என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #EdappadiPalanisamy
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது நாளாக கோவில்பட்டி, கயத்தாறு, செய்துங்கநல்லூர், ஸ்ரீவை குண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதால் ஏதேதோ சொல்லி வருகிறார். அவர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டம் நல்ல முறையில் பேணி பாதுகாக்கப்படுகிறது. சாதிச் சண்டை, மதச்சண்டை என எந்த சண்டையும் கிடையாது. அதனை வரவும் விட மாட்டோம். வந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.

    ஜெயலலிதா மறைந்தவுடன் கட்சி உடைந்து விடும். ஆட்சி கவிழ்ந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தார். அது நடக்காததால், பித்து பிடித்தவர் போல் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்.

    கொலை, பாலியல் வழக்கு உள்ளிட்ட கொடுங்குற்றங்களுக்கு தி.மு.க. நிர்வாகிகள் ஜாமீன் கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. கோடநாடு கூலிப்படையினருக்கு மு.க.ஸ்டாலின் துணை போகிறார். இதனால் அவருக்கு கூலிப்படை தலைவன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்.


    செய்துங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த போது எடுத்தபடம்

    இப்படிப்பட்ட தலைவர்கள் வந்தால் எதிர்காலத்தில் நாடு என்ன ஆகும். ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, முதலமைச்சர் மீது பொய் குற்றச்சாட்டு கூறுகிறார்கள் என்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள். அவர்களின் அராஜகத்துக்கு அரசு முடிவு கட்டும்.

    தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். ஆனால் மு.க.ஸ்டாலின் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பொய்யாக பேசி வருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

    ஜெயலலிதா மறைந்தாலும் அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் சொன்னதை இதுவரை நிறைவேற்றியது இல்லை. நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்னார்கள். எந்த விவசாயிக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

    தி.மு.க.வினர் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய்களை சொல்லி தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. இந்தியாவிலேயே மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வீடு இல்லா ஏழைகளுக்கு அடுக்குமாடி காங்கிரீட் வீடு கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. 14 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மைக்காக 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைத்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் மூலம் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalanisamy #ADMK #MKStalin
    ஆட்சி அதிகாரம் என்பது சுற்றக்கூடியது என்றும் அது தங்கள் கைகளுக்கும் நிச்சயம் வரும் என்பதால் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri #EC
    திருச்சி:

    திருச்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

    தேர்தல் ஆணையம் என்பது நாட்டிற்கு தேவையான சுதந்திரமான அமைப்பு. அமெரிக்காவில் இல்லாத சுதந்திரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. படிப்பறிவு இல்லாத சமூகத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக மாண்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆனால் சென்ற முறையும், இந்த முறையும் தேர்தல் ஆணையம் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.

    தேர்தலுக்கு முன் விவசாயிகள், வியாபாரிகள், ஏ.டி.எம்.களுக்கு எடுத்து செல்லும் பணம், பெண்கள் அணிந்து செல்லும் நகைகளை கைப்பற்றுவார்கள். ஆனால் தேர்தலுக்கு முதல் நாள், மறுநாள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

    எதுவும் செய்யாமல் இருப்பதால் ஆளும் கட்சியினர் தெருவில் செல்பவர்களுக்கு கூட பணம் கொடுக்கிறார்கள். இதுதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்தது. இதனால் தான் இந்திய தேர்தல் ஆணையம் பரிதாபமாக தோற்றுப்போயுள்ளது என கூறுகிறேன். இந்த முறை அது நடக்கக்கூடாது.



    தமிழகத்தில் துரைமுருகன் வீட்டில் மட்டுமே சோதனை நடக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினீர்களா? அவர்களின் வீடுகளில் எவ்வளவு பணம் உள்ளது என்பது நாட்டிற்கே தெரியும்.

    ஆனால் அங்கெல்லாம் சோதனை நடத்தாமல் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்துவது, உங்களின் புகழையும் பெருமையையும் கெடுப்பது. அவரை தோல்வி அடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை செய்கிறது. இது நியாயமாகாது.

    தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு. யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் இந்திய தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கை செய்கிறேன்.‌ இதுபோன்ற ஒரு சார்பான நிலையை எடுத்தால் வருங்காலத்தில் இதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டியது இருக்கும்.

    அதிகாரம் என்பது சுற்றக்கூடியது. அது மோடி, எடப்பாடி கையில் மட்டும் இருந்து விடாது. அது எங்கள் கைகளுக்கும் நிச்சயம் வரும். எனவே அதிகாரிகள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மாதத்துக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தால் ஏழைகள் வேலை செய்ய மாட்டார்கள் என்று பா.ஜ.க. கூறுகிறது. இது பிற்போக்கான மனநிலை. தேவையானவர்களுக்கு இலவசத்தை வழங்கியே தீர வேண்டும். அதைத்தான் காங்கிரஸ் கட்சி பேசுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #KSAlagiri #EC
    கோவையில் உள்ள தொண்டாமுத்தூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தப்பின் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில்  உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் வேனில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு,  மக்களவை தொகுதி  திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தினை ஆதரித்து  பேசியதாவது:

    இந்த கோவையைச் சேர்ந்தவர் தான் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. உள்ளாட்சி துறை என்றாலே என்ன என்பது தெரியாதவராவார். நானும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்துள்ளேன். மக்களை வழிநடத்தியுள்ளேன். ஆனால், இந்த துறையில் பல அக்கிரமங்களை வேலுமணி செய்திருக்கிறார்.

    மேலும் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதிலும், அவரால் உள்ளாட்சி தேர்தலையே சரிவர நடத்த இயலவில்லை. அவருக்கு ஊழல் தான் நோக்கம். ஊழல் செய்வதில் அவர் தான் நம்பர் ஒன். ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே மிஞ்சியவர். தமிழகத்திற்கு ஊழலிலே முதலிடம் வாங்கிக்கொடுத்தவர் இவர். இந்த ஊழல் ஆட்சி நிச்சயம் கவிழப்போகிறது. வருகின்ற தேர்தலில் இந்த ஆட்சி நிச்சயம் முடிவுக்கு வரும்.



    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலுமணி மேலே ஊழல் வழக்கு போடப்படும். ஊழலை விட மிகப்பெரிய துரோகம்,  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலே வேலுமணி மற்றும் அவரது கட்சி அமைச்சர்கள் வேலை செய்கின்றனர். கொடூரமாக பெண்களை சித்திரவதை செய்த பாவிகளை காப்பாற்றுகின்றனர். நிச்சயம் நமது கழக ஆட்சியிலே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து சிபிஐ விரைவாக விசாரிக்கும்.

    ஆனால், தலைவர் கலைஞர் ஆட்சியிலே,  பெண்களுக்கு வேலைவாய்ப்பில் சம உரிமை, சொத்துகளில் சம பங்கு, விதவைகள் மறு வாழ்வு திட்டம், மகளிர் சுய உதவி குழு திட்டம் என பல திட்டங்களை  கொண்டு வந்து பெண்களின் தரத்தினை உயர்த்தினார்.  உங்கள் வாக்குகளை நம் கழகத்தின் வேட்பாளராக இங்கு நிற்கும் சண்முக சுந்தரத்திற்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019
    கடலில் தாமரை மலராது அழுகிப்போய்விடும் என்றும் உதயசூரியன் தான் உதிக்கும் என்றும் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். #LoksabhaElections2019 #UdhayanidhiStalin #BJP
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் கனிமொழிக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மோடி ஆட்சி என்பது மோசடியான ஆட்சியாக இருந்தது. ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்னார். ஆனால் போட்டாரா? அது மாதிரி கருப்பு பணத்தை ஒழிப்பேன் என கூறினார். ஒழித்தாரா? நம்ம பணத்தை கார்ப்பரேட் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

    இப்போது தேர்தல் வந்ததையொட்டி தமிழகத்திற்கு மூன்று முறை மோடி வந்துள்ளார். தமிழ்நாட்டில் கஜாபுயல் உள்ளிட்ட எவ்வளவோ பிரச்சனையில் வரவில்லை. தூத்துக்குடியில் மக்களே நடத்திய போராட்டத்தை ஒடுக்கவேண்டும் என்று 13 பேரை சுட்டுக்கொன்றார்கள். மறந்து விடுவோமா? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? சுட்டுக்கொன்ற போது இரங்கல் அறிக்கை கூட தெரிவிக்கவில்லை. நீங்கள் ஏப்ரல் 18-ந்தேதி உதய சூரியனுக்கு வாக்கு அளித்தால் மோடி மட்டும் அல்ல. மோடியின் அடிமை ஆட்சிக்கும் முடிவு கட்டப்படும்.

    ஒரு படத்துக்கு கதாநாயகன், வில்லன் இருப்பர். நம்முடைய தேர்தல் அறிக்கை கதாநாயகன். மோடி வில்லன். தமிழிசை கடலில் தாமரை மலரும் என கூறினார். கடலில் தாமரை மலராது. அழுகிப்போய்விடும். கடலில் தாமரை மலராது. உதயசூரியன் உதிக்கும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பொள்ளாச்சி சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார் என்றால் மோடி வீட்டுக்கு போய்விடுவார். அதே போல் விளாத்திகுளம் இடைத்தேர்தலில் ஜெயக்குமாருக்கு ஓட்டு போட்டால் இ.பி.எஸ். வீட்டுக்கு போய்விடுவார்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். #LoksabhaElections2019 #UdhayanidhiStalin #BJP
    மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பாஜக பூத் அலுவலகத்தில் சுமார் 42 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #BJPBoothOffice #Siliguri
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்புடன் பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று சிலிகுரியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், சிலிகுரியில் உள்ள பாஜக பூத் அலுவலகத்தில் சுமார் 42 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுபற்றி இன்று அதிகாலை அந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தூக்கில் தொங்கிய சடலத்தை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பூத் அலுவலகத்தில் இறந்தவர் யார்? அவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019 #BJPBoothOffice #Siliguri
    தேர்தல் பிரசாரத்தின் போது ஆண் குழந்தை ஒன்றுக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் பெயர் சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019 #MinisterSengottaiyan
    கோபி:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோபி ஒன்றியம் பொலவக்காளிபாளையம், பெரியார் நகர், இந்திரா நகர், கடுக்காம்பாளையம் பகுதிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அவருடன் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.

    அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் நகர் பகுதிக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ்-பிரியா தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கேட்டுக்கொண்டனர். அந்த குழந்தை 10 மாதம் ஆன ஆண் குழந்தையாகும்.



    அதை கவனிக்காத அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டுகிறேன் என்று அறிவித்தார். அதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, எங்கள் குழந்தை பெண் குழந்தை அல்ல, ஆண் குழந்தை என்று கூறினார்கள். அருகில் இருந்தவர்களும் அமைச்சரிடம் விவரத்தை கூற, உடனடியாக சமாளித்துக்கொண்ட அமைச்சர், பிரசார வேனை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவருடன் வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர். அமைச்சர் குழந்தையை கையில் வாங்கி, ராமச்சந்திரன் என்று மீண்டும் பெயர் சூட்டினார்.

    ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் பெயர் சூட்டியதும், பின்னர் ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டி குழந்தையை வாழ்த்தியதும் ருசிகரமான சம்பவமாக அமைந்தது. #LokSabhaElections2019 #MinisterSengottaiyan
    திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற அரசு பேருந்தில், கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ElectionComission #MoneySeized
    தர்மபுரி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்து தகவல் கொடுத்துள்ளது.

    இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நடந்த தீவிரமான வாகன சோதனையில் ரூ.250 கோடிக்கு பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்படும் பணம் பற்றிய தகவல்களை சிலர் தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியமாக சொல்லி விடுகிறார்கள். அதன்பேரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்கிறார்கள்.

    காட்பாடி, பெரம்பலூரில் அப்படித்தான் சோதனை நடத்தி ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    அதே பாணியில் திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் ரூ.3½ கோடி பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இது பற்றிய விபரம் வருமாறு:-

    திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி நேற்று பிற்பகல் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த நரிப்பள்ளி அருகே உள்ள பையர் நாயக்கன் பட்டியில் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்தது. அந்த பைகளை எடுத்து திறந்து பார்த்தபோது அவற்றில் பேப்பர்களில் சுற்றப்பட்டு 200 ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது.



    அந்த பைகளில் இருந்த பணம் முழுவதையும் அதிகாரிகள் எண்ணி பார்த்தனர். அதில் ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 இருந்தது. அந்த பணம் அரூர் சட்டமன்ற தேர்தல் அதிகாரி புண்ணிய கோடி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அரூரை அடுத்த பையர்நாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்த பன்னீர் (45) மற்றும் கண்டக்டர் அரூரை அடுத்த வேடகட்டமடுவு அருகே உள்ள கட்டரசம் பட்டியை சேர்ந்த ராமு (37) ஆகியோரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

    அந்த பண கட்டுகள் அருகே அமர்ந்து பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடி கிராமத்தை சேர்ந்தவரும், திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் கண்டக்டராக பணியாற்றுபவருமான செல்வராஜ் என்பவர் அந்த பார்சல்களை கொண்டு வந்ததாகவும், அவை டிக்கெட் பண்டல் என்று அவர் கூறியதாகவும், அதற்கு அவர் லக்கேஜ் வாங்கவில்லை என்றும் கண்டக்டர் ராமு கூறினார்.

