என் மலர்
2025 - ஒரு பார்வை
- இந்த ஆண்டு,உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இருந்து வெளியான பாடல்கள் உலக அளவில் வைரலானது.
- அனிருத், சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனது.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கக் காலமாக அமைந்தது. இந்தாண்டு தமிழ்த் திரையுலகம், இசை அளவில் புதிய உச்சங்களைத் தொட்டது. யூடியூப்பில் பாடல்களின் பார்வைகள் (வியூஸ்) எண்ணிக்கை, ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு, ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இருந்து வெளியான பாடல்கள் உலக அளவில் வைரலானது.
அனிருத், சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் பங்களிப்பு, தமிழ் இசையை உலக அரங்கில் கொண்டு சேர்த்தது.
இந்தக் கட்டுரையில், 2025-இல் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் பாடல்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இந்தப் பட்டியல், லிரிக் வீடியோக்கள் மற்றும் முழு வீடியோக்களின் மொத்த பார்வைகளை அடிப்படையாகக் கொண்டது.
1. மோனிகா (Monica) - படம்: கூலி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள்: சுப்லாஷினி மற்றும் அனிருத்
பார்வைகள்: 314 மில்லியன் (லிரிக் + வீடியோ: 236M + 78M)
இந்தப் பாடல், ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்றுள்ளது. அனிருத்தின் டைனமிக் பீட்ஸ், பூஜா ஹெக்டேவின் நடனம் இளைஞர்களை ஈர்த்தது. "மோனிகா... ஓ மோனிகா..." என்ற வரிகள், ரீல்ஸ் மற்றும் டிக்டாக்கில் வைரலானவை. இந்தப் பாடல், 2025-இல் தமிழ் சினிமாவின் மாஸ் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.

2. கோல்டன் ஸ்பாரோ (Golden Sparrow) - படம்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடகர்கள்: சுப்லாஷினி
பார்வைகள்: 244 மில்லியன்
இது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற ரொமான்டிக் டூயட் பாடலாகும். பிரியங்கா மோகனின் சார்மிங் தோற்றத்துடன், ஜி.வி.பிரகாஷின் மெலடி, காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியது. "கோல்டன் ஸ்பாரோ... என் நெஞ்சுல ஆரோ..." வரிகள், சமூக வலைதளங்களில் டிரெண்டானவை. இந்தப் பாடல், 2025-இல் இளம் தலைமுறையின் காதல் ஆன்தமாக மாறியது.

3. கனிமா (Kanimaa) - படம்: ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: 225 மில்லியன் (லிரிக் + வீடியோ: 123M + 102M)
இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். சூர்யா - பூஜா ஹெக்டே நடனம் மற்றும் சந்தோஷ் நாராயணனின் குரல் மற்றும் நடனத்தால் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. இந்தப் பாடல், தமிழ் சினிமாவின் உணர்ச்சி இசையின் சிறந்த உதாரணம் ஆகும்.

4. பொட்டல முட்டாயே (pottala muttaye) படம் - தலைவன் தலைவி
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: சுமார் 167 மில்லியன் (லிரிக் + வீடியோ: 67M + 100M)
தலைவன் தலைவி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி குரலில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடனத்தால் இந்த பாடல் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.

5. முத்த மழை (Muththa Mazhai) - படம்: தக் லைஃப் (Thug Life)
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: சின்மயி
பார்வைகள்: 139 மில்லியன் (லிரிக் + வீடியோ: 129M + 10M)
ஏ.ஆர். ரகுமானின் மேஜிக்கல் இசை மற்றும் சின்மயியின் இனிமையான குரலுடன் உருவான இந்த ரொமான்டிக் பாடல் நம்மை மெய்மறக்க வைத்தது. குறிப்பாக சின்மயியின் குரலால் இந்த பாடலுக்கு உயிரோட்டம் ஏற்பட்டதாக ரசிகர்கள் இந்த பாடலை வியந்தோதி ரசித்தனர்.

6. ஊரும் ப்ளட் (Oorum Blood) படம்: டியூட் (Dude)
இசையமைப்பாளர்: சாய் அபயங்கர்
பாடகர்கள்: சாய் அபயங்கர் மற்றும் அபர்ணா நாராயணன்
பார்வைகள்: 139 மில்லியன் (லிரிக் + வீடியோ: 130M + 9M)
இது டியூட் படத்தில் இடம்பெற்ற இது ஒரு ஹிப்-ஹாப் டிராக் ஆகும். இந்த பாடல் இளைஞர்களின் வாழ்க்கையை காதலை பிரதிபலித்தது. சாய் அபயங்கரின் கூல் பீட்ஸ் மற்றும் பிரதீப் மமிதாவின் டான்ஸ் இந்த பாடலை ஹிட் பாடலாக மாற்றியது. "ஒரு அலை அவ கலை அவ..." வரிகள், காதலர்களின் ரிங்டோனாக மாறியது

7. வழித்துணையே (Vazhithunaiye) படம்: டிராகன் (Dragon)
இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்
பாடகர்கள்: சித் ஸ்ரீராம், சஞ்சனா கல்மஞ்சே
பார்வைகள்: சுமார் 109 மில்லியன் (லிரிக் + வீடியோ: 31M + 78M)
டிராகன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காதலர்களின் விருப்ப பாடலாக மாறியது. குறிப்பாக இந்த வீடியோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலால் தான் கயாடு லோகர் இனைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

8. ஜிங்குச்சா (Jinguchaa) படம்: தக் லைஃப் (Thug Life)
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
பார்வைகள்: சுமார் 96 மில்லியன்
இது தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். கமல்ஹாசன், சிம்பு நடனத்தாலும் வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் குரலாலும் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றது. "சிக்கிட்டான் சிக்கிட்டான் சிக்காத ஆளு சமையலுக்கு ஏத்த ஆளு கிடைச்சிட்டான்..." வரிகள் பெண்களை வெகுவாக கவர்ந்தது.

