என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: ராகுல் காந்தி-தொடர் தோல்வியால் சற்றும் மனம் தளராத நவீன விக்கிரமாதித்தன்
- பிரதமர் மோடிக்கும், பிரதமராக நினைக்கும் காங்கிரசின் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி.
- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவருக்கு பிரதமராக வாய்ப்பு.
புதுடெல்லி:
இந்தியாவில் பல தலைமுறைகளாகக் கொண்டாடப்படும், படிக்க படிக்கத் திகட்டாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று.
உஜ்ஜயினி மன்னன் விக்கிரமாதித்தன் மற்றும் வேதாளம் (ஒரு பூதம்) இடையிலான தர்க்கம் நிறைந்த, நீதிபோதனை கொண்ட அற்புதமான கதைகளின் தொகுப்பே விக்கிரமாதித்தன் கதை ஆகும்.
வேதாளம் ஒரு மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் உடலுடன் வரும். விக்கிரமாதித்தன் அதைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு கதையைச் சொல்லி, இறுதியில் ஒரு கேள்வியைக் கேட்கும். அதற்கு விக்கிரமாதித்தன் பதிலளிக்கத் தவறினால், வேதாளம் மீண்டும் மரத்திற்குத் திரும்பிவிடும். இதனால் விக்கிரமாதித்தன் சாகசம் தொடரும்.
தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைச் சுமந்தது போல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடர்ந்து தேர்தல்களில் அக்கட்சியை வெற்றி பெற வைக்க போராடி வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரசாந்த் கிஷோரை அழைத்துப் பேசியது அதற்காகவே. ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரளவு இடங்கள் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மத்தியில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடிக்கும், பிரதமராக அமர நினைக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராக அமர வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்ட பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தார். ஆனலும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆளும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.
சினிமாவில் ஹீரோவுக்குத் துணையாக காமெடி நடிகர்கள் வருவார்கள். அதனால் படமும் சுவாரசியமாகப் போகும். ஆனால், நிஜத்தில் யாருடைய துணையும் இல்லாமல் ஹீரோவாக தனி ஆளாக நின்று போராடி வருகிறார் ராகுல் காந்தி. அவரை 'பப்பு' என விமர்சிக்கும் பா.ஜ.க.வினரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் ராகுலின் தைரியம். சுருக்கமாகச் சொன்னால் ராகுல் காந்தி ஒன் மேன் ஆர்மி.
அண்மைக் காலங்களில் ராகுல் காந்தி அளவுக்குக் கிண்டலடிக்கப்பட்ட, தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட, இன்னொரு தலைவர் இந்திய அரசியலில் இல்லை.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் நடைபெற்ற 95 தேர்தல்களில் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார் என பா.ஜ.க. வரைபடம் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.
காங்கிரஸ் ஒரு போராட்ட இயக்கம். போராடிப் போராடி மக்கள் மத்தியில் வலுவடைந்த இயக்கம். ஆனால், இன்று போராட்டம் என்றால் என்ன என கேட்கிறார்கள்.
எனவே ராகுல் காந்தி மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு அமர்த்த வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்றால் நிச்சயம் மிகையில்லை.






