என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: ஆலமரங்களின் ஆணி வேராகத் திகழ்ந்த ஆச்சரிய பெண்மணி-யார் இந்த திம்மக்கா?
- பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்தார்.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆலமரங்களை நடும் பணியை தேர்வு செய்தார்.
புதுடெல்லி:
"தென்னைய பெத்தா எளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு"
இது 'எங்க ஊரு ராஜா' என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். எவ்வளவு தத்துவமான வரிகள்.
தந்தை பிள்ளையிடம் காட்டிய பாசத்தை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்ற வரிகள்.
அப்படிப்பட்ட பிள்ளைப் பாசத்தை விட தாய்மைப் பேறு எவ்வளவு மகத்தானது.
அந்தத் தாய்மைப் பேறு தனக்கு இல்லை என்றாகிப் போனதும் இந்த பெண்மணி எடுத்த ஒரு முடிவு ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருமணம் முடிந்து பிள்ளைப் பேறுக்காக கோவில் கோவிலாக சென்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் சுற்றியவர் சற்றே மாறுபட்டு சிந்தித்தார்.
பிள்ளைக்காக மரங்களைச் சுற்றுவதை விட்டு அந்த மரங்களையே தன் பிள்ளைகளாக உருவாக்கினால் என்ன என தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்.
பெற்றால் மட்டும்தான் பிள்ளையா, நட்டாலும் அது தன் வாரிசு தானே என நினைத்த அந்தப் பெண்மணி, மரங்களை நடும் முயற்சியை தொடங்கினார். அதுவும் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதில் உள்ள ஆல மரங்களை நடும் பணியைத் தேர்வு செய்தார்.

இப்படிப்பட்ட தைரியமான முடிவெடுத்த அந்தப் பெண்மணி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.
சாலுமரத திம்மக்கா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்த மண் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் கிராமம். 1911-ல் பிறந்த அவர், இளம் வயதிலேயே ஹூலிகல்லு ஊரைச் சேர்ந்த சிக்கையாவை மணமுடித்தார்.
திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை வரம் கிடைக்கவில்லை. கணவரின் ஆதரவு இவரின் பெரும் வரமானது.
இருவரும் ஆலமரக் கன்றுகளை உருவாக்கி சில ஆலமரக் கன்றுகளை நட்டனர். அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என ஆலமரக்கன்றுகள் பெருகின.
மரங்களை நடுவதுடன், அவைகளைத் தொடர்ந்து பராமரித்து வந்தனர். கோடைகாலத் தேவைக்காக மழைக்கால நீர் சேமிப்பாக சிறு சிறு குளங்களை வெட்டினர். தீராத தண்ணீர் பஞ்சத்தின் போதும் தளராமல் தொலை தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆலமரங்களுக்கு உயிர் தந்தனர் இந்த தம்பதியினர்.
கணவர் மறைந்த பிறகும் தன் முயற்சியிலிருந்து பின்வாங்காமல் தனது வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்தார்.
தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது (1997), ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருது (2010), இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2019) உள்பட பல சிறப்புமிக்க விருதுகள் மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவை இவரை பெருமைப்படுத்தின.
கடந்த 2016-ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியின் அங்கீகாரத்தையும் பெற்றார்.
இப்படி பல்வேறு புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி அன்று 114-வது வயதில் காலமானார்.

கன்னடத்தில் 'மரங்களின் வரிசை' என பொருள்படும் சாலுமரதா என அன்புடன் அழைக்கப்படும் திம்மக்காவின் வாழ்க்கைப் பணி பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.
சாலுமரதா திம்மக்காவின் மரணத்துக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
"மரம் மனிதனைவிட உயர்ந்தது. அதற்கு தெரிந்தது எல்லாம் பிறருக்கு நன்மை செய்வதே" என அடிக்கடி கூறுவது திம்மக்காவின் வழக்கம். இன்று அவர் இந்த உலகில் இல்லை. ஆனால் அவர் நட்ட ஆயிரக்கணக்கான மரங்களின் உருவிலும், அவை விடும் மூச்சுக் காற்றிலும் திம்மக்கா நம்முடன் என்றென்றும் நிலைத்திருப்பார்.