9. கண்ணாடி பூவே (Kannadi Poove) – ரெட்ரோ (Retro)படம்: ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பார்வைகள்: சுமார் 88 மில்லியன் (லிரிக் + வீடியோ: 78M + 10M)
இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற காதல் சோக பாடலாகும். சந்தோஷ் நாராயணின் இசை மற்றும் குரல் இந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தது. காதல் சோகத்தை நினைப்பவர்களின் ரிங் டோனாக இந்தாண்டு இந்த பாடல் மாறியது.

10. யெடி (Yedi) – படம்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்
பாடகர்கள்: டல்கர், ஜோனிடா காந்தி
பார்வைகள்: சுமார் 84 மில்லியன் (லிரிக் + வீடியோ: 20M + 64M)
இது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற காதல் பாடலாகும். தனுஷ், ஜோனிடா காந்தி குரலால் இந்த பாடலால் பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக அனிகா சுரேந்திரன் நடனம் இந்த பாடலுக்கு மெருகூட்டியது.
முடிவுரை:
2025 தமிழ் இசை, பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் சரியான கலவையாக இருந்தது. இந்தப் பாடல்கள், கோலிவுட்டின் உலகளாவிய தாக்கத்தை நிரூபித்தன. அடுத்த ஆண்டு, இன்னும் பெரிய வெற்றிகளை எதிர்பார்க்கலாம்!
- நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
- பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது.
நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இயங்கி வந்தன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்தும் வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை நிறைவேற்றாத 334 அரசியல் கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது.
இதுதவிர அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநில கட்சிகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29பி மற்றும் 29சி பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்கு கோர முடியாது.
இதையடுத்து 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை செப்டம்பர் மாதம் தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொங்கு ஈஸ்வரன்
இந்த 42 அரசியல் கட்சிகளில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் உள்ளது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளார்.

ஜவாஹிருல்லா
ரத்து செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சியானது, கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனவே அவர்கள் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக கருதப்படவில்லை.

ஜான் பாண்டியன்
இதேபோன்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தேர்தல் கமிஷனின் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து இவரது கட்சி தேர்தலை சந்தித்து வந்தது. 2021ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. சின்னத்திலும் போட்டியிட்டது.

தமிமுன் அன்சாரி
2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை.
நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இவ்வாறு 808 கட்சிகளின் பதிவை 2 கட்டங்களாக ரத்து செய்துள்ளதை தொடர்ந்து தற்போது தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,046 ஆக குறைந்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் விதிகளின்படி, தொடர்ந்து 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் கணக்கு தாக்கல் செய்யாத 474 பதிவு செய்யப்படாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை (Registered Unrecognised Political Parties - RUPPs) ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை, தேர்தல் முறையை சீர்திருத்தும் ஒரு தொடர்ச்சியான பணியின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் 2025 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மொத்தம் 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
- இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும்.
- இன்னும் பல உணவுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் அந்த ஆண்டில் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்பட்டு தேடப்பட்டவை குறித்து கூகுள் பட்டியலை வெளியிடும். உதாரணத்திற்கு அரசியலில் அதிகம் தேடப்பட்ட தலைவர், சுற்றுலா செல்ல விரும்பி தேடிய இடம் என வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிடுகிறது.
அந்த வகையில், 2025-ம் கூகுளில் இந்தியா அளவில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களால்அதிகம் தேடப்பட்ட உணவுகளில் தென்னிந்திய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை, திருவாதிரை களி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளது சுவாரசியம்.

இட்லி
தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இட்லி. 'ரெண்டு இட்லி' என்றபடி டிபனை ஆரம்பிக்கிற நம் ஊர்க்காரர்களின் பழக்கம், அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாதது.
ஒரு காலத்தில் பலருக்கும் பண்டிகைகள், விருந்து, திருவிழாக்கள் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே கண்ணில் காணக்கிடைத்த இட்லி இன்றைக்கு சல்லிசாகக் கிடைக்கிறது. கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல்கள்... ஏன்... சில வீடுகளில்கூட இட்லி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது.
இந்த அபூர்வ உணவு. வெகு எளிதாகக் கிடைப்பதாலேயே சாப்பிடுவதில் இதன் அளவு குறைந்து போயிருக்கலாம். ஆனால், இதன் மீதான மோகம் என்றென்றைக்கும் குறையவே குறையாது என்பதுதான் யதார்த்தம்.
அதனால் தான் என்னவோ 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் முதன்மையானது, இட்லிதான். இட்லி தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். அரிசி மற்றும் உளுந்த மாவு கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, மென்மையாக, பஞ்சு போன்று இருக்கும். இட்லிக்கு தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
திருவாதிரை களி

திருவாதிரை களி என்பது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை திருநாளன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் மிக முக்கியமான பிரசாதமாகும். இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும். 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் 7-ம் இடத்தில் உள்ளது. திருவாதிரை அன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் இந்த களி, உடல் ஆரோக்கியத்திற்கும், மன நிம்மதிக்கும் நல்லது எனக் கருதப்படுகிறது.
கொழுக்கட்டை

