என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    • முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • அருந்ததி 70 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

    2025-ம் ஆண்டு இந்திய மகளிர் வீராங்கனைகளுக்கு சிறப்பான ஆண்டு என்றே சொல்லலாம். இந்த 2025-ம் ஆண்டில் கிரிக்கெட், கபடி, தடகளம் ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீராங்கனைகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

    2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை:

    இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.


    பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை 2025:

    இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்தது. பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகள் மற்ற கிரிக்கெட்டுகளிலிருந்து வேறுபட்டவை என்றாலும் இந்த வெற்றியும் இந்திய மகளிருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் புது உத்வேகத்தை கொடுத்தது.


    பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பார்வையே இல்லாதவர்கள், மிகக் குறைந்த பார்வை உள்ளவர்கள் மற்றும் ஒரு கண்ணில் மட்டும் பார்வை உள்ளவர்கள் விளையாடுகின்றனர். இந்திய மகளிர் அணி இந்தப் போட்டியின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் நேபாளத்தை தோற்கடித்து முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றது.

    மகளிர் கபடி உலகக் கோப்பை 2025:

    இந்திய அணி 2025ம் ஆண்டு மகளிர் கபடி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், இந்திய மகளிர் கபடி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டது. இந்திய மகளிர் கபடி அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. அரையிறுதியில் ஈரானை தோற்கடித்த இந்திய அணி, பின்னர் இறுதிப் போட்டியில் சீன தைபேயை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


    பிற விளையாட்டுகளில் இந்திய மகளிர் அணி:

    தெலுங்கானாவின் தேஜம் நிகாத் ஜரீன் 51 கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.


    நூபுர் ஷெரோன் 80+ கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பையையும், அருந்ததி 70 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.


    உலக ஸ்னூக்கர் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை அனுபமா ராமச்சந்திரன் படைத்துள்ளார்.


    பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி கைகள் இல்லாத போதிலும், தனது கால்களால் அம்பை எய்து உலக பாரா சாம்பியனானார்.


    உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்புத் துறையில் மிஸ் ஜோத்ஸ்னா வெங்கடேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐசிஎன் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பிடித்தார்.


    டென்னிஸில் ஸ்ரீவள்ளி ரஷ்மிகா பாமிடிபதி ஃபெனெஸ்டா ஓபன் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார்.


    கோல்ஃப் விளையாட்டில் இளம் நட்சத்திரம் பிரணவி உர்ஸ் 14 வயதில் ஐஜிபிஎல்லின் முதல் பெண் சாம்பியனாகி வரலாறு படைத்தார்.



     


    • தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர்.
    • புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை.

    2025, நேபாள வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. பல்லாண்டுகளாக நீடித்த பழைய அரசியல் கட்டமைப்பை 1997 முதல் 2012 இடையில் பிறந்த 'ஜென்-சி' (Gen Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் தங்கள் போராட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.

    ஒரு புரட்சி தொடங்க 2 காரணிகள் உண்டு. ஒன்று நீண்டகால காரணி. மற்றொரு உடனடி காரணி.

    நேபாளத்தை அரசியல் மாற்றத்திற்கான விதைகள் 2025 தொடக்கத்திலேயே தூவப்பட்டன.

    பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மீது ஊழல் புகார்கள், பொருளாதாரத் மந்த நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

    இதேநேரம் அரசியல் தலைவர்களின் மகன்களும் மகள்களும் ஆடம்பர வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரப்பப்பட்டன. தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர். இதுவே நீண்டகால காரணிகள்.

    புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை. அந்த வகையில் செப்டம்பர் 4, 2025 அன்று, அரசு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதித்தது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையே நாடு தழுவிய போராட்டத்திற்கு உடனடி காரணியாக அமைந்தது.

    செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தின் வீதிகள் போர்க்களமாக மாறின.

    பாராளுமன்றக் கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.

    பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் களம் இறக்கப்பட்டது.

    இந்தப் போராட்டங்களால் நேபாளத்திற்கு சுமார் 586 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    போராட்டத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் செப்டம்பர் 9-ஆம் தேதி பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, நாட்டின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

    சுவாரஸ்யமாக, இவரது தேர்வு Discord என்ற சமூக வலைதளம் மூலம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் ராணுவம், ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தது.

    நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பொதுத்தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-ஆம் ஆண்டு நேபாள இளைஞர்கள் தங்களின் வலிமையால் ஒரு ஆட்சியையே கவிழ்க்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தனர்.

    வரும் 2026 தேர்தல், நேபாளத்தில் மீண்டும் பழைய அரசியல்வாதிகளின் கைகளுக்குச் செல்லுமா அல்லது புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    இதேபோல் மற்ற சில நாடுகளிலும் அரசுக்கு எதிராக ஜென் z போராட்டங்கள் வெடித்தன.

    மடகாஸ்கர்: அகடோபர் மாதம் மடகாஸ்கரில் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதனை எதிர்த்துத் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், விரைவிலேயே அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான மாபெரும் புரட்சியாக உருவெடுத்தது.

    இந்தோனேசியா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வாடகைப் படிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் இந்தோனேசிய இளைஞர்கள் போராடினர்.

    இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மொராக்கோ: 2030 பிபா கால்பந்து உலகக் கோப்பைக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய அதே வேளையில், கல்வி மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

    'GenZ 212' என்ற ஆன்லைன் குழுவின் மூலம் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

    பல்கேரியா: 2026-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஊழலுக்கு வழிவகுப்பதாகக் கூறி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடினர்.

