என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    • நிதிஷ்குமார் 2000-ல் பீகார் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
    • அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது.

    பாட்னா:

    பீகார் என்றாலே நிதிஷ்குமார், நிதிஷ்குமார் என்றாலே பீகார் என அழைக்கும் அளவுக்கு தனது பதவியை தக்க வைத்துள்ளதுடன், மக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்த தலைவராக திகழ்கிறார்.

    நிதிஷ்குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதல் மந்திரியாக இருந்துவிட்டார். இந்த ஆண்டு 10-வது முறை பதவி ஏற்றுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பதுதான்.

    இந்த ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது பீகார் சட்டசபைத் தேர்தல்.


    பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.யின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன.

    இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பீகாரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த சட்டசபைத் தேர்தலில் பீகாரில் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது.

    சட்டசபை உறுப்பினராக இல்லாமல் இரு தசாப்தங்களாக முதல் மந்திரியாக இருக்கும் இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் நிதிஷ்குமார் மட்டுமே.

    நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை 1977-ம் ஆண்டு முதன் முதலில் ஜனதா கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு தோல்வி கிடைத்தது. அடுத்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.

    1985-ம் ஆண்டில் ஹர்ணாத் தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றி வாகை சூடினார்.

    5 முறை மக்களவை பதவி, 10 முறை முதல் மந்திரி பதவி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி என பீகார் தன் கைக்குள் இருப்பதை உறுதி செய்தவர்.

    நிதிஷ்குமார் 2000-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக முதல் முறை பதவியேற்றார். அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது. அதன்பின், 2005-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 10 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்துள்ளார்.

    இத்தனை ஆண்டு காலம் பீகார் மாநில முதல் மந்திரியாக தனது அரியணையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்கவைத்துள்ளார் என்பதே இவரது சாமர்த்தியம். வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய மந்திரி பதவி வகித்தவர்.


    இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த நிதிஷ்குமார் மீது அம்மாநில மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணமும் குறையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

    • மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
    • இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.

    இதனையடுத்து மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடியின் திருமணம் மகராஷ்டிராவில் உள்ள அவரது சொந்த ஊரான சாங்லியில் (23-ந்தேதி) நடைபெற இருந்தது. இரு வீட்டாரின் சம்மதத்தோடும் இவர்களது திருமணம் நடைபெற இருந்தது. அதில் பல இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


    இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சலின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினர். மந்தனாவின் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு தந்தையின் உடல்நலக்குறைவு காரணம் இல்லை என்றும் வேறு காரணம் எனவும் கூறப்பட்டது. அதாவது பலாஷ் முச்சல் வேறு சில பெண்களுடன் பேசிய ஆடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகின. இதன் காரணமாக திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு இது தொடர்பாக இருவரும் ஏதும் பேசவில்லை.


    சில நாட்களில் பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    அதில், இந்த விவகாரம் இத்துடன் முடிவடைய விரும்புகிறேன். இதை மேலும் எடுத்துச் செல்ல வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு எங்கள் வழியில் முன் நகர்ந்து செல்ல அவகாசம் கொடுங்கள் என்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து பலாஷ் முச்சல் கூறியதாவது:-

    வாழ்க்கையில் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து தனிப்பட்ட உறவுகளிலிருந்து விலக நிற்க முடிவு செய்துள்ளேன். எனக்கு மிகவும் புனிதமாக இருந்த ஒன்றைப் பற்றி பரவும் ஆதாரமற்ற வதந்திகள் மீது மக்கள் எளிதாக கருத்து தெரிவிப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இது எனது வாழ்க்கையின் கடினமான காலகட்டம். எனது நம்பிக்கைகளின் மீது உறுதியாக நின்று அதனை கையாள்வேன். உறுதிசெய்யப்படாத வதந்திகளை அடிப்படையாக வைத்து ஒருவரை மதிப்பிடுவதற்கு முன்பு ஒரு சமூகமாக நாம் நிறுத்தி, யோசிப்போம் என நம்புகிறேன் என கூறினார்.

    உண்மையில் பலாஷ் தனது காதலி மந்தனாவை ஏமாற்றியதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக சில பதிவுகள் கூறுகிறது. மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவியது. அவர்கள் எப்போது இது போன்ற சாட்டிங்கில் ஈடுபட்டனர் என்ற தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த சாட்டிங் விபரம் வெளியில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

    • தகுதியான பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
    • சாதாரண ஆட்டோக்களின் கட்டணமே வசூலிக்கப்படும்.

    "பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக்கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு "இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்" வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இது சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதோடு, பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம், பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் பெண் பயணிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன.

    திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

    நோக்கம்: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துதல். இந்த ஆட்டோக்கள் GPS உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

     

    மானியம்: தகுதியான பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 100 ஆட்டோக்கள் தொடங்கப்பட்டன, பின்னர் 250 வரை விரிவாக்கம்.

    தொடக்கம்: 2025 மார்ச் 8ஆம் தேதி (சர்வதேச மகளிர் தினம்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

    விதிமுறைகள்: இந்த ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும். ஆண்கள் இயக்கினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

    கட்டணம்: சாதாரண ஆட்டோக்களின் கட்டணமே வசூலிக்கப்படும்.

    விண்ணப்பம்: சென்னையில் வசிக்கும் தகுதியான பெண் ஓட்டுநர்கள் (ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள்) மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மூன்றாம் கட்ட விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    பயன்கள்: பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து. பெண் ஓட்டுநர்களுக்கு சுயமரியாதை மற்றும் பொருளாதார சுதந்திரம்.

