என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    • டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் செப். 12-ந்தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது.
    • கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார்.

    இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு செப்.9-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

     

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். பாராளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

     

    இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மகாராஷ்டிர ஆளுநராக இருந்த அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

     

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் செப். 12-ந்தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    பதவி விலகிய ஜெகதீப் தன்கரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். கடந்த ஜூலை 21-ந்தேதி துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

     

    சி.பி.ராதாகிருஷ்ணன் முழு விவரம்:

    தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு மே 4-ந்தேதி பிறந்தார். 16-வது வயதில் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார். 1974-ம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க. செயலாளராக பதவி வகித்தார். கடந்த 1998, 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் கோவை தொகுதியில் இருந்து 2 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் ஐ.நா. சபைக்கான இந்திய குழுவில் இடம் பெற்றார்.

    கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். அப்போது சுமார் 19,000 கி.மீ தூரத்துக்கு ரத யாத்திரை நடத்தினார்.

    நதிகள் இணைப்பு, தீவிரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டம், போதை ஒழிப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். கடந்த 2016-ல் கொச்சியில் செயல்படும் தென்னை நார் வாரியதலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2023-ல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார். 2024-ல் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது துணை ஜனாதிபதியாக அவர் பதவியேற்று உள்ளார்.

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 3 பேர் புதிதாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனையும் சேர்த்து இதுவரை 15 பேர் துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர்.

    கடந்த 1952 முதல் 1962 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், கடந்த 1984 முதல் 1987 வரை வெங்கட்ராமன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் இப்பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2030-ம் ஆண்டு செப்டம்பர் வரை அவர் பதவியில் நீடிப்பார்.

    அரசியல் வாழ்க்கையை தாண்டி சி.பி.ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகளாகும்.

    • "Man with the golden arm" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
    • தனது வாழ்நாள் இறுதி வரை 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    நாம் ஆண்டின் இறுதியை நெருங்கியுள்ள நிலையில் இந்தாண்டு மண்ணை விட்டு மறைந்த ஆனால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அதன்படி உலகெங்கிலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களின் தொகுப்பை காலவரிசைப்படி இங்கு பார்ப்போம். 

    ரத்த தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன்

    தனது அரிய வகை ரத்த பிளாஸ்மா தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88), கடந்த பிப்ரவரி 17, 2025 அன்று காலமானார்.

    "Man with the golden arm" என்று அன்போடு அழைக்கப்படும் இவர், தனது 18 வயது முதல் 81 வயது வரை சுமார் 1,173 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

    இவரது ரத்தத்தில் இருந்த 'Anti-D' என்ற அரிய வகை ஆன்டிபாடி, கர்ப்ப காலத்தில் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றியது.

    2022 வரை உலகிலேயே அதிக பிளாஸ்மா தானம் செய்தவர் என்ற சாதனையைப் படைத்த ஹாரிசன், உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் பெற்றோரின் பார்வையில் ஒரு ஹீரோ ஆவார்.

    ஆகா கான் 

    இஸ்லாமின் ஷியா இஸ்மாயிலி பிரிவின் தலைவரான ஆகா கானும் (IV) இந்த ஆண்டு காலமானார். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல நற்காரியங்களை செய்த அவர் பிப்ரவரி 4 தனது 88வது வயதில் காலமானார்.  

     

    பழம்பெரும் பேட்மேன்

    ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், 'பேட்மேன்' கதாபாத்திரத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவருமான வால் கில்மர் (65), நிமோனியா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 1, 2025 அன்று காலமானார்.

    1984-ல் 'டாப் சீக்ரெட்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், 'பேட்மேன் ஃபாரெவர்' மற்றும் டாம் குரூஸுடன் 'டாப் கன்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

    2014-ல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்த நிலையில், தற்போது நிமோனியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான கஸ்தூரிரங்கன் (84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஏப்ரல் 25, 2025 அன்று பெங்களூருவில் காலமானார்.

    1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராகப் பணியாற்றிய இவர், இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றியவர்.

    ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.

    இந்தியாவின் Tiger Man.. வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர்

    "இந்தியாவின் புலி மனிதன்" (Tiger Man of India) என்று போற்றப்படும் பிரபல வனவிலங்கு ஆர்வலர் வால்மிக் தாப்பர் (73), புற்றுநோய் பாதிப்பு காரணமாக மே 31, 2025 அன்று டெல்லியில் காலமானார்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் பாதுகாப்புக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவர், 1988-ல் ரந்தம்போர் அறக்கட்டளையை நிறுவி புலி வேட்டையைத் தடுக்கவும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் போராடினார்.

    வனவிலங்குகள் குறித்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்ட பல அரசு குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.

    10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை.. மனிதநேய மருத்துவர் ரத்தினம்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வெறும் 10 ரூபாய் கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் (96), வயது முதிர்வு காரணமாக ஜூன் 7, 2025 அன்று காலமானார்.

    1959-ல் தனது மருத்துவப் பணியைத் தொடங்கிய இவர், ஆரம்ப காலத்தில் 2 ரூபாய்க்கும், பின்னர் தனது வாழ்நாள் இறுதி வரை 10 ரூபாய்க்கும் சிகிச்சை அளித்து வந்ததால், மக்கள் மத்தியில் "பத்து ரூபாய் மருத்துவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

    கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா

    லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான டியோகோ ஜோட்டா (28), ஸ்பெயினில் கடந்த ஜூலை 3 நடந்த கார் விபத்தில் தனது சகோதரருடன் உயிரிழந்தது கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் பல வெற்றிகளில் முக்கியப் பங்காற்றிய ஜோட்டாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது ஆகும். ரொனால்டோ அவரது மறைவுக்கு உருக்கான இரங்கலை தெரிவித்திருந்தார்.

    உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் பௌஜா சிங்

    உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான பௌஜா சிங் (114), கடந்த ஜூலை 14, 2025 அன்று பஞ்சாபில் நடந்த சாலை விபத்தில் காலமானார்.

    தனது சொந்த கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், ஜலந்தரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    "தி டர்பண்ட் டோர்னாடோ" (The Turbaned Tornado) என்று அழைக்கப்படும் இவர், தனது 89-வது வயதில் மாரத்தான் ஓடத் தொடங்கி உலக அளவில் பல சாதனைகளைப் படைத்தவர் ஆவார்.

    மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன்

    உலகின் புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் (71), மாரடைப்பு காரணமாக ஜூலை 24, 2025 அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் காலமானார்.

    90-களில் மல்யுத்தப் போட்டிகளை உலக அளவில் பிரபலமாக்கியதில் இவருக்கு மிகப்பெரிய பங்குண்டு. தனது கம்பீரமான தோற்றம், தனித்துவமான ஸ்டைல் மற்றும் தேசபக்தி மிக்க விளம்பரங்கள் மூலம் '90ஸ் கிட்ஸ்'களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    உலகெங்கும் மக்களின் அன்பைப் பெற்ற நீதிபதி ஃபிராங் கேப்ரியோ

    அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (88), கணையப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 21, 2025 அன்று காலமானார்.

    "Caught in Providence" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்ற இவர், போக்குவரத்து விதிகளை மீறியவர்களை விசாரிக்கும்போது காட்டிய அதீத மனிதாபிமானத்தால் உலகின் மிகவும் கனிவான நீதிபதி என்று போற்றப்பட்டார்.

    தண்டனை வழங்குவது மட்டுமே நீதியல்ல, குற்றம் செய்தவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கருணை காட்டுவதும் நீதியே என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இவர்.

     

    ஆடை வடிவமைப்பாளர் ஜார்ஜியோ அர்மானி

    ரெடி-டு-வேர் ஃபேஷனில் புரட்சியை ஏற்படுத்திய புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி, இந்த ஆண்டு செப்டம்பரில் தனது 91 வயதில் காலமானார்.

    கொரோனா போராளி பீலா வெங்கடேசன்

    தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் கடந்த செப்டம்பர் 25 அன்று காலமானார்.


    ஜேன் குடால்

    உலகப் புகழ்பெற்ற சிம்பன்சி ஆய்வாளர் ஜேன் குடால் இந்த ஆண்டு அக்டோபர் 1, தனது 91வது வயதில் காலமானார். தனது 60 ஆண்டுகால ஆய்வின் மூலம், சிம்பன்சிகளின் புத்திசாலித்தனத்தை அவர் நிரூபித்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

     இந்திய விளம்பரங்களின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே

    இந்திய விளம்பரத் துறையின் ஜாம்பவான் என்று போற்றப்படும் பியூஷ் பாண்டே (70), உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 24, 2025 அன்று காலமானார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 'ஓகில்வி' (Ogilvy) நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஃபெவிகால், காட்பரி, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற 90-களின் மறக்க முடியாத பல ஐகானிக் விளம்பரங்களை உருவாக்கியவர். விளம்பர உலகில் இந்தியத் தன்மையையும், நகைச்சுவையையும் புகுத்திய இவரது சிறந்த பணிக்காக 2016-ல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

    தாய்லாந்தின் ராஜமாதா

    தாய்லாந்து நாட்டின் ராஜமாதா சிரிகிட், உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 24, 2025 அன்று தனது 93-வது வயதில் காலமானார். தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான இவர், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.

    ரத்தத் தொற்று காரணமாகப் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவரது உயிர் பிரிந்தது. தாய்லாந்தில் இவரது பிறந்தநாள் 'அன்னையர் தினமாக' கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்துஜா சாம்ராஜ்யத்தின் தலைவர் கோபிசந்த் இந்துஜா

    இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா (85), நவம்பர் 3, 2025 அன்று லண்டனில் காலமானார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இரண்டாமவரான இவர், 2023-ல் தனது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் இந்துஜாவின் மறைவுக்குப் பிறகு குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

    அசோக் லேலண்ட் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்துஜா குழுமத்தை ஆட்டோமொபைல், வங்கி, தொழில்நுட்பம் என 11 துறைகளில் விரிவுபடுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், இவரது குடும்பம் பிரிட்டனின் மிகவும் செல்வந்தக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    DNA கட்டமைப்பை கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்சன்

    டிஎன்ஏவின் (DNA) 'இரட்டை ஹெலிக்ஸ்' கட்டமைப்பைக் கண்டறிந்த உலகப்புகழ் பெற்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97), நவம்பர் 6, 2025 அன்று நியூயார்க்கில் காலமானார்.

    1953-ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிரிக்குடன் இணைந்து இவர் வெளியிட்ட டிஎன்ஏ கட்டமைப்பு குறித்த ஆய்வு, உயிரினங்களின் பரம்பரைத் தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியதுடன், நவீன மருத்துவ மற்றும் தடயவியல் அறிவியலுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது.

    இந்த வரலாற்றுச் சாதனைக்காக 1962-ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூனை உருவாக்கிய ஜாம்பவான் டான் மெக்ராத்

    உலகப்புகழ் பெற்ற 'தி சிம்ப்சன்ஸ்' (The Simpsons) கார்ட்டூன் தொடரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான டான் மெக்ராத் (61), பக்கவாத பாதிப்பு காரணமாக நவம்பர் 14, 2025 அன்று காலமானார்.

    1997-ல் வெளியான 'ஹோமர்'ஸ் போபியா' (Homer's Phobia) என்ற புகழ்பெற்ற எபிசோடுக்காக இவர் 'எம்மி' விருது வென்றவர்.

    90-களில் தொடங்கி இன்றுவரை உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இத்தொடரின் வளர்ச்சிக்கு மெக்ராத்தின் எழுத்துக்கள் மிகப்பெரிய பலமாக இருந்தன.

    ஈரோடு தமிழன்பன் - ஈடுசெய்ய முடியாத இழப்பு

    தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் கவிஞரும், எழுத்தாளருமான ஈரோடு தமிழன்பன் (92), வயது மூப்பு காரணமாக நவம்பர் 22, 2025 அன்று காலமானார்.

    மரபுக் கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர், பாவேந்தர் பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய பெருமைக்குரியவர்.

    செய்தி வாசிப்பாளர், பேராசிரியர் எனப் பல தளங்களில் பணியாற்றிய இவர், 'சாகித்ய அகாதெமி', 'கலைமாமணி' உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுத் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

    துல்சா படுகொலை: அமெரிக்க நிறவெறியின் சாட்சி

    அமெரிக்க வரலாற்றின் கருப்பு அத்தியாயமான 1921-ம் ஆண்டு 'துல்சா' (Tulsa) இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்களில் மிக மூத்தவரான வயோலா பிளெட்சர் (111), நவம்பர் 24, 2025 அன்று காலமானார்.

    தனது 7-வது வயதில் அரங்கேறிய அந்த கோரமான வன்முறையில் 300-க்கும் மேற்பட்ட கறுப்பின மக்கள் கொல்லப்பட்டதையும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதையும் நேரில் கண்ட இவர், தன் வாழ்நாள் முழுவதும் அந்த நீதிக்காகப் போராடினார். நிறவெறியின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துரைத்த சாட்சியாக பிளெட்சர் திகழ்ந்தார்.

    சென்னையின் பறவை மனிதர் ஜோசப் சேகர்

    சென்னையின் "பறவை மனிதர்" என்று அன்போடு அழைக்கப்படும் ஜோசப் சேகர் (73), புற்றுநோய் பாதிப்பு காரணமாக டிசம்பர் 10, 2025 அன்று காலமானார். ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த 20 ஆண்டுகளாகத் தனது வீட்டின் மாடியில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதை ஒரு தவமாகவே செய்து வந்தார்.

    தொடக்கத்தில் "கேமரா ஹவுஸ் சேகர்" என்று அறியப்பட்ட இவர், பின்னாளில் பல்லாயிரக்கணக்கான கிளிகளுடனான தனது பிணைப்பால் "பறவை மனிதர்" என்று உலகப் புகழ் பெற்றார்.

    பதவியை உதறிய முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல்  

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90), வயது மூப்பு காரணமாக டிசம்பர் 11, 2025 அன்று மகாராஷ்டிராவின் லத்தூரில் காலமானார்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் உள்துறை போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிக உயரமான சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்:

    உலகின் மிக உயரமான சிலையான, குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் "ஒற்றுமை சிலை"யை (Statue of Unity) வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் வி. சுதார் (100), வயது மூப்பு காரணமாக டிசம்பர் 17, 2025 அன்று காலமானார்.

    மகாராஷ்டிராவின் எளிய குடும்பத்தில் பிறந்த இவர், தனது அபாரத் திறமையால் இந்தியாவின் தலைசிறந்த சிற்பக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவரது அரிய சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.    

    • மக்கள் அவருடைய கருத்துக்கள், அறிக்கைகள் மற்றும் அவரைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து அதிகம் தேடியுள்ளனர்.
    • ரசிகர்கள் போட்டி அட்டவணைகள், ஸ்கோர், வீரர்களின் பட்டியல் மற்றும் பல அம்சங்களுக்காகத் தேடினர்.

    2025-ம் ஆண்டு உலகளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் இவைதான். எதற்காக, ஏன்..? தேடப்பட்டன என்பதை விளக்கமாக அறிந்து கொள்வோம்.

    1. ஜெமினி (Gemini)

    ஏ.ஐ. இப்போது ஒவ்வொரு நாளும் அசுர வளர்ச்சி பெறுகிறது. செயற்கை நுண்ணறிவின் அன்றாட வாழ்வில் அதிகரித்து வரும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 2025-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக ஜெம்னை என வெளிநாட்டவர்களால் அழைக்கப்பட்ட ஜெமினி (Gemini) உள்ளது. ஜெமினியின் அம்சங்கள், அப்டேட்கள் மற்றும் வேலை, கல்வி மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் அதன் நடைமுறைப் பயன்பாடுகளைப் புரிந்துகொள்வதற்காக மக்கள் அந்த வார்த்தையை அதிகம் தேடியுள்ளனர்.

    2. இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் தொடர் காரணமாக, இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து (India vs England) என்பது அதிகம் தேடப்பட்ட சொற்களில் இரண்டாவதாக இடம் பிடித்துள்ளது. ரசிகர்கள் போட்டிகளுக்கான கால அட்டவணைகள், நேரலை மதிப்பெண்கள் மற்றும் வீரர்களின் ஆட்டத்திறன்களை உன்னிப்பாகப் பின்தொடர்ந்தனர்.

     

    3. சார்லி கிர்க் (Charlie Kirk)

    அரசியல் விவாதங்கள், பொது நிகழ்வுகளில் அதிகமாக பங்கேற்றது மற்றும் ஊடக வெளிச்சம் ஆகியவற்றின் காரணமாக சார்லி கிர்க் 2025-ல் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றார். மக்கள் அவருடைய கருத்துக்கள், அறிக்கைகள் மற்றும் அவரைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து அதிகம் தேடியுள்ளனர்.

    4. கிளப் வேர்ல்ட் கப் (Club World Cup)

    2025-ம் ஆண்டில் பிபா கிளப் வேர்ல்ட் கப் (FIFA Club World Cup) தொடர்பான தேடல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. கால்பந்து ரசிகர்கள் போட்டி முடிவுகள், பங்கேற்கும் அணிகள் மற்றும் போட்டி குறித்த சமீபத்திய தகவல்களைத் தேடினர்.

    5. இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா (India vs Australia)

    மற்றொரு முக்கிய கிரிக்கெட் போட்டியான, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியும், அதுதொடர்பான முடிவுகளும் கூகுளில் அதிகம் தேடப்பட்டது.

    6. டீப் சீக் (DeepSeek)

    புதிய செயற்கை நுண்ணறிவு தளங்களையும், தேடல் தொழில்நுட்பங்களையும் மக்கள் அதிகம் தேடியதால் டீப் சீக் (DeepSeek) மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே உள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிய மக்கள் தேடினர்.

    7. ஆசியக் கோப்பை (Asia Cup)

    2025-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இணையத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் போட்டி அட்டவணைகள், ஸ்கோர், வீரர்களின் பட்டியல் மற்றும் பல அம்சங்களுக்காகத் தேடினர். இந்தப் போட்டி ஆசியாவின் சிறந்த அணிகளை ஒன்றிணைத்ததுடன், உலகளாவிய கவனத்தையும் ஈர்த்தது.

     

    8. ஈரான் (Iran)

    சர்வதேச அளவில் ஈரானை சுற்றி நிகழும் புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களின் ஆர்வம் காரணமாக, 'ஈரான்' என்ற வார்த்தை அதிகம் தேடப்பட்டதாக உள்ளது. அந்த நாடு தொடர்பான அரசியல், சமூக மற்றும் ராஜதந்திர சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக மக்கள் அந்த நாடு பற்றிய தகவல்களைத் தேடினர்.

    9. ஐபோன் 17 (iPhone 17)

    ஐபோன்களுக்கென உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால்தான் ஐபோன் 17, 2025-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பான சொற்களில் ஒன்றாக மாறியது. ஐபோனை பயன்படுத்துபவர்கள் அது பற்றி கசிந்த தகவல்கள், எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி போன்றவை குறித்துத் தேடினர்.

    10. இந்தியா-பாகிஸ்தான்

    'பாகிஸ்தான் மற்றும் இந்தியா' என்ற சொல், போர் பதற்றம், தூதரக நிகழ்வுகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றால் அதிகம் தேடப்பட்டதாக உள்ளது. இந்த ஆர்வம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று, அரசியல் மற்றும் விளையாட்டுத் தொடர்புகளைப் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமின்றி தெற்காசிய விவகாரங்கள் மீது உலகளவில் உள்ள கவனத்தையும் இது பிரதிபலிக்கிறது.

    • பானு முஷ்டாக் எழுதிய ‘ஹார்ட் லாம்ப்’ என்ற புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றது.
    • கன்னட மொழியில் இருந்து இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன. இதில் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட 'ஹார்ட் லாம்ப்' எனும் நூலும் ஒன்றாகும்.


    கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹார்ட் லாம்ப்' எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றது. கன்னட மொழியில் இருந்து இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

    பானு முஷ்தாக் கன்னடத்தில் ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ் என்ற தலைப்பில் புத்தக தொகுப்பை எழுதி இருந்தார். 1990 முதல் 2012-ம் ஆண்டு இடைவெளியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத் தொகுப்பு தென் இந்தியாவில் இஸ்லாமிய பெண்களின் வாழ்வியல் குறித்து வெளிப்படுத்தியது.

    குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கும் இந்தப் புத்தகம், அதன் நகைச்சுவையான, துடிப்பான பேச்சு வழக்கு, நெகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான கதை சொல்லலுக்காக பாராட்டுகளை பெற்றது.


    கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பானு முஷ்டாக் கன்னட எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். சர்வதேச புக்கர் பரிசு வெல்லும் முதல் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். அவருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் புக்கர் விருதும், 50 ஆயிரம் யூரோ பரிசு பணமும் வழங்கப்பட்டது.

    பானு முஷ்டாக் உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை தொடங்கி வைத்தார் என்பதும், இந்த விவகாரம் சர்ச்சை ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    • இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்ற சாதனையைப் படைத்தது.
    • ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

    2025-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு (ISRO) ஒரு கலவையான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் அவற்றின் முடிவுகள் குறித்த விவரங்கள் இங்கு பார்க்கலாம்..

    LVM3-M6 (BlueBird Block-2) - மிகப்பெரிய வெற்றி:

    டிசம்பர் 24, 2025 அன்று ஏவப்பட்ட இந்த ராக்கெட், அமெரிக்காவின் 6,100 கிலோ எடையுள்ள 'BlueBird Block-2' செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது. 

    இது இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்ற சாதனையைப் படைத்தது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 'பாகுபலி' ராக்கெட்டான LVM3 தனது 100% வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து 9-வது முறையாக நிலைநாட்டியது.

    PSLV-C61 (EOS-09) - தோல்வி:

    மே 18 அன்று ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கில் (Third Stage) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செயற்கைக்கோளைத் திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இது இஸ்ரோவிற்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.

    GSLV-F15 (NVS-02) - சிக்கல்:

    ஜனவரி மாதம் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்றாலும், அதன் திரவ இயந்திரத்தில் (LAM) ஏற்பட்ட வால்வு கோளாறு காரணமாகச் சரியான சுற்றுவட்டப் பாதைக்கு உயரவில்லை. தற்போது இது மாற்று வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    100-வது ராக்கெட் மைல்கல்:

    ஜனவரி 29 அன்று ஏவப்பட்ட GSLV-F15 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. 

    இஸ்ரோவின் (ISRO) வரலாற்றில் ஜிஎஸ்எல்வி-எஃப்15 (GSLV-F15) ராக்கெட் ஏவுதல் ஒரு மிகமுக்கியமான மைல்கல்லாகும். இது 2025-ம் ஆண்டின் முதல் ஏவுதல் மட்டுமல்லாமல், இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற பெருமையையும் பெற்றது.

    GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) - இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் கொண்ட 17-வது ஜிஎஸ்எல்வி பயணமாகும்.இந்த ராக்கெட் NVS-02 என்ற நேவிகேஷன் செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது.

    ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்து, செயற்கைக்கோளைப் புவிவட்டப் பாதையில் (GTO) வெற்றிகரமாக விடுவித்தது. இது புதிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தலைமையிலான முதல் வெற்றிகரமான ஏவுதலாகும்.