    பிலிப்பைன்ஸ்: வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடந்த பெரும் ஊழலைக் கண்டித்து பிலிப்பைன்ஸ் இளைஞர்கள் களமிறங்கினர். தவறு செய்த அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அதிபர் மார்க்கோஸ் ஜூனியருக்கு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

    கென்யா: கென்யாவில் வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தொடங்கிய போராட்டம், 2025 ஜூலை மாதத்தில் போலீஸ் அராஜகத்திற்கு எதிரான போராட்டமாக மாறியது. இளைஞர்கள் கடத்தப்படுவதையும் சட்டவிரோதக் கைதுகளையும் எதிர்த்து அவர்கள் இடைவிடாமல் போராடினர்.

    மெக்சிகோ: குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் மேயர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் தேசிய மாளிகைக்குள் அதிரடியாகப் புகுந்து போராடினர்

    பெரு: அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் தினா பொலுவார்டே பதவி விலகக் கோரி செப்டம்பரில் போராட்டங்கள் வெடித்தன.

    2025-ஆம் ஆண்டில் 'ஜென் Z' இளைஞர்கள் வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துகளைப் பதிவிடாமல், களத்தில் இறங்கி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு புதிய அரசியல் வடிவதற்கான ஆரம்பமாகவே இந்த உலகளாவிய போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன. 

    • தமிழ் சினிமா வெற்றிக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.
    • ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் பங்களிப்பு மிக முக்கியமானது.

    ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோர் தமிழ் திரையுலகின் தூண்களாக விளங்கிய தயாரிப்பாளர்கள்

    தமிழ் சினிமா என்பது உணர்ச்சிகள், கதைகள் மற்றும் பொழுதுபோக்கின் அற்புத கலவை. இதன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களில் ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    சரவணன் ஏ.வி.எம். ஸ்டுடியோஸின் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றார் என்றால், நடராஜன் தனது தயாரிப்பு நிறுவனங்களான ஆனந்தி பிலிம்ஸ் மூலம் பல கிளாசிக் படங்களை வழங்கினார். இவர்களின் திரைப்பயணம், தமிழ் திரையுலகின் பொன்னான காலகட்டங்களை பிரதிபலிக்கிறது.

    இக்கட்டுரையில் அவர்களின் வாழ்க்கை, திரையுலக சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து பார்ப்போம்.

    ஏ.வி.எம். சரவணன்:

    தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர்ஏ.வி.எம். சரவணன் (முழுப்பெயர் சரவணன் சூர்யா மணி) 1940ஆம் ஆண்டு பிறந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னோடியான ஏ.வி. மெய்யப்பன் அவர்களின் மகனான இவர், ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் என்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது சகோதரர் எம். பாலசுப்ரமணியனுடன் இணைந்து நடத்தினார்.

    ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவின் முதல் ஸ்டுடியோக்களில் ஒன்றாக, 1947இல் தொடங்கப்பட்டது மற்றும் பல மொழிகளில் படங்களை தயாரித்துள்ளது.

    சரவணனின் திரைப்பயணம் 1958 ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது, அப்போது அவர் 'மாமியார் மெச்சின மருமகள்' (1959) மற்றும் 'தெய்வப்பிரவி' (1960) போன்ற படங்களில் புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவாக பணியாற்றினார். பின்னர், அவர் தயாரிப்பாளராக உருவெடுத்து, ஏ.வி.எம். நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார்.

    அவரது தலைமையின் கீழ் தயாரிக்கப்பட்ட களத்தூர் கண்ணம்மா (1960), சம்சாரம் அது மின்சாரம் (1986), முந்தானை முடிச்சு (1983), சகலகலா வல்லவன் (1982), சிவாஜி தி பாஸ் (2007), அயன் (2009) ஆகிய படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.

    இது தவிர, ஏ.வி.எம். நிறுவனம் 170க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது, அவற்றில் பல கிளாசிக் ஹிட்கள்.சரவணன் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

    அவரது தலைமையில் ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. துரதிர்ஷ்டவசமாக, 2025 டிசம்பர் 4ஆம் தேதி, 86 வயதில் அவர் காலமானார், தமிழ் திரையுலகுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினார். அவரது பாரம்பரியம், இன்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் மூலம் தொடர்கிறது.

    ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன்:

    தஞ்சாவூர் மாவட்டத்தின் வலுத்தூர் கிராமத்தில் பிறந்தார் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன். இவர், கே. பாலசந்தரின் நாடகக் குழுவில் பணியாற்றிய பின்னர், ஜெமினி பிலிம்ஸில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக தொழிலைத் தொடங்கினார்.

    பின்னர் நடராஜன், ஆனந்தி பிலிம்ஸ்என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் கீழ் அவர் தயாரித்த 'முள்ளும் மலரும்' (1978, ரஜினிகாந்த் நடித்தது), 'சின்ன கவுண்டர்' (1992, விஜயகாந்த்), 'ராஜா கைய வெச்சா' (1990, பிரபு), 'பங்காளி' (1992, சத்யராஜ்), 'பசும்பொன்' (1995, பிரபு) ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.

    உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடராஜன் இந்தாண்டு காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஜோதி என்ற மனைவியும், செந்தில், விக்னேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    முடிவுரை:

    ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோரின் திரைப்பயணம், தமிழ் சினிமாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. சரவணன் ஸ்டுடியோக்களின் மூலம் தொழில்நுட்பத்தையும், நடராஜன் தனது படங்களின் மூலம் உணர்ச்சிகரமான கதைகளையும் வழங்கினர். அவர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தமிழ் திரையுலகின் எதிர்காலத்துக்கு இவர்களின் பங்களிப்பு உத்வேகமாக அமையும்....

