என் மலர்tooltip icon

    இந்தியா

    • குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை'யை வடிவமைத்தார்.
    • சிற்பக் கலைக்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு, 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.

    புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் சுதர் காலமானார். அவருக்கு வயது 100.

    வயது முதிர்வு காரணமாக உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    பிப்ரவரி 19, 1925 அன்று மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதர் தனது திறமையால் சிற்பக் கலைஞராக உருவெடுத்தார்.


    குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' உள்ளிட்ட பிரமாண்ட சிலைகளை ராம் சுதர் வடிவமைத்திருந்தார்.

    சிற்பக் கலைக்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு, 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது. அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • லக்னோவில் போட்டி தொடங்குவதற்காக ரசிகர்கள் வீணாக காத்துக் கொண்டிருந்தார்கள்.
    • கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு தேவையான பார்வை தெளிவில்லை.

    கடும் பனி மூட்டத்தால் லக்னோவில் நடைபெற இருந்த 20 ஓவர் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    லக்னோவில் போட்டி தொடங்குவதற்காக ரசிகர்கள் வீணாக காத்துக் கொண்டிருந்தார்கள். வட இந்திய நகரங்கள் பெரும்பாலானவற்றில் காற்றின் தர குறியீடு (411) மோசமாக இருந்தது. இது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு தேவையான பார்வை தெளிவில்லை. காற்று தரக் குறியீடு திருவனந்தபுரத்தில் சுமார் 68 ஆக உள்ளது. இதனால் அங்கு போட்டியை நடத்த திட்டமிட்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
    • நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா மீதான விவாதம் நேற்றிரவு மக்களவையில் நடைபெற்றது.

    மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.

    மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று மசோதாவைத் தாக்கல் செய்தார்.

    திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே பேரணியாக நடந்து சென்று காங்கிரசின் கார்கே, கேசி வேணுகோபால், பா. சிதம்பரம், திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி, மற்ற பிற கட்சிகளின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். 

    • உறவினர் ஒருவரின் வீட்டுக்கும் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.
    • விலையுயர்ந்த செல்போனை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்திருக்கிறார். அப்போது அந்த மாணவிக்கு தனியார் பஸ் டிரைவரான தீபின் என்பவர் அறிமுகமானார்.

    கண்ணூர் அத்தாழக்குன்னு பகுதியை சேர்ந்தவரான அவர், தனது பஸ்சில் சென்று வந்த அந்த மாணவியிடம் தொடர்ந்து பேசி பழகி வந்திருக்கிறார். அதனை பயன்படுத்தி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

    மேலும் உறவினர் ஒருவரின் வீட்டுக்கும் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஆசைவார்த்தை கூறி மாணவியை, டிரைவர் தீபின் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அவர் உறவினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

    அதனை மாணவி வெளியில் கூறாமல் இருப்பதற்காக, விலையுயர்ந்த செல்போனை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனை மாணவி ரகசியமாக வைத்து பயன்படுத்தி உள்ளார். இந்த நிலையில் மாணிவியிடம் புதிய செல்போன் இருப்பதை அவரது குடும்பத்தினர் பார்த்துவிட்டனர்.

    அதுகுறித்து அவர்கள் விசாரித்தபோது, தனியார் பஸ் டிரைவரால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி பஸ் டிரைவர் தீபினை கைது செய்தனர்.

    மாணவியை தனியார் பஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், மாணவி பயன்படுத்திய செல்போனால் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
    • சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோலப்பள்ளி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட ரிசர்வ் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சுக்மா மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கிரண் சவால் தெரிவித்தார். அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.

    சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் சுக்மா, பிஜப்பூர், தாண்டிவாடா உள்பட 7 மாவட்டங்களில் 255 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் கரிதாபாத் மாவட்டத்திலும், சவுக்கி மாவட்டத்தில் 2 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டனர்.

    • பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
    • 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கீர்த்தி ஆசாத் மக்களவையில் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பயன்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் அந்த உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை.

    இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அனுராக் தாக்கூர் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.

    குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.