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10-வது உணவுதான் கொழுக்கட்டை. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இது ஆவியில் வேக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு ஸ்வீட்டாகும். விநாயகர் சதுர்த்தி நாளில் செய்யக்கூடிய முக்கியமான இனிப்பாகும். ஏனெனில் இது விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படுகிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று விதவிதமான முறையில் செய்வர்.
இன்னும் பல உணவுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன. அவைகள், போர்ன்ஸ்டார் மார்டினி, மோதகம், தேகுவா, உகாதி பச்சடி, பீட்ரூட் கஞ்சி, யார்க்ஷயர் புட்டிங், கோண்ட் கதிரா ஆகியவை ஆகும்.
- டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
- அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
புதுடெல்லி:
சுகுமார் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தான். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஊர் திரும்பினான்.
கடைக்குச் சென்று கொண்டிருந்த சுகுமாரை எதிரில் வந்த அவனது நண்பன் சுந்தர் பார்த்தான். உடனே, வாடா சுகுமார் எப்படி இருக்கே என கேட்டான் சுந்தர்.
நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே என்றான் சுகுமார்.
ஊருக்குப் போயிருந்தியே என்ன விஷயம்? ஊருல எல்லாம் நல்லா இருக்காங்களா என்றான் சுந்தர்.
எல்லாம் நல்லா இருக்காங்க. சரி, நாட்டு நடப்புல என்ன முக்கியமான விஷயம் சொல்லு என ஆரம்பித்தான் சுகுமார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய நாட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கும் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். பிரதமரின் வெளிநாட்டு பயணங்களிலும் அந்நாட்டு உயரிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாம் இந்தியாவுக்கு பெருமைதானே என்றான் சுந்தர்.
ஆமாம், அதுபோலவே இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் நாம் அளிக்கிற மரியாதை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது தெரியுமா என கூறினான் சுகுமார்.
இந்த ஆண்டு இந்தியா வந்த அதிபர் புதினின் பயணம் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது எனக்கூறிய சுந்தர், அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சொல்லியதன் சாராம்சம் பின்வருமாறு:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதன் காரணமாக உலக அரங்கில் ரஷியா மிகவும் தனிமைப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரஷியா சென்றார். அப்போது, இந்தியாவுக்கு வருமாறு அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். அதிபர் புதினும் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமர் புதின் டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்கள் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

டிசம்பர் 4-ம் தேதி டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதிபர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதைம் வழங்கப்பட்டது. இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது உலக அளவில் கவனம் பெற்றது. அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
தலைநகர் டெல்லியில் நடந்த இந்தியா-ரஷியா இடையிலான 23-வது உச்சி மாநாட்டில் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பங்கேற்றனர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரஷிய அதிபர் விளாடிமர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த எம்.பி.யான சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
வெளிநாட்டு தலைவர்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வரும்போது, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மூத்த எம்.பி.க்கள் அழைக்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறையில் ராகுல் காந்தி அழைப்பில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அளித்திருந்த பரிசுப் பொருட்கள்:
காஷ்மீர் குங்குமப்பூ, அசாமின் கருப்பு தேயிலை, ஆக்ராவின் பளிங்கு செஸ் செட், கைகளால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி குதிரை சிற்பம், முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் கோப்பைகள், ரஷிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகம் ஆகியவை.
இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பரிசுப் பொருட்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.

இந்தியாவில் தனது அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் ரஷியா புறப்பட்டுச் சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழியனுப்பி வைத்தார்.
அதிபர் புதினின் இந்திய பயணம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தான்.
பரவாயில்லையே, அதிபர் புதின் - பிரதமர் மோடி இடையிலான நட்பு இரு நாடுகளுக்கும் நல்ல பலனை அளித்தால் சரிதான் என சொன்னபடியே வீட்டுக்குப் புறப்பட்டான் சுகுமார்.
- சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, 370-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர்.
- 215 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடத்திற்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது.
டெல்லியில் தமிழர்கள் குடும்பங்களாய் வாழ்ந்து வந்த மதராஸி கேம்ப் இடிப்பு சம்பவத்தை தமிழ் மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்த 350 தமிழ் குடும்பங்கள் நடுத்தெருவில் தள்ளப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆம்.. மதராஸி கேம்ப் இடிப்பு என்பது அங்கு பல தசாப்தங்களாக வசித்து வந்த தமிழ் வம்சாவளி மக்களின் வாழ்வாதாரத்தைப் கடுமையாக பாதித்தது.
தெற்கு டெல்லியின் ஜாங்புரா (Jangpura) பகுதியில், 'பாரபுல்லா' வடிகால் அருகே இந்த மதராஸி கேம்ப் அமைந்திருந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, 370-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் அப்பகுதியில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், பாரபுல்லா வடிகால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த குடியிருப்புகள் வடிகால் பாதையை அடைப்பதாகவும், இதனால் பருவமழைக் காலங்களில் அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் காரணம் கூறப்பட்டது.
மழைநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக, வடிகால் ஓரங்களில் உள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டியது அவசியம் என பொதுப்பணித்துறை (PWD) வாதிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கடந்த ஜூன் 1ம் தேதி அன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்புப் பணி தொடங்கியது.
50-60 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் உடமைகளைச் சேகரிக்கக் கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், எதையும் கண்டுக்கொள்ளாமல், வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இதைதொடர்ந்து, இடிக்கப்பட்ட 370 குடும்பங்களில், 215 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடத்திற்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது. அவர்களுக்கு டெல்லியின் ஓரத்தில் உள்ள நரேலா (Narela) பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.
மதராஸி கேம்பிலிருந்து நரேலா சுமார் 40 - 50 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் மக்களின் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.
ஒதுக்கப்பட்ட வீடுகளில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்றும், அந்த வீடுகள் வசிக்கத் தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹8,000 நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க உத்தரவிட்டார்.