    இந்த திட்டம், சென்னையின் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும். 

    • செஃப்-நடிகர் ரங்கராஜ், தனது சமையல் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்
    • ரங்கராஜின் வாழ்க்கை ஒரு பெரிய சினிமா ஸ்கிரிப்ட் போல ட்விஸ்ட் நிறைந்த சர்ச்சையாக மாறியது.

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சர்ச்சைகளின் ஆண்டாக அமைந்தது என்றால், அதில் முதல் இடம் பிடிப்பது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இடையேயான விவகாரம் தான்!

    'குக் வித் கோமாளி' ஷோவால் பிரபலமான செஃப்-நடிகர் ரங்கராஜ், தனது சமையல் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால், இந்த முறை அவரது தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பெரிய சினிமா ஸ்கிரிப்ட் போல ட்விஸ்ட் நிறைந்த சர்ச்சையாக மாறியது.

    காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்பட்ட உறவு, அதனால் ஜாய் கிரிசில்டா கர்ப்பமானது, பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் இந்தாண்டின் பரபரப்பான விஷயமாக இருந்தது.

    இதோ இந்த விவகாரத்தின் சுவாரசியமான பின்னணியை இந்த கட்டுரையில் பார்ப்போம்...

    மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் டிவி உலகில் 'குக் வித் கோமாளி' மூலம் ஸ்டார் ஆனவர். அவரது ஜாலியான பேச்சு, சமையல் டிப்ஸ் மற்றும் காமெடி டைமிங் ரசிகர்களை கவர்ந்தது. முன்னதக சில படங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி தான் அவருக்கு தமிழகம் முழுவதும் பெரும் புகழும் பெற்று தந்தது.

    ஸ்ருதி என்பவரை ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ்க்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ரங்கராஜன் வாழ்க்கையில் ஜாய் கிரிசில்டா எனும் புயல் வீசியதால் அவரது பெயர் பெரிய அளவில் டேமேஜ் ஆனது.

    ஜாய் கிரிசில்டா, தமிழ் சினிமாவில் பல படங்களில் காஸ்ட்யூம்களை டிசைன் செய்தவர். அவர் விஜய், அஜித் போன்ற டாப் ஸ்டார்களின் படங்களில் வேலை செய்திருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை -யாருக்கும் தெரியாத வகையிலேயே இருந்தது. ஆனால், ரங்கராஜுடனான உறவு இவர்களை ஸ்பாட்லைட்டுக்கு கொண்டு வந்தது.

    ஆகஸ்ட் 29, 2025 - இந்த தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாது. ஜாய் கிரிசில்டா, தனது தாயுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று ரங்கராஜ் மீது புகார் அளித்தார். ரங்கராஜுடன் உறவு ஏற்பட்டு, அதன் விளைவாக தான் கர்ப்பமான பிறகு அவர் தன்னை ஏமாற்றினார் என்று அந்த புகாரில் தெரிவித்தார். என்று ஜாய் கூறியது சோஷியல் மீடியாவை அதிர வைத்தது.

    போலீஸ் புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை தொடங்கியது, ஆனால் தற்போது வரை இது வெறும் அலிகேஷன்கள் மட்டுமே இன்னும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்த புகார் தமிழ் சினிமாவில் பெரிய அலையை ஏற்படுத்தியது.

    ஜாய் கிரிசில்டா புகாரால் ரங்கராஜன் இமேஜை டேமேஜ் ஆனது. ரங்கராஜின் படங்கள், ஷோக்கள் எல்லாம் ட்ரோல் ஆகத் தொடங்கின!

    ஜாய் கொடுத்த புகார் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையதுதான் என்று ஜாய் கிரிசில்டா அழுத்தம் திருத்தமாக கூற, இதனை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது வரை டி.என்.ஏ. பரிசோதனைக்கு ரங்கராஜ் வரவில்லை என்று ஜாய் தொடர்ச்சியாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனிடையே ஜாய் புகார் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எங்களுடைய திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது. கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்" என்று பரபரப்பு குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து ஜாய் புகார் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் மனைவியும் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம். இந்த செயல்கள் அனைத்தும் பணத்திற்காகவும் எங்கள் குடும்பத்தின் அமைதியை கெடுக்கும் நோக்கில் உள்ளன. நான் என் கணவருடன் உறுதியாக நின்று கடைசி வரை அவரைப் பாதுகாப்பேன்" என்று தெரிவித்திருந்தார். ரங்கராஜின் மனைவி ஸ்ருதி அவருடன் உறுதியாக உள்ளார் என்று அவரது அறிக்கை நமக்கு கூறியது.

    க்ளைமேக்ஸ்: என்ன நடக்கும்?

    2025 இறுதியில் இந்த விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை. ரங்கராஜ் தனது இமேஜை ரீபில்ட் செய்ய புதிய ஷோக்களில் கம்பேக் கொடுப்பாரா? ஜாய் சினிமாவில் திரும்புவாரா? தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு ரியல்-லைஃப் சீரியல்! ஒன்று மட்டும் உறுதி – இது போன்ற சர்ச்சைகள் தான் கோலிவுட்டை எப்போதும் ஹாட் டாபிக் ஆக்குகின்றன. அடுத்த அப்டேட் வரை, ஸ்டே ட்யூன்ட்!

    • வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த 19-ந்தேதி வெளியிட்டார்.
    • வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்கிற எஸ்ஐஆர் பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது.

    இந்த பணி, கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதியன்று இருந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

    அந்த பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி அதனை பூர்த்தி செய்து பெற்று வந்தனர்.

     

    இந்த படிவங்களில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இடம்பெற்று இருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.

    இந்த விவரங்கள் இல்லாதவர்கள், தங்களது பெற்றோரின் விவரங்களையும், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த அடிப்படையில், கடந்த 14-ந் தேதி வரை வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த படிவத்தை, பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்ததால் அனைவரும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    இந்த படிவத்தை பெற்று கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தின் செயலியில் அதனை பதிவேற்றம் செய்தனர்.

    படிவம் கொடுத்த வாக்காளர்கள் விவரம் மட்டுமின்றி, அந்த தொகுதியில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் போன்ற விவரங்களையும் பதிவு செய்தனர். மேலும் இரட்டை பதிவு பெயர்களும் நீக்கப்பட்டன.

    இதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழகத்திற்கான மொத்த வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த 19-ந்தேதி வெளியிட்டார்.

    இந்த வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர். அதாவது, கடந்த அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்தால் சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இது 15.18 சதவீதம் ஆகும்.

     

    இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில்,

    வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 6 ஆயிரத்து 332 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 191 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்த வரைவு பட்டியலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மட்டும் 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 பேரும் இருக்கிறார்கள்.

    இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றவர்கள் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் ஆகும். இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரியில் வசிக்காதவர்கள் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 ஆகும். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 ஆகும். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரிலும், அதற்கு அடுத்ததாக பல்லாவரம் தொகுதியிலும் அதிகம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியல், https://www.elections.tn.gov.in / Electoral-Services.aspx மற்றும் அரசின் மாவட்ட இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில், வாக்காளர்கள் தங்களது பெயர் இருக்கிறதா? என சரிபார்த்து கொள்ளலாம்.

    அதுமட்டுன்றி இறப்பு, இடமாற்றம் மற்றும் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்களின் விவரங்களையும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள், பட்டியலில் புதிதாக சேர படிவம்-6 கொடுக்க வேண்டும். அதனை ஆன்லைன் அல்லது வாக்குச்சாவடி அலுவலர்கள் அல்லது வாக்குசாவடி மையங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கொடுக்கலாம். இதற்கு அடுத்த மாதம் 18-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

     

    இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் தான் உள்ளனர்.

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் 5.50 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

    அதன்படி பார்த்தால், வாக்காளர் எண்ணிக்கையில் தமிழகம் இப்போது 14 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் (27, 28) வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்நது. இதையடுத்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

     

    இதற்கிடையில் வாக்காளர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கொடுக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கும் பணியினையும் தொடங்கி இருக்கிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். இந்திய தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக் கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வார்கள்.

    இதற்கிடையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மற்றும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து வழங்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளாக 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது. இவர்கள் அந்த பணியினை முழு வீச்சில் இறங்கி செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இறுதி வாக்காளர் பட்டியலானது பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் கிங் மேக்கர் என ஜொலித்தவர் பிரசாந்த் கிஷோர்.
    • பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் பல்வேறு மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக நிபுணராக பணி செய்து ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தார்.

    ஒரு கட்சிக்கு தேர்தலில் பிரசாரம் முதல் அனைத்தையும் வடிவமைத்துக் கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ளன. சமீப காலமாக இந்தியாவிலும் இந்த முறை இருந்துவருகிறது.

    2012-ம் ஆண்டில் குஜராத் சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடிக்காக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து பிரபலம் அடைந்தார்.

    தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் 'கிங் மேக்கர்' என ஜொலித்த பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார்.


    2012-ம் ஆண்டு - குஜராத் தேர்தல் - நரேந்திர மோடி

    2015-ம் ஆண்டு - பீகார் தேர்தல் - நிதிஷ் குமார்

    2017-ம் ஆண்டு - பஞ்சாப் தேர்தல் - கேப்டன் அமரிந்தர் சிங்

    2019-ம் ஆண்டு - ஆந்திரா தேர்தல் - ஜெகன்மோகன் ரெட்டி

    2020-ம் ஆண்டு - டெல்லி தேர்தல் - அரவிந்த் கெஜ்ரிவால்

    2021-ம் ஆண்டு - மேற்கு வங்கம் - மம்தா பானர்ஜி

    2021-ம் ஆண்டு - தமிழ்நாடு தேர்தல் - முக ஸ்டாலின்

    இதுபோன்று தனது உழைப்பால் 10 முதல் மந்திரிகளை உருவாக்கி இருந்தார்.

    இதற்கிடையே, தேர்தல் வியூகம் வகுப்பதில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர், 2022-ம் ஆண்டில் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சி தொடங்கினார். பீகார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கப் போவதாக அறிவித்தார்.

    தனது கட்சியை வளர்ப்பதற்காக பீகாரின் 38 மாவட்டங்களிலும் சுமார் 5,000 கிலோமீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு, பல்லாயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நடத்தினார். தரை வழியாகவே பட்டித்தொட்டி எங்கும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டார்.

    மென்பொறியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என நிபுணத்துவம் பெற்ற 1,300 பேர் கொண்ட குழு அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட ஒருங்கிணைத்தார்.