    2025-ம் ஆண்டின் தொடக்கம் சில சவால்களுடன் இருந்தாலும், ஆண்டின் இறுதியில் LVM3 ராக்கெட்டின் அடுத்தடுத்த வெற்றிகள் (குறிப்பாக அமெரிக்கச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது) உலக விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கிட்டத்தட்ட 49 வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர்.
    • இந்திய அணிக்காக ஹர்ஷித் ராணா 3 வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

    2025-ம் ஆண்டு பல கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த நாட்டின் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கியது. குறிப்பாக இந்திய கிரிக்கெட்டில் பல இளம் வீரர்கள் அறிமுகமானார்கள். அதில் அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி, சாய் சுதர்சன், ஹர்சித் ரானா, ஆகாஷ் தீப், மற்றும் தமிழ்நாட்டின் நாராயணன் ஜெகதீசன் போன்றோர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்புப் பெற்றனர். இந்திய அணிக்காக ஹர்ஷித் ராணா 3 வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

    இவர்களில் சிலர் அணியில் இடம் பிடித்து சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக, ஐ.சி.சி. விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் கூட சில இளம் வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றன.

    டெஸ்ட் கிரிக்கெட் அறிமுக வீரர்கள் (2025)2025-ம் ஆண்டில் சுமார் 49 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள்.

    பியூ வெப்ஸ்டர் (ஆஸ்திரேலியா) 2025 தொடக்கத்தில் அறிமுகம்

    க்வேனா மபாகா (தென்னாப்பிரிக்கா) 2025 தொடக்கத்தில் அறிமுகம்

    ஃபரீத் அகமது (ஆப்கானிஸ்தான்) 2025 தொடக்கத்தில் அறிமுகம்

    இஸ்மத் ஆலம் (வங்கதேசம்) 2025 தொடக்கத்தில் அறிமுகம்

    ரியாஸ் ஹாசன் (ஆப்கானிஸ்தான்) 2025 தொடக்கத்தில் அறிமுகம்

    கெவ்லான் ஆண்டர்சன் (வெஸ்ட் இண்டீஸ்) ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அறிமுகம்

    ஹாரிஸ் ரவூஃப் (பாகிஸ்தான்) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்

    ஜாஹித் மெஹ்மூத் (பாகிஸ்தான்) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்

    சவுத் ஷகீல் (பாகிஸ்தான்) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்

    முகமது அலி (பாகிஸ்தான்) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்

    ஹர்ஷித் ராணா (இந்தியா) ஆஸ்திரேலியாவில் அறிமுகம்

    சாய் சுதர்சன் (இந்தியா) இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகம்

    அன்ஷுல் காம்போஜ் (இந்தியா) இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகம்

    ஒருநாள் கிரிக்கெட்டில் 9 வீரர்கள் அறிமுகமானார்கள்.

    ஜெய்ஸ்வால் (இந்தியா)

    ஹர்ஷித் ராணா (இந்தியா) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்

    வருண் சக்கரவர்த்தி (இந்தியா) 2025-ல் அறிமுகம்

    நிதிஷ் குமார் ரெட்டி (இந்தியா) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம்

    மேத்யூ ப்ரீட்ஸ்கே (தென்னாப்பிரிக்கா) நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் அடித்து அறிமுகம்

    மேட் ரென்ஷா (ஆஸ்திரேலியா) இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்

    ஓவன் (ஆஸ்திரேலியா) இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்

    டெவால்ட் பிரெவிஸ் (தென்னாப்பிரிக்கா) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம்

    டி20 கிரிக்கெட்டில் 7 வீரர்கள் அறிமுகமானார்கள்.

    ஹர்ஷித் ராணா (இந்தியா) இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம்

    அபிஷேக் சர்மா (இந்தியா) ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகம்

    அமீர் ஜங்கூ (வெஸ்ட் இண்டீஸ்) யூஏஇ சுற்றுப்பயணத்தில் அறிமுகம்

    அக்கீம் அகஸ்டே (வெஸ்ட் இண்டீஸ்) யூஏஇ சுற்றுப்பயணத்தில் அறிமுகம்

    ரமோன் சிம்மண்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) யூஏஇ சுற்றுப்பயணத்தில் அறிமுகம்

    கரிமா கோர் (வெஸ்ட் இண்டீஸ்) யூஏஇ சுற்றுப்பயணத்தில் அறிமுகம்

    வைஷ்ணவி சர்மா இந்தியா (பெண்கள்) இலங்கைக்கு எதிராக அறிமுகம் 

    • சிறந்த கொரிய வெப் தொடர்களின் பட்டியலை உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ளது.
    • 'Way Back Love' 2 வெப் தொடர் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

    2025 ஆம் ஆண்டு கொரிய சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக அமைந்தது. இந்தாண்டு வெளியான சிறந்த கொரிய வெப் தொடர்களின் பட்டியலை உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த தொடர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


    1. When Life Gives You Tangerines (Netflix)

    நெட்ப்ளிக்சில் வெளியான When Life Gives You Tangerines வெப் தொடர் இந்த ஆண்டின் டாப் ஸ்பாட்டை பிடித்தது. 1960களில் இருந்து இன்று வரை நடக்கும் காலகட்டங்களில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

    ஜெஜு தீவில் ஏழ்மையான குழந்தையாக வளரும் Ae-sun-ன் போராட்டங்களையும், அவரது குழந்தைப் பருவ நண்பரும் கணவருமான Gwan-sik உள்ளிட்ட சாதாரண மனிதர்களின் வாழ்வையும் அழகாக நமக்கு கூறியது. இந்த வெப் தொடரின் காதல் காட்சிகள் ரசிகர்களை உருக வைத்தன.

    நமது முந்தைய தலைமுறைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லல் ரசிகர்களை உருக வைத்தது. இதன்மூலம் ஆண்டின் சிறந்த டிவி சீரிஸ் என்ற புகழ் பெற்றது!


    2. Way Back Love (Viki)

    இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தை, Kim Min-ha மற்றும் Gong Myung-ன் உணர்ச்சிகரமான நடிப்பில் வெளியான Way Back Love வெப் தொடர் பிடித்துள்ளது.

    இந்த வெப் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்த முதல் காதலன் Kim Ram-woo-வின் நினைவில் தவிக்கும் Jeong Hee-wan-ன் கதையை விவரிக்கிறது.

