என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவுகள் ரத்து - தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை
- நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
- பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது.
நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இயங்கி வந்தன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்தும் வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை நிறைவேற்றாத 334 அரசியல் கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520 ஆக குறைந்துள்ளது.
இதுதவிர அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநில கட்சிகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29பி மற்றும் 29சி பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்கு கோர முடியாது.
இதையடுத்து 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை செப்டம்பர் மாதம் தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொங்கு ஈஸ்வரன்
இந்த 42 அரசியல் கட்சிகளில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் உள்ளது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் உள்ளார்.
ஜவாஹிருல்லா
ரத்து செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சியானது, கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனவே அவர்கள் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக கருதப்படவில்லை.
ஜான் பாண்டியன்
இதேபோன்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தேர்தல் கமிஷனின் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து இவரது கட்சி தேர்தலை சந்தித்து வந்தது. 2021ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. சின்னத்திலும் போட்டியிட்டது.
தமிமுன் அன்சாரி
2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடவில்லை.
நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இவ்வாறு 808 கட்சிகளின் பதிவை 2 கட்டங்களாக ரத்து செய்துள்ளதை தொடர்ந்து தற்போது தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,046 ஆக குறைந்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் விதிகளின்படி, தொடர்ந்து 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் கணக்கு தாக்கல் செய்யாத 474 பதிவு செய்யப்படாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை (Registered Unrecognised Political Parties - RUPPs) ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை, தேர்தல் முறையை சீர்திருத்தும் ஒரு தொடர்ச்சியான பணியின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் 2025 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மொத்தம் 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.