    சென்ற இடமெல்லாம் மக்கள் ஆதரவு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த பிரசாந்த் கிஷோர், பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால், அவர் மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை.

    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். ஜன் சுராஜ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லக்கூடும் என தகவல் வெளியானது.


    இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடத்துக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக தடாலடி அறிவிப்பு வெளியிட்டார்.

    ஆனால், பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பிரசாந்த் கிஷோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி போட்டியிட்ட 238-ல் 233 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

    பிரசாந்த் கிஷோர் வசிக்கும் கர்கஹர் சட்டசபைத் தொகுதியில் கூட அவரது கட்சி படுதோல்வி அடைந்தது.

    அடிப்படை கள அரசியலுக்கும், வியூக அரசியலுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பதையே பீகார் தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது.

    ஒரு தேர்தல் வியூக வகுப்பாளரே சொந்த மாநில தேர்தலில் சறுக்கி இருப்பதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

    • பல OTT பிளாட்ஃபார்ம்கள் பல்வேறு வகையான வெப் தொடர்களை வழங்கி, ரசிகர்களை கட்டிப்போட்டன.
    • பல ஜானர்களில் வெளியான வெப் தொடர்கள் சுவாரசியமான கதைகளால் பிரபலமடைந்தன.

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது. அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா, சோனி லிவ் போன்ற பிளாட்ஃபார்ம்கள் பல்வேறு வகையான வெப் தொடர்களை வழங்கி, ரசிகர்களை கட்டிப்போட்டன.

    கிரைம் திரில்லர், ரொமான்டிக் டிராமா, காமெடி, ஸ்போர்ட்ஸ் என பல ஜானர்களில் வெளியான தொடர்கள், சிறந்த நடிப்பு மற்றும் சுவாரசியமான கதைகளால் பிரபலமடைந்தன.

    இந்த ரீவைண்டில், 2025இன் டாப் 10 தமிழ் ஓடிடி வெப் தொடர்களைப் பார்ப்போம். இவை ரசிகர்களின் பாராட்டுகளையும், விமர்சகர்களின் புகழையும் பெற்றவை.

    இந்த லிஸ்டில் சூழல் 2, ஆபிஸ், ஓம் காளி ஜெய் காளி, மதுரை பையனும் சென்னை பொண்ணும், ஹார்ட் பீட், நடு சென்டர், வேடுவன், குற்றம் புரிந்தவன், போலீஸ் போலீஸ், குட் வைஃப் ஆகியவை அடங்கும்.

    இவை அனைத்தும் உணர்ச்சி, சஸ்பென்ஸ், ஹ்யூமர் கலந்து ரசிகர்களை ஈர்த்தன. வாருங்கள், ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்!


    1. சூழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 2:

    2022 ஆம் ஆண்டு வெளியான சூழல் வெப் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

    அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த தொடர், மர்மமான ஊரில் நிகழும் கிரைம், உணர்ச்சி மோதல்களை விவரிக்கிறது. இப்படத்தின் கதை, ரகசியங்கள், சஸ்பென்ஸ் கலந்து ரசிகர்களை பதட்டத்தில் ஆழ்த்தியது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர். பார்த்திபன் போன்றோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த தொடர் ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்தது.


    2. ஓம் காளி ஜெய் காளி:

    விமல், புகழ், கஞ்சா கருப்பு, பவானி ரெட்டி நடிப்பில், ஜெகநாத் இயக்கத்தில் ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் வெளியானது.

    ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28ஆம் தேதி வெளியான இந்த தொடர், ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    3. ஆபிஸ்:

    ஹாட்ஸ்டாரின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடராக ஆபிஸ் வெளியானது. குரு லக்ஷ்மன், கவிதா பாரதி, ஷிவா அரவிந்த் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த தொடரில் நடித்துள்ளனர். பிராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


    4. மதுரை பையனும் சென்னை பொண்ணும்:

    ஆஹாவில் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இந்த தொடர், வேறுபட்ட உலகங்களில் இருந்து வரும் இருவரின் லவ் ஸ்டோரியை ஹார்ட்வார்மிங்காக சொல்கிறது.

    கன்னா ரவி, ஏஞ்சலின், குரேஷி நடிப்பில், விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெளியான இத்தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.


    5. ஹார்ட் பீட் சீசன் 2:

    ஜியோ ஹாட்ஸ்டாரில் மே 22ஆம் தேதி ஹார்ட் பீட் சீசன் 2 வெளியானது. தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், அமித் பார்கவ், யோகலக்ஷ்மி நடிப்பில், தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அப்துல் கபீஸ் உருவாக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.


    6. நடு சென்டர்:

    ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த தொடர், ஸ்கூல் பாஸ்கெட்பால் டீம் உருவாக்கும் போராட்டத்தை சித்தரிக்கிறது. டீன் ஏஜ் பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும் கதைக்களம் ஓடிடியில் சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.


    7. வேடுவன்:

    வேடுவன் வெப் தொடர் ஜீ5இல் வெளியானது. கண்ணா ரவி, ஜீவா ரவி, ரேகா நாயர் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் வெப் தொடர் வெளியானது. கிரைம், சைக்காலஜிக்கல் தொடராக வெளியான வேடுவன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


    8. குற்றம் புரிந்தவன்:

    சோனி லிவ்வில் வெளியான குற்றம் புரிந்தவன் தொடர், சிறு ஊரில் சிறுமி காணாமல் போன பின்பு நடக்கும் ரகசியங்களை அவிழ்க்கும் கதையாகும். பசுபதி, விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டென்ஸ் நாரேடிவ், ட்விஸ்ட்கள், சஸ்பென்ஸ்ஃபுல், சைக்காலஜிக்கல் என கிரைம் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த தொடர் அமைந்தது.