    வாழ்க்கை மீதான விருப்பத்தை இழந்த 24 வயதுப் பெண், சமூகத்திலிருந்து விலகி வாழ்கிறாள். அவள் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவளுடைய பால்யவயது நண்பனும் முதல் காதலனுமான ராம் வூ அவளுக்கென்று ஒரு பக்கெட் லிஸ்ட் தயார் செய்து அவளை மகிழ்விப்பதே இந்த வெப் தொடராகும். ரசிகர்களை கண்கலங்க வாய்த்த இந்த வெப் தொடர் மிகப்பெரிய ஹிட் அடித்தது.


    3. Squid Game Season 3 (Netflix)

    இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில உலகப் புகழ் பெற்ற Squid Game-ன் இறுதி சீசன் இடம்பிடித்துள்ளது. ஏழைகளை வைத்து பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டு மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த வெப் தொடர் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. Squid Game-ன் இறுதி சீசன் நவீன முதலாளித்துவத்தின் கொடூரங்களை வெளிப்படுத்தியது.

    பிரமிப்பூட்டும் ஆக்ஷன், சஸ்பென்ஸ், சமூக விமர்சனம் என அனைத்தும் கலந்து, இந்த ஃபிரான்சைஸ்க்கு சிறந்த முடிவை வழங்கியது.


    4. Tempest (Hulu)

    இப்பட்டியலில் நான்காவது இடத்தில், Jun Ji-hyun மற்றும் Gang Dong-won-ன் கெமிஸ்ட்ரி மிளிரும் ஸ்பை த்ரில்லரான Tempest இடம்பிடித்துள்ளது.

    அரசியல் பிரச்சாரம், பன்னாட்டு சதி, ஜியோபாலிடிகல் டென்ஷன்கள் என கலந்த இந்தத் தொடர், முதிர்ச்சியான காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளது.

    இப்படத்தின் ரொமான்ஸும்கெமிஸ்ட்ரியும் சிகர்களை கட்டிப்போட்டது. நவீன உலக பிரச்சினைகளை தைரியமாக தோட்ட இந்த வண தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    5. Our Unwritten Seoul (Netflix)

    இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் Park Bo-young இரட்டை வேடங்களில் நடித்த Our Unwritten Seoul வெப் தொடர் இடம் பிடித்துள்ளது.

    ஒரே தோற்றம் கொண்ட இரட்டை சகோதரிகள் தங்களது வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த வெப் தொடரின் கதை. இந்த தொடரின் கதை ரசிகர்களை நெகிழ வைத்தது.

    முடிவுரை:

    இந்த டாப் 5 தொடர்கள், 2025-ஐ K-டிராமாவின் தங்க ஆண்டாக மாற்றின. உணர்ச்சி, ஆக்ஷன், ரொமான்ஸ் என வெரைட்டி நிறைந்தவை. TIME-ன் பட்டியல் சொல்வது போல, இவை உலக சினிமாவின் சிறந்த உதாரணங்கள் ஆகும்.

    • உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர்.
    • பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.

    செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

    இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமான ஒரு ஏஐ தொழில்நுட்ப உலகையே ஆட்டம் காண வைத்தது.

    2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).

    இந்த நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில், டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க நிறுவனங்களை விட பன்மடங்கு குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டது.

    டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும்.

    சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.

    மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும்.

    ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

    மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

    எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுங்கின. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த டீப்சீக் மற்ற ஏஐ செயலிகளை விட உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.

    அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசும் அளவுக்கு டீப்சீக் அசுர வளர்ச்சி கண்டது.

    ஜனவரி இறுதியில், அதாவது சரியாக ஜனவரி 27(திங்கள்கிழமை), அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பூகம்பத்தை சந்தித்தன.

    டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது.

    என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டது.

    ஜனவரி இறுதியில் பங்குச்சந்தையை அதிரவைத்த டீப்சீக், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில சவால்களைச் சந்தித்தது.

    ஜனவரி 27-ல் புகழ் உச்சத்தில் இருந்தபோது, டீப்சீக் தளம் கடுமையான 'DDoS' சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

    இதனால் புதிய பயனர்கள் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சில நாட்களிலேயே மீண்டும் வலுவாகச் செயல்பாட்டுக்கு வந்தது.

    அதிபர் டிரம்ப் நிர்வாகம் டீப்சீக் வளர்ச்சியை 'தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்' என்று கருதியது. இதனால், அமெரிக்க அரசு நிறுவனங்களில் டீப்சீக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

    மேலும், டீப்சீக் போன்ற சீன நிறுவனங்கள் அதிநவீன 'என்விடியா' சிப்களைப் பெறுவதைத் தடுக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

    இதற்கிடையே கூகுள் தனது Gemini 3 மாடலையும், OpenAI தனது GPT-5.2 மாடலையும் வெளியிட்டன. இவை சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பது (Reasoning) மற்றும் கோடிங் செய்வதில் புதிய உச்சத்தை எட்டின.

    அதேநேரம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் டீப்சீக் தனது அடுத்தடுத்த பதிப்புகளை (V3 சீரிஸ்) வெளியிட்டது. இவை முந்தைய மாடல்களை விட வேகமாகவும், துல்லியமாகவும் இருந்தன.

    குறிப்பாக, இது கணிதம் மற்றும் கோடிங் -இல் கூகுளின் ஜெமினி 3 மற்றும் ஓபன் ஏஐ-யின் புதிய மாடல்களுக்கு நிகராகப் போட்டியிட்டது.

    ஆண்டின் இறுதியில், பயனர்களுக்காக வெறும் பதில்களை மட்டும் தராமல், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது, காலண்டரில் வேலைகளைக் குறிப்பது போன்ற பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.

    டீப்சீக் வெறும் ஒரு செயலியாக மட்டும் இல்லாமல், ஏஐ உலகில் நிலவி வந்த அமெரிக்க ஏகபோகத்தை உடைத்தெறிந்த ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. 100 மில்லியன் டாலர்கள் செலவழித்தால்தான் சிறந்த ஏஐ-யை உருவாக்க முடியும் என்ற பிம்பத்தை வெறும் 6 மில்லியன் டாலரில் டீப்சீக் உடைத்துக் காட்டியது.