    • பிரதமர் மோடி கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
    • ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்.

    அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் (ஜூலை மாதம் 27-ந்தேதி) பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். அவர், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்தார்.

     

    அங்கிருந்து கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.

    பின்னர், காசியிலிருந்து பிரதமர் மோடி கொண்டு வந்திருந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் கோவில் ஓவியத்தையும், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தையும் பரிசாக வழங்கினர். விழாவில் ஓதுவார்கள் தேவாரப் பாடல்கள் பாடினர்.

     

    தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜா இசைத்த `ஓம் சிவோஹம்' பாடலை பிரதமர் மோடி ரசித்து மகிழ்ந்தார்.

     

    பின்னர், ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை பிரதமர் வெளியிட்டார்.

    இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, 'வணக்கம் சோழ மண்டலம்' என்று தொடங்கி, 'நமசிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்ற திருவாசகத்தை மேற்கோள் காட்டி தமிழில் பேசினார்.

    ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமைக்குரியவர்கள். சோழரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம் நாட்டின் வலிமையும், திறனையும் பிரதிபலிக்கிறது. சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாகும். ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், உலகம் முழுவதும் கட்டிடக் கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    சோழர்களின் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி, தற்போதும் நம்மை ஊக்குவிக்கிறது. ராஜராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழர் அதை மேலும் வலுப்படுத்தினார். சோழர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தூதரகம் மற்றும் வர்த்தக உறவுகளை வளர்த்தனர்.

     

    ராஜேந்திர சோழன் கங்கை நீரை பொன்னேரியில் ஊற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், காசியில் இருந்து கங்கை நீர் தற்போது மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    சோழர்கள் கடற்படை, வரி அமைப்புகள், நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வலிமையான அரசை உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் தற்போது இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை பார்த்து வியக்கிறது.

    சோழ அரசர்கள் பாரதத்தை கலாசார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள். இன்று நமது அரசாங்கம் சோழர்களுடைய இதே கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறது.

    தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனித செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இன்றைய பாரதம் தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது.

    தேசத்தின் கலை சின்னங்கள் களவாடப்பட்டு அயல்நாட்டில் விற்கப்பட்டு விட்டன. இவற்றை நாங்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறோம்.

    2014-ம் ஆண்டுக்கு பின்பு 600-க்கும் அதிகமான தொன்மையான கலை படைப்புகள் உலகின் பல்வேறு தேசங்களில் இருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருட்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.

    ராஜராஜ சோழன் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழன் அதை மேலும் பலப்படுத்தினார்.

    யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால் பாரதம் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கும் என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் உலகமே உற்றுப் பார்த்தது.

    ராஜேந்திர சோழன் தனது தந்தையின் கோவிலைவிட உயரம் குறைந்த விமானம் அமைத்தார். இது தாழ்மையின் அடையாளம். அவ்வாறு புகழ்பெற்ற ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.

    • இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.
    • கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.

    தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்து உள்ளது ராமேசுவரம். புனித நகரமான இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.

    ரெயிலில் வருபவர்கள் ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    1914-ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 2.3 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடையது. நிலப்பரப்பை ராமேசுவரம் தீவுடன் இணைக்கும் இந்த பாலத்தை கப்பல் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுவில் கத்திரி வடிவில் தூக்குகளும் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது அந்த தூக்கு திறந்து கொள்ளும். அதன் பிறகு மூடிக் கொள்ளும்.

     

    இந்த பாலம் நூறு வயதை தாண்டி விட்டதால் இதன் அருகிலேயே கடந்த 2020-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக பழைய பாலத்தில் இருந்த 'ஷெர்ஜர்' தூக்கு பாலத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.

    ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வந்தனர்.

    இதனிடையே, பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.

    இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.

     

    அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிரதமர் மோடி இந்த பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான புதிய ரெயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

     

    இதன் மூலம், இந்தியாவின் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றான பாம்பன் புதிய ரெயில் பாலம், தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றுப் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளது. 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரெயில் பாலத்தின் வாரிசாக, புதிய தலைமுறையினருக்கு தமிழ்நாட்டின் பொறியியல் திறமையை எடுத்துக்காட்டும் வகையில் இப்புதிய பாலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் வெவ்வேறு பாணிகளை பிரதிபலித்தவர்கள்
    • குடும்பம், காதல் , நகைச்சுவை என பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்தனர்.

    2025 ஆண்டு தமிழ் திரையுலகத்துக்கு பெரும் இழப்புகளைத் தந்தது. பல திறமையான கலைஞர்கள் நம்மை விட்டுப் பிரிந்தனர், அவர்களில் இயக்குநர்களின் பட்டியல் குறிப்பிடத்தக்கது.

    வி. சேகர், நாராயணமூர்த்தி, வேலு பிரபாகரன், விக்ரம் சுகுமாரன், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் அந்த சோகப் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

    இவர்கள் தமிழ் சினிமாவின் வெவ்வேறு பாணிகளை பிரதிபலித்தவர்கள் - குடும்பம், காதல் நகைச்சுவை, சமூக விமர்சனம், யதார்த்த கதைகள் என பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்தனர்.

    இக்கட்டுரையில் அவர்களின் திரைப்பயணம், சாதனைகள் குறித்து பார்ப்போம். 

    1. வி.சேகர்:

    நடுத்தர குடும்பங்களின் கதை சொல்லியான வி. சேகர் 1952ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் சினிமாவின் 90கள் மற்றும் 2000களின் குடும்ப நாடகங்களின் மாஸ்டராக திகழ்ந்தார்.

