என் மலர்
2025 - ஒரு பார்வை

REWIND 2025: இந்திய கால்பந்து அணிக்கு மோசமான ஆண்டு
- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக் நீக்கப்பட்டார்.
- ஆசிய கோப்பையில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்தியின் மூலம் காணலாம்..
இந்திய ரசிகர்களின் கனவு தகர்ந்தது
2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி கண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் கால்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணியை காண நினைத்த ரசிகர்களின் கனவு தகர்ந்து போனது.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கி இந்திய கால்பந்து சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

ஆசிய கோப்பையில் தோல்வி
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் இந்தியா 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றது.
ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக ஆடிய இந்தியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த போட்டிகளிலும் இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது.
சுனில் சேத்ரி ஓய்வு:
இந்தியாவில் கால்பந்தாட்டம் என்றால் அதன் ஹீரோவாக கருதப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு பலராலும் பெரிதும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி.

உலக அளவில் அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் போர்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக, சுனில் சேத்ரி 83 கோல்களுடன் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார். தனது அபார திறமையால் கால்பந்து உலகில் தனக்கென தனி இடம் பிடித்த சுனில் சேத்ரி, இந்த ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .






