என் மலர்
இந்தியா

மக்களவைக்குள் இ-சிகரெட் புகைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி? - வீடியோ வெளியிட்டு பாஜக புகார்
- பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
- 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கீர்த்தி ஆசாத் மக்களவையில் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பயன்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் அந்த உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அனுராக் தாக்கூர் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.
இந்நிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கைக்குள் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் புகைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவையின் சிசிடிவி பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






