என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: இந்தியா-சீனா உறவு.. யாருக்கு வரவு? - கைகுலுக்கி காலை வாரும் ராஜதந்திரம்!
    X

    2025 REWIND: இந்தியா-சீனா உறவு.. யாருக்கு வரவு? - கைகுலுக்கி காலை வாரும் ராஜதந்திரம்!

    • சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
    • மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால்...

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு அமைக்கப்பட்ட கல்வான் தாக்குதல் நினைவுச் சின்னம்

    2024 அக்டோபரில் ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.

    லடாக் எல்லையில் நிலவிய நான்கு ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வாக, ரோந்து பணிகளை மீண்டும் தொடங்குவது மற்றும் தத்தமது படைகளை தங்கள் எல்லைக்குள் மீண்டும் பின்வாங்க செய்வது உள்ளிட்டவை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் 2025-ல் செயல்படுத்தப்பட்டன.

    அதேநேரம் இந்த ஆண்டில் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.

    சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அங்கு நடந்த சந்திப்பில் ஓரளவு உறுதியான சில முடிவுகள் எட்டப்பட்டன என்றே சொல்லலாம். 2018-க்குப் பிறகு பிரதமர் இந்த ஆண்டுதான் மீண்டும் சீனா சென்றிருந்தார்.

    இந்த பேச்சுவார்த்தையின் நேரடி விளைவாக மோதல் மற்றும் கொரோனாவால் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா- சீனா நேரடி விமான சேவை கடந்த அக்டோபரில் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 26 அன்று இண்டிகோ நிறுவனம் கொல்கத்தா மற்றும் குவாங்சூ இடையே தனது சேவையைத் தொடங்கியது.

    மேலும் லிபுலேக் மற்றும் நாது லா போன்ற முக்கியமான கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

    இந்தியா சீனா நெருங்குவதற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியே ஆகும்.

    டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிக் கட்டுப்பாடுகள், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் தங்களுக்குள் வர்த்தகத்தை புதுப்பித்துக்கொள்ள செய்தது.

    இந்த சந்திப்புகள் மூலம் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் முழுமையான நண்பர்களாக மாறவில்லை என்றாலும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய ஒற்றுமைக்காகவும் முயற்சியாக அமைந்தது.

    ஆனால் இதுதவிர பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக 2024 இல் முடிவெடுக்கப்பட்டபடி தத்தமது படைகளை விலக்கிக் கொண்டாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இன்னும் சில இடங்களில் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை.

    எல்லைப் பிரச்சனையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏரியில் தங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டமைப்புகளை சீனா உருவாக்கி வருவதும் சாட்டிலைட் ஆதாரம் மூலம் தெரியவந்துள்ளது.

    எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கும் சீனா:

    திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது கடந்த அக்டோபரில் வெளியான செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.

    2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

    அருணாச்சல பிரதேச பெண்ணின் கசப்பான அனுபவம்:

    அதேநேரம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தங்களுடையது என்றும் சீனா வெளிப்படையாக தெரிவித்தும், வரைபடம் வெளியிட்டும், இந்திய பகுதிகளுக்கு சீன பெயர்களை சூட்டியும் வருகிறது. 2025 மே மாதம், சுமார் 27 இடங்களுக்குச் சீனா புதிய பெயர்களை அறிவித்ததை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. "பெயர்களை மாற்றுவதால் உண்மை மாறிவிடாது, அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி" என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.

    ஆனால் இதன் உச்சமாக கடந்த மாதம் லண்டனில் இருந்து ஜப்பான் செல்ல இணைப்பு விமானம் ஏற சீனாவின் ஷாங்காய் விமான நிலயத்தில் காத்திருந்த இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை சீன அதிகாரிகள் 18 மணிநேரம் தடுத்து வைத்தனர். அருணாசல பிரதேசம் சீனாவின் பகுதி என்பதால் அப்பெண்ணின் பாஸ்போர்ட் செல்லாதாம்.. இதில் சீன பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணுங்க என கூறி அப்பெண்ணை கிண்டல் வேறு செய்துள்ளனர் சீன அதிகாரிகள்.

    அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அப்பெண், சீனாவில் உள்ள இந்திய தூதரக தலையீட்டின் பின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதோடு நிற்கவில்லை சீனா.

    அருணாச்சலப் பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேட்டி வேறு கொடுத்து இந்த செயலுக்கு விளக்கம் அளித்த கொடுமை நிகழ்ந்தது.

    இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனியேனும் அருணாச்சல பிரதேச மக்களுக்கு இதுபோல ஏதும் சங்கடம் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

    எல்லையில் நிலவும் இந்த இழுபறி நிலை, இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஆழமான நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

    சரி, பொருளாதார உறவு எப்படி?

    இந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம் சுமார் 127.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கொஞ்சம் பொறுங்கள்.. இதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது.

    சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. அதாவது, வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 99.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

    சீனாவிடமிருந்து மின்னணுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தியா அதிகம் நம்பியிருப்பது இந்தத் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு பக்கம் பிரதமர் மோடியிடம் ஜி ஜிங் பின் நட்பு முகம் காட்டும் வேலையில் மறுபுறம் சீனா தங்கள் நலன்களை முன்னிறுத்தி அதன் வேலையை தொடர்ந்து வருகிறது.

    எனவே மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால், 2025-ல் இந்தியா-சீனா உறவு சந்திப்புகளில் இணக்கமாக தோன்றினாலும் செயல்கள் அதற்கு நேர்மாறாகவே இருந்து வருகிறது.

    Next Story
    ×