    அவர் நடுத்தர குடும்பங்களின் போராட்டங்கள், உணர்ச்சிகள் மற்றும் சமூக அக்கறையை தனது படங்களில் சித்தரித்தார். அவரது திரைப்பயணம் 1980களின் பிற்பகுதியில் தொடங்கியது, ஆனால் 1990களில் பிரபலமானார்.

    இவர் இயக்கிய காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா உள்ளிட்ட பல படங்கள் இன்றும் மக்களிடையே ரசிக்கப்படுகின்றன.

    அவரது படங்கள் சமூக உணர்வுள்ள குடும்ப பொழுதுபோக்குகளாக இருந்தன, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை யதார்த்தமாகக் காட்டின. அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக 90களின் குடும்ப திரைப்படங்களின் போக்கை மாற்றின.

    துரதிர்ஷ்டவசமாக, 2025 நவம்பர் 14ஆம் தேதி, 73 வயதில் சென்னையின் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இழப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    2. நாராயணமூர்த்தி

    இயக்குநர் நாராயணமூர்த்தி 1966ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் காமெடி படங்களுக்கு பெயர் பெற்றவர்.

    அவரது திரைப்பயணம் 2001இல் 'மனதை திருடி விட்டாய்' என்ற படத்துடன் தொடங்கியது, இது பிரபு தேவா, வடிவேலு நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.

    இதனை தொடர்ந்து தொடர்ந்து சன் டி.வி.யில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற சின்னத்திரை தொடர்களையும் அவர் இயக்கி உள்ளார்.

    2025 செப்டம்பர் 23ஆம் தேதி, 59 வயதில் இதய நோய் காரணமாக சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் காலமானார். 

    3. வேலு பிரபாகரன்

    புரட்சிகர சினிமாவின் இயக்குநரான வேலு பிரபாகரன் 1957ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், சினிமாட்டோகிராஃபராக பல்துறை திறமை கொண்டவர்.

    அவரது திரைப்பயணம் 1980களில் தொடங்கியது, சமூக விமர்சனம் மற்றும் புரட்சிகர கருத்துகளை படங்களில் கொண்டு வந்தார்.

    'நாளைய மனிதன்' (1985), 'புரட்சிக்காரன்', 'அசுரன்', 'ராஜலி' ஆகிய அவரது படங்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்தன.

    அவர் நடிகராகவும் பல படங்களில் தோன்றினார்.2025 ஜூலை 18ஆம் தேதி, 68 வயதில் நீண்ட நோய் காரணமாக சென்னையில் காலமானார். இதனால் தமிழ் சினிமாவின் புரட்சிகர குரல் அமைதியானது.

    4. விக்ரம் சுகுமாரன்

    யதார்த்த கதைகளின் இளம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் 1978ஆம் ஆண்டு பிறந்தார். பாலு மகேந்திராவின் உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கியவர்.

    அவரது திரைப்பயணம் 2013இல் 'மதயானை கூட்டம்' என்ற படத்துடன் தொடங்கியது, இது டிராமா திரில்லர் வகை. மற்றொரு படம் 'ராவண கோட்டம்' (2023), யதார்த்த கதைகள் மற்றும் சமூக இழைகளை கொண்டது.

    அவரது படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை, இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு உத்வேகம் அளித்தது.

    2025 ஜூன் 2ஆம் தேதி, 47 வயதில் மதுரையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணிக்கும்போது திடீர் இதய நிறுத்தம் காரணமாக காலமானார். இளம் வயதில் அவரது இழப்பு தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    5. எஸ்.எஸ்.ஸ்டான்லி

    இளைஞர் கதைகளின் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.எஸ். ஸ்டான்லி 1967 டிசம்பர் 14ஆம் தேதி மூணாறில் பிறந்தார்,. இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் பன்முக வித்தகராக திகழ்ந்தார்.

    அவரது திரைப்பயணம் 2000களில் தொடங்கியது, இளைஞர்களின் கதைகளை மையமாகக் கொண்ட படங்கள் இயக்கினார். 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்' படத்தை இயக்கியர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் அடுத்து தனுஷை வைத்து 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தையும், 'மெர்குரி', 'கிழக்கு கடற்கரை சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

    இதனிடையே, 'பெரியார்' படத்தில் அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

    2025 ஏப்ரல் 15ஆம் தேதி, 57 வயதில் சிறுநீரக பிரச்சினை காரணமாக சென்னையில் காலமானார். தனுஷ் அவருக்கு மருத்துவ உதவி செய்தார். கொலிவுட் அஞ்சலி செலுத்தியது.


    முடிவுரை:

    2025 ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சோகமானது, இந்த இயக்குநர்களின் இழப்பு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியது.

    வி. சேகரின் குடும்ப நாடகங்கள், நாராயணமூர்த்தியின் காதல் நகைச்சுவை, வேலு பிரபாகரனின் புரட்சி, விக்ரம் சுகுமாரனின் யதார்த்தம், ஸ்டான்லியின் இளைஞர் கதைகள் என அவர்களின் பங்களிப்பு வேறுபட்டவை. ஆனால் காலத்தால் அழியாதவை. அவர்களின் படைப்புகள் புதிய தலைமுறைக்கு உத்வேகமாக இருக்கும்.... 

    • பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
    • அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறலாம் என்றது நிதி ஆயோக் அமைப்பு.

