என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: தமிழ்நாட்டின் பெருமை... பொருநை அருங்காட்சியகத்தின் சிறப்புகள்!
- தமிழர்களின் தொன்மையான பொருட்கள் தொல்லியல் துறை சார்பில் ரூ.6 கோடி செலவில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தி உள்ளனர்.
- அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை உலகறிய செய்யும் வகையில் கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகே மலைச்சாலையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 18.5.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56.60 கோடி செலவில் 7 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
இதில் ஆதிச்சநல்லூருக்கு ஏ, பி என 2 கட்டிடங்கள் 16,486 சதுர அடியில், தரைதளம் மற்றும் முதல் தளமாக கட்டப்பட்டு உள்ளது. சிவகளை கட்டிடம் 8,991 சதுர அடியில் தரைதளம், முதல் தளமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கொற்கை பகுதி ஏ, பி என 2 கட்டிடங்கள் 17,429 சதுர அடியில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டு உள்ளது.
இந்த 5 கட்டிடங்களிலும் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் தொன்மையான பொருட்கள் தொல்லியல் துறை சார்பில் ரூ.6 கோடி செலவில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தி உள்ளனர். இதுதவிர நிர்வாக கட்டிடம் மற்றும் சுகாதார வளாகம் என 2 கட்டிடங்கள் உள்ளன.
மேலும், ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. செல்லும் பாதையில் அழகு நிறைந்த குளம், குளத்தின் மீது பாலம், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீரூற்று அமைக்கப்பட்டு உள்ளன.
2 தியேட்டர்கள், சுற்றுச்சூழல் திறந்தவெளி திரையரங்கு அமைப்புகள், திறந்தவெளி கூட்டரங்கம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் அனைத்து கூடங்களுக்கும் சென்று பார்க்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் முறையில் உருவகப்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு செயல்முறை, 5-டி முறையில் தமிழ் நிலங்களின் வழியாக உணர்வு பயணம், பாண்டி விளையாட்டு, தரை ஒளிபடக் காட்சி, தொல்லியல் வரலாற்று பின்புலம் குறித்த ஆவணப் படம், படகில் செல்வது போன்ற இருக்கை வசதி தியேட்டர், ஆற்று பள்ளத்தாக்கு நாகரிகங்களின் தொடுதிரை காட்சி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொற்கை துறைமுகத்தில் பழங்கால தமிழர்கள் முத்துகுளித்து விலை உயர்ந்த முத்துக்களை ரோமாபுரி வரை விற்பனை செய்ததை விளக்கும் காட்சிகள், சிவகளை பகுதியில் கிடைத்த இரும்பு பொருட்களை மும்பை மற்றும் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆய்வு செய்த போது, அதன் வயது 5,300 ஆண்டுகள் என்று உறுதி செய்ததை விளக்கும் காட்சிகளை ஒளிபரப்பு செய்யவும் தனி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்நாட்டு பெரியவர்களுக்கு ரூ.20-ம், உள்நாட்டு சிறியவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. வெளிநாட்டு பெரியவர்களுக்கு ரூ.50-ம், வெளிநாட்டு சிறியவர்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கேமிரா கொண்டு செல்ல தனியாக ரூ.30-ம், வீடியோ கேமிரா கொண்டு செல்ல ரூ.100-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் அங்கு 5-டி தியேட்டரில் ஐந்திணைகள் குறித்து விளக்கும் காட்சிகளை கண்டுகளிக்க ரூ.25-ம், 7-டி தியேட்டரில் காட்சிகளை கண்டுகளிக்க ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது.






