என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'ஞானசேகரன்' குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு - நயினார் நாகேந்திரன், அண்ணாமலை வரவேற்பு
- பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும்.
- குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது வரவேற்கத்தக்கது என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அறிவாலயத்தின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும் பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும்.
அரசியல் ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே தனது முழுவிபரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி இன்று அதில் வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள்! அதற்கு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிமான்களுக்கும் எனது வாழ்த்துகள்!
ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