    9. போலீஸ் போலீஸ்:

    ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான போலீஸ் போலீஸ் வெப் தொடர், போலீஸ் அதிகாரிகளின் வாழ்க்கை , கிரைம், கரப்ஷன். இன்வெஸ்டிகேஷன், ஹை-ஸ்டேக்ஸ் ஆக்ஷன் தொடராக அமைந்தது. இத்தொடர் ஓடிடி பிரியர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.


    10. குட் வைஃப்:

    பிரியாமணி நடிப்பில் வெளியான வெப் தொடர் 'குட் வைஃப்'. திரில்லர் கோர்ட் டிராமா கதைக்களத்தில் வெளிவந்த இந்த வெப் தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    முடிவுரை:

    இந்த ஆண்டு, தமிழ் வெப் தொடர்களில் கிரைம் திரில்லர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினாலும், ரொமான்ஸ், காமெடி, ஸ்போர்ட்ஸ் என அனைத்தும் ரசிகர்களை ஈர்த்தன. 2025 தமிழ் ஓடிடி உலகின் பொன்னான ஆண்டு. அடுத்த ஆண்டு என்ன கொண்டு வரும்? காத்திருப்போம்!

    • தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களை இன்று நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
    • அடுத்த கல்வி ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    தமிழகம் கல்வியில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. தொடர்ந்து கல்வித் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அந்தச் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி கடந்த செப். 25-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

     

    இந்த விழாவின்போது பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

    தமிழகத்தை கல்வித் தந்தை காமராஜரின் மண் என்று குறிப்பிட்ட ரேவந்த் ரெட்டி, தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், மு.க. ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி வருவதாகவும், அவர் ஒரு சிறந்த முதலமைச்சராகத் திகழ்கிறார் என்றும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி தமிழக இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    கல்வி, ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலமாகத் திகழ்வதாக ரேவந்த் ரெட்டி புகழாரம் சூட்டினார். குறிப்பாக, தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களை இன்று நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்தியாவில் முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியது தமிழகம்தான் என்றும், தமிழகத்தைத் தொடர்ந்தே மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

    பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு மனதை தொடும் திட்டம் என்று குறிப்பிட்டு அவர் பாராட்டினார். தமிழகத்தின் சிறப்பான கல்வித் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தெலுங்கானா அரசு, அவற்றை தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

     

    அடுத்த கல்வி ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன்' உள்ளிட்ட முக்கிய கல்வித் திட்டங்களும் வரும் கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தியர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை உற்றுநோக்குகின்றனர் என்றும், தெலுங்கு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே நூற்றாண்டு கால நட்புறவு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமது மாநிலமான தெலுங்கானாவிலும் கல்விக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இதற்காகப் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கல்வியில் முதலீடு செய்வது என்பது வெறுமன சேவை இல்லை.. அது நீதி மற்றும் உரிமை என்ற தமிழ்நாட்டின் கொள்கையை தெலுங்கானாவும் நம்புவதாக அவர் கூறினார்.

    • ஈகிள் விமானமும் மற்றும் ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டன.
    • உலக வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகக் கருதப்படுவது எது தெரியுமா?

    2025-ம் ஆண்டு மோசமான விமான விபத்துகள் பதிவான ஆண்டாக அமைந்தது. தொழில்நுட்பக் கோளாறுகள், மோசமான வானிலை மற்றும் எதிர்பாராத மோதல்கள் எனப் பல காரணங்களால் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.

    அகமதாபாத் விமான விபத்து

    2025-ன் மிகப்பெரிய துயரம் இந்த ஆண்டின் உலகிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய அகமதாபாத் விமான விபத்து ஆகும்.

    ஜூன் 12, 2025 அன்று, ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டது.

    புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது மோதி தீப்பிடித்தது.

    விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பலியாகினர். தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்து ஒருவர் மட்டும் அதியசாமாக உயிர் தப்பினார்.

    அமெரிக்காவில் நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்

    ஜனவரி 29, 2025 அன்று அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் இந்த நிகழ்ந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற 'அமெரிக்கன் ஈகிள்' விமானமும், ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் பொடோமேக் ஆற்றின் மேலே பறக்கும்போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் விமானத்தில் இருந்த 64 பேரும் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் என மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர்.

    ரஷியாவின் அங்காரா ஏர்லைன்ஸ் விபத்து

    ஜூலை 24 அன்று ரஷியாவின் கிழக்கு மலைப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. மோசமான மூடுபனி காரணமாக அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் ஒரு குன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 42 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 48 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    தென் கொரியா ஓடுபாதை விபத்து

    ஜனவரி 28 அன்று அன்று ஏர் புசான் விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் வேகமாகச் சென்றபோது அதன் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது.

    விமானிகளின் துரித நடவடிக்கையால் 176 பயணிகள் அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், 27 பயணிகள் படுகாயமடைந்தனர்.

    சூடான் விபத்து

    ஜனவரி 29 அன்று தெற்கு சூடானின் மேல் வான் பகுதியில் எண்ணெய் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது.

