என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gnanasekaran"

    • ஞானசேகரன் சம்பவம் நடைபெற்ற போது செல்போனில் பேசியது தொடர்பான விவரம் தன்னிடம் உள்ளது என்றார் அண்ணாமலை.
    • இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மாணவி ஒருவர், ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் போன் பேசியதாக தகவல் வெளியானது.

    சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து அடுத்த நாள் வரை ஞானசேகரன் யார் யாருடன் பேசியுள்ளார் என்பதற்கான போன் ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை தொடர்ந்து ஊடகத்தில் கருத்துகனை தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே மாணவி விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் மட்டுமே குற்றவாளி என, நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

    இதற்கிடையே, ஞானசேனரன் போனில் பேசியதான ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

    அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இதுபோன்ற கருத்துகளை புறக்கணிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டியது வரும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    • ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதற்கிடையே, குற்றவாளி ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஞானசேகரன் வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என கூறப்படுகிறது.

    • கோட்டூர் சண்முகம் வட்ட செயலாளர் என்ற முறையில் விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக பேசினார்.
    • எனக்கும் ஞானசேகரனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஒருமுறை கூட போனில் பேசியது இல்லை.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மாணவியை மிரட்டும்போது சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியானது. இதனால் யார் அந்த சார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    ஆனால் ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு, நீதிமன்றத்தில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. திமுக-வைச் சேர்ந்த சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோருடன் ஞானசேகரன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை என மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியின் இது தொடர்பாக கூறியதாவது:-

    * மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை அனுபவிக்கும் ஞானசேகரனிடம் பேசியதில்லை.

    * கோட்டூர் சண்முகம் வட்ட செயலாளர் என்ற முறையில் விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக பேசினார்.

    * எனக்கும் ஞானசேகரனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஒருமுறை கூட போனில் பேசியது இல்லை.

    * மழை வெள்ளத்தின்போது நான், துணை மேயர் மற்றும் ஆலுவலர்களும் சென்றபோது சண்முகம் அவரது வீட்டு அருகே வைத்து காலை உணவு சாப்பிட வைத்தார். அப்போது அவருடன் ஒரு போட்டோ எடுத்ததை தவிர, வேறு எந்த தொடர்பும் இல்லை.

    * சண்முகம் எனக்கு போன் செய்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கு நான் பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். சண்முகமும் நானும் பேசிய ஆடியோவை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
    • அனைத்து பாலியல் வழக்குகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பொறியியல் மாணலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒட்டுமொத்தமாக 90,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    மேற்படி வழக்கில் ஐந்தே மாதத்தில் குற்றவாளிக்கு எப்படி தண்டனை பெற்றுக் தரப்பட்டதோ, அதே போன்று அனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைந்து தண்டனையை பெற்றுத் தரும்பட்சத்தில், பாலியல் வன்கொடுமைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே, அனைத்து பாலியல் வழக்குகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வழியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    • பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரிங்டோன் வந்ததா என கேட்டபோது இல்லை என கூறியுள்ளார்.
    • அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

    * சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ஞானசேகரனின் செல்போன் பிளைட் மோடில் மட்டுமே இருந்துள்ளது.

    * அப்பெண்ணை ஏமாற்ற, பயமுறுத்தவே ஞானசேகரன் செல்போனில் பேசுவது போல் நாடகம் ஆடியது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    * செல்போன் பிளைட் மோடில் இருந்தது தொடர்பாக ஏர்டெல் மண்டல மேலாளர் நேரடியாக வந்து நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார்.

    * பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரிங்டோன் வந்ததா என கேட்டபோது இல்லை என கூறியுள்ளார்.

    * அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை.

    * ஞானசேகரனின் செல்போன் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையாகவும், அதிகாரிகள் நேரடியாகவும் சாட்சி அளித்துள்ளனர்.

    * இன்னும் இந்த வழக்கில் வேறு சிலர் இருப்பதாக இனிமேலும் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.

    * பெண்கள் துணிந்து வந்து புகார் கொடுக்க வேண்டும், அநீதிக்கு எதிராக பயந்து இருக்கக்கூடாது என்றார்.

    • பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.
    • அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.

    சென்னை :

    அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

    இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

    அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

    பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.

    அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

    FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?

    #SIRஐ_காப்பாற்றியது_யார் ?

    இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது.

    அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.

    ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,

    அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது! என்று கூறியுள்ளார். 



    • பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும்.
    • குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது வரவேற்கத்தக்கது என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அறிவாலயத்தின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.

    பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும் பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும்.

    அரசியல் ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே தனது முழுவிபரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி இன்று அதில் வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள்! அதற்கு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிமான்களுக்கும் எனது வாழ்த்துகள்!

    ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதால் மட்டுமே முழுமையான நீதி கிடைத்து விடவில்லை.
    • அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்லாமல் மேலும் பல மாணவிகள் ஞானசேகரனால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் குற்றவாளி தான் என்றும் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. குற்றவாளி ஞானசேகரனுக்கு வரும் ஜூன் 2-ஆம் நாள் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றத்தை மூடி மறைப்பதற்கு தான் அரசுத் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாணவர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளும் களமிறங்கிய பிறகு தான் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டது. அதன் பின் சென்னை உயர்நீதிமன்றமும் இந்த வழக்கில் தலையிட்டதன் காரணமாகத் தான் விரைவாகவும் ஓரளவு சரியாகவும் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இல்லாவிட்டால் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு ஞானசேகரன் அப்பாவியாகவும், புனிதராகவும் காட்டப்பட்டிருப்பார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதாலேயே அனைத்தும் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல. இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றஞ்சாட்டப்பட்டார். அதனால் தான் அவர் மட்டும் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்லாமல் மேலும் பல மாணவிகள் ஞானசேகரனால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஞானசேகரனின் குற்றங்களில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளால் கருத்தில் கொள்ளப்படவில்லை.

    எனவே, ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதால் மட்டுமே முழுமையான நீதி கிடைத்து விடவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஞானசேகரனுக்கு வரும் 2-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் போது, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!
    • அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!

    காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: "குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!".

    குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம்.

    சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதி செய்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?
    • SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    இந்த வழக்கில் அ.தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

    • இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?

    • ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?

    • SIT-ல் பணியாற்றிய DSP ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?

    இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான #யார்_அந்த_SIR ? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது!

    வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?

    யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?

    பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!

    காலம் மாறும்! காட்சிகள் மாறும் !

    விரைவில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்!

    SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி ,அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    • குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஞானசேகரன் கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை நடந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ராஜலட்சுமி இன்று பிறப்பித்தார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று அதிரடி தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்டக்கூடாது. அவர் மீது 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அம்மாவையும் சகோதரியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ந்தேதி வழங்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

    வரும் 2-ந்தேதி வரை ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சிக்கிய ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நகைக்கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×