    செல்வராஜை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஆனால் தனக்கும் இந்த பணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் அதிகாரிகள் அவரை விடவில்லை. அவரை அழைத்து சென்று கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

    நள்ளிரவு வரை அவரது வீட்டில் சோதனை நடந்தது. இதில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏதேனும் சிக்கியதா என்று தெரியவில்லை.

    இதற்கிடையே பஸ்சில் வந்த பணக்கட்டுகள் அடங்கிய 7 பைகளில் ஒரு பையில் ஒரு கட்சியின் கரை உள்ள மப்ளரும், திருவண்ணாமலை மாவட்டம், வேட்ட வலத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் ரமேஷ் என்பவரின் பாங்கி பாஸ் புத்தகமும் இருந்தது. அந்த பாஸ் புத்தகத்தில் இருந்த செல் நம்பர் மூலம் ரமேசை வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி அவரை அதிகாரிகள் வரவழைத்தனர்.

    வேட்டவலத்தில் உள்ள அவரது வீட்டிலும் நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

    தனது பையும் பாங்கி பாஸ் புத்தகமும் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டதாக அவர் கூறினார். தனக்கும் பஸ்சில் வந்த பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

    அவரிடம் இன்று அதிகாலை வரை விசாரணை நடத்தி விட்டு அவரை விடு வித்து விட்டனர். வருமான வரித்துறை விசாரணைக்கு அழைக்கும்போது நேரில் வர வேண்டும் என்று கூறி சென்று விட்டனர்.

    கண்டக்டர் செல்வராஜ் மட்டும் அதிகாரிகளின் பிடியில் உள்ளார். அவரிடம் இன்றும் விசாரணை நடந்தது.

    முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு விநியோகிக்க 7 பைகளில் ரூ.3½ கோடியை கொடுத்து அனுப்பியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்கு பிறகுதான் இது உண்மையா என்று தெரியவரும்.  #ElectionComission #MoneySeized
    பா.ஜ.க. ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கறம்பக்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் முத்தரசன் கூறினார்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரசார பொதுக்கூட்டம் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நமது நாட்டில் இதுவரை நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கும், தற்போது நடைபெற உள்ள தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது.

    தற்போது நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு அளித்துள்ள பாதுகாப்பு பறிபோய் உள்ளது. இந்த நிலை, தொடர வேண்டுமா, இல்லை உண்மையான ஜனநாயக கட்சி, கருத்து சுதந்திரம் உள்ள அரசு அமைய வேண்டுமா என்பது தான் தற்போதைய பிரச்சினை.

    தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை பிரதமர் மோடி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார். எதிர்கட்சிகளை மிரட்ட வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் தவறாக கொண்டு செல்லப்படுகிறது. பா.ஜ.க. அரசின் கைப்பாவையாகவே எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறது.

    முதல்-அமைச்சர் பழனிசாமி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார். அரசுக்கு எதிராக கருத்து சொன்ன முகிலன் காணாமல் போய்விட்டார். திருமுருகன் காந்தி, கல்லூரி மாணவி வளர்மதி போன்றோர் மீது வழக்கு போட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியினர் தேர்தல் விதி முறைகளை மீறி வருகின்றனர். முதல்-அமைச்சர் பிரசாரத்தில் அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாக்குழு உறுப்பினர்கள் செங்கோடன், ராமதாஸ், நாராயணன், ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தங்கராசு நன்றி கூறினார். 
    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமரானால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும் என்று ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம் செய்தார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜியுடன் சென்று வாங்கல், குப்புச்சிப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:-

    நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாக அமையும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, விவசாயத்துக்கு தனிபட் ஜெட் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை பிரதமராக போகும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஏற்றுக் கொண்டு தேர்தல் வாக்குறுதியாக நமக்கு தந்துள்ளார். 