    இதில் 20 பேர் பலியாகினர். ஒரே ஒரு பயணி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

    கென்யா - மொம்பசா ஏர் சபாரி விபத்து

    அக்டோபர் 28, கென்யாவின் சுற்றுலாப் பகுதியான மொம்பசாவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

     2025 விபத்துகள் சொல்வது என்ன?

    2025-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 94-க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க வான்வழி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் ஆகும்.  

    உலகளவில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வணிக மற்றும் தனியார் விமான விபத்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டின் விபத்துக்கள் அனைத்தும் விமானப் போக்குவரத்துத் துறையில் எஞ்சின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

    2025-ல் இத்தனை விபத்துக்கள் நடந்தாலும், உலக வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகக் கருதப்படுவது மார்ச் 27, 1977-ல் ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் நடந்ததுதான். இந்த விபத்தில் இரண்டு 'போயிங் 747' விமானங்கள் ஓடுபாதையிலேயே மோதிக்கொண்டதில் 583 பேர் பலியாகினர்.  

     அவிழும் MH370 மர்மம்:

    மார்ச் 8, 2014 அன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

    புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு திசையில் திரும்பியது.

    மீண்டும் மலேசிய வான் பரப்புக்குள் திரும்பிய விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமாக மறைந்தது. எரிபொருள் தீரும்வரை பயணித்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த விமானத்திற்கு அதில் இருந்தவர்களுக்கும் என்ன ஆனது என்பது இதுநாள்வரை மர்மமாகவே உள்ளது.

    கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்தன. இந்த சூழலில் மீண்டும் அந்த விமானத்தை தேடும் பணிகளை மலேசிய அரசு இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது.

    • மலையில் சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதாகவும், அங்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அனுமதி மறுத்தனர்.
    • மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த 12ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் மலை, முருகனின் ஆறு படைவீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலையின் உச்சியில் உச்சி பிள்ளையார் கோவில், சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் இந்த சர்ச்சைக்குரிய கல் தூண் உள்ளன. இந்த தூணை "தீபத்தூண்" என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அரசு தரப்பு இதை சமணர் காலத்திய தூண் என்று வாதிடுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால் கார்த்திகை தீப திருநாள் அன்று (3-ந் தேதி) தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அப்போது அதே நீதிபதி, இந்த வழக்கை தாக்கல் செய்த ராம ரவிக்குமார் மற்றும் அவரது தரப்பினர், திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ராம ரவிக்குமார் தரப்பினரை மலை ஏற அனுமதிக்கவில்லை. மலையில் சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதாகவும், அங்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அனுமதி மறுத்தனர்.

    எனவே மலைக்கு செல்ல தங்களை அனுமதிக்கவில்லை என்று கூறி மறுநாள் (4-ந் தேதி) ராம ரவிக்குமார் தரப்பினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அன்றைய தினமே ராம ரவிக்குமார் தரப்பினர் மீண்டும் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

     

    இந்த 2 உத்தரவுகளையும் நிறைவேற்றாதது குறித்து விசாரிப்பதற்காக தமிழக தலைமை செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் 17-ந்தேதி வீடியோ கான்பரன்சிங் (காணொலி) முறையிலும், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரிலும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொலி முறையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு ஆஜரானார்கள். அதேபோல மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை போலீஸ் கமிஷனர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    இதன்படி இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த 12ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றது. இந்தநிலையில், திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது. தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி மாதம் 7-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை கடந்த 19-ம் தேதிக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

     

    இதனிடையே பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திருப்பரங்குன்றம் விவகாரம் எதிரொலித்தது. இவ்விவகாரம் தொடர்பாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

    திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசுகையில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் சட்டத்தைப் பின்பற்றும் அனைத்து குடிமக்களும் கவலையில் உள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் யார் தீபத்தை ஏற்றுவது என்பதுதான் பிரச்சனை. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்றுவதா அல்லது பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒருவர் ஏற்றுவதா என்பதுதான்" என்றார்.

    இதனைத் தொடர்த்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் இந்த விவகாரம் பற்றி பேசினார், "மதுரையில் திமுக அரசு மக்கள் வழிபடுவதை தடுத்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் அங்கு சென்றவர்களை கைது செய்து அராஜகப் போக்கில் திமுக அரசும், காவல்துறையும் மக்களின் வழிபடும் உரிமைமை தடுத்து வருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்றாமல் வழிபட செய்பவர்களை கைது செய்து வருகிறது. திமுக அரசு அரசியலுக்காக இவ்வாறு செய்து வருகிறது" என்றார்.

    பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில், "திருப்பரங்குன்றம் மக்கள் பல நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அதைச் சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது" என்று தெரிவித்தார். மேலும் எல்.முருகன் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் தொடர்பாக பொய் பிரசாரத்தை முன்வைத்துள்ளதாகக் கூறிய கனிமொழி, "திமுக ஆளும் தமிழ்நாட்டில் பொது அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவுகிறது. பாஜக ஆளும் ஏதேனும் மாநிலத்தில் அத்தகைய நிலை உள்ளதா? தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கி, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்று கூறினார்.

    இதனிடையே வளர்ச்சி அரசியலா? அல்லது *** அரசியலா? எது தேவை என்பதை மதுரை மக்களே முடிவு செய்வார்கள் என்று திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

    இவ்விவகாரத்திற்கு நீதிமன்றத்தில் வெளியிடப்படும் தீர்ப்பின் மூலமாகவே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கருதப்படுகிறது.