    புதுடெல்லி:

    கேஷியரை என்னை வந்து பாக்கச் சொல்லு என்றபடியே வங்கிக்குள் நுழைந்தார் மேனேஜர் முகுந்த். அவரது அழைப்பை ஏற்று மேனேஜர் ரூமுக்குச் சென்றார் கேஷியர் கண்ணன்.

    என்ன சார் விஷயம் கூப்டீங்களே? என கேட்டார் கேஷியர்.

    பொண்ணு கல்யாண விஷயம் எப்படி போயிட்டிருக்கு. நீங்க லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கீங்க இல்லையா? என்றார் மேனேஜர்.

    ஆமா சார், அதைதான் நம்பியிருக்கேன். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டிருக்கேன், சார் என பதில் சொன்னார் கண்ணன்.

    விலைவாசி எல்லாம் பயங்கரமா ஏறிக்கிட்டு இருக்கே, எப்படி மேனேஜ் பண்ணுறீங்க என உண்மையான அக்கறையுடன் கேட்டார் மேனேஜர்.

    நாம என்ன சார் செய்ய முடியும், ஊரோடு ஒத்துவாழ் என்கிற பழமொழி நமக்குதான் நல்லா பொருந்துது. எனவே வீட்டில கலந்து பேசி தேவையில்லாத செலவை எல்லாம் குறைச்சிட்டோம் என நிலைமையை விளக்கினார்.

    பரவாயில்லையே, இந்திய அரசு மாதிரி பக்காவா பிளான்போட்டு பண்ணுறீங்க போல. இந்திய அரசு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்துட்டு வர திட்டங்களால நமது பொருளாதாரம் வலிமையா இருக்குது. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கல்ல மாட்டி சின்னாபின்னமாகி வருகின்றன. ஆனாலும் இந்தியா பொருளாதாரத்தில் உறுதித்தன்மையா செயல்பட்டு வருகிறது. இதனால்தான் வளர்ந்து வரும் பொருளாதாரத்துல நாம் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கோம். அடுத்த சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கும் வரலாம் என பெருமையுடன் கூறினார் முகுந்த்.


    அப்படியா, அதைப் பத்தி சொல்லுங்களேன் சார், கேட்போம் என்ற கண்ணனுக்கு மேனேஜர் முகுந்த் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு:

    உலக பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 4-வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் கடந்த மே மாதம் அறிவித்தார். இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

    அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா என்ற வரிசையில் ஜப்பானின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிட்டதால் நான்காம் இடத்திற்கு வந்துவிட்டதாக உலகப் பொருளாதார நிதி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை நிதி ஆயோக் அதிகாரி வெளியிட்டார்.

    இதே 6 சதவீத வளர்ச்சி தொடரும் நிலையில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்திச் சென்று மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துவிடும் எனவும் அவர் அறிவித்துள்ளது இந்தியர்களை தலைநிமிரச் செய்வதாகும்.

    மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இத்தகைய சாதனை நடந்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.

    கடந்த 2014-ம் ஆண்டில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த, 2022ல் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.


    முதலிடத்தில் உள்ள அமெரிக்கா நம்மை விட 8 மடங்கும், சீனா 5 மடங்கும் பெரிய பொருளாதாரமாக இருப்பதால் அந்த நாடுகளை முந்திச் செல்ல இந்தியா இன்னும் வேகமான வளர்ச்சியை பதிவுசெய்ய வேண்டி உள்ளது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனிநபர் வருவாயிலும் எதிரொலித்தால் மட்டுமே அது உண்மையான வளர்ச்சி ஆகும்.

    தனிநபர் வருவாயைப் பொறுத்தமட்டில் 181 நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.

    இதைத் தவிர்த்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு தேடி இந்தியாவுக்கு வருமளவுக்கு நமது கல்வித்தரத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மற்ற நாடுகளை முந்திச் சென்று இந்தியா வெற்றிபெற முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.

    பரவாயில்லையே சார், ஒரு காலத்துல எல்லா நாடும் நம்மை கேலி, கிண்டல் செய்து எதுக்குமே லாயக்கு இல்லாத இந்தியானு நம்மள மட்டம் தட்டிட்டு இருந்ததைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா, இப்போ நெலமையே வேற. பொருளாதார வளர்ச்சில நம்மளோட வளர்ச்சி பெருமையா இருக்கு சார். நானும் வீட்டுக்குக் கிளம்பறேன். போகும்போது காய்கறி வாங்கிட்டு போகனும் சார் என்றபடியே மார்க்கெட்டுக்கு புறப்பட்டான் கண்ணன்.

    • ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரி கட்சிகள் அதிக எழுச்சி பெற்றுள்ளன.

    ஆட்சி மாறும் ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதற்கேற்ப உலகெங்கிலும் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களும் ஆட்சிக் கழிவிப்புகளும் இந்தாண்டு அதிகம் நிகழ்ந்தன. 

    அவ்வாறு இந்தாண்டு நிகழ்ந்தவற்றை இங்கு பார்ப்போம்.

    2025-ஆம் ஆண்டின் தொடக்கமே உலக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றார்.

    வர்த்தகப் போர் மற்றும் உலகளாவிய இறக்குமதி வரிகள்,கடுமையான குடியேற்றக் கொள்கைகள் என பல பரபரப்புகளை அவர் ஏற்படுத்தினார்.

    ஜெர்மனி: ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியின் ஆளும் கூட்டணி அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2025-ல் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

    ஓலாப் ஷோல்ஸின் (Olaf Scholz) தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி வீழ்த்தப்பட்டது. பிரீட்ரிக் மெர்ஸின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மகத்தான வெற்றியைப் பெற்றது.

