்திக்கும் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் விலை ஒன்றுக்கு 50 பைசா முதல் ரூ.5 வரை குறைந்தது.

     

    • சாக்லெட்டுகள், பாஸ்தா, ரெடிமேட் நூடூல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் அதன் விலையும் கணிசமாக குறைந்தது.

    • பன்னீருக்கு இருந்த 5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோ பன்னீர் விலை ரூ.300 ஆக இருந்தால் ரூ.15 குறைந்தது. அதே போல் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு இருந்த 12 சதவீத வரி 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், அதன் விலையும் குறைந்தது. உதாரணமாக ஒரு கிலோ நெய்-வெண்ணெய் ரூ.600 விற்பனை செய்யப்பட்டால் ரூ.40 குறைந்து ரூ.560 ஆனது.

     

    • உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைக்கப்பட்டது. மக்களின் வீட்டு உபயோக பொருட்களான ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், '32 இன்ச்'-க்கு மேல் உள்ள டி.வி.க்கள், 'டிஷ் வாஷர்' ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரிக்குள் வந்தது. இதனால் இந்த பொருட்களின் சராசரி விலையில் இருந்து 10 சதவீதம் குறைந்தது. உதாரணமாக ரூ.40 ஆயிரம் விற்ற ஏ.சி., இப்போது ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.36 ஆயிரம் ஆனது.

    • ஆடம்பர கார்களை தவிர 1,200 சி.சி.க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டது. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் அதன் விலைக்கு ஏற்ப விலை குறைவு இருக்கும். அதாவது ரூ.65 ஆயிரம் முதல் ரூ.3½ லட்சம் வரை கார் விலை குறையும்.

    • 350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள் வரி 28-ல் இருந்து 18 ஆக குறைந்தது. அதனால் அதன் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரை குறைந்தது. மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே இருந்த 5 சதவீத வரி தற்போதும் தொடர்வதால் அதில் எந்த மாற்றமும் இல்லை.

    • மருத்துவ உபகரணங்கள், தெர்மாமீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவை 18 மற்றும் 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

    • மக்கள் பயன்படுத்தும் மூக்கு கண்ணாடிகள், லென்சுகள் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் பெரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.1,000 ஆக இருந்தால் இப்போது அதன் விலை சராசரியாக 25 சதவீதம் அளவுக்கு குறைந்து ரூ.750 ஆகி உள்ளது.

    • மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர்கள், மேப்-புகள் ஆகியவை பூஜ்ஜிய வரிக்கு வந்து விட்டதால் அதன் விலை குறைந்தது.

    • இது தவிர சோப்புகள், டூத் பேஸ்ட், ஷாம்புகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய்கள் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மாறி இருப்பதால் குறைந்தது ரூ.6.50-ல் இருந்து ரூ.40 வரை விலை குறைந்தது. சராசரியாக 10 சதவீதம் வரை பொருட்களுக்கு ஏற்ற விலை குறைப்பு செய்யப்பட்டது.

    • துணிமணிகள் ஏற்கனவே இருக்கும் 5 சதவீத வரியில் மாற்றம் இல்லையென்றாலும் ரூ.2,500 மேல் இருக்கும் ஆடைகள் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல் குல்ட் மெத்தைகள் போன்றவையும் வரி உயர்ந்து உள்ளதால் அதன் விலைகள் அதிகரித்துள்ளது.

     

    • வீட்டு உபயோகத்திற்கு பெரிதும் தேவையான சமையல் மற்றும் சாப்பாட்டு பாத்திரங்கள் பானைகள், குக்கர், தட்டுகள், கரண்டிகள், வாணலி, டவா, அடுப்பு, கிண்ணங்கள், கண்ணாடிகள், கத்தி, மேசை கரண்டி, ஸ்பூன் வகைகள் ஆகியவற்றில் பெரும்பாலும் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைந்து உள்ளது.

    • சைக்கிள்கள் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக ஒரு சைக்கிளுக்கு விலைக்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை குறைந்தது.

    • கட்டுமான பொருளான சிமெண்ட் வரி 28-ல் இருந்து 18 ஆக மாறி இருப்பதால் மூட்டைக்கு ரூ.40 வரை குறைந்தது. அதே நேரத்தில் கம்பிகள் ஏற்கனவே இருக்கும் 18 சதவீதத்தில் இருப்பதால் அதன் விலையில் மாற்றம் இல்லை.