    டீப்சீக் வருகையால் தங்கள் பிரீமியம் தன்மைகளை மற்ற ஏஐ நிறுவனங்கள் குறைத்து வெகு மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஏஐ தொழில்நுட்பம் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல, அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய ஒன்று என்பதை டீப்சீக் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

    2025-ம் ஆண்டு என்பது ஏஐ-யின் வளர்ச்சி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும்போது அதில் 'டீப்சீக்' என்ற பெயர் புரட்சியின் வடிவமாக நிச்சயம் பதிவாகும். 

    • டிச.8-ந்தேதி 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டது.
    • ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தமிழக காவல்துறை திடீரென கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தது.

    ஜாக்டோ ஜியோ (JACTO-GEO) என்பது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதங்கள், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனப் பல வடிவங்களில் நடத்தப்பட்டுள்ளன.

    முக்கியக் கோரிக்கைகள் (10 அம்சக் கோரிக்கைகள்):

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) ரத்து செய்ய வேண்டும்.

    பணியிடங்களை நிரப்ப வேண்டும் (Vacancies).

    ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    விடுப்பு ரொக்கமாக்கும் வசதியைத் திரும்பப் பெற வேண்டும் (Leave Encashment).

    ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் (Pay Discrepancies).

    சென்னை டி.பி.ஐ வளாகத்தில் டிச.8-ந்தேதி 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டது.

    சுமார் 10,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

    தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் கூடி, அங்கிருந்து பேரணியாகச் சென்று DPI வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை நடத்த ஆயத்தமானார்கள்.

    தலைநகர் சென்னைக்கு இன்று புறப்படத் தயாரான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தமிழக காவல்துறை திடீரென கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தது.

     

     

    இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 22-ந்தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் திட்டமிட்டபடி ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாஸ்கரன் கூறுகையில், பேச்சுவார்த்தை ஒரு விளையாட்டு போல அமைந்தது. கடந்த 4 பேச்சுவார்த்தைகளில் கூறியதையே அமைச்சர்கள் மீண்டும் கூறினர். அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்துள்ளது. டிச.27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆயத்த மாநாடு நடைபெறும். வரும் ஜன.6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    • சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள்.

    வீடு சுத்தமாக இருந்தால் தெரு நன்றாக இருக்கும். தெரு சுத்தமாக இருந்தால் நகரம் நன்றாக இருக்கும். நகரம் நன்றாக இருந்தால் மாவட்டம் நன்றாக இருக்கும். மாவட்டம் நன்றாக இருந்தால் மாநிலம் நன்றாக இருக்கும். மாநிலம் நன்றாக இருந்தால் நாடே நன்றாக இருக்கும் என்பார்கள்... இதற்கு பொருள்...

    வீடு சுத்தமாக இருப்பது என்பது தனிமனிதனின் ஒழுக்கத்தையும், பொறுப்புணர்வையும் குறிக்கிறது, இது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. வீடுகளின் தூய்மை தெருக்களின் தூய்மையைத் தீர்மானிக்கிறது. இது குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பை உணர்த்துகிறது.

    சுத்தமான தெருக்கள், சுத்தமான நகரங்களுக்கு வழிவகுக்கும். இது நகர்ப்புற மேம்பாடு, சுற்றுலா, மற்றும் பொது சுகாதாரத்திற்கு உதவுகிறது. மாவட்டங்கள் சீராக இருந்தால் மாநிலங்கள் வலுப்பெறும்; மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதாகும்.

    இதற்கெல்லாம் முழு முதற்காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள். இவர்கள் குறித்து நாம் எப்போது பேசுகிறோம்... வெள்ளம் வந்தால் தெருக்களை சுத்தம் செய்ய இரவு, பகல் பாராமல் பணியாற்றும் போது. பிறகு போராட்டம் என்ற பெயரில் சாலைகளில் போட்டு செல்லும் குப்பைகளை சுத்தம் செய்யும் போது. பிறகு குப்பைகளில் தவறவிட்ட நகைகளை மீட்டு தரும் போது அவர்களை பாராட்டுகிறோம். அவ்வளவுதான்..

    நம் வீட்டில் சேரும் மீதமான உணவு, குப்பைகளின் நாற்றத்தை கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் குப்பை வண்டிகள் செல்லும் போது ஏற்படும் துர்நாற்றத்தை கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. இப்படியிருக்க.. இதை எதை பற்றியும் கவலைப்படாமல் தெரு, சாலைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களை தெய்வத்திற்கு நிகர் என்றால் மிகையல்ல...

     

    இப்படியான தூய்மை பணியாளர்கள் 120 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்து யாரும் கவலைப்படவும் இல்லை. சிந்திக்கவும் இல்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியவர்கள்

    1 குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    2 பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    3 மாநகராட்சிகளில் நேரடியாகப் பணியாற்றுபவர்களுக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாட்டைக் களைய வேண்டும்.

    4 தரமான கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும்.

    5 என்.எம்.ஆர் (NMR) முறையில் பணியாற்றியவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    என்பன முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு தொடங்கிய போராட்டமானது உண்ணாவிரதம், காலவரையற்ற போராட்டம், கடலில் இறங்கி போராட்டம் என பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது.

     

    இதனிடையே தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனையும் செய்தது. அதில், ஊதிய உயர்வு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு உள்ளிட்ட சில புதிய திட்டங்களை அறிவித்தது, ஆனால் போராட்டக்காரர்கள் இவை போதுமானதல்ல எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை, கோவை, மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு வருடமும் தீர்க்கப்படாத பிரச்சனையா தொடர்ந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • சுரேகா இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே முதல் பெண் ரெயில் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றார்.
    • கடந்த 36 ஆண்டாக ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்தவர் சுரேகா யாதவ். விவசாய குடும்பத்தில் பிறந்த சுரேகா யாதவ் 1989-ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். இதன்மூலம் இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

    இதையடுத்து, 1996-ம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநராக சுரேகா பணியாற்றினார். அதன்பின், 2000-ம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில் ஓட்டுநராக அவர் பணியாற்றி வந்தார்.