    சிரியா: 2024 டிசம்பரில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் நீடித்து வந்த அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு  தொடக்கத்தில் புதிய இடைக்கால அரசு அமைந்தது.

    சிரியாவின் அதிபராக அகமது அல்-ஷாரா பதவியேற்றார். கடந்த நவம்பரில் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் ஆசி பெற்று திரும்பினார்.

    கனடா: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து ஏப்ரலில் கனடாவிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

    ஏற்கனவே ஆட்சியில் இருந்த ட்ரூடோவின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. பின்னர் மார்க் கார்னி கனடாவின் பிரதமரானார்.

    ஆஸ்திரேலியா: இந்த ஆண்டு மே மாதத்தில் ஆஸ்திரேலியாவும் தேர்தலை நடத்தியது. தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது, ஆன்டனி அல்பானீஸ் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பெலாரஸ்: 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெலாரஸிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். லுகாஷென்கோ தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சானே தகைச்சி 

    ஜப்பான்: இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் கீழ்சபைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆளும் LDP கட்சி தோல்வியடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அதைத் தொடர்ந்து, LDP-யைச் சேர்ந்த சானே தகைச்சி பெரும்பான்மை வாக்குகளுடன் ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

    நேபாள்: இந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில்,ஜென்-Z போராட்டங்களைத் தொடர்ந்து நேபாள அரசாங்கம் வீழ்ந்தது.

    சர்மா ஒலியின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி போராட்டமாக மாறி வன்முறையாக மாறி கடைசியில் ஆட்சியே மாறியது.

    சார்மா ஒலி - சுஷீலா கார்க்கி 

    தற்போது அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி சுஷீலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது.

    தாய்லாந்து: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதலை அடுத்து, முன்னாள் கம்போடியத் தலைவர் ஹன் சென்னுக்கும் தாய்லாந்து பெண் பிரதமராக இருந்த பேதோங்தான் சினவத்ரா இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல் கசித்தது.

    பேதோங்தான் சினவத்ரா

    இந்த சர்ச்சையில் தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் 2025 ஆகஸ்ட் 29 அன்று சினவத்ரா பிரதமர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, அனுடின் சார்ன்விரகுல், புதிய பிரதமராக 2025 செப்டம்பர் 7 அன்று பதவியேற்றார்.

    பிரான்ஸ்: 2025-ல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான பிரச்னையால் பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தார். 2025 அக்டோபர் நிலவரப்படி கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 6 பிரதமர்கள் பிரான்சில் மாறியுள்ளனர்.

    தான்சானியா: இந்த ஆண்டு, அக்டோபர் 20, 2025 அன்று தான்சானியாவில் தேர்தல்கள் நடைபெற்றன. சாமியா சுலுஹு ஹாசன் தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக நாட்டின் அதிபரானார்.

    தான்சானியா வன்முறை

    இருப்பினும், அவரது தேர்தலைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இவற்றில் சுமார் 700 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    கேமரூன்: இந்த ஆண்டு அக்டோபரில் கேமரூனில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன, ஏற்கனவே இருந்த அதிபர் பால் பியா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

    இதுதவிர்த்து ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரி கட்சிகள் அதிக எழுச்சி பெற்றுள்ளன. ஜெர்மனி தேர்தலில் வலதுசாரி வெற்றி இதற்கு எடுத்துக்காட்டாகும். 

     ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் 

    இந்த மாதம், தென் அமெரிக்க நாடான சிலியில் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சியின்தான்சானியாகம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீனெட் ஜாராவை தோற்கடித்து 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.  

    • டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு, பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • கணவருடன் வாழ விருப்பமில்லையானால், பிரிந்து சென்றிருக்கலாமே? குழந்தைகளை கொலை செய்ததை ஏற்க முடியாது.

    நாடு முழுவதுமே கள்ளக்காதல் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கான கள்ளக்காதல் விவகாரங்கள் வெளிவருகிறது. ஒருவர் கள்ள உறவில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கள்ளக்காதலை ஒரு உறவிலிருந்து வெளியேறும் உத்தியாக பயன்படுத்தலாம். இல்லையெனில் தனது துணைக்கு தெரியப்படுத்தி அவர்களை பிரிய விரும்பலாம். ஆனால் கள்ளக்காதல் என்றவுடன் தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருபவர் குன்றத்தூர் அபிராமிதான்.

    கடந்த 2018-ம் ஆண்டு இந்த அபிராமி செய்த கொடூரமான காரியம் இன்னும் நம் மக்களின் மனதில் இருந்து நீங்கி இருக்காது. அபிராமிக்கு இந்த வருடம்தான் நீதிமன்றம் தண்டனை அளித்தது. இந்த வருடம் நீதிமன்றங்கள் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பை தந்திருந்தாலும், அபிராமிக்கு தந்த தண்டனையை யாராலும் மறக்க முடியாது.

    குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் (6) என்ற மகனும் கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

    டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

     

    இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார். அவர்களை கொலை செய்து விடலாம் என்று சுந்தரம்தான் ஐடியா கொடுத்துள்ளார்.

    இதையடுத்து, அபிராமி தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடினர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

     

    இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறையில் அடைக்கப்பட்ட 7 வருடங்களுக்கு பிறகு அபிராமி வழக்கில் கடந்த ஜூலை 24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    நீதிபதி தீர்ப்பில், உங்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஆனால், இது காந்தி தேசம் என்பதால், பழிக்கு பழியாக தண்டனையை வழங்க முடியாது. ஆனால், நீங்கள் இருவரும் செய்திருக்கக் கூடிய குற்றம் கொடூரமானது. கணவருடன் வாழ விருப்பமில்லையானால், பிரிந்து சென்றிருக்கலாமே? குழந்தைகளை கொலை செய்ததை ஏற்க முடியாது. அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன். மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

     

    இந்த தீர்ப்பை கேட்டு அபிராமி கதறி அழுதார். தன்னுடைய அப்பா, அம்மா வயதானவர்கள். ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன். எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டும் அதை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை.

    குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு தூக்கு தண்டனையே தர வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து கூறினார்கள்.

    கள்ளக்காதல் கண்ணை மறைக்க, அதற்கு தடையாக இருக்கும் குழந்தைகளை கொல்ல நினைப்பவர்களுக்கு இதுபோன்ற கடுமையான தண்டனை ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவுமே இருக்கும்.

    நீதிமன்றம் அளித்த தண்டனை வேண்டுமானால் தாமதம் ஆகியிருக்கலாம்... ஆயுள் தண்டனையின்போது செய்த தவறை நினைத்தும், குழந்தைகளை நினைத்தும் அபிராமி அனுபவிக்கும் வேதனை அவருக்கு காலம் கொடுத்த பரிசு.

    இறைவன் கொடுத்த அழகான வாழ்க்கை, குழந்தை என வாழ தெரியாமல் நடுவில் வந்த கள்ளக்காதலால் தன்னுடைய வாழ்க்கையையே தொலைத்துவிட்டார் குன்றத்தூர் அபிராமி.

    • ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார்.
    • நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத ஒரு வலி கலந்த ஆண்டு. திரையில் நம்மை சிரிக்க வைத்தவர்கள், கண்களில் கண்ணீர் வர வைத்தவர்கள், ஒரே ஒரு வசனத்தில் மனதில் இடம் பிடித்தவர்கள் இந்த ஆண்டு நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்றனர். இவர்கள் சென்றாலும், அவர்களின் திரைப்பயணம், கதாபாத்திரங்கள், வசனங்கள் எப்போதும் நம்மோடு வாழ்ந்துகொண்டே இருக்கும்.

    அவ்வகையில் இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்து சென்ற தமிழ் நடிகர்களின் சோக தொகுப்பை தான் இந்த பட்டியலில் பார்க்கவுள்ளோம்

    1. ரோபோ சங்கர்

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

    இந்தநிலையில் ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     2. மதன் பாப்

    பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் மதன் பாப் சினிமாவில் அறிமுகமானார். இவர் கடைசியாக நடித்த படம் எமன் கட்டளை.

    மதன் பாப், ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன், யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். ஏ.ஆர்.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர். இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

    புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்தாண்டு தனது 71 ஆவது வயதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதன் பாப் மறைந்த தகவல் அறிந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    3. கோட்டா சீனிவாச ராவ்

    கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.

    2015 இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்.

    இந்தாண்டு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடலுக்கு பல தெலுங்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    4. சரோஜா தேவி

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) இந்தாண்டு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

    சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கினர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

    5. ராஜேஷ்

    1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

    பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ், அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார்.

    நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக இந்தாண்டு காலமானார். ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    6. சூப்பர்குட் சுப்பிரமணி

    தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்றுதான் அழைப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.

    அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டவர். இவர், கடைசியாக நடித்த பரமன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    இந்தாண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூப்பர் குட் சுப்பிரமணி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்தனர்.

    7. மனோஜ்

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

    ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.

    இந்தாண்டு மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. 

    8. ஹூசைனி

    1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.

    கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.

    புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ஷிஹான் ஹுசைனி இந்தாண்டு காலமானார். 

     9. பிந்து கோஷ்

    1980-களில் ரஜினி, கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ்.

    இவர் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. தொடர்ந்து, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 76 வயதான நடிகை பிந்து கோஷ், இந்தாண்டு உடல்நல குறைவால் காலமானார்.

    • கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது.
    • ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்தது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் மார்ச் 22-ந் தேதி தொடங்கி ஜுன் 25-ந் தேதி வரை நடந்தது. இந்த தொடரின் போது வீரர்கள் களத்தில் மோதிக் கொண்ட சம்பவங்கள் அரங்கேறியது. அது தொடர்பான விவரங்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின் ஒரு ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.

    அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

    அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா, கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.

    நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பும்ராவை மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சமாதானம் செய்தனர்.

    மற்றொரு ஆட்டத்தில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர். அப்போது கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைவார். இதனால் ரிங்கு சிங் சோகமான ரியாக்ஷன் கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

    இது ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை கேட்டுக் கொண்டனர்.

    இதனையடுத்து குல்தீப் யாதவ் - ரிங்கு சிங் ஆகியோருக்கிடையே எந்த சண்டையும் இல்லை என்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நிர்வாகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

    அதாவது குல்தீப் யாதவ் 2016 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த காலகட்டங்களில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தூங்குவது, சாப்பிடுவது உட்பட பல விஷயங்களில் நட்பாக இருந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை ஒன்று சேர்த்து எக்ஸ்தளத்தில் வீடியோ ஆதாரமாக கொல்கத்தா பதிவிட்டது.

    மேலும் குல்தீப் - ரிங்கு ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவையும் கொல்கத்தா நிர்வாகம் சேர்த்து பதிவிட்டுள்ளது. அதே வீடியோவை "நட்பு மட்டுமே" என்ற தலைப்பில் டெல்லி அணியும் வெளியிட்டுள்ளது.