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டு தோறும் ரூ. 72 ஆயிரம் வழங்கும் உன்னத திட்டத்தை காங்கிரஸ்  அறிவித்துள்ளது. ராகுல் பிரதமரானால் நிச்சயம் மக்களுக்கு கிடைக்கும். கரூர் பாராளுமன்ற தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் மு.தம்பித்துரை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அவர் கொண்டு வந்த திட்டங்களை பற்றி விவாதிக்க தயாரா? நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களின் (மக்களின்) எதிர் காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் சிந்தித்து கை சின்னத்துக்கு வாக்களியுங்கள். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    பிரசாரத்தின் போது, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி, தி.முக. ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் பூவை ரமேஷ்பாபு மற்றும் திரளான கட்சியினர் உடனிருந்தனர்.
    பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதியுடன் காலாவதியாகி விடும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Congressmanifesto #May23 #Modi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 11,18,23,29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் பகுதிகளில் இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

    அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று மாலை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவத்தை தாழ்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதியுடன் காலாவதியாகி விடும் என்று தெரிவித்தார்.

    தற்போது இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றுவரும் இதே திடலில் வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து வந்து ஜனவரி 19-ம் தேதி உங்கள் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி  ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் என்னை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் கூட்டாக குரல் எழுப்பினர்.

    என்னை ஒழிப்பதற்கு ஏன் அவர்கள் ஒன்றுசேர வேண்டும். அவர்களுக்கு என்னை ஒழிக்க வேண்டியதன் அவசியம் என்ன? மோடி என்ன தவறு செய்து விட்டான்? ஏழைகளின் வீடுகளுக்கு இலவச மின்சாரம், கியாஸ் இணைப்புகளை வழங்கியது குற்றமா? அது குற்றம் என்றால் நான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் நக்சலைட்டுகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சட்டங்களை காங்கிரஸ் கட்சி எப்போதுமே மழுங்கடித்து வந்துள்ளது. நாங்கள் 1400 புதிய சட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். 

    பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதலை சந்தேகித்து ஆதாரம் கேட்பவர்கள் யார்? அது ஒரு போலி தகவல், நாடகம் என்று கேலி பேசியவர்கள், எத்தனை பயங்கரவாதிகளை கொன்றீர்கள் என்று தலை கணக்கு கேட்டவர்கள் எல்லாம் யார்? என்பது உங்களுக்கு தெரியும். நமது வீரர்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் இப்போதும் முயற்சிக்கிறது. அவர்களின் எண்ணம் நிறைவேற இந்த மோடி எப்போதுமே இடம் கொடுக்க மாட்டான்.

    காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளன. அவர்களின் தேர்தல் அறிக்கை மே 23-ம் தேதியுடன் காலாவதியாகி விடும். பிறகு எங்கள் ஆட்சியில் நமது படை வீரர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும் எனவும் மோடி குறிப்பிட்டார். #Congressmanifesto #May23 #Modi
    பாஜக தலைமையிலான ஆட்சியில் நாட்டில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி இந்த நாட்டின் காலாவதியான பிரதமர் மோடி என்று குறிப்பிட்டார். #Modi #Mamata #expirybabu
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்து வருகிறார். சிலிகுரி மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற இரு பிரசார கூட்டங்களில் அவர் இன்று பேசினார்.

    இதேபோல், கூச்பேஹார் மாவட்டத்தில் உள்ள டின்ஹட்டாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார்.

    தனது தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் கடன் தொல்லையால் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மம்தா தெரிவித்தார்.

    எனது தலைமையிலான அரசு இந்த மாநிலத்தில் விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. ஆனால், இங்கு இன்று பிரசாரம் செய்த மோடி, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் தடைக்கல்லாக இருப்பதாக கூறுகிறார்.

    நான் மோடியல்ல, எனக்கு பொய் சொல்ல தெரியாது. அவர் காலாவதியாகி விட்ட பிரதமர். தைரியம் இருந்தால் என்னுடன் அவர் ஒரே மேடையில் விவாதம் செய்யட்டும். அவரது கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். அதேபோல் எனது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் அவர் கூறினார். #Modi #Mamata #expirybabu
    சேலம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 340 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LoksabhaElections2019

    சேலம்:

    சேலம் இரும்பாலை பகுதியில் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான 340 சேலைகள் இருந்தது.

    வாகனத்தில் இருந்த வியாபாரி பழனிவேலிடம் விசாரித்த போது அந்த சேலைகள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து சரியான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LoksabhaElections2019

    ×