    கடந்த 36 ஆண்டாக ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். பணியின் இறுதியாக மகாராஷ்டிராவின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியின் ஹஜ்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையம் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் இயக்கினார். அப்போது அவருக்கு ரெயில்வே சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியில் சேர்ந்தபின் ரெயில்வேயில் 2,000-க்கும் அதிகமான பெண் ரெயில் ஓட்டுநர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுரேகாவின் பணி பிற பெண்களும் ரெயில்வேயில் ஓட்டுநராக சேர உந்து சக்தியாக திகழ்ந்தது.


    இவரது பணிகளில் சில மைல் கற்கள்:

    இந்திய ரெயில்வேயில் முதல் பெண் என்ஜின் டிரைவர்.

    1989-ம் ஆண்டு உதவி என்ஜின் டிரைவராக பணி.

    ஆசிய அளவிலும் முதல் பெண் என்ஜின் டிரைவர் என்ற பெருமை.

    1996-ல் சரக்கு ரெயில் என்ஜின் டிரைவராக பதவி உயர்வு

    அதன்பின், மலைப்பகுதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதில் கைதேர்ந்தார்.

    2000-ல் ரெயில்வே மந்திரியாக இருந்த மம்தா பானர்ஜி மகளிர் சிறப்பு மின்சார ரெயிலை அறிமுகப்படுத்தினார். அந்த ரெயிலை ஓட்டிய முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றார்.

    2023, மார்ச் 13-ல் சோலாப்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. இடையிலான முதல் வந்தே பாரத் ரெயிலை இயக்கினார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்களில் சுரேகா யாதவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயந்திரங்கள் உங்கள் பாலினங்களைப் பார்ப்பதில்லை, பலத்தை மட்டுமே பார்க்கிறது என கூறும் சுரேகா யாதவ்,

    என்னால் முடியும் என்பதால், எல்லா பெண்களாலும் முடியும் என அனைத்துப் பெண்களுக்கும் தன்னம்பிக்கையாகத் திகழ்கிறார்.

    • ஆஷஸ் தொடரில் 2 கேட்ச்சுகள் சர்ச்சையானது.
    • இந்திய வீரர் அபிஷேக் சர்மா கேட்ச் அவுட் ஆனது சர்ச்சையானது.

    2025-ல் கிரிக்கெட்டில் நடந்த சர்ச்சையான கேட்ச்களில் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம். அதில் முக்கியமாக இந்தியா A மற்றும் பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணிக்கு இடையேயான 2025 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் போட்டியில் நடந்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் மாஸ் சதகத் அடித்த பந்தை பவுண்டரி லைன் அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த நேஹல் வதேரா மற்றும் நமன் திர் ஆகியோர் இணைந்து ஒரு அற்புதமான ரிலே கேட்சைப் பிடித்தனர். ஆனால், மூன்றாவது நடுவர் ரீப்ளேக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, இறுதியில் 'நாட் அவுட்' என்று அறிவித்தது, இந்திய வீரர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.


    மூன்றாவது நடுவர் அந்தப் பந்துக்கு சிக்ஸர் வழங்கவும் இல்லை. மாறாக, அதை ஒரு 'டாட் பால்' என்று அறிவித்து, ஸ்கோர் கார்டில் பதிவு செய்தார். இந்த கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான்-இன் சர்ச்சைக்குரிய அவுட், பூதாகரமாகியது.

    போட்டியின் மூன்றாவது ஓவரில் இந்த விவாதம் வெடித்தது. ஹர்திக் பாண்ட்யா பந்து வீசிய அந்த ஓவரில், ஃபக்கர் ஜமான் பந்தை அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் ஆகி சென்றது. அதை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 'கேட்ச்' பிடித்தார். பந்து தரையில் பட்டதா இல்லையா என்ற சந்தேகத்தில், கள நடுவர்கள் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினர்.

    நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), தொலைக்காட்சி நடுவர் தவறான தீர்ப்பை வழங்கியதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளது.

    ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் கேட்ச் சர்ச்சையானது. ஸ்னிக்கோ (Snicko) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் பந்து பேட்டில் படாமலேயே 'ஸ்னிக்கோ'வில் சிக்னல் கிடைத்தது. இதனால் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார், இது தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை எழுப்பியது.


    இதே தொடரின் போது ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, 72 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோஷ் டங்லேவின் பந்தில் பேட்டின் விளிம்பிள் பட்டதாக இங்கிலாந்து முறையிட்டது. ஆனால் தொலைக்காட்சி நடுவர், ஸ்னிக்கோ பதிவின்படி, பந்து பேட்டிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டி, 'நாட்-அவுட்' என கூறினார். கேரி, "சிறிய இறகு போன்ற விளிம்பு" பட்டதை உணர்ந்ததாகப் பின்னர் ஒப்புக்கொண்டார். இது பெரும் சர்ச்சையானது.


    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2025 5-வது டி20: அபிஷேக் ஷர்மா டிஸ்மிஸல் (அல்ட்ரா எட்ஜ் சர்ச்சை) அகமதாபாத்தில் நடந்த போட்டியில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (34 ரன்கள்) கார்பின் போஷ் பந்தில் கேட்ச் பிடிக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. பவுலர் பெரிய அளவில் அப்பீல் செய்யாத நிலையில் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் அப்பீல் செய்தார்.

    இதற்கு நடுவர் அவுட் கொடுத்தார். உடனே அபிஷேக் சர்மா ரீவ்யூ எடுத்தார். முடிவில் அல்ட்ரா எட்ஜ் ஒரு சிறிய ஸ்பைக்கைக் காட்டியது. ஸ்னிகோ போன்ற தொழில்நுட்பங்களின் ஸ்பைக்குகள் தவறானவை என்று பலர் விமர்சித்தனர். இது அதிர்ஷ்டமற்ற டிஸ்மிஸல் என்று கருதப்பட்டது.

    ×