என் மலர்tooltip icon

    இந்தியா

    • திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
    • அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடிக்கு மரியாதை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ் அதிகாரி உயிரிழந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா நகரில் நேற்று குடியரசு தின விழாவில் கொடியேற்ற நிகழ்வில் மாநில கலால் துறையில் பணிபுரிந்து வந்த காவல் துணை ஆய்வாளர் மோகன் ஜாதவ் பங்கேற்றார்.

    தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது, சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வரிசையில் மோகன் ஜாதவ் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள் உமர்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்திற்குத் தார்மீகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

    விழாவின் போது அவர் நிலைகுலைந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  

    • இந்தியாவை விடத் தெளிவான வானம் பிரிட்டனில் இல்லை.
    • மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது.

    புகழ்பெற்ற பத்திரிகையாளரும் பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் இந்தியப் பிரிவுத் தலைவருமான மார்க் டல்லி (90) டெல்லியில் நேற்று (ஜனவரி 25) காலமானார்.

    1935-ல் கொல்கத்தாவில் பிரிட்டிஷ் பெற்றோருக்கு பிறந்த இவர், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்தியாவிலேயே கழித்தார்.

    பாதிரியார் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுப் பத்திரிகையாளரான மார்க் டல்லி, இந்தியாவின் கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றை பதிவு செய்தவர்.

    1964-ல் பிபிசியில் சேர்ந்த இவர், சுமார் 30 ஆண்டுகள் இந்தியாவில் அதன் முகமாகச் செயல்பட்டார்.

    வங்கதேசப் போர், நெருக்கடி நிலை, ஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி படுகொலைகள், பாபர் மசூதி இடிப்பு என இந்தியாவின் பல முக்கிய சம்பவங்களை நேரில் பதிவு செய்தவர் டல்லி.

    இந்திரா காந்தி படுகொலை, போபால் விஷவாயு கசிவு சம்பவம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை உலக அரங்கில் பதிவு செய்தார்.

    இந்திய இதழியல் துறைக்கு ஆற்றிய பங்கிற்காக இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது.

    பிரிட்டிஷ் அரசு இவருக்கு 'நைட்ஹுட்' பட்டம் வழங்கிய போதும், பிரிட்டனை விட இந்தியாவையே அதிகம் நேசித்தார். "இந்தியாவை விடத் தெளிவான வானம் பிரிட்டனில் இல்லை" என்று அவர் அடிக்கடி கூறுவார்.

    • குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கார்கே, ராகுல் 3-வது வரிசையில அமர வைக்கப்பட்டனர்.
    • ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது- காங்கிரஸ்

    இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மாநில ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றன.

    இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்றோரும் கலந்து கொண்டனர்.

    இதில் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு 3-வது வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் அமர்ந்திருந்தனர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரை அவமானப்படுத்தியதாக விமர்சனம் செய்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் "நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை இத்தகைய முறையில் நடத்துவது?, இது எந்தவொரு கண்ணியம், மரபு மற்றும் நெறிமுறைகளின் தரங்களுக்கும் பொருந்துமா?. இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    மாணிக்கம் தாகூர் எம்.பி. "ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது. 2014-ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி எங்கு அமர வைக்கப்பட்டிருந்தார் என்று பாருங்கள். இப்போது ஏன் இந்த நெறிமுறை மீறல்? மோடியும், அமித் ஷாவும் கார்கே மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்த விரும்புவதால்தான் இது நடந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.

    • 12-வது கேள்வி முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
    • மத்திய அரசு அரசியல் கட்சிகள், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

    இந்தியா முழுவதும் அடுத்த வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது.

    அதன்பிறகு மக்களை தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பாளரான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம் என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிப்பதாவது:-

    நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, முதல் பகுதி வருகிற செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு ஆகும். 2-ம் கட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இமாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் 2027 பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மோடி அரசு திடீரென தனது நிலைப்பாட்டில் இருந்து பல்டி அடித்து மக்களை தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

    வீட்டுக்கணக்கெடுப்பு படிவத்தின் 12-வது கேள்வியில் குடும்பத்தினர் தலைவர் பட்டியலினத்தினரா, பழங்குடியினரா எனக் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்டவரா அல்லது பொதுப்பிரிவனரா? என்பது தெளிவாக கேட்கப்படவில்லை.

    இந்த 12-வது கேள்வி பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்வி மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் மற்றும் ஒரு விரிவான, நியாயமான, நாடு தழுவிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அதன் அர்ப்பணிப்பு குறித்ததாகும்.

