என் மலர்
இந்தியா
- அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார்.
- அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். புரன் குமார். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். புரன் குமாரின் மனைவி அம்னீத்குமாரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அவர் அரியானா அரசில் வெளியுறவு ஒத்துழைப்புத் துறை ஆணையாளர் மற்றும் செயலாளராக உள்ளார்.
அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார். கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்து அவர் நாடு திரும்பினார்.
இந்தநிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரியானா மாநில போலீஸ் டி.ஜி.பி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் மீது அம்னீத்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
போலீசில் அம்னீத்குமார் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
டி.ஜி.பி சத்ருஜீத் கபூர், ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் எனது கணவரை பொய்யான புகாரில் சிக்க வைக்க சதித்திட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது சாதாரண தற்கொலை வழக்கு அல்ல.
ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை சக்திவாய்ந்த மேலதிகாரிகளால் திட்டமிட்டு துன்புறுத்தியதன் நேரடி விளைவு ஆகும். அதிகாரம் மிக்கவர்களின் கொடுமையால் உடைந்து போன எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அம்னீத்குமார் கூறும்போது, பல ஆண்டு களாக எனது கணவர் அவமானம், துன்புறுத்தலை எதிர்கொண்டார். டி.ஜி.பி கபூரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அற்பமான புகாரில் தன்னை பொய்யாக சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டப் படுவதாக எனது கணவர் என்னிடம் தெரிவித்து இருந்தார் என்றார். அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
- தாலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு ரஷியா மட்டுமே
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை.
டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தாலிபான்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை முத்தாகி சந்திப்பார் என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஜியா அகமது தகால் தெரிவித்தார்.
இதுவரை தாலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு ரஷியா மட்டுமே. ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்ட நிலையில் இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் முத்தாகிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- கடந்த 30 ஆண்டுகால கோவில் ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியறுத்தினர்.
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அம்மாநில பா.ஜ.க.வினர் கோழிக்கோட்டில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். மேலும் பாலக்காட்டிலும் பாஜகவினர் போராட்டம் நடைபெற்றது.
இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக வேண்டும், கடந்த 30 ஆண்டுகால கோவில் ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது
பாலக்காடு மற்றும் கோழிக்கோட்டில் நடந்த போரட்டங்களின்போது பாஜகவினரை களைந்து செல்ல அறிவுறுத்தியும் களைந்து செல்லாததால் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாஜகவினர் பலர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே அமைச்சர் வாசவன் பதவி விலகக் கோரி இன்று சட்டமன்றக் கூட்டத்திலும் அமளி ஏற்பட்டது. இதனால் கேரள சட்டமன்றம் தொடர்ந்து நான்காவது நாளாக முடக்கியது. மேலும் அவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
- டவுன் பஸ்களின் பயணக் கட்டணம் கடந்த திங்கட்கிழமை முதல் கணிசமாக உயர்த்தப்பட்டது.
- சாலைப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நிர்வாக மேலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலத்தில் சுமார் 2,800 டீசல் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்றுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் 'பசுமை வரி' விதிக்கப்படுவதாக தெலங்கானா போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, டவுன் பஸ்களின் பயணக் கட்டணம் கடந்த திங்கட்கிழமை முதல் கணிசமாக உயர்த்தப்பட்டது.
இந்த பஸ் டிக்கெட் கட்டண உயர்வை கண்டித்து, சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணி நடத்தப்படும் என்று எதிர்க்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி அறிவித்திருந்தது.
பாரதிய ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் சந்திரசேகரராவின் மகன் கே.டி. ராமா ராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் உள்ளிட்டோர் ரெதிஃபைல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாலைப் போக்குவரத்துக் கழகம் வரை பஸ்சில் பயணிக்கும் வகையில் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நிர்வாக மேலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், ஐதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். கச்சிபவுலியில் உள்ள இல்லத்தில் கே.டி. ராமா ராவ், கோகபேட்டில் உள்ள இல்லத்தில் ஹரீஷ் ராவையும் காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் பி. சபிதா இந்திரா ரெட்டி, குத்புல்லாபூர் எம்எல்ஏ விவேகானந்த கவுட், எம்எல்சி ஷம்பிர்பூர் ராஜு உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் நிறைவேற்றுவோம்.
- பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
முதல்வர் நிதிஷ் குமார் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் முகமான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைவரையும் வியக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதி ஒன்றரை இன்று அறிவித்துள்ளார்.
அதாவது, அரசு வேலையில் உள்ளவர்கள் குடும்பங்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்பங்களிலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தேஜஸ்வி யாதவ் உறுதியளித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் என்டிஏ அரசாங்கத்தால் நிச்சயமின்மை நிலவுகிறது. எந்த ஒரு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.
ஆர்ஜேடி ஆட்சி அமைத்து 20 மாதங்களுக்கு பின் பீகாரில் ஒரு குடும்பம் கூட அரசு வேலை இன்றி இருக்காது. இது பீகாரில் நிலவும் வேலையின்மை பிரச்சனையை வேரோடு தகர்த்தெறியும். பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
- தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
- பல ஆப்பிரிக்க நாடுகளுக்கான மருந்துகளில் 90% இந்தியாவிலிருந்து செல்கின்றன.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே இரசாயனம் ரெஸ்பிஃப்ரெஷ் மற்றும் ரீலைஃப் சிரப்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருந்தை அடர்த்தியானதாக மாற்றவும் இனிப்புச் சுவைக்காகவும் பயன்படுத்தக் கூடியதாகும்.
