என் மலர்
இந்தியா
- 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று மாலை நவாலே பாலத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை கூறுகையில், சத்தாராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, பிரேக் செயலிழந்ததால் நவாலே பாலத்தின் சரிவில் மாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்தது.
அந்த லாரி வழியில் பல வாகனங்களை மோதியது. இதில் ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைத்து, சேதமடைந்த கார் மற்றும் கண்டெய்னரில் இருந்து சடலங்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் பிரேக் பிடிக்காத லாரி ஒன்று 48 வாகனங்களை இடித்து விபத்தை ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.
- எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்து, எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
சம்பவம் நடந்த அன்றைய இரவு டெல்லி முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார்.
இதற்கிடையே பூட்டானில் இருந்து திரும்பியவுடன் நேற்று எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை சந்தித்தார். இதன் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் ரேகா குப்தா சந்தித்தபோது காலில் கட்டு போடப்பட்டிருந்த நோயாளிக்கு நேற்று மோடி சந்திக்கும்போது கூடுதலாக கையில் கட்டுபோடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் இரு புகைப்படங்களிலும் உள்ள வேற்றுமையை குறிப்பிட்டு இது அவசர அவசரமாக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் தான் என்று விமர்சித்துள்ளார்.
- இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர்.
- சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை யாரையும் பழிவாங்கும் முயற்சி அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர். ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்துக்கு விமானி மீது குற்றம்சாட்டப்படுவதாக விமான விபத்தில் இறந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையில் விமானிகள் மீது குற்றம் சாட்ட வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டிய தந்தை, விசாரணை நடத்த சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸுக்கு மத்திய அரசு தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளது.
இந்நிலையில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜெயமல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற விசாரணையின் நோக்கம், துயரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதும் ஆகும் என்றும், தனிநபர்கள் மீது பழி சுமத்துவதோ அல்லது யார் தவறு செய்தார்கள் என்று சொல்வதோ அல்ல என்றும் கூறியது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தரத்தின்படி விசாரணை நடத்தப்படுவதாகவும், விசாரணை யாரையும் பழிவாங்க முற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
- நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
121 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும், 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.8 சதவீத வாக்குகளும் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கூறப்படுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், `தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.
இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
- அகமதாபாத் ஏர் விமான விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
- விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார்.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.
மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.
மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
- கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
'டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்' என்றும் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து பேசிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "அனைத்து ஜம்மு காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் கிடையாது. சிலர் மட்டும் தான் இங்கு எப்போதும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கெடுத்து வருகிறார்கள். ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு மக்களையும், ஒவ்வொரு காஷ்மீர் முஸ்லிமையும் ஒரே சித்தாந்தத்துடன் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகள் என்று நினைக்கும் போது, மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது கடினம். மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம்" என்று தெரிவித்தார்.
- ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை.
- மாதவிடாய் விடுமுறைக்கு மருத்துவ சான்றிதழ் எதுவும் தாக்கல் செய்ய தேவை இல்லை.
கர்நாடக அரசு மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அமைச்சரவையில் முடிவு செய்தது.
அமைச்சரவை கூட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில், பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அரசு, தனியார் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி கர்நாடக அரசு, அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு அரசு, தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் நிரந்தர, ஒப்பந்த, வெளிகுத்தகை உள்பட எந்த ரீதியில் பணியாற்றினாலும் அந்த பெண் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நடைமுறைக்கு முன்னதாக மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாதவிடாய் விடுமுறை ஆண்டுக்கு 6 நாட்கள் வழங்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.
பின்னர், அந்த குழு அதை 12 நாட்களாக அதிகரித்து பரிந்துரைத்தது. ஒருவேளை குறிப்பிட்ட மாதத்தில் அந்த விடுமுறையை எடுக்காவிட்டால், அதை சேர்த்து வைத்து அடுத்த மாதம் அந்த விடுமுறையை எடுக்க முடியாது.
மாதவிடாய் விடுமுறைக்கு மருத்துவ சான்றிதழ் எதுவும் தாக்கல் செய்ய தேவை இல்லை. இந்த மாதவிடாய் விடுமுறை 18 வயது முதல் 52 வயது வரையுள்ள பெண் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
- மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.
தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.
திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.
தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.
இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
- தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
- போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததனர்.