    • பிரதமர் மோடிக்கும், பிரதமராக நினைக்கும் காங்கிரசின் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி.
    • நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவருக்கு பிரதமராக வாய்ப்பு.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பல தலைமுறைகளாகக் கொண்டாடப்படும், படிக்க படிக்கத் திகட்டாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று.

    உஜ்ஜயினி மன்னன் விக்கிரமாதித்தன் மற்றும் வேதாளம் (ஒரு பூதம்) இடையிலான தர்க்கம் நிறைந்த, நீதிபோதனை கொண்ட அற்புதமான கதைகளின் தொகுப்பே விக்கிரமாதித்தன் கதை ஆகும்.

    வேதாளம் ஒரு மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் உடலுடன் வரும். விக்கிரமாதித்தன் அதைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு கதையைச் சொல்லி, இறுதியில் ஒரு கேள்வியைக் கேட்கும். அதற்கு விக்கிரமாதித்தன் பதிலளிக்கத் தவறினால், வேதாளம் மீண்டும் மரத்திற்குத் திரும்பிவிடும். இதனால் விக்கிரமாதித்தன் சாகசம் தொடரும்.

    தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைச் சுமந்தது போல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடர்ந்து தேர்தல்களில் அக்கட்சியை வெற்றி பெற வைக்க போராடி வருகிறார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரசாந்த் கிஷோரை அழைத்துப் பேசியது அதற்காகவே. ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரளவு இடங்கள் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


    மத்தியில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடிக்கும், பிரதமராக அமர நினைக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராக அமர வாய்ப்பு உள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்ட பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தார். ஆனலும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆளும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.

    சினிமாவில் ஹீரோவுக்குத் துணையாக காமெடி நடிகர்கள் வருவார்கள். அதனால் படமும் சுவாரசியமாகப் போகும். ஆனால், நிஜத்தில் யாருடைய துணையும் இல்லாமல் ஹீரோவாக தனி ஆளாக நின்று போராடி வருகிறார் ராகுல் காந்தி. அவரை 'பப்பு' என விமர்சிக்கும் பா.ஜ.க.வினரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் ராகுலின் தைரியம். சுருக்கமாகச் சொன்னால் ராகுல் காந்தி ஒன் மேன் ஆர்மி.

    அண்மைக் காலங்களில் ராகுல் காந்தி அளவுக்குக் கிண்டலடிக்கப்பட்ட, தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட, இன்னொரு தலைவர் இந்திய அரசியலில் இல்லை.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் நடைபெற்ற 95 தேர்தல்களில் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார் என பா.ஜ.க. வரைபடம் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.


    காங்கிரஸ் ஒரு போராட்ட இயக்கம். போராடிப் போராடி மக்கள் மத்தியில் வலுவடைந்த இயக்கம். ஆனால், இன்று போராட்டம் என்றால் என்ன என கேட்கிறார்கள்.

    எனவே ராகுல் காந்தி மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு அமர்த்த வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்றால் நிச்சயம் மிகையில்லை.

    • 97வது ஆஸ்கர் விருதுகள் மார்ச் 2ஆம் தேதி நடைபெற்றது.
    • "அனோரா" (Anora) திரைப்படம் சிறந்த படம் உட்பட 5 விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்தியது.

    2025 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் மிகப்பெரிய கொண்டாட்டமான 97வது அகாடமி விருதுகள் (ஆஸ்கர்) மார்ச் 2ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு, சினிமா உலகில் பல அதிர்ச்சிகளும், புதிய மைல்கற்களும் பதிவாகின.

    சீன் பேக்கரின் "அனோரா" (Anora) திரைப்படம் சிறந்த படம் உட்பட ஐந்து விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்தியது. அதேசமயம் "தி ப்ரூடலிஸ்ட்" (The Brutalist) போன்ற படங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், நடிப்பு ரீதியாகவும் பிரகாசித்தன.

    இந்த ரீவைண்டில், ஆஸ்கர் வென்ற முக்கிய திரைப்படங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். அவற்றின் கதை, சிறப்புகள், மற்றும் ஏன் அவை விருதுகளைத் தட்டிச் சென்றன என்பதை சுவாரசியமாக ஆராய்வோம்.


    1. அனோரா (Anora) - 5 ஆஸ்கர் விருதுகள்

    2024 ஆம் ஆண்டு சியான் பேகர் இயக்கத்தில் அனோரா படம் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா படத்தின் தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் சீன் பேக்கர் மேற்கொண்டார்.

    அனோரா என்ற பாலியல் தொழிலாளி, ஒரு பணக்கார இளைஞனை திருமணம் செய்து கொண்டு, அது கொண்டு வரும் சிக்கல்களை எதிர்கொள்ளும் கதை தான் இப்படம்.

    இந்தாண்டு ஆஸ்கர் விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை தட்டி தூக்கியது. இந்தப் படம் சிறந்த படம் (Best Picture), சிறந்த இயக்குநர் (Sean Baker), சிறந்த நடிகை (Mikey Madison), சிறந்த அசல் திரைக்கதை (Original Screenplay), மற்றும் சிறந்த படத்தொகுப்பு (Film Editing) ஆகிய ஐந்து விருதுகளை வென்றது.

    சிறந்த படம், சிறந்த இயக்குனர், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான விருதை சீன் பேக்கர் வென்றார். 4 ஆஸ்கர் விருதினை வென்று சீன் பேக்கர் சாதனை படைத்தார்.