    இந்நிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கைக்குள் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் புகைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அவையின் சிசிடிவி பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக இன்று முதல் BS-6 தரமற்ற இயந்திர வாகனங்கள் வியாழக்கிழமை முதல் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக, மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.

    இந்த முடிவு டெல்லியின் எல்லை நகரங்களான குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டாவிலிருந்து தினமும் பயணிக்கும் சுமார் 12 லட்சம் வாகனங்களை நேரடியாகப் பாதிக்கும்.

    இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த 126 சோதனைச் சாவடிகளில் 580 காவல்துறையினரையும் 37 அமலாக்கக் குழுக்களையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

    பெட்ரோல் பம்புகளில் PUC விதியைக் கண்காணிக்க போக்குவரத்து, நகராட்சி மற்றும் உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குளிர்காலத்தில் டெல்லியின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 25 சதவீதம் வரை பங்களிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து, அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத அலுவலகத்தில் ஊழியர்களுடன் பணிபுரிய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளிப்பார். 

    • அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது?
    • இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.

    காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.

    'சட்ட ரத்து மற்றும் திருத்த மசோதா, 2025' மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் அவையால் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.

    மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மேக்வால், "சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.

    1925-ம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை, பம்பாய், கல்கத்தா மாகாணங்களில்  இந்து, பவுத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

    ஆனால், இந்த விதி முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடுகள் அரசியலமைப்பில் தடுக்கப்பட்டுள்ளன. அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது? இந்த சீர்திருத்தங்கள் காலனித்துவ மனநிலையில் இருந்து விடுதலையை நோக்கிய ஒரு படி" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்த மசோதா சட்டமானால், இந்திய டிராம்வேஸ் சட்டம், 1886, லெவி சர்க்கரை விலை சமநிலை நிதி சட்டம், 1976, மற்றும் பாரத் பெட்ரோல் கார்ப்பரேஷன் லிமிடெட் சட்டம், 1888 உள்ளிட்ட 71 சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

    மேலும், பொது ஆணைகள் சட்டம் 1897, சிவில் நடைமுறைச் சட்டம் 1908, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அமைப்பில் சொற்களஞ்சியத்தைப் புதுப்பித்தல் மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.   

    • காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
    • வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

    உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பர்தா அணியாத மனைவி மற்றும் 2 மகள்களை நபர் ஒருவர் கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஷாம்லியில் கந்த்லா எல்லைக்குட்பட்ட காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் டிசம்பர் 9 அன்று தாஹிரா சொந்த ஊர் சென்றுள்ளார். ஹிஜாப் அணியாமல் அவர் வீட்டை விட்டு சென்றதால் பரூக் ஆத்திரத்தில் இருந்துள்ளார். தாஹிரா வீடு திரும்பியதும் இதுகுறித்து பரூக் வாக்குவாதம் செய்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

     டிசம்பர் 10 ஆம் தேதி பரூக், வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனைத் தடுக்க முயன்ற 12 வயது மகளையும் சுட்டுக்கொன்றார். பின்னர், தனது 5 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 

    கொலை செய்த பிறகு, மூன்று உடல்களையும் வீட்டின் உள்ளே ஏற்கனவே திட்டமிட்டு தோண்டி வைத்த குழியில் புதைத்துவிட்டு, கடந்த சில நாட்களாக எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். தாஹிரா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என்று பரூக்கின் தந்தை நேற்று முன் தினம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

    இதைதொடர்ந்து நடந்த விசாரணையில் வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    போலீசார் விசாரணையின் போது, தனது மனைவி புர்கா அணியாமல் வெளியே சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாகப் பரூக் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நிதி நெருக்கடி மற்றும் பணப் பிரச்சனைகளால் தம்பதியிடையே ஏற்கனவே வாக்குவாதம் இருந்ததும் தெரியவந்தது. 

    இதற்கிடையே தாஹிராவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரூக் மீது கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

    • பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
    • "நிதிஷ் குமார் ஹிஜாப்பைத் தொட்டதற்கே இப்படியா? அவர் வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?"