டெல்லியில் உள்ள தமிழக அரசின் பிரதிநிதிகள் மற்றும் டெல்லி தமிழ் சங்கத்தினர் மூலம் இந்த உதவிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன. அங்குள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, டெல்லி மாநகராட்சிப் பள்ளிகளில் தடையின்றி சேர்க்கை பெறவும் தமிழக அரசு வலியுறுத்தியது.
இதற்கிடையே, செப்டம்பர் 2024 முதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மாற்று இடங்களை வழங்காதது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், 370 குடும்பங்களில் 215 குடும்பங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் கூறியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், விடுபட்ட தகுதியான குடும்பங்களையும் மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரும்பாலான குடும்பங்கள் நரேலாவிற்கு மாற்றப்பட்டாலும், தகுதியற்றவர்கள் என நிராகரிக்கப்பட்ட பல குடும்பங்கள் இப்போதும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
- 2025 ஆண்டு தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
- தமிழக வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர்.
2025-ம் ஆண்டில் தமிழக வீரர்களின் முக்கிய விளையாட்டு சாதனைகள் 2025 ஆண்டு தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. தமிழ்நாடு அரசின் விளையாட்டு வளர்ச்சி ஆணையம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் ஆதரவுடன், தமிழக வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதில் தடகளம், பாரா விளையாட்டுகள், சதுரங்கம், ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், டேக்வாண்டோ போன்ற துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.
1. பாரா விளையாட்டுகள் (Para Sports)கேலோ இந்தியா பாரா கேம்ஸ் 2025 (Khelo India Para Games):
தமிழக அணி 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் (மொத்தம் 74 பதக்கங்கள்) வென்று ஒட்டுமொத்த ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தது. பாரா பேட்மிண்டனில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சாம்பியன். மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ, நவீன் சிவகுமார், ருதிக் ரகுபதி உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.
ஆசிய இளம் பாரா கேம்ஸ் 2025 (Asian Youth Para Games): லின்சியா (பாரா டேக்வாண்டோ) வெண்கலம் வென்றார்.
இந்தோனேஷியா பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 (Indonesian Para Badminton Championship): தமிழக வீரர்கள் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் (மொத்தம் 14 பதக்கங்கள்) வென்றனர்.
ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 (Asian Para Taekwondo Championship): 9 பதக்கங்கள் வென்றனர்.
உலக வித்தியாசமான திறனுடையோர் விளையாட்டுகள் 2025 (World Differently-Abled Sports Games): மதுரை பாரா வீரர்கள் பல பதக்கங்கள் வென்று இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்தனர்.
2. தடகளம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 (Asian Athletics Championships, கொரியா):
சுபா வெங்கடேசன், சந்தோஷ், விஷால் ஆகியோர் இந்திய கலப்பு ரிலே அணியில் தங்கம் வென்றனர். .


பிரவீன் சித்ரவேல் டிரிபிள் ஜம்பில் வெள்ளி பதக்கம் வென்றார்.
தேசிய இன்டர்-ஸ்டேட் தடகள சாம்பியன்ஷிப் 2025 (National Inter-State Athletics Championships):
இந்த தொடரில் தமிழ்நாட்டின் விஷால் தென்னரசு (Vishal TK) ஆண்கள் 400மீ ஓட்டத்தில் 45.12 வினாடிகளில் முடித்து தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையைப் படைத்தார் (முந்தைய சாதனை: 45.21 வினாடிகள், முகமது அனாஸ், 2019).
முரளி ஸ்ரீஷங்கர் (Murali Sreeshankar) ஆண்கள் நீளம் பாய்தலில் 8.06 மீட்டர் பாய்ந்து தங்கம் வென்றார்.

ரோஹித் யாதவ் (Rohit Yadav) ஆண்கள் ஈட்டி எறிதலில் 83.65 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார் (தனிப்பட்ட சிறந்தது).
அங்கிதா (Ankita) பெண்கள் 3000மீ தடை தாண்டும் ஓட்டத்தில் 9:44.83 நிமிடங்களில் வென்றார்.

போட்டியின் இறுதியில், தமிழ்நாடு அணி அதிக தங்கப்பதக்கங்கள் (10) பெற்று ஒட்டுமொத்த சாம்பியனாக திகழ்ந்தது.
தமிழ்நாடு மாநில தடகள சாம்பியன்ஷிப் 2025 (Tamil Nadu State Athletic Championship): வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள்.
முதல்வர் கோப்பை 2025 (CM Trophy Games): நீல் சம்ராஜ் 100மீ ஓட்டத்தில் தங்கம் வென்று ரூ.1 லட்சம் பரிசு பெற்றார்.
தைவான் தடகள ஓப்பன் 2025 (Taiwan Athletics Open): இந்திய அணியில் தமிழக வீரர்கள் பங்களித்து 12 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் (மொத்தம் 16 பதக்கங்கள்) வென்றனர்.
3. கேலோ இந்தியா இளம் வீரர்கள் போட்டிகள் (Khelo India Youth Games 2025)தமிழக அணி 15 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் (மொத்தம் 65 பதக்கங்கள்) வென்றது.
4. ஸ்கேட்டிங் (Skating)உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 (World Speed Skating Championships): ஆனந்த் வேல்குமார் 42 கிமீ மாரத்தான் பிரிவில் தங்கம் வென்று, இந்தியாவின் முதல் உலக சாம்பியனானார். முன்பு 500மீ ஸ்பிரிண்டில் வெண்கலம், 1000மீயில் தங்கம்.
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 (National Roller Skating Championship): தமிழக வீரர் கௌதம் (ஆல்பைன் இவென்ட்) வெண்கலம் வென்றார்.
5. சதுரங்கம் (Chess)ஆசிய இளம் சதுரங்க சாம்பியன்ஷிப் 2025 (Asian Youth Chess Championship, தாய்லாந்து): ஆரண்யா ஆர் (குழு தங்கம், தனிப்பட்ட தங்கம்), தமிழ் அமுதன் எஸ் (தனிப்பட்ட வெள்ளி, வெண்கலம்), நிவேதிதா வி சி (தனிப்பட்ட தங்கம், வெள்ளி) உள்ளிட்டோர் பல பதக்கங்கள் வென்றனர். பயிற்சியாளர்கள் ஆகாஷ் கணேசன் மற்றும் கவிதா (தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்).
6. ஸ்குவாஷ் (Squash)ஆசிய ஸ்குவாஷ் டபுள்ஸ் சாம்பியன்ஷிப் 2025 (Asian Squash Doubles Championships, மலேசியா): ஜோஷ்னா சின்னப்பா (பெண்கள் டபுள்ஸ்), வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் (ஆண்கள் டபுள்ஸ், கலப்பு டபுள்ஸ்) தங்கம் வென்றனர்.
SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 (SDAT Squash World Cup, சென்னை):
இந்திய அணி முதல் முறையாக உலக ஸ்குவாஷ் அணி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அனஹத் சிங் (Anahat Singh), ஜோஷ்னா சின்னப்பா (Joshna Chinappa), அபய் சிங் (Abhay Singh) ஆகியோர் தலைமையில் அணி செயல்பட்டது. ஜோஷ்னா சின்னப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. டேக்வாண்டோ (Taekwondo)தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 (National Taekwondo Championship):
இந்த தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பாக செயல்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக வீரர்கள் 5 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் (மொத்தம் 14 பதக்கங்கள்) வென்றனர்.
- 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
- ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை வலிமையை தீர்மானிக்கின்றன.
ஒரு நாட்டில் பாஸ்போர்ட் வலிமையை வைத்தே உலக நாடுகளில் அந்நாட்டின் முக்கியத்துவம் அளவிடப்படுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் உலக நாடுகளின் பாஸ்போர்ட் வலிமை ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index 2025) மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றவுடன் விசா பெற்று நுழைய முடியும் என்பதே இந்த தரவரிசையின் அடிப்படை.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
முதலிடத்தில் சிங்கப்பூர். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இவ்விரு நாடுகளின் பாஸ்போர்ட்டுடன் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
டென்மார்க், அயர்லாந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 189 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளன.
ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் நான்காம் இடத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட்களுக்கு 188 நாடுகளில் விசா இல்லாத அனுமதி கிடைக்கும்.

சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கிரீஸ் ஆகியவை 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியோடு பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளன.
இந்த ஆண்டுப் பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது நிலையை ஓரளவு மேம்படுத்தியுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது 'விசா ஆன் அரைவல்' முறையில் பயணம் செய்ய முடியும்.

சமீபகாலமாக தாய்லாந்து, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு விசா விலக்கு அளித்தது இந்தியாவின் தரவரிசைக்கு வலு சேர்த்துள்ளது.
அதேநேரம் அண்டை நாடான பாகிஸ்தான் பட்டியலில் 102-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் மிகக் குறைவான நாடுகளுக்கே பாகிஸ்தான் குடிமக்கள் எளிதாகச் செல்ல முடியும்.
சுவாரஸ்யமாக சீனா 58-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகி இருந்தபோதிலும் சீனா மேற்கத்திய நாடுகளிடம் இருந்து தனித்து உள்ளதால் அதன் தரவரிசை பிந்தங்கி உள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சீனா தனது தூதரக உறவுகள் மூலம் தனது தரவரிசையை வேகமாக உயர்த்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் மிகக் கடைசியாக உள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பிற நாடுகளுடனான தூதரக உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படுகிறது.
இந்தியா பல நாடுகளுடன் விசா இல்லாத பயண ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
- தமிழ் திரையுலகம் என்பது இசை, பாடல், உணர்ச்சிகள் ஆகியவற்றின் அழகிய கலவை.
- ஜெயச்சந்திரன் தனது உணர்ச்சிமயமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார்.
இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவு இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழ் திரையுலகம் என்பது இசை, பாடல், உணர்ச்சிகள் ஆகியவற்றின் அழகிய கலவை. இதில் தனித்துவமான பங்களிப்பு செய்தவர்கள் பலர். அவர்களில் இசையமைப்பாளர் சபேஷ் (சபேஷ்-முரளி ஜோடியின் ஒரு பகுதி) மற்றும் பாடகர் பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சபேஷ் தனது இசையால் தமிழ் சினிமாவை செழுமைப்படுத்தினார் என்றால், ஜெயச்சந்திரன் தனது உணர்ச்சிமயமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார். இவர்களின் திரைப்பயணம், தமிழ் இசையின் பொன்னான அத்தியாயங்களில் ஒன்று.
நம்மை விட்டு மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் திரையுல பங்களிப்புகள் குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்
இசையமைப்பாளர் சபேஷ்:
இசையமைப்பாளர் சபேஷ் சென்னையைச் சேர்ந்தவர். தமிழ் திரையிசையில் சபேஷ்-முரளி என்ற ஜோடியின் மூலம் இருவரும் புகழ்பெற்றனர். இவர்கள் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர்கள். அண்ணன் தேவாவின் உதவியாளர்களாக தொழிலைத் தொடங்கிய இவர்கள், பின்னர் சுயாதீன இசையமைப்பாளர்களாக உருவெடுத்தனர்.
இசையமைப்பாளர் சபேஷ் அவர்களின் திரைப்பயணம் 1990களின் பிற்பகுதியில் தொடங்கியது, ஆனால் முழுமையான இசையமைப்பாளர்களாக 2001ஆம் ஆண்டு 'சமுத்திரம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் இசை கவனம் ஈர்த்தது.