    மோடி அரசு இது தொடர்பாக உடனடியாக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • முக்பா பகுதிக்கும் இந்த தடை நீட்டிக்கப்படும்
    • இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கான இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என பாஜக தலைவர் கருத்து

    உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி தாமிற்குள் (இந்துக்கள் புனித யாத்திரை தலம்) இனி இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஸ்ரீ கங்கோத்ரி கோயில் குழு தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களைத் தொடர்ந்து, கங்கா தேவியின் குளிர்கால இருப்பிடமான முக்பா (கோயில் அருகில் உள்ள கிராமம்) பகுதிக்கும் நீட்டிக்கப்படும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

    கோயில் குழுவின் தலைவர் சுரேஷ் செம்வால், கங்கோத்ரி மற்றும் முக்பா பகுதிகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கான இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பா.ஜ.க தலைவரும், ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் (BKTC) தலைவருமான ஹேமந்த் திவேதி, பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் BKTC-யின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்வதற்கான முன்மொழிவு, குழுவின் அடுத்த வாரியக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "வரலாற்று ரீதியாக, கேதார்நாத் மற்றும் மானா பகுதிகள் முழுவதும் உள்ள கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பாஜக அல்லாத ஆட்சிக் காலங்களில், இந்த மரபுகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன. இப்போது இந்த மரபுகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


     

    • அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.
    • விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    அதன்படி, கேரளா மாநிலம் கண்ணூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    அப்போது, அம்மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் மேடையில் உரையாற்றினார். அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.

    சுதாரித்துக்கொண்ட அருகில் நின்றிருந்த போலீஸ் அதிகாரிகள், மயங்கிய அமைச்சரை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டனர்.

    அமைச்சருக்கு சுயநினைவு வராததை அடுத்து, உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நதீம் அமிதாப் பச்சன், அஸ்ரானி, அடில் உசேன் மற்றும் சஞ்சய் மிஸ்ரா போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்துள்ளார்.
    • துரைத்துறையை தாண்டி நாடகத்துறையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் துரந்தர். இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நதீம் கான் என்ற நடிகர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தன்னிடம் வீட்டு வேலை செய்த 41 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை மால்வனி காவல்துறையினர் ஜனவரி 22, அன்று நதீம் கானைக் கைது செய்தனர். அவர் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பில் உள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் நதீம் கானிடம் 2015 முதல் வேலை செய்து வந்துள்ளார். நதீம் கான் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

    • அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையில் இந்தியா இன்னும் முதல் இடத்திலேயே உள்ளது
    • பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் வேலை மற்றும் சிறந்த ஊதியத்தைத் தேடிச் சென்ற தனிநபர் ஆவர்.

    கடந்த ஆண்டில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும்போது பிடிபட்டதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு ஜனவரி மற்றும் டிசம்பர் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் 23,830 இந்தியர்கள் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது 2024-ல் இருந்த 85,119-ஐ விட மிகவும் குறைவு என்றாலும், அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையில் இந்தியா இன்னும் முதல் இடத்திலேயே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த கண்காணிப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழான கொள்கை மாற்றங்கள் மற்றும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் தீவிரமான அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று அமெரிக்க எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடத்தல் பாதைகள் குறுகிவிட்டன, எல்லை ரோந்துப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன, மேலும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், எல்லை தாண்டுதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.  பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் வேலை மற்றும் சிறந்த ஊதியத்தைத் தேடிச் சென்ற தனிநபர் ஆவர். இருப்பினும், எல்லைகளுக்கு அருகே ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்படும் கவலையளிக்கும் போக்கை அமெரிக்க முகமைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது குஜராத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த 2022 ஜனவரி 'டிங்குச்சா' சம்பவத்திற்குப் பிறகு, ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இத்தகைய பயணங்களின் போது குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்படுவது தொடர்கிறது. 

    • நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
    • வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.

    ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கார்களுக்கான இறக்குமதி வரியை 110 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

    இது புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட விலைக்கு மேல் (சுமார் ரூ. 16.3 லட்சம் ) இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு உடனடியாக வரிகள் குறைக்கப்படும்.

    காலப்போக்கில், இந்த கார்களுக்கான வரி 10 சதவீதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் ஏற்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இடையூறுகள் குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இது இந்தியாவின் வாகனச் சந்தையைத் திறப்பதில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய வாகன உற்பத்தியாளர்களான வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 4 நாள் இந்தியப் பயணத்தில் இருக்கும்போதே இந்த தகவல் வந்துள்ளது.

    இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பல முக்கிய முயற்சிகளை உறுதிப்படுத்துவதாகும்.

    வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகவும், வர்த்தக பேச்சுவார்த்தைக ளுக்காகவும் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே அரசாங்கத்தைக் கவிழ்த்தார்.
    • உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார்.

