என் மலர்
இந்தியா

கடலில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
- மாணவர்கள் 3 பேரும் ராட்தச அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
- சஜித் மற்றும் திபின் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பீமப்பள்ளி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ரிஹான், சஜித், திபின். இவர்கள் 3 பேருக்கும் 16 வயது ஆகிறது. அவர்கள் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்த மாணவர்கள் 3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பள்ளி மட்டுமின்றி டியூசனுக்கு கூட தினமும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். சம்பவத்தன்று மாணவர்கள் 3 பேரும் வழக்கம்போல் டியூசனுக்கு சேர்ந்து சென்றிருக்கின்றனர்.
டியூசனுக்கு நேரம் அதிகம் இருந்ததால், அவர்கள் பீமப்பள்ளி தைக்கப்பள்ளி அருகே உள்ள கடற்கரைக்கு சென்று பந்து விளையாடியிருக்கின்றனர். அப்போது அவர்களது பந்து கடலுக்குள் விழுந்து விட்டது. அதனை எடுக்க முயன்றபோது மாணவர்கள் 3 பேரும் ராட்தச அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
கடல் அலையில் சிக்கி தத்தளித்த அவர்கள் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர். அதனை அங்கு கடற்கரையில் இருந்து உள்ளூர் மீனவர்கள் கவனித்தனர். அவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
அதில் சஜித் மற்றும் திபின் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் ரிஹானை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து டைவிங் நிபுணர்கள் மற்றும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் கடலுக்குள் மணலில் மூழ்கிய நிலையில் கிடந்த ரிஹானை மீட்டனர். அவன் அம்பலத்தாராவில் உள்ளி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் மாணவன் ரிஹான் பரிதாபமாக இறந்துவிட்டான்.
கடலில் விழுந்தை பந்தை எடுக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவன், கடலில் மூழ்கி இறந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.