டெல்லியில் கடந்த திங்கள்கிழமை மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை போலீஸ் அவசர எண்ணுக்கு ஒரு பெண் அழைத்தார்.
குருகிராம் சென்று கொண்டிருந்தபோது மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டலுக்கு அருகில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அவர் கூறினார்.
போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததனர்.
இருப்பினும், அங்கு எந்த சந்தேகத்திற்கிடமான சம்பவமும் நடக்கவில்லை என்று தெரியவந்தது.
உள்ளூர்வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து அந்த வழியாகச் சென்றபோது பின்புற டயர் வெடித்து பலத்த சத்தம் ஏற்பட்டது என்று தெரியவந்தது.
பின்னர் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வெடிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
- இந்தியாவின் எதிரி சொத்து காப்பாளர் துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.
- சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது.
உலக அளவில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பெங்களூரு புகழ்பெற்று விளங்குகிறது. டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த பயங்கரம் நடந்துள்ள நிலையில் பெங்களூருவில் பாகிஸ்தான், சீனா நாட்டினரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 அசையா சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சொத்துகள் எதிரி சொத்து சட்டம் 1968-ன் கீழ் எதிரி சொத்துகளாக கண்டறியப்பட்டு உள்ளன. எதிரி நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்த சொத்து, 'எதிரி சொத்து' என அழைக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை 1968-ம் ஆண்டு எதிரி சொத்து சட்டத்தின் கீழ் எடுக்கப்படுகிறது. தற்போது பெங்களூரு ராஜ்பவன் ரோட்டில் உள்ள இந்த சொத்துகள், எதிரி சொத்துகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது கப்பன் பூங்கா அருகே ராஜ்பவன் சாலையில் வார்டு எண் 78-ல் மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 504 சதுர அடி பரப்பளவு கொண்ட சொத்து கண்டறியப்பட்டுள்ளது.
விக்டோரியா சாலையில் சிவில் ஸ்டேசன் பகுதியில் 8 ஆயிரத்து 845 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அசையா சொத்து உள்ளது. கலாசிபாளையம் 2-வது பிரதான சாலையில் 2 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டு மனை உள்ளது.
இந்த 4 அசையா சொத்துகளும் எதிரி சொத்துக்கள் என இந்தியாவின் எதிரி சொத்து காப்பாளர் துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.
பெங்களூரு மாநகர மாவட்ட நிர்வாகம் கர்நாடக அரசின் அறிவுறுத்தலின் படி சொத்துகளின் மதிப்பீட்டு பணியை முடித்துள்ளது. அதாவது அரசின் நில மதிப்பீடு, சந்தை நில மதிப்பீடு ஆகிய 2 முறைகளில் சொத்துகளின் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது.
- தனது வீட்டின் விலை மிகவும் அதிகம். ஆனால் கட்டுமானத்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
- பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பென்சிலால் கூட வீட்டு சுவரில் துளைகள் போட முடிகிறது.
பொது மக்கள் தங்கள் கனவு இல்லத்தை கட்டுவதற்காக பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை செலவழிக்கின்றனர். ஆனால் சில இடங்களில் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டின் கட்டுமானத்தை தரமில்லாமல் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ரூ.1½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீட்டின் தரம் மோசமாக இருப்பதை காட்டுவதற்காக வீட்டு உரிமையாளர் வீட்டு சுவற்றில் பென்சிலால் ஓட்டை போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கபீர் என்ற அந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் தனது வீட்டின் விலை மிகவும் அதிகம். ஆனால் கட்டுமானத்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பென்சிலால் கூட வீட்டு சுவரில் துளைகள் போட முடிகிறது என கூறியவாறு அவர், பென்சிலை வைத்து சுத்தியலால் சுவற்றில் தட்டுகிறார். அப்போது பென்சில் சுவற்றில் துளையிடும் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், வீடு கட்டும் போது கட்டுமான பணிகளை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக பதிவிட்டனர்.
- அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
- உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிற மாநிலங்களில் SIR-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்தி வைக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் அடுத்த மாதம் 9, 11-ல் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அதை ஒத்திவைக்க மட்டுமே கோருகிறோம் என்றார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிற மாநிலங்களில் SIR-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்க மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றார்.
இதையடுத்து இந்த இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக்கோரி தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