    மத்திய அரசு நேற்று பத்ம விருதுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் ஆளுநருமான பகத் சிங் கோசியாரிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு உத்தவ் தாக்கரே (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான MVA அரசை கவிழ்த்தவர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்ச் ராவத் கூறுகையில் "பகத் சிங் கோஷியாரி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்தார். உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, மாநிலத்தில் பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார். உச்சநீதிமன்றம் கூட, அவரது பதவிக் காலத்தில் கோஷியாரி செயல் சட்டவிரோதம் என சுட்டிக்காட்டியது.

    முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்பட மகாயுதி அரசு கூட, இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    பகத் சிங் கோஷியாரி 2019 முதல் 2023 வரை மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்தார். உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்தவர்களை மேலவை உறுப்பினராக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். மேலும், சத்திரபதி சிவாஜி மகாராஜா பழைய காலத்து சின்னம் எனக் கூறி சர்ச்சைக்கு உள்ளானார்.

    • நம்முடைய அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்குமான சிறந்த ஆயுதம்.
    • அது நம்முடைய குரல். நம்முடைய உரிமைகளை பாதுகாக்கும் கேடயம்.

    இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்த விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நம்முடைய அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்குமான சிறந்த ஆயுதம். அது நம்முடைய குரல். நம்முடைய உரிமைகளை பாதுகாக்கும் கேடயம். நமது குடியரசு இந்த வலிமையான அடித்தளத்தின் மீது நிற்கிறது. மேலும் அது சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலமாகவே மேலும் வலுப்பெறும்.

    அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்பது இந்தியக் குடியரசைப் பாதுகாப்பதாகும்; இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். ஜெய் ஹிந்த்! ஜெய் சம்விதான்! அரசியலமைப்பு பாறைபோன்ற உறுதியுடன் பாதுகாப்ப உறுதிக் கொண்டுள்ளோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • “இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.
    • பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.

    திருவனந்தபுரம்:

    மக்களின் நலனுக்கான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்துவது, மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படக்கூடியவர்கள் மாவட்ட கலெக்டர்கள்.

    ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் படைத்த அவர்கள், சில நேரங்களில் சில விஷயங்களின் உண்மை நிலையை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கி விடுவார்கள். அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஆட்டோக்களின் விதிமீறலை கண்டுபிடிக்க பெண் கலெக்டர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் களத்தில் இறங்கினார்.

    அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் விதிகளை மீறி இயங்கியது கண்டறியப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் பிரியங்கா. இவர் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். எர்ணாகுளம் மாவட்டத்தின் மூன்றாவது பெண் கலெக்டரான அவர், தான் பொறுப்பேற்றதில் இருந்தே மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

    இந்த நிலையில் கொச்சி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவது அவரின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அதனை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கினார். அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் கொச்சி மாநகர பகுதியில் சாதாரண உடையணிந்து சென்றார்.

    அவருடன் போக்குவரத்து அதிகாரிகளும் சாதாரண உடையில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து சென்ற கலெக்டர் பிரியங்கா ஒரு இடத்திற்கு சென்றதும், அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவை சவாரிக்கு அழைப்பது போன்று சத்தம் போட்டு அழைத்தார்.

    இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் கலெக்டரின் அருகில் சென்றார். அப்போது அந்த ஆட்டோவில் மீட்டர் ஓடாமல் இருந்துள்ளது. இதையடுத்து கலெக்டர் பிரியங்கா, மீட்டர் ஓடாதா...? என்று கேட்டுள்ளார். தன்னிடம் கேள்வி கேட்பது கலெக்டர் என்பது தெரியாமல், "இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?" என்று எதிர் கேள்வி கேட்டார்.

    இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் வந்து, அந்தப் பெண் கலெக்டர் என்பதை விளக்கினர். சாதாரண பெண் என்று தான் பேசி மாட்டிக்கொண்டதை அந்த ஆட்டோவின் டிரைவர் அறிந்து என்ன செய்வதென்று விழித்தார்.

    இதேபோல் கொச்சி மாநகர பகுதியில் பல இடங்களுக்கு நேரடியாக சென்று ஆட்டோக்களின் விதிமீறல்களை கலெக்டர் கண்டுபிடித்தார். அந்த ஆட்டோக்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கலெக்டர் தலைமையில் 6 குழுக்கள் இந்த அதிரடி ஆய்வில் ஈடுபட்டன.

    மொத்தம் 365 ஆட்டோக்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் மொத்தம் 174 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 72 ஆட்டோக்களில் மீட்டர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் உடனடியாக மீட்டர் பொருத்த டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

    அது மட்டுமின்றி விதிகளை மீறி ஆட்டோக்களை ஓட்டிய டிரைவர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.

    ×