தற்போது கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மத்திய பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருந்து உற்பத்தியில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்து வருகிறது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பொதுவான மருந்துகளில் 40% இந்தியாவிலிருந்து செல்கிறது. மேலும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கான மருந்துகளில் 90% இந்தியாவிலிருந்து செல்கின்றன.
இதனிடையே, இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கோல்ட்ரிஃப் மருந்து வெளிநாடுகளுக்கு எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்தியாவில் இவ்வகை மருந்துகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை ஒருங்குமுறைபடுத்துவதில் மிகுந்த இடைவெளி நீடிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது.
- இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
- இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும்.
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.
இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் (விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்), இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் நமது தொழில்கள் மற்றும் நுகர்வோர் பயனடைவார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குள், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வணிகக் குழு உங்களுடன் வருவதால், நீங்கள் இந்தியாவிற்கு வருகை தருவது, இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையில் புதிய வீரியத்தின் அடையாளமாகும்.
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மிகப்பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளன
இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளில் பரஸ்பர நம்பிக்கை நமது உறவுகளின் அடித்தளத்தில் உள்ளது. உலகளாவிய ஸ்திரமின்மையின் தற்போதைய சகாப்தத்தில், இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.
இன்றைய கூட்டத்தில், இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் உக்ரைன் மோதல் குறித்து விவாதித்தோம். உக்ரைன் மோதல் மற்றும் காசா பிரச்சினைகளில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறினார்.
- அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தனிப்பட்ட தரவை பாதுகாக்கும் தொழில்நுட்ப அம்சமாகும்.
வாட்சப் செயலுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி என்பதால் பலரும் அரட்டை செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரட்டை செயலியில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்று இணையத்தில் கேள்வி எழுந்தது.
இதற்கு பதில் அளித்த அளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "எங்கள் முழு வணிகமும் நாங்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம் மற்றும் அவர்களின் தரவை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.
எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் வரப்போகிறது. அனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. மேலும் உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம்.
எல்லா இடங்களிலும் எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கு அடுத்த பதிவில், "எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இப்போது சோதனையில் உள்ளது. நாங்கள் அதை நவம்பரில் வெளியிடப் போகிறோம்" என்று தெரிவித்தார்.
எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இல்லாதது மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரட்டை செயலி செயல்படுகிறது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
- பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது.
- இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.
இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், இரண்டு வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காசாவிற்குள் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் மற்றும் உதவி நுழைவுக்கான ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்தியஸ்தர்கள் தெரிவித்ததாக எகிப்திய அரசு தொடர்பான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைதி ஒப்பந்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிபர் டிரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்.
பணயக்கைதிகள் விடுதலையும், காசா மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட மனிதாபிமான உதவிகளும் அவர்களுக்கு நிம்மதியைத் தரும் என்றும், நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
- மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.
பலரும் எழுந்து ஓடிவந்தனர். வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, பலரும் கதவைத் தட்டினர்.
சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள்.
நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.
மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார் அவர். தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது.
- 15 நாளுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க. தலைவர் ஒருவர் (அமித் ஷா), வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பெயர்களை நீக்குவோம் என்பதைச் சொல்வதற்காக மேற்கு வங்கம் வந்தார்.
மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது. 15 நாளுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில், புதிய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா? இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா அல்லது பொதுமக்களின் உரிமைகளின் நலனுக்காக செயல்பட வேண்டுமா?
இவை எல்லாம் அமித் ஷாவின் விளையாட்டு. அவர் இந்த நாட்டின் செயல் பிரதமரைப் போல நடந்துகொள்கிறார். பிரதமர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். எனினும், இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன்.
அமித் ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என பிரதமரை நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நாள் அவர், உங்களுக்கு எதிராக மீர் ஜாபரைப் போல மாறுவார். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. எனது வாழ்க்கையில் பல அரசாங்கங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு திமிர்பிடித்த, சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் பார்த்ததில்லை என தெரிவித்தார்.
மீர் ஜாபர் 18-ம் நூற்றாண்டில் வங்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர். பிளாசி போரில் நவாப் சிராஜ் உத் தவுலாவைக் காட்டிக் கொடுத்து பின்னர் ஆங்கிலேயர்களின் உதவியுடன் மன்னரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதிகளை தேடும்போது திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயம்.
- இந்த இடத்தில் இரண்டு முறை எனகவுண்டர் நடைபெற்றுள்ளது.
பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வந்த இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் மாயமான நிலையில், அவர்கள் தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோகேர்நாக்கில் உளள் அஹ்லான் கடோல் என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இரண்டு வீரர்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானார்கள். இருவரையும் தேடும் பணியில் ஹெலிகாப்டர் உட்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அஹ்லான் கடோல், பயங்கரவாதத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் 2024 ஆகிய இரண்டு முறை பெரிய அளவில் என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.
கடந்த வரும் நடைபெற்ற சண்டையில் இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் கொல்லப்பட்டனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்ரவாதிகளை தேடும்போது இரண்டு அதிகாரிகள் உள்பட நான்கு வீரர்கள், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.