சபேஷ்-முரளி ஜோடியின் இசை, உணர்ச்சிகரமான மெலடிகள் மற்றும் பின்னணி இசையால் பிரபலமானது. அவர்கள் இசையமைத்த 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' (2006), 'ஆட்டோகிராஃப்' (2004), 'தவமாய் தவமிருந்து' (2005) 'போக்கிஷம்' (2009), 'கூடல் நகர்' (2007), 'மிளகா' (2010), 'கோரிபாளையம்' (2010) , 'மாயாண்டி குடும்பத்தார் (2009)' ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக, 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இசை, வரலாற்று நகைச்சுவைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது. அவர்கள் சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளனர்.
சபேஷ், சினிமா இசைக்கழகத்தின் (Cine Musicians Union) முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார், இது அவரது தொழில்துறைக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, 2025 அக்டோபர் 23ஆம் தேதி, 68 வயதில் சபேஷ் காலமானார். இது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

பாடகர் ஜெயச்சந்திரன்:
பாடகர் ஜெயச்சந்திரன் தென்னிந்திய திரையிசையின் ஜாம்பவான். 1944 மார்ச் 3ஆம் தேதி கேரளாவின் இரிஞ்சலகுடாவில் பிறந்த இவர், 2025 ஜனவரி 9ஆம் தேதி தனது 80ஆம் வயதில் காலமானார்.
அவரது தந்தை ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் ஒரு இசைக்கலைஞர், இது ஜெயச்சந்திரனின் இசை ஆர்வத்தை தூண்டியது. இரிஞ்சலகுடா நேஷனல் உயர்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்ட் கல்லூரியில் படித்த இவர், மிருதங்கம் மற்றும் இலகு இசையில் மாநில இளைஞர் திருவிழாவில் பரிசுகள் வென்றார்.
ஜெயச்சந்திரனின் திரைப்பயணம் 1965இல் தொடங்கியது. அவரது முதல் பாடல் 'ஒரு முல்லப்பூ மலையுமாயி' ('குஞ்சலி மரக்கார்' படம், மலையாளம்).
தமிழில் 1973இல் 'மனிப்பயல்' படத்தில் 'தங்கச் சிமிழ் போல்' மற்றும் 'அலைகள்' படத்தில் 'பொன்னென்ன பூவென்ன' பாடல்களுடன் அறிமுகமானார்.

அவரது குரல், உணர்ச்சி மற்றும் மென்மையால் பிரபலமானது, இது இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற உதவியது. தமிழில் எண்ணற்ற பாடல்கள் பாடியுள்ளார்.
சில குறிப்பிடத்தக்க பாடல்கள்: 'வாழ்க்கையே வேஷம்' ('ஆறிலிருந்து அறுபது வரை', 1979), 'தாலாட்டுதே வானம்' ('கடல் மீன்கள்', 1981), 'காத்திருந்து காத்திருந்து' ('வைதேகி காத்திருந்தாள்', 1985), ராசாத்தி உன்ன ('வைதேகி காத்திருந்தாள்', 1985), 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' ('நானே ராஜா நானே மந்திரி', 1985), 'பூவ எடுத்து ஒரு' ('அம்மன் கோவில் கிழக்காலே', 1986), 'கத்தாழங்காட்டு வழி' ('கிழக்கு சீமையிலே', 1993), 'கண்ணத்தில் முத்தமிட்டால்' (2002). இவை அனைத்தும் இளையராஜா மற்றும் ரகுமானின் இசையில் உருவானவை.
அவரது சாதனைகள்: தேசிய திரைப்பட விருது (1985), 5 கேரளா ஸ்டேட் விருதுகள், 4 தமிழ்நாடு ஸ்டேட் விருதுகள், கலைமாமணி (1997), ஜே.சி. டேனியல் விருது (2020) ஆகியவை அடங்கும்.

16,000க்கும் மேற்பட்ட பாடல்களுடன், அவரது பங்களிப்பு தென்னிந்திய இசையை ஒருபடி மேலே உயர்த்தியது.
முடிவுரை:
சபேஷ் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரின் திரைப்பயணம், தமிழ் சினிமாவின் இசைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்த்தது. சபேஷின் இசை அமைப்புகள் உணர்ச்சிகளை தூண்டினால், ஜெயச்சந்திரனின் குரல் அவற்றை உயிர்ப்பித்தது. அவர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களின் இதயங்களில் ஒலிக்கின்றன. தமிழ் திரையிசைக்கு இவர்களின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்...
- மக்களின் பயணத்தை 'சென்னை ஒன்' செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது.
- 'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும்.
சென்னையில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்தை தான் அன்றாடம் பயன்படுத்துகின்றனர். அதன்படி தினமும் அரசு மாநகர பஸ்களில் 35 லட்சம் பேரும், மின்சார ரெயில்களில் 12 லட்சம் பேரும், மெட்ரோ ரெயிலில் 3 லட்சம் பேரும் பயணிக்கின்றனர்.
மக்களின், இந்த பயணத்தை எளிதாக்க அரசு பல்வேறு வழிகளில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. உதாரணமாக அரசின் சிங்கார சென்னை அட்டை மூலம் மாநகர பஸ் மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். அதேபோல மின்சார ரெயில் பயணத்தை சீசன் அட்டை, யுடிஎஸ் மற்றும் ரெயில் ஒன் செயலிகள் மூலம் டிக்கெட எடுத்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக டிக்கெட் வேண்டும்.
ஆனால் இந்த நிலையை மாற்றி, அனைத்து பொது போக்குவரத்துக்கும் ஒரே செயலியில் டிக்கெட் பெறும் வசதியை தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான கும்டா தொடங்கி உள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்ட `சென்னை ஒன்' (chennai one) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கி வைத்தார்.