    குவாலிபையர் 1 சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் 20-வயதான முஷீர் கான் அறிமுக வீரராக களமிறங்கினார். இருப்பினும் 3 பந்துகளை எதிர்கொண்ட அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அவர் பேட்டிங் செய்ய வந்தபோது ஸ்லீப் பகுதியில் பீல்டிங் நின்ற விராட் கோலி, சைகை மூலம் சக வீரரிடம் 'வாட்டர் பாய்' என்று கூறுவார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் இப்படி ஒரு ஜாம்பவான் வீரர் அறிமுக வீரரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் தவறானது என்று விராட் கோலியை விமர்சித்தனர்.

    இந்த போட்டியில் முஷீர் கான் பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு சில ஓவர்களுக்கு முன் பெவிலியனில் இருந்து களத்தில் இருந்த சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். இதனை குறிப்பிட்டு விராட் கோலி கிண்டலடித்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

    69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குவாலிபையர் சுற்றுக்கு பஞ்சாப் அணி முன்னேறியது.

    இந்த போட்டி முடிவடைந்த பின்னர் ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    அந்த வீடியோவில், போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் கைகுலுக்கி கொள்ளாமல் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்க கூட இல்லை.

    இரண்டு முறை ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி வரும் ஹர்திக் அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது.

    இருவரும் முன்னரே கைகுலுக்கி கொண்டிருக்கலாம். அதனால் மற்ற வீரர்களுடன் மட்டும் கைகுலுக்கி சென்றிருக்கலாம். ஆனாலும் இந்த வீடியோவை வைத்து மும்பை மற்றும் பஞ்சாப் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை கூறினர்.

    இதனை தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2-க்கு முன்னேறியது.

    இந்த போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் கருத்துக்கள் வெளியாகியது.

    டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்ட்யா, எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார். இதனை தொடர்ந்து சுப்மன் கில் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா ஓடிவந்து சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, அவரது விக்கெட்டை கொண்டாடினார். இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது.

    சுப்மன் கில் இதற்கு முன்பும் இதே போல எதிர் அணி கேப்டன்களுக்கு கை கொடுக்காமல் சென்ற விவகாரம் சர்ச்சையாக மாறி இருந்தது. இதற்கு முன், ரிஷப் பண்ட் ஒரு போட்டியின் முடிவில் பேசுவதற்கு வந்த போது சுப்மன் கில் அவரைத் தவிர்த்து விட்டுச் சென்றார்.

    இந்நிலையில் அன்பைத் தவிர வேறொன்றுமில்லை (இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்) குறிப்பிட்டு ஹர்திக் பாண்ட்யாவை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் கில் ஸ்டோரி வைத்துள்ளார். இது வைரலாகியது.

    2025-ல் நடந்த சில முக்கிய பேருந்து விபத்துகள் மற்றும் புள்ளி விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் பல துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதிக வேகம், மூடுபனி காரணமாக குறைவான பார்வைத்திறன், தீ விபத்து மற்றும் கவனக்குறைவு ஆகியவை இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

    2025-ல் நடந்த சில முக்கிய பேருந்து விபத்துகள் மற்றும் புள்ளி விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    ராஜஸ்தான் பேருந்து விபத்து: 2025 அக்டோபர் 14 அன்று ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்ற ஏசி பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 57 பயணிகள் பயணித்த அந்த பேருந்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்தின் வீரியத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    குர்நூல் தீ விபத்து (ஆந்திரப் பிரதேசம்): 2025 அக்டோபர் 24 அன்று அதிகாலையில், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் சுமார் 19 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் (ஆந்திரா): 2025 டிசம்பர் 12 அன்று ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். கடும் மூடுபனியால் வளைவு தெரியாததே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

    தெலுங்கானா (செவெல்லா): 2025 நவம்பர் மாதத்தில் லாரி ஒன்றும் பேருந்தும் மோதியதில் 19 பேர் பலியாகினர்.

    யமுனா எக்ஸ்பிரஸ்வே (உத்தரப் பிரதேசம்): 2025 டிசம்பர் 16 அன்று அதிகாலை நிலவிய கடும் மூடுபனி காரணமாக, மதுரா அருகே 7 பேருந்துகள் உட்பட பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.

    2025 புள்ளிவிவரங்களின் ஒரு பார்வை

    மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட முதற்கட்ட தரவுகளின்படி:

    தேசிய நெடுஞ்சாலைகள்: 2025ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் சுமார் 26,770 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மொத்த விபத்துகள்: 2025-ல் இந்தியாவில் சுமார் 1.6 லட்சம் முதல் 1.7 லட்சம் வரை சாலை விபத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 4.3% அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள்: உயிரிழந்தவர்களில் சுமார் 55% பேர் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்துகளுக்கான முக்கிய காரணங்கள்

    அதிக வேகம்: 70% உயிரிழப்புகளுக்கு அதிவேகமே காரணமாக உள்ளது.

    கடும் மூடுபனி: ஆண்டின் இறுதியில் வட மற்றும் தென் மாநிலங்களில் நிலவிய மூடுபனி பெரும் விபத்துகளை ஏற்படுத்தியது.

    போதிய பராமரிப்பின்மை: தனியார் பேருந்துகளில் தீயணைப்பு கருவிகள் இல்லாமை மற்றும் அவசரக் கால கதவுகள் சரியாக செயல்படாதது உயிரிழப்புகளை அதிகரித்தது.

    தூக்கமின்மை: அதிகாலை நேரங்களில் ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்குவது தொடர்கதையாக உள்ளது.

    மத்திய அரசு தற்போது பேருந்துகளுக்கான பாதுகாப்பு தரங்களை மேம்படுத்த 'Bharat NCAP' போன்ற புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது.

    ×