என் மலர்tooltip icon

    இந்தியா

    • மாணவர்கள் 3 பேரும் ராட்தச அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
    • சஜித் மற்றும் திபின் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பீமப்பள்ளி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ரிஹான், சஜித், திபின். இவர்கள் 3 பேருக்கும் 16 வயது ஆகிறது. அவர்கள் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்த மாணவர்கள் 3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பள்ளி மட்டுமின்றி டியூசனுக்கு கூட தினமும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். சம்பவத்தன்று மாணவர்கள் 3 பேரும் வழக்கம்போல் டியூசனுக்கு சேர்ந்து சென்றிருக்கின்றனர்.

    டியூசனுக்கு நேரம் அதிகம் இருந்ததால், அவர்கள் பீமப்பள்ளி தைக்கப்பள்ளி அருகே உள்ள கடற்கரைக்கு சென்று பந்து விளையாடியிருக்கின்றனர். அப்போது அவர்களது பந்து கடலுக்குள் விழுந்து விட்டது. அதனை எடுக்க முயன்றபோது மாணவர்கள் 3 பேரும் ராட்தச அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

    கடல் அலையில் சிக்கி தத்தளித்த அவர்கள் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர். அதனை அங்கு கடற்கரையில் இருந்து உள்ளூர் மீனவர்கள் கவனித்தனர். அவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

    அதில் சஜித் மற்றும் திபின் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் ரிஹானை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து டைவிங் நிபுணர்கள் மற்றும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அவர்கள் கடலுக்குள் மணலில் மூழ்கிய நிலையில் கிடந்த ரிஹானை மீட்டனர். அவன் அம்பலத்தாராவில் உள்ளி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் மாணவன் ரிஹான் பரிதாபமாக இறந்துவிட்டான்.

    கடலில் விழுந்தை பந்தை எடுக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவன், கடலில் மூழ்கி இறந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பேச்சுவார்த்தை 2007-ல் தொடங்கப்பட்டது.
    • கடந்த 18 ஆண்டாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை தற்போது உறுதி செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த பேச்சுவார்த்தை 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 18 ஆண்டாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை தற்போது உறுதி செய்யப்படுகிறது.

    வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருதரப்பும் தங்களுடைய பொருட்களுக்கு 90 சதவீதத்துக்கு மேல் சுங்க வரிகளை தளர்த்தவேண்டும்.

    தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வரும்.

    இந்தியா இதுவரை மேற்கொண்ட அனைத்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களிலும் இந்தக் கோரிக்கை முக்கியமானதாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    டோடாவிலிருந்து ஜம்மு நோக்கி சென்ற அந்த பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சி.ஆர்.பி.எப் படை வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

    • பிளாஸ்டிக் உற்பத்தி பல நூறு மடங்குகள் அதிகரித்து வருகிறது.
    • பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் 2040-க்குள் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

    இன்று எந்தளவுக்கு நவீனம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் கெடுதலை உண்டாக்குகிறது.

    பிளாஸ்டிக் கழிவுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் தங்கி சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்கும் பேராபத்தை விளைவிக்கின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

    இந்நிலையில், லான்செட் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான விவரம்:

    பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகியவை ஆஸ்துமா, புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு, ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

    கருப்பையில் உள்ள சிசு முதல் முதுமை வரை அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் மாசுபாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு உலகளவில் ஆண்டுக்கு குறைந்தது 1.5 டிரில்லியன் டாலர் செலவாகிறது. தற்போது பிளாஸ்டிக் உற்பத்தி பல நூறு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

    தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவையே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. இதனால் 8,000 மெகா டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் பூமியை மாசுபடுத்துகின்றன.

    வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாடுகள் இரு மடங்கிற்கும் அதிகமான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்றும், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு மற்றும் நச்சுத்தன்மை வெளிப்பாடு ஆகியவை அதிகரிக்கும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.

    • விமான நிறுவனங்கள் இன்று பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.
    • ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு மேலும் 4 விமானங்கள் வர திட்டமிடப்பட்டிருந்தன.

    காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரி கூறுகையில்,

    பாதகமான வானிலை மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுவதால், விமான நிறுவனங்கள் இன்று பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.

    பனிப்பொழிவு காரணமாக இதுவரை சுமார் 50 விமானங்கள் - 25 உள்வரும் மற்றும் 25 வெளிச்செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு மேலும் 4 விமானங்கள் வர திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவை இயக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறினார்.

    விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், வார இறுதி மற்றும் குடியரசு தின விடுமுறைக்கு காஷ்மீர் வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

    • நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
    • பிப்ரவரி 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

    நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

    இன்று (ஜனவரி 27) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

    வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்தக் கோரி இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது.

    தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும், அதற்கு பதிலாக வார நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றவோம் என வங்கி சங்கங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் ஜனவரி 23 அன்று மத்திய தொழிலாளர் ஆணையருடன் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ்' இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    இதனால் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

    அதெல்லாம், HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.  

    • விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
    • தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை போல, வந்தே மாதரம் பாடப்படும்போதும் எழுந்து நிற்பது உள்ளிட்ட புதிய விதிகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படும், புதிய விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.  இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    மத்திய அரசு அளித்த விளக்கத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கு இணையான அந்தஸ்து தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் உண்டு.

    தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், வந்தே மாதரம் பாடலைப் பாடும்போது அத்தகைய குறிப்பிட்ட சட்டப்பூர்வ விதிகள் ஏதும் இதுவரை இயற்றப்படவில்லை.

    எனினும், இப்பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாலும், நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக இருப்பதாலும், இப்பாடல் இசைக்கப்படும் போது குடிமக்கள் அதற்குரிய மரியாதையைத் தானாக முன்வந்து அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள், தேசியப் பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்க முடியாது என்றும், ஆனால் அதற்குரிய கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரு மனைவிகளும் கணவர் மீது முழு உரிமை கோரி தினமும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
    • காவல்துறையினர் இந்தப் பிரச்சினையை தீர்க்கும்படி கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    உத்தரப் பிரதேசதில் இரண்டு மனைவிகள் ஒரு கணவரை பிரித்துக்கொள்ள பஞ்சாயத்தில் வினோத தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ராம்பூர் மாவட்டத்தில் அசிம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லியா அகில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

    ஒரு திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது, மற்றொன்று காதல் திருமணம். இரு மனைவிகளும் கணவன் மீது முழு உரிமை கோரி தினமும் சண்டையிட்டு வந்துள்ளனர்.

    இந்தச் சண்டை முற்றி அசிம் நகர் காவல் நிலையத்திற்குச் சென்றது. காவல்துறையினர் இந்தப் பிரச்சினையை தீர்க்கும்படி கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில், கணவரை இரு மனைவிகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு டைம் டேபிள் போடப்பட்டது.

    அதன்படி, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய வாரத்தின் முதல் மூன்று நாட்கள் முதல் மனைவியுடன் இருக்க வேண்டும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய அடுத்த மூன்று நாட்கள் கணவன் இரண்டாவது மனைவியுடன் இருக்க வேண்டும்.

    வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கணவன் தனது விருப்பப்படி இருவரில் யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம்.

    இந்த தீர்ப்பை கணவர் மற்றும் இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

    இந்த வினோத ஒப்பந்தம் அந்தப் பகுதி முழுவதும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.   

    • திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
    • அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடிக்கு மரியாதை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ் அதிகாரி உயிரிழந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா நகரில் நேற்று குடியரசு தின விழாவில் கொடியேற்ற நிகழ்வில் மாநில கலால் துறையில் பணிபுரிந்து வந்த காவல் துணை ஆய்வாளர் மோகன் ஜாதவ் பங்கேற்றார்.

    தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது, சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வரிசையில் மோகன் ஜாதவ் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள் உமர்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்திற்குத் தார்மீகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

    விழாவின் போது அவர் நிலைகுலைந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  

    • இந்தியாவை விடத் தெளிவான வானம் பிரிட்டனில் இல்லை.
    • மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது.

    புகழ்பெற்ற பத்திரிகையாளரும் பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் இந்தியப் பிரிவுத் தலைவருமான மார்க் டல்லி (90) டெல்லியில் நேற்று (ஜனவரி 25) காலமானார்.

    1935-ல் கொல்கத்தாவில் பிரிட்டிஷ் பெற்றோருக்கு பிறந்த இவர், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்தியாவிலேயே கழித்தார்.

    பாதிரியார் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுப் பத்திரிகையாளரான மார்க் டல்லி, இந்தியாவின் கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றை பதிவு செய்தவர்.

    1964-ல் பிபிசியில் சேர்ந்த இவர், சுமார் 30 ஆண்டுகள் இந்தியாவில் அதன் முகமாகச் செயல்பட்டார்.

    வங்கதேசப் போர், நெருக்கடி நிலை, ஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி படுகொலைகள், பாபர் மசூதி இடிப்பு என இந்தியாவின் பல முக்கிய சம்பவங்களை நேரில் பதிவு செய்தவர் டல்லி.

    இந்திரா காந்தி படுகொலை, போபால் விஷவாயு கசிவு சம்பவம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை உலக அரங்கில் பதிவு செய்தார்.

    இந்திய இதழியல் துறைக்கு ஆற்றிய பங்கிற்காக இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது.

    பிரிட்டிஷ் அரசு இவருக்கு 'நைட்ஹுட்' பட்டம் வழங்கிய போதும், பிரிட்டனை விட இந்தியாவையே அதிகம் நேசித்தார். "இந்தியாவை விடத் தெளிவான வானம் பிரிட்டனில் இல்லை" என்று அவர் அடிக்கடி கூறுவார்.

    • குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கார்கே, ராகுல் 3-வது வரிசையில அமர வைக்கப்பட்டனர்.
    • ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது- காங்கிரஸ்

    இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மாநில ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றன.

    இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்றோரும் கலந்து கொண்டனர்.

    இதில் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு 3-வது வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் அமர்ந்திருந்தனர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரை அவமானப்படுத்தியதாக விமர்சனம் செய்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் "நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை இத்தகைய முறையில் நடத்துவது?, இது எந்தவொரு கண்ணியம், மரபு மற்றும் நெறிமுறைகளின் தரங்களுக்கும் பொருந்துமா?. இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    மாணிக்கம் தாகூர் எம்.பி. "ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது. 2014-ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி எங்கு அமர வைக்கப்பட்டிருந்தார் என்று பாருங்கள். இப்போது ஏன் இந்த நெறிமுறை மீறல்? மோடியும், அமித் ஷாவும் கார்கே மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்த விரும்புவதால்தான் இது நடந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.

    ×