இந்த செயலி, பொது போக்குவரத்துக்கு வெறும் டிக்கெட் எடுப்பதற்காக மட்டுமல்லாமல் மக்களின் பயணத்தை எளிதாக வகுத்து கொடுத்து இருக்கிறது. இந்த பயணத்தில் ஆட்டோ, கார் தேவை என்றாலும் அதற்கும் அதில் புக் செய்து விடலாம்.
உதாரணமாக நீங்கள் நந்தனத்தில் இருந்து காசிமேடு மீன் மார்க்கெட் செல்ல வேண்டும் என்று வைத்து கொள்வோம். `சென்னை ஒன்' செயலில், நீங்கள் நந்தனத்தில் இருந்து மெட்ரோ மூலம் எழும்பூர் வரையும், அங்கிருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மின்சார ரெயிலிலும், அங்கிருந்து ராயபுரம் வரை மாநகர போக்குவரத்து பஸ்சிலும், பின் அங்கிருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் காசிமேடு மீன் மார்க்கெட் செல்வதற்கும் மொத்தமாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அதில் ஆட்டோ மற்றும் கார் கட்டணத்தை மட்டும் டிரைவர்களிடம் செலுத்த வேண்டும். மற்ற மெட்ரோ, ரெயில், பஸ் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தி கியூ ஆர்கோடு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதில் சிறப்பு என்னவென்றால் மெட்ரோ, ரெயில், பஸ் எப்போது எந்த நேரத்தில் வரும், நீங்கள் எதில் செல்ல வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வதுடன் நீங்கள் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் உங்களுக்கான ஆட்டோ, கார் தயாராக இருக்கும்.
அதாவது, மக்களின் பயணத்தை இந்த செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது. அதேபோல ஒவ்வொரு இடங்களிலும் நேரடியாக சென்று டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதே போல, தனித்தனி செயலிக்கு சென்று டிக்கெட் பதிவு செய்யவேண்டியதும் இல்லை.
இந்த செயலியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.
அதே போல் டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது. அதனால் மற்ற யு.பி.ஐ. செயலிகள் தேவையில்லை. `சென்னை ஒன்' செயலியில், பல மேம்பட்ட அம்சங்கள் இருந்தாலும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டி உள்ளது. நீங்கள் மெட்ரோ, ரெயில் மற்றும் பஸ்சையும் இணைந்து டிக்கெட் எடுத்துவிட்டால், அதில் ஒன்றை நீங்கள் ரத்து செய்ய முடியாது. பதிவு (புக்கிங்) செய்து விட்டால் ரத்து செய்ய முடியாது.

மெட்ரோ ரெயில் சி.எம்.ஆர்.எல். செயலில் மை பாஸ் என்ற வசதி உள்ளது. அதில் நாம் பணம் செலுத்திவிட்டால், நாம் மெட்ரோவில் செல்லும் பயணங்களுக்கு மட்டும் பணம் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த `சென்னை ஒன்' செயலியிலும் செல்லும் பயணத்துக்கு பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இத்திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே 1 லட்சம் பேர் `சென்னை ஒன்' செயலியை பதிவிறக்கம் செய்தனர்.
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும். பயண தேவைகளுக்கு ஏற்ப அட்டையை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
செயலி வழியாக மாதாந்திர அட்டைகள் வாங்கும் பயணிகளுக்கு அட்டை ஒன்றுக்கு ரூ.50 சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உடனடி தள்ளுபடியாகவோ அல்லது கேஷ்பேக் முறையிலோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் 'சென்னை ஒன்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மொபைல் எண்ணை பயன்படுத்தி, ஓடிபியை பதிவிட்டு உள்நுழைந்து வேண்டும்.
மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் சென்னை புறநகர் ரெயில்சேவைகளுக்கு தனித்தனியாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி முகப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடத்தை பதிவிட்டு பயண வழித்தடத்தை பார்க்க முடியும். உதாரணத்திற்கு, தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் செல்வதற்கான போக்குவரத்து வழித்தடத்தை பதிவிட்டால் அனைத்துவிட சேவைகளும் காண்பிக்கப்படும்.
இதே வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்துவோர் அதற்கான பயணச்சீட்டை பெறலாம்.
பொது போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு செல்ல வாடகை கார் மற்றும் ஆட்டோக்களும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
பல செயலிகளைப் பயன்படுத்தும் சிரமத்தைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறுவதால் பயணிகள் இதனைப் பாராட்டுகின்றனர்.
சென்னை ஒன் செயலி, சென்னையின் பொதுப் போக்குவரத்தை எளிமையாகவும், விரைவாகவும், திறமையாகவும் பயன்படுத்த உதவும் ஒரு புரட்சிகரமான செயலியாகும். இது 'One City, One App, One Ticket' என்ற கொள்கையுடன் செயல்படுகிறது.
- இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
- சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து விட்டது. பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள்வது, பயணிகளை வருகையை சமாளிப்பது, புதிய வழித்தடங்கள் மற்றும் விமான நிறுவனங்களை வரவேற்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சென்னை மாநகர் படிப்படியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.
இதுபோன்ற காரணங்களால் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதையொட்டி பரந்தூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 5,747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்திற்குத் தேவையான மொத்த நிலத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இதற்கு ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தங்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும் என வேதனை தெரிவிக்கின்றனர். இதை சுட்டிக் காட்டி பல மாதங்களாக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்ற வழக்குகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு என பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்ந்து இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது.
இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2029 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2030 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத் திட்டமும் நான்கு கட்டங்களாக, 2046 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.29,150 கோடி ஆகும்.

