என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: தேவைதானா ரூ.29,150 கோடி செலவில் புதிய விமான நிலையம்?
- இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
- சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து விட்டது. பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள்வது, பயணிகளை வருகையை சமாளிப்பது, புதிய வழித்தடங்கள் மற்றும் விமான நிறுவனங்களை வரவேற்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சென்னை மாநகர் படிப்படியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.
இதுபோன்ற காரணங்களால் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதையொட்டி பரந்தூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 5,747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்திற்குத் தேவையான மொத்த நிலத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இதற்கு ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தங்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும் என வேதனை தெரிவிக்கின்றனர். இதை சுட்டிக் காட்டி பல மாதங்களாக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்ற வழக்குகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு என பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்ந்து இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது.
இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2029 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2030 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத் திட்டமும் நான்கு கட்டங்களாக, 2046 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.29,150 கோடி ஆகும்.

இந்த விமான நிலையம் தனது முழுத் திறனை எட்டும்போது ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
தற்போதுள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த புதிய இடம், வரவிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. மேலும், சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரூ.29,150 கோடி செலவில் புதிய விமான நிலையம் தேவை தானா அதுவும் விளைநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் தேவை என்ன என்பவை முடிவில்லா முகவரியாகுமோ என்ற அச்சம் கலந்த கேள்வியை கேட்க தவறவில்லை!