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது நிகழ்ச்சி ஒன்றில் பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை கீழே இழுத்து, அவரது முகத்தை பார்த்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை, சுமார் 1,200 ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பீகாரில் நடைபெற்றது. அப்போது ஒரு பெண் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த நிதிஷ் குமார், திடீரென அந்தப் பெண்ணின் ஹிஜாபை கீழே இழுத்து முகத்தைக் பார்த்தார்.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

    சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கிரிராஜ் சிங் கூறுகையில், "அவர் செய்ததில் என்ன தவறு? ஒருவர் பணி நியமன ஆணை பெற வரும்போது, தனது முகத்தைக் காட்ட ஏன் பயப்பட வேண்டும்? வாக்களிக்கச் செல்லும்போது நாம் முகத்தைக் காட்டுவதில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

    முன்னதாக உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், "நிதிஷ் குமார் ஹிஜாப்பைத் தொட்டதற்கே இப்படியா? அவர் வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?" என்று மிக மோசமான முறையில் கருத்து தெரிவித்தார். அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் நிதிஷ் குமாரின் மனநிலை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளன. மெகபூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா போன்ற தலைவர்களும் நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • மகாத்மா காந்தி பெயரை எந்தவொரு திட்டத்திற்கும் சூட்டி அரசியல் செய்யக்கூடாது
    • மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா மீதான விவாதம் நேற்றிரவு மக்களவையில் நடைபெற்றது.

    மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.

    மசோதாவைத் தாக்கல் செய்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், "இந்தத் திட்டம் கிராமங்களை வறுமையற்றதாக மாற்றும் மற்றும் கிராமங்கள் சுயசார்பு அடைய வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும்" என்று கூறினார்.

    பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், "புதிய மசோதாவின் கீழ் வேலைவாய்ப்பு உறுதி 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஊதியம் 15 நாட்களுக்குள் என்பதற்குப் பதிலாக ஒரு வாரத்திற்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    எதிர்க்கட்சிகள் பெயர்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன, ஆனால் மோடி அரசு திட்டத்தைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

    முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்தது. தற்போது ஜன்தன் கணக்குகள் மற்றும் நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது"  என குறிப்பிட்டார்.

    மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவர் அல்லது துணைத் தலைவர் ஆகியோரின் பெயர்களை எந்தவொரு திட்டத்திற்கும் சூட்டி அரசியல் செய்யக்கூடாது என அரசியலமைப்பு விதிகள் கூறுவதாகத் பாஜக எம்.பி நிஷிகாந்த் தூபே தெரிவித்தார்.

    திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா பேசுகையில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம் அரசு அவரை அவமரியாதை செய்துள்ளது. அவரின் கிராம ராஜ்ய கனவை சிதைத்துள்ளது. அரசு யாரும் வளர்ச்சி அடைய கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது என்று பேசினார்.

    மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், கிராம சபைகளின் உரிமைகளைக் குறைக்கும் வகையிலும் இந்த மசோதா உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஜெய் பிரகாஷ் குற்றம் சாட்டினார்.

    இந்த மசோதா மீதான விவாதம் இன்றும் (வியாழக்கிழமை) தொடரும் என்றும், அமைச்சரின் பதிலுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ரெயில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை 2 மாதத்துக்கு முன் முன்பதிவு செய்கின்றனர்.
    • முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் நிலை ரெயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்படுகிறது.

    புதுடெல்லி:

    ரெயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை 2 மாதத்துக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அப்படி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வருகிறது.

    கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் சிரமப்பட்டனர்.

    இதனால், முன்பதிவு அட்டவணையை 8 மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து மண்டல ரெயில்வேயும் கடந்த ஜூலையில் இருந்து 8 மணி நேரத்துக்கு முன் அட்டவணையை வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், முன்பதிவு அட்டவணை வெளியிடும் நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளனர்.

    அதன்படி இனி காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு அறிவிப்பு செல்லும்.

    இதர ரெயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இதை உடனே அமல்படுத்த ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    ×