    2. தி ப்ரூடலிஸ்ட் (The Brutalist) - 3 ஆஸ்கர் விருதுகள்

    தி ப்ரூடலிஸ்ட் (The Brutalist) படம் நடிப்பும் தொழில்நுட்பமும் கலந்த மாஸ்டர்பீஸ் படமாக அமைந்தது.

    அட்ரியன் ப்ரோடி நடிப்பில் உருவான இப்படம் ஒரு ஹங்கேரிய யூத கட்டிடக் கலைஞரின் அமெரிக்க பயணத்தை சித்தரித்தது.

    இந்தப் படம் சிறந்த நடிகர் (Adrien Brody), சிறந்த ஒளிப்பதிவு (Cinematography - Lol Crawley), மற்றும் சிறந்த அசல் இசை (Original Score - Daniel Blumberg) ஆகிய மூன்று விருதுகளை வென்றது.

    ப்ரோடியின் நடிப்பு தான் இந்த ஆண்டின் ஹைலைட். அவர் ஐந்து நிமிடங்கள் 37 வினாடிகள் நீண்ட ஏற்புரையை வழங்கி, ஆஸ்கார் வரலாற்றில் சாதனை படைத்தார்.

    இந்த படத்தின் ஒளிப்பதிவு, 1950களின் அமெரிக்காவை அழகாக படம்பிடித்தது. இயக்குநர் பிரேடி கார்பெட், இந்தப் படத்தை "கலைஞர்களின் போராட்டத்தின் கதை" என்று வர்ணித்தார்.


    3. ட்யூன்: 2 ஆம் பாகம் (Dune: Part Two) - 2 ஆஸ்கர் விருதுகள்

    ட்யூன்: 2 ஆம் பாகம் 2025இன் சிறந்த ஆர்ட் படமாக இருந்தது. இந்த படம் சயின்ஸ்-ஃபிக்ஷன் உலகின் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இந்தப் படம் சிறந்த ஒலி (Sound) மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) ஆகிய இரண்டு விருதுகளை வென்றது.

    ஃபிராங்க் ஹெர்பர்ட்டின் நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம், பால் அட்ரெய்டெஸின் பயணத்தை தொடர்கிறது. விஷுவல் எஃபெக்ட்ஸ் அற்புதமாக இருந்ததால், பாலைவன காட்சிகள் உயிரோட்டமாக தோன்றின. இந்த விருதுகள், ஹாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்களின் தரத்தை உயர்த்தின.


    4. விக்கெட் (Wicked) - 2 ஆஸ்கர் விருதுகள்

    பிரபல பிராட்வே மியூசிக்கலை அடிப்படையாகக் கொண்ட "விக்கெட் படம் சிந்தியா எரிவோ மற்றும் அரியானா கிராண்டே நடிப்பில் உருவானது. இந்தப் படம் சிறந்த உடை வடிவமைப்பு (Costume Design - Paul Tazewell) மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) ஆகிய இரண்டு விருதுகளை வென்றது.

    இப்படம் "தி விஸார்ட் ஆஃப் ஆஸ்" கதையின் ப்ரீக்வெல். எல்பாபா மற்றும் கிளிண்டாவின் நட்பை சித்தரிக்கிறது. சிறந்த உடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் கறுப்பின ஆண் வென்றவர் என்ற சாதனையை பால் டேஸ்வெல் படைத்தார்.


    5. எமிலியா பெரெஸ் (Emilia Pérez) - 2 ஆஸ்கர் விருதுகள்

    எமிலியா பெரெஸ் (Emilia Pérez) படம் மியூசிக்கல் ரசிகர்களுக்கு 2025இன் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்தது. ஸ்பானிஷ் மொழி படமான எமிலியா பெரெஸ் ஒரு திருநங்கையின் கதையை பிரதிபலித்தது.

    இப்படம் சிறந்த துணை நடிகை (Zoe Saldaña) மற்றும் சிறந்த அசல் பாடல் ("El Mal") ஆகிய இரண்டு விருதுகளை வென்றது.

    மற்ற முக்கிய ஆஸ்கர் விருதுகள்:

    சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கான்கிலேவ் (CONCLAVE) திரைப்படத்திற்காக Peter Straughan வென்றார்.

    சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரதிற்கான விருது THE SUBSTANCE திரைப்படத்திற்காக PIERRE-OLIVIER PERSIN, STÉPHANIE GUILLON AND MARILYNE SCARSELLI வென்றனர்.

    சிறந்த துணை நடிகருக்கான விருதை எ ரியல் பெயின் ( A Real pain) படத்திற்காக கீரன் கல்கின் ( Kieran Culkin) வென்றார்.


    சிறந்த ஆனிமேடட் படத்திற்கான விருதை ஃப்லோ {FLOW} திரைப்படம் வென்றது. இப்படத்தை Gints Zilbalodis இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த ஆனிமேடட் குறும்படத்திற்கான விருதை IN THE SHADOW OF THE CYPRESS குறும்படம் வென்றுள்ளது. இப்படத்தை Shirin Sohani and Hossein Molayemi இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    முடிவுரை:

    இந்த ரீவைண்ட் மூலம், 2025 ஆம் ஆண்டு ஆஸ்கார் வென்ற படங்களை திரும்பிப் பார்த்தோம். இவை அனைத்தும் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்களில் கிடைக்கின்றன – பாருங்கள், ரசியுங்கள்! சினிமா என்றும் நம்மை ஈர்க்கும் மேஜிக். அடுத்த ஆண்டு என்ன கொண்டு வரும்? காத்திருப்போம்!

    ×