    • சிகரெட், புகையிலை, ஆடம்பர கார்கள் ஆகியவற்றின் வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆகி விட்டதால் அதன் விலை எல்லாம் அதிகரித்துள்ளது.

    இந்த விலை குறைப்பை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    பொருட்களின் விலை குறையாமல் அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் நேரடியாக புகார் அளிக்க நுகர்வோர் புகார் ஒருங்கிணைந்த இணையதளம் https://consumerhelpline.gov.in மற்றும் தேசிய நுகர்வோர் உதவி எண் 1800-11-4000 மற்றும் 1915 ஆகியவற்றில் சிறப்பு பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.

    செல்போனில் இருந்து 14404 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.

    சமீபத்திய ஜிஎஸ்டி வரி குறைப்பு பல தரப்பு மக்களிடையே, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடையே, உடனடி மகிழ்ச்சியையும், பொருளாதார ரீதியிலான நன்மையையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டிரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
    • சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் படங்களும் யூடியூப்பில் வியூஸ்களை அள்ளின

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் உயிர்பெற்று, டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த காலகட்டத்தில், யூடியூப் போன்ற தளங்கள் சினிமா ரசிகர்களின் முதல் தேர்வாக மாறின.

    இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டிரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் படங்களும் யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தன.

    இந்தக் கட்டுரையில், 2025 ஆம் ஆண்டு யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் சினிமா டிரெய்லர்களைப் பார்க்கலாம்

    1. கூலி (Coolie) – 54 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 28M + 10M +16M)

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

    இந்தபெரும் எதிரிபார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    2. தக் லைஃப் (Thug Life) - 50 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 35M + 6.5M +8.8M)

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'தக் லைஃப்'. நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல் கூட்டணியில் இப்படம் உருவானதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 2 ஆம் இடம் உள்ளது.

    3. குட் பேட் அக்லி (Good Bad Ugly) – 39 மில்லியன் பார்வைகள் (டீசர்)

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டீசர் தமிழில் மட்டும் 39 மில்லியன் பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 3 ஆம் இடம் உள்ளது.

    4. ரெட்ரோ (Retro) 32 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 24M + 4.6M + 3.3M)

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ரெட்ரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 4 ஆம் இடம் உள்ளது.

    5. டிராகன் (dragon) - 26 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 21M + 5M )

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.

    லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்பு வெளியான பிரதீப் ரங்கநாதன் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 5 ஆம் இடம் உள்ளது.

    6. விடாமுயற்சி (Vidaamuyarchi) – 20 மில்லியன் பார்வைகள்

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    நீண்ட நாட்களாக உருவாகி வந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டிரெய்லர் தமிழில் மட்டும் 20 மில்லியன் பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 6 ஆம் இடம் உள்ளது.

    7. இட்லி கடை (Idli Kadai) – 20 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 16M + 4M)

    தனுஷ் இயக்கி நடித்த படம் இட்டலி கடை. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராயன் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 7 ஆம் இடம் உள்ளது.

    8. மதராசி (Madharasi) – 20 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 19M + 1M)

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

    அமரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மதராஸி படம் வெளியானதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 8 ஆம் இடம் உள்ளது.

    9. பைசன் காலமாடன் (Bison Kaalamaadan) – 17 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 15M + 2M)

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ஸ்போர்ட்ஸ்-டிராமா படம் பைசன் காளமாடன். கபடி வீரரின் வாழ்க்கையை வெளிப்படுத்திய இப்படத்தில் பசுபதி, அமீர், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 9 ஆம் இடம் உள்ளது.

    10. காந்தா (Kaantha) – 14 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 6M + 7M + 1M)

    துல்கர் சல்மான், ராணா டகுபதி நடித்த பீரியட்-டிராமா படம் காந்தா. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 10 ஆம் இடம் உள்ளது.

