என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: சரியும் மக்கள் தொகை.. குழந்தை பிறப்புக்கு குட்டிக்கரணம் போடும் நாடுகள் - மெல்ல அழிகிறதா மனித இனம்?
    X

    2025 REWIND: சரியும் மக்கள் தொகை.. குழந்தை பிறப்புக்கு குட்டிக்கரணம் போடும் நாடுகள் - மெல்ல அழிகிறதா மனித இனம்?

    • மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.
    • தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.

    2025-ஆம் ஆண்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மக்கள் தொகை வீழ்ச்சி உருவெடுத்துள்ளது.

    மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி கவலைப்பட்ட உலக நாடுகள், இப்போது போதிய குழந்தைகள் பிறக்காதது குறித்து அச்சமடைந்துள்ளது.

    இதனால் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல சலுகைகளை அறிவித்தும் பெரிய பயன் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றன.

    உலகின் 60%-க்கும் அதிகமான நாடுகளில் பிறப்பு விகிதமானது, மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.

    ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக கருத்தரிப்பு விகிதம் 2.4-ஐத் தாண்டவில்லை.

    1950-களில் 4.7-ஆக இருந்த உலக சராசரி, இப்போது பாதியாகக் குறைந்துள்ளது.

    2025இல், உலக கருத்தரிப்பு விகிதம் முந்தைய ஆண்டை விட 0.37% குறைந்து 2.40 ஆக உள்ளது. ஐ.நா. மக்கள்தொகை அறிக்கை இதை அசாதாரண குறைவு என்று விவரிக்கிறது.

    இந்தக் குறைவு, 2050-க்குள் உலக மக்கள்தொகையை 2.1-க்கு கொண்டுவரும் என்று ஐ.நா. கணிக்கிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் 2.1 ஐ கீழ் உள்ளன. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2.0 ஆக, நகர்ப்புறங்களில் 1.7 ஆகக் குறைந்துள்ளது.

    சிக்கலில் சீனா:

    சீனாவின் நிலைமை 2025-இல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து சுருங்கி வருகிறது. சீனாவின் கருத்தரிப்பு விகிதம் 2025-ல் 1.01-ஆக உள்ளது.

    அண்மைக் காலம் வரை உலக மக்கள் தொகையில் முதலிடத்திலிருந்த சீனாவை இந்தியா கடந்த 2023 முந்தியது.

    தற்போது உலகின் மக்கள் தொகையில் 145 கோடி மக்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    இதற்கு சீனா ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை மட்டுமே என சட்டம் போட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதே காரணம்.

    கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றி ருந்தால் சலுகைகள் மறுக்கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஆனால் அதுவே இப்போது அந்நாட்டுக்கு வினையாக வந்து முடிந்துள்ளது.

    2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது. 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.

    இருப்பினும் பல சீனர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்போது அந்த ஒரு குழந்தை கூட வேண்டாம் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டனர்.

    இதனால் சீனா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் கொள்கைகளை வகுத்து அமல்படுத்தி வருகிறது.

    அதன் படி சீனாவில் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரிச்லுகைகள் மற்றும் நேரடிப் பண உதவி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்தது.

    இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அனைத்து பிறப்பு தொடர்பான மருத்துவ செலவுகளையும் அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.

    ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 13 சதவீத VAT வரி விதிக்கப்படும் என்றும் அண்மையில் சீனா அறிவித்தது.

    இவ்வளவு செய்தும், சீன இளைஞர்கள் அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பளு காரணமாகத் திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றைத் தவிர்த்து வருகின்றனர்.

    அடுத்ததாக ரஷியா..

    உக்ரைன் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால், ரஷியாவின் பிறப்பு விகிதம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

    அதிபர் புதின் 'பெரிய குடும்பங்களே ரஷியாவின் எதிர்காலம்' என்று கூறி வருகிறார். சோவியத் காலத்து விருதான 'மதர் ஹீரோயின்' விருதை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு பெரும் தொகையும் கௌரவமும் வழங்கப்படுகிறது. தம்பதிகள் வீட்டில் ஒன்றாக இருப்பதற்கென்றே சிறப்பு விடுமுறைகளையும் ரஷிய நிறுவனங்கள் அறிவித்தன.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி பெண்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.81,000) கணிசமான ஊக்கத்தொகையை ரஷிய அரசு வழங்குகிறது. இது பின்னர் பள்ளியில் பயிலும் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

    மேலும், கருக்கலைப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தை வேண்டாம் என்ற கருத்தைப் பரப்புவதற்குத் தடை விதிக்க மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஜப்பான்:

    குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் தனி அமைச்சகமே வைத்துள்ளது. அங்கு, 'குழந்தை மற்றும் குடும்ப முகமை' அமைச்சகத்தின் மூலம் டேட்டிங் செயலிகளை அரசாங்கமே நடத்தி இளைஞர்களைத் திருமணத்திற்கு ஊக்குவித்து வருகிறது.

    அதிக வேலை நேரம், வேலைப்பளு காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் தாம்பத்தியத்தின் மீதான ஆர்வத்தை இழந்து வருகின்றனர். தேவைப்பட்டால் வாடகை கணவன் என்ற அளவுக்கு ஜப்பானில் நிலைமை மோசமாகி விட்டது.

    தென் கொரியா:

    தற்போதைய நிலவரப்படி, 0.7-க்கும் கீழ் என்ற அளவில் உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடாக தென் கொரியா உருவெடுத்துள்ளது.

    2025-இல், ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி அளிக்கும் திட்டங்களை அந்நாடு அறிவித்துள்ளது.

    ஆனால் ஏன்?

    வீடு வாங்குவது மற்றும் குழந்தைகளை வளர்ப்பது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாக மாறியது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவதால், திருமண வயது தள்ளிப் போவது, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பாலியல் உறவில் ஆர்வமின்மை, கருவுறுதல் பிரச்சனை ஆகியவை இந்த உலகளாவிய பிறப்பு சதேவீத வீழ்ச்சிக்கு காரணங்களாக சுட்டப்படுகின்றன.

    சுதந்திரமான வாழ்க்கை முறையை விரும்பும் இந்த தலைமுறையினரிடையே 'இருவருக்கும் வருமானம் - குழந்தை வேண்டாம்' என்ற கலாச்சாரம் உலகெங்கும் பரவி வருகிறது.

    2025-ஆம் ஆண்டு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ரஷியா, சீனா, தென் கொரியாவை போல் பணத்தை அள்ளிக் கொடுத்தால் மட்டும் பிறப்பு விகிதத்தை உயர்த்திவிட முடியாது என்பதாகும்.

    வேலை-வாழ்க்கைச் சமநிலை, பாலின சமத்துவம் மற்றும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கினால் மட்டுமே இந்த மக்கள் தொகைச் சரிவை உலக நாடுகள் தடுக்க முடியும்.

    சரி இந்தியாவுக்கு வருவோம்!

    இதற்கிடையே இந்திய அளவில் ஒரு புள்ளிவிரமமும் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

    அதாவது, இந்தியாவில் 49 மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    2021 குடிமைப் பதிவுத் தரவுகளின்படி இந்த உண்மை இந்த ஆண்டு தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலைமை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. இந்த பிறப்பு விகித குறைவு, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

    2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. அதேசமயம் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கிறது.

    குறிப்பாக இந்த 49 மாவட்டங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.

    2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன, அப்படிப் பார்த்தால், இந்த எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கி வருவதாகத் தெரிகிறது.

    இதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்களிலும், பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது. மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகளை வரையறுக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    ஆனால் இதனால் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என தென் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    Next Story
    ×