இந்த விமான நிலையம் தனது முழுத் திறனை எட்டும்போது ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
தற்போதுள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த புதிய இடம், வரவிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. மேலும், சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரூ.29,150 கோடி செலவில் புதிய விமான நிலையம் தேவை தானா அதுவும் விளைநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் தேவை என்ன என்பவை முடிவில்லா முகவரியாகுமோ என்ற அச்சம் கலந்த கேள்வியை கேட்க தவறவில்லை!
- பா.ஜ.க. தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.
- பாராளுமன்றத் தேர்தலால் அவரது 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்தும் நீட்டிக்கப்பட்டு வந்தது.
புதுடெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல்இன்று வெளியிடப்பட்டது. இதனால் அனைத்து கட்சி அலுவலகங்களும் பிசியாக இருந்தன.
தனது கட்சி அலுவலகத்துக்குச் சென்ற முனுசாமி, என்னப்பா, நம்ம தொகுதியில எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்காங்க என கேட்டார்.
அதற்கு பதிலளித்த சிவகுரு, சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டு இருக்காங்க என தெரிவித்தார்.
பரவாயில்லையே, நான் கூட இன்னும் நிறைய இருக்குமோனு நினைச்சேன். இனி வரும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்ய முடியும். அதனால நமக்கும் நல்ல ஆட்சி கிடைக்கும் இல்லையா என கேள்வி எழுப்பினார் முனுசாமி.
ஆமாம்பா, ரொம்ப கரெக்டா சொன்னே, தேர்தல் ஆணையம் எதை செய்தாலும் நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் பயனே இருக்கு என்றார் சிவகுரு.
ஆமா, சமீபத்தில பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தலைவரை தேர்வு செய்தார்களாமே, யாரு அவரு? என கேட்டார் முனுசாமி.
அவர் நிதின் நபின். பீகாரைச் சேர்ந்தவர் என பதிலளித்த சிவகுரு, நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக செய்யப்பட்டதன் சாராம்சத்தை விவரித்தார். அது பின்வருமாறு:
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.
அவரது 3 ஆண்டு பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. எனினும், பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, பா.ஜ.க.வுக்கு புதிய தேசியத் தலைவரை நியமனம் செய்ய அக்கட்சியில் தொடர்ந்து ஆலோசனை நடந்தன.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பா.ஜ.க. தேசியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிதின் நபின் பீகார் மாநில அரசின் சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரியாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.
பாட்னாவில் பிறந்த நிதின் நபின், பா.ஜ.க.வின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்காவின் மகன்.
பங்கிபூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு பீகாரில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன இவர், அதன்பின் 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்க நிதின் நபின் முக்கிய பங்காற்றினார்.
இவர் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுசெயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபினுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

பரவாயில்லையே, அந்தக் கட்சி மேல எவ்வளவோ சர்ச்சைகள் இருந்தாலும் ஒரு தலைவரை தேர்வு செய்யும்போது பிரபலம் இல்லாத ஆளையே நியமனம் செய்வது வரவேற்கத்தக்கது எனக்கூறியபடி வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டார் முனுசாமி.
- வக்பு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.
- ஐஐஎம் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் மத்திய அரசின் பங்களிப்பை முறைப்படுத்துகிறது.
2025-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) பல முக்கியமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நிர்வாக மேலாண்மை மற்றும் சமூக நலன் சார்ந்த சட்டங்கள் இதில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

2025-ல் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்களின் பட்டியல் இதோ:
காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025 (Sabka Bima Sabki Raksha Bill)
இந்த மசோதா 2025-ன் மிக முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 74%-லிருந்து 100% ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.
2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை அடைவதும், காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்.
வக்பு (திருத்தம்) மசோதா 2025:
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வக்பு வாரியங்களின் நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
வக்ப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் இடம்பெறுவதை இது உறுதி செய்கிறது. மேலும், வக்ஃபு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.
ஆன்லைன் கேமிங் (முறைப்படுத்துதல்) மசோதா, 2025:
வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையை முறைப்படுத்தவும், சூதாட்டம் போன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்குக் கடுமையான விதிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகளை இது விதிக்கிறது.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025:
இந்தியாவில் உள்ள விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது.
விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்கமருந்து சோதனைகளை (Anti-Doping) சர்வதேசத் தரத்திற்கு ஏற்பக் கொண்டு வருதல்.
நிதி மசோதா மற்றும் வரி விதிப்புச் சட்டங்கள் (திருத்தம்), 2025:
சுகாதாரப் பாதுகாப்பு வரி, புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மீது புதிய வரியை விதிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இந்த நிதி தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
வருமான வரி (திருத்தம்):
வருமான வரி நடைமுறைகளை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) திருத்த மசோதா: ஐஐஎம் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் மத்திய அரசின் பங்களிப்பை முறைப்படுத்துகிறது.
குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025:
இந்தியாவில் தங்கும் வெளிநாட்டினரின் பதிவு மற்றும் விசா நடைமுறைகளைப் புதுப்பிக்கிறது.
2025-ம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடர் (டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை) மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் அணுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் வரி விதிப்பு எனப் பல்வேறு துறைகளில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட கூடுதல் முக்கிய மசோதாக்கள் இதோ:
ஷாந்தி (SHANTI) மசோதா, 2025
(Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Bill) இந்த மசோதா இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.
இந்தியாவின் சிவில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யவும், அணுமின் நிலையங்களை அமைத்து இயக்கவும் முதல்முறையாக அனுமதி அளிக்கிறது.
இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி (Clean Energy) தேவையைப் பூர்த்தி செய்யவும், நிலக்கரி மீதான சார்பைக் குறைக்கவும் உதவும்.
விக்சித் பாரத் கிராம வேலைவாய்ப்பு மசோதா (VB G-RAM-G Bill)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அல்லது அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இது கொண்டு வரப்பட்டுள்ளது.
கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, அந்த வேலைகள் மூலம் நிரந்தரமான கிராமப்புறச் சொத்துக்களை உருவாக்குவதை இது வலியுறுத்துகிறது.
100 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படைத் தன்மை மாறுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் (130-வது) மசோதா, 2025
நிர்வாகத் தூய்மையைக் கருத்தில் கொண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவியை இழக்க நேரிடும்.
பிரதமரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், முதலமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கும் வழங்கப்படுகிறது.
பங்குச் சந்தை குறியீடு (SMC) மசோதா, 2025
செபி (SEBI) சட்டம், டெபாசிட்டரிகள் சட்டம் மற்றும் பரிவர்த்தனை ஒப்பந்தச் சட்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக (Unified Code) மாற்றுகிறது.
இது முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பையும், நிறுவனங்களுக்குத் தொழில் செய்வதை எளிதாக்கவும் உதவும்.
தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025
நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை விரைவுபடுத்தவும், இழப்பீட்டுத் தொகையை டிஜிட்டல் முறையில் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தவும் இது வழிவகை செய்கிறது.