    முடிவுரை:

    2025 தமிழ் சினிமாவுக்கு யூடியூப் ஒரு பெரிய ஆயுதமாக மாறியது. இந்த டிரெய்லர்கள் வெறும் ப்ரோமோக்கள் அல்ல; அவை ரசிகர்களின் உற்சாகத்தை அளவிடும் அளவுகோல்கள். சூப்பர் ஸ்டார்களின் படங்கள் டாப்பில் இருந்தாலும், இளம் இயக்குநர்களின் படங்களும் தங்கள் இடத்தைப் பிடித்தன. இது தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!

    • சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் ரூ. 105 ஆகும்.
    • ஏ.சி. ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் உள்ள மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்த மின்சார ரெயிலின் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்தது.

     

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இந்த புறநகர் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஏ.சி. ரெயில்களில் தானியங்கி கதவுகள், பயணிகள் தகவல் அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள் போன்ற மேம்பட்ட வசதிகள் உள்ளன. மேலும் 1,116 பேர் நின்றும் ,3,798 பேர் அமர்ந்தும் பயணிக்கலாம்.

    சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் ரூ. 105 ஆகும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35-ல் இருந்து தொடங்குகிறது.

    இந்த ஏ.சி. ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00 மணி மற்றும் மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 8:35 மணி மற்றும் மாலை 5:25 மணி செங்கல்பட்டுக்கு வந்தடையும்.

    மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9:00 மணி மற்றும் மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு காலை 10:30 மணி மற்றும் இரவு 7:15 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.

    மேலும் இந்த ரெயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

     

    முதலில் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அது குறைந்தது. ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லாததால் காலியாகவே ஓடின. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணம் என்று பயணிகள் தெரிவித்தனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டப்பட்டது.

    எதுவாக இருப்பினும் கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்தார்.
    • ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆலமரங்களை நடும் பணியை தேர்வு செய்தார்.

    புதுடெல்லி:

    "தென்னைய பெத்தா எளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு"

    இது 'எங்க ஊரு ராஜா' என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். எவ்வளவு தத்துவமான வரிகள்.

    தந்தை பிள்ளையிடம் காட்டிய பாசத்தை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்ற வரிகள்.

    அப்படிப்பட்ட பிள்ளைப் பாசத்தை விட தாய்மைப் பேறு எவ்வளவு மகத்தானது.

    அந்தத் தாய்மைப் பேறு தனக்கு இல்லை என்றாகிப் போனதும் இந்த பெண்மணி எடுத்த ஒரு முடிவு ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    திருமணம் முடிந்து பிள்ளைப் பேறுக்காக கோவில் கோவிலாக சென்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றியவர் சற்றே மாறுபட்டு சிந்தித்தார்.

    பிள்ளைக்காக மரங்களைச் சுற்றுவதை விட்டு அந்த மரங்களையே தன் பிள்ளைகளாக உருவாக்கினால் என்ன என தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்.

    பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்த அந்தப் பெண்மணி, மரங்களை நடும் முயற்சியை தொடங்கினார். அதுவும் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆல மரங்களை நடும் பணியைத் தேர்வு செய்தார்.


    இப்படிப்பட்ட தைரியமான முடிவெடுத்த அந்தப் பெண்மணி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    சாலுமரத திம்மக்கா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்த மண் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் கிராமம். 1911-ல் பிறந்த அவர், இளம் வயதிலேயே ஹூலிகல்லு ஊரைச் சேர்ந்த சிக்கையாவை மணமுடித்தார்.

    திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை வரம் கிடைக்கவில்லை. கணவரின் ஆதரவு இவரின் பெரும் வரமானது.

    இருவரும் ஆலமரக் கன்றுகளை உருவாக்கி சில ஆலமரக் கன்றுகளை நட்டனர். அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என ஆலமரக்கன்றுகள் பெருகின.

    மரங்களை நடுவதுடன், அவைகளைத் தொடர்ந்து பராமரித்து வந்தனர். கோடைகாலத் தேவைக்காக மழைக்கால நீர் சேமிப்பாக சிறு சிறு குளங்களை வெட்டினர். தீராத தண்ணீர் பஞ்சத்தின் போதும் தளராமல் தொலை தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆலமரங்களுக்கு உயிர் தந்தனர் இந்த தம்பதியினர்.

    கணவர் மறைந்த பிறகும் தன் முயற்சியிலிருந்து பின்வாங்காமல் தனது வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்தார்.

    தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது (1997), ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருது (2010), இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2019) உள்பட பல சிறப்புமிக்க விருதுகள் மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவை இவரை பெருமைப்படுத்தின.

    கடந்த 2016-ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியின் அங்கீகாரத்தையும் பெற்றார்.

    இப்படி பல்வேறு புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி அன்று 114-வது வயதில் காலமானார்.


    கன்னடத்தில் 'மரங்களின் வரிசை' என பொருள்படும் சாலுமரதா என அன்புடன் அழைக்கப்படும் திம்மக்காவின் வாழ்க்கைப் பணி பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

    சாலுமரதா திம்மக்காவின் மரணத்துக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

    "மரம் மனிதனைவிட உயர்ந்தது. அதற்கு தெரிந்தது எல்லாம் பிறருக்கு நன்மை செய்வதே" என அடிக்கடி கூறுவது திம்மக்காவின் வழக்கம். இன்று அவர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவர் நட்ட ஆயிரக்கணக்கான மரங்களின் உருவிலும், அவை விடும் மூச்சுக் காற்றிலும் திம்மக்கா நம்முடன் என்றென்றும் நிலைத்திருப்பார்.

    • மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.
    • தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.

    2025-ஆம் ஆண்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மக்கள் தொகை வீழ்ச்சி உருவெடுத்துள்ளது.

    மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி கவலைப்பட்ட உலக நாடுகள், இப்போது போதிய குழந்தைகள் பிறக்காதது குறித்து அச்சமடைந்துள்ளது.

    இதனால் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல சலுகைகளை அறிவித்தும் பெரிய பயன் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றன.

    உலகின் 60%-க்கும் அதிகமான நாடுகளில் பிறப்பு விகிதமானது, மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.

    ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக கருத்தரிப்பு விகிதம் 2.4-ஐத் தாண்டவில்லை.

    1950-களில் 4.7-ஆக இருந்த உலக சராசரி, இப்போது பாதியாகக் குறைந்துள்ளது.

    2025இல், உலக கருத்தரிப்பு விகிதம் முந்தைய ஆண்டை விட 0.37% குறைந்து 2.40 ஆக உள்ளது. ஐ.நா. மக்கள்தொகை அறிக்கை இதை அசாதாரண குறைவு என்று விவரிக்கிறது.

    இந்தக் குறைவு, 2050-க்குள் உலக மக்கள்தொகையை 2.1-க்கு கொண்டுவரும் என்று ஐ.நா. கணிக்கிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் 2.1 ஐ கீழ் உள்ளன. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2.0 ஆக, நகர்ப்புறங்களில் 1.7 ஆகக் குறைந்துள்ளது.

    சிக்கலில் சீனா: 

    சீனாவின் நிலைமை 2025-இல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து சுருங்கி வருகிறது. சீனாவின் கருத்தரிப்பு விகிதம் 2025-ல் 1.01-ஆக உள்ளது.

    அண்மைக் காலம் வரை உலக மக்கள் தொகையில் முதலிடத்திலிருந்த சீனாவை இந்தியா கடந்த 2023 முந்தியது.

    தற்போது உலகின் மக்கள் தொகையில் 145 கோடி மக்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    இதற்கு சீனா ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை மட்டுமே என சட்டம் போட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதே காரணம்.

    கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றி ருந்தால் சலுகைகள் மறுக்கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஆனால் அதுவே இப்போது அந்நாட்டுக்கு வினையாக வந்து முடிந்துள்ளது.

    2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது. 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.

    இருப்பினும் பல சீனர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்போது அந்த ஒரு குழந்தை கூட வேண்டாம் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டனர்.

    இதனால் சீனா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் கொள்கைகளை வகுத்து அமல்படுத்தி வருகிறது.

    அதன் படி சீனாவில் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரிச்லுகைகள் மற்றும் நேரடிப் பண உதவி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்தது.

    இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அனைத்து பிறப்பு தொடர்பான மருத்துவ செலவுகளையும் அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.

    ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 13 சதவீத VAT வரி விதிக்கப்படும் என்றும் அண்மையில் சீனா அறிவித்தது.

    இவ்வளவு செய்தும், சீன இளைஞர்கள் அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பளு காரணமாகத் திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றைத் தவிர்த்து வருகின்றனர்.

    அடுத்ததாக ரஷியா..

    உக்ரைன் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால், ரஷியாவின் பிறப்பு விகிதம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

    அதிபர் புதின் 'பெரிய குடும்பங்களே ரஷியாவின் எதிர்காலம்' என்று கூறி வருகிறார். சோவியத் காலத்து விருதான 'மதர் ஹீரோயின்' விருதை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு பெரும் தொகையும் கௌரவமும் வழங்கப்படுகிறது. தம்பதிகள் வீட்டில் ஒன்றாக இருப்பதற்கென்றே சிறப்பு விடுமுறைகளையும் ரஷிய நிறுவனங்கள் அறிவித்தன.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி பெண்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.81,000) கணிசமான ஊக்கத்தொகையை ரஷிய அரசு வழங்குகிறது. இது பின்னர் பள்ளியில் பயிலும் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

    மேலும், கருக்கலைப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தை வேண்டாம் என்ற கருத்தைப் பரப்புவதற்குத் தடை விதிக்க மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஜப்பான்:

    குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் தனி அமைச்சகமே வைத்துள்ளது. அங்கு, 'குழந்தை மற்றும் குடும்ப முகமை' அமைச்சகத்தின் மூலம் டேட்டிங் செயலிகளை அரசாங்கமே நடத்தி இளைஞர்களைத் திருமணத்திற்கு ஊக்குவித்து வருகிறது.

    அதிக வேலை நேரம், வேலைப்பளு காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் தாம்பத்தியத்தின் மீதான ஆர்வத்தை இழந்து வருகின்றனர். தேவைப்பட்டால் வாடகை கணவன் என்ற அளவுக்கு ஜப்பானில் நிலைமை மோசமாகி விட்டது. 

    தென் கொரியா:

    தற்போதைய நிலவரப்படி, 0.7-க்கும் கீழ் என்ற அளவில் உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடாக தென் கொரியா உருவெடுத்துள்ளது.

    2025-இல், ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி அளிக்கும் திட்டங்களை அந்நாடு அறிவித்துள்ளது.

    ஆனால் ஏன்?

    வீடு வாங்குவது மற்றும் குழந்தைகளை வளர்ப்பது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாக மாறியது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவதால், திருமண வயது தள்ளிப் போவது, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பாலியல் உறவில் ஆர்வமின்மை, கருவுறுதல் பிரச்சனை ஆகியவை இந்த உலகளாவிய பிறப்பு சதேவீத வீழ்ச்சிக்கு காரணங்களாக சுட்டப்படுகின்றன.

    சுதந்திரமான வாழ்க்கை முறையை விரும்பும் இந்த தலைமுறையினரிடையே 'இருவருக்கும் வருமானம் - குழந்தை வேண்டாம்' என்ற கலாச்சாரம் உலகெங்கும் பரவி வருகிறது.

    2025-ஆம் ஆண்டு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ரஷியா, சீனா, தென் கொரியாவை போல் பணத்தை அள்ளிக் கொடுத்தால் மட்டும் பிறப்பு விகிதத்தை உயர்த்திவிட முடியாது என்பதாகும்.

    வேலை-வாழ்க்கைச் சமநிலை, பாலின சமத்துவம் மற்றும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கினால் மட்டுமே இந்த மக்கள் தொகைச் சரிவை உலக நாடுகள் தடுக்க முடியும்.

    சரி இந்தியாவுக்கு வருவோம்!

    இதற்கிடையே இந்திய அளவில் ஒரு புள்ளிவிரமமும் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

    அதாவது, இந்தியாவில் 49 மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    2021 குடிமைப் பதிவுத் தரவுகளின்படி இந்த உண்மை இந்த ஆண்டு தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலைமை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. இந்த பிறப்பு விகித குறைவு, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

    2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. அதேசமயம் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கிறது.

    குறிப்பாக இந்த 49 மாவட்டங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.

    2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன, அப்படிப் பார்த்தால், இந்த எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கி வருவதாகத் தெரிகிறது.

    இதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்களிலும், பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது. மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகளை வரையறுக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    ஆனால் இதனால் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என தென் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  

    ×