என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: நான் ஒரு ராசியில்லா ராஜா-தொடர் தோல்வியால் புலம்பும் காங்கிரஸ்
- எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
- டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.
தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.
தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.
பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.
காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.
பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.
சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.
பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.






