என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. #LokSabhaElections2019 #Duraimurugan #ITRaids
    சென்னை:

    வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதற்காக துரைமுருகன் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் துரைமுருகனுக்கு நெருக்கமானவராக கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான சிமெண்ட் கிடங்கில் சோதனை நடத்தினர். 

    இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும், சீனிவாசனின் சிமெண்டு கிடங்கில் ரூ.11.53 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சோதனை மற்றும் ஆவணங்களை கணக்கிடும் பணி முடிவடைந்த நிலையில், சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அறிக்கை அளித்தனர். 

    வருமான வரித்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்தபின், தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும். கைப்பற்றப்பட்ட பணம், வேட்பாளருக்கு தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. #LokSabhaElections2019 #Duraimurugan #ITRaids
    செங்கம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பைக்கில் கொண்டு சென்ற ரூ.72 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LoksabhaElections2019

    செங்கம்:

    செங்கம் பறக்கும்படை தாசில்தார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் செங்கம் அடுத்த பரமனந்தல் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டேங்க் கவரில் இருந்த பையில் ரூ.72 ஆயிரத்து 200 இருந்தது. இந்த பணத்திற்கு உண்டான ஆவணங்கள் எதுவும் பைக்கில் வந்தவரிடம் இல்லை.

    இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து செங்கம் தாசில்தார் பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LoksabhaElections2019

    அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற விட மாட்டோம் என தெரிவித்துள்ளார். #Congress #CitizenshipAmendment #AmendmentBill #RahulGandhi
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள போகாகாட் நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐக்கிய முன்னேற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    இந்த தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் புதிய கணக்கெடுப்பின்படி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். இந்த மசோதாவை எந்த வகையிலும் நிறைவேற விட மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிய தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை கூலி நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் எங்கள் ஆட்சியில் அமல்படுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்ந்து வழங்கப்படும். 

    உற்பத்தியில் அதிக வளர்ச்சி அடையும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

    முன்னர் எப்போதும் இல்லாத அளவில் இந்த நாட்டில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. எங்கள் ஆட்சியில் இளைஞர்கள் சுயதொழில்கள் தொடங்குவதற்கு கடனுதவி அளிக்கப்படும் என்றும் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். #Congress #CitizenshipAmendment #AmendmentBill #RahulGandhi
    ஜாதி, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார். #seeman #parliamentelection

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது-

    மாட்டுக்கே நீதி வழங்கிய மனுநீதி சோழன் வாழ்ந்த தமிழகத்தில் தற்போது அநீதி நடக்கிறது. சமூகம் சீர்கெட்டு கிடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. நன்னெறி கல்வி இல்லாததுதான் இதுபோன்ற சூழலுக்கு காரணமாக உள்ளது. மாணவர்களுக்கு நீதி, ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத்தரவேண்டும்.

    பெண்களை போற்றவேண்டும். பெண்களுக்கு மதிப்பு அளிக்காத இடம் முன்னேறாது. நாம் தமிழர் கட்சி தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 20 பெண்களை போட்டியிட வைத்துள்ளது.

    கல்வி தனியார் மயமாக உள்ளது. மருத்துவம் வியாபாரமாக உள்ளது. அரசு பள்ளியும், அரசு மருத்துவமனையும் இருக்கிறது. ஆனால், தரமில்லை. அரசு பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவைப்பதில்லை. ஏனென்றால், அரசு பள்ளியில் தரமில்லாத நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் அரசியல் தலைவர்கள் சிகிச்சை பெறசெல்வதில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாறும். நாம் தமிழர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் தருவதில்லை. உயர்ந்த கொள்கைகளை கொண்டுள்ளது.

    தமிழகத்தில் நீர் மேலாண்மை இல்லை. அதற்கான திட்டங்களும் இல்லை. மரங்களையும், இயற்கையையும் பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்கள் இல்லை. பேராபத்தை நோக்கி நாடு போய்கொண்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பல்லாயிர கணக்கான குளங்கள், நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும். கல்வி, பொருளாதாரம், மருத்துவத்துறைகளில் மாற்றங்கள் செய்யப்படும். மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிகளில் மக்கள் துயரங்களை மட்டுமே அனுபவித்து வந்தனர். அ.தி.மு.க.-, தி.மு.க. ஆட்சியிலும் அதே நிலைதான்.

    மக்களை பட்டினியினால் கொல்வதை விட பயங்கரவாதம் பெரியதல்ல. ஜாதி, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சி தமிழர் என்ற உணர்வுடன் அனைவரையும் இணைக்கும். எங்களது வேட்பாளர் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றிபெற்றால் தேங்காய் எண்ணெய் ஆலைகள், நார் தொழிற்சாலைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள் அரசு சார்பில் அமைக்கப்படும். வேளாண்மை தேசிய தொழில் ஆக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கோவை சோமனூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது-

    மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரே நாள் இரவில் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரி என அமல்படுத்தியது போன்று மீண்டும் ஏதாவது ஒன்றை செய்து மக்கள் தவிக்கும் நிலை உருவாகும்.

    எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் மத்தியில் வந்தால் வேளாண்மையை அரசு பணியாக மாற்றுவோம். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

    எந்த நாட்டில் டாஸ்மாக் கடையில் கூட்டம் குறைந்து இளநீர் மற்றும் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதோ அது தான் சிறந்த நாடு.

    திருச்சியில் தென்னக ரெயில்வேயில் 1705 பேருக்கு நடந்த தேர்வில் 1600 பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    எந்த இடத்திலும் தமிழனுக்கு மதிப்பு இல்லை. தமிழன் எங்கும், எதிலும் புறக்கணிக்கப்படுகிறான். வட மாநிலத்தவர்கள் எந்த வழியில் வந்தார்களோ அவர்களை அந்த வழியிலே விரட்டி அடிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். #seeman #parliamentelection

    கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும் என்று டாக்டர் கலாநிதி வீராசாமி உறுதி அளித்துள்ளார். #LokSabhaElections2019 #DMK

    சென்னை:

    வடசென்னை பாராளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி வாக்காளர்களை சந்தித்த போது உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    நான் வெற்றி பெற்றதும் கழக தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் உறுதி கூறினார். குறிப்பாக வடசென்னை பகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்றி மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும், பெரம்பூர் பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படும். விரிவாக்கப்பகுதிகளில் பாதாளச்சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் கலாநிதி வீராசாமி சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று எங்கள் வாக்கு உதயசூரியனுக்கே என்று உறுதிகூறினர். #LokSabhaElections2019 #DMK

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. அரசு கவிழும். மீண்டும் அம்மாவின் அரசு தமிழகத்தில் பொறுப்பேற்கும் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார். #ttvdinakaran #parliamentelection #tngovt

    கோவை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கோவையில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.அப்பாதுரையை ஆதரித்து பரிசு பெட்டியில் வாக்களிக்க கோரி பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா கோவில், வடவள்ளி, செல்வபுரம், உக்கடம் ஆத்துப்பாலம், போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ஆகிய இடங்களில் திறந்தவேனில் சென்றவாறு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி உதாரணம். நரேந்திர மோடியால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த ஆட்சி முடிவுக்கு வருவதை, மோடியின் டாடி தடுத்தாலும் முடியாது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தெருத்தெருவாக வந்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் அ.ம.மு.க. பக்கம் இருக்கிறார்கள்.

    ஆனால் டெண்டர் எடுப்பவர்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பின்னால் இருக்கிறார்கள். தொண்டர்களையும், மக்களையும் நம்பி அ.ம.மு.க. தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த பாராளுமன்ற தேர்தல் கல்லா பெட்டிக்கும், பரிசு பெட்டிக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி மதம், சாதிகளால் மக்களிடையே பிரிவினையை தூண்டும் கூட்டணி. தி.மு.க. கூட்டணி தமிழகத்தை ஏற்கனவே ஏமாற்றிய கூட்டணி. மத்திய அரசின் தவறான ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. துடியலூர், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இதற்கு காரணம் காவல் துறையினர் முதல்-அமைச்சர் பாதுகாப்பிற்காக சென்றே சோர்ந்து போய் விட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தவில்லை. பல திட்டங்கள் அறிவிப்போடு நின்று விட்டன. அத்திக்கடவு -அவினாசி திட்டம் மேட்டுப்பாளையம், காரமடை கவுசிகா நதி ஆகியவற்றை இணைத்து நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை.

    எங்களுக்கு குக்கர் சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் வேறு பொது சின்னம் தான் வழங்க கோர்ட்டு முன்வந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட சின்னங்களில் நாங்கள் பரிசு பெட்டி சின்னத்தை தேர்ந்தெடுத்தோம். பரிசு பெட்டி சின்னம் ஜெயலலிதாவின் சின்னம். ஒவ்வொரு சம்பவத்திலும் மத்திய, மாநில அரசுகள் எங்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டன.

    ஆனால் அதையும் மீறி கடைசி நேரத்தில் பரிசு பெட்டி சின்னத்தை பெற்று தேர்தலில் போட்டியிடுகிறோம். ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அமைத்தது மெகா கூட்டணி இல்லை. அது மோசடி கூட்டணி. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. அரசு கவிழும். மீண்டும் அம்மாவின் அரசு தமிழகத்தில் பொறுப்பேற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவர் போத்தனூரில் பேசி முடித்ததும் இரவு 10 மணி ஆகி விட்டது. தேர்தல் விதிகளின் படி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. எனவே டி.டி.வி. தினகரன் கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ், சிங்காநல்லூர், சூலூர் பஸ் நிலையம் வழியாக பல்லடம் சென்றடைந்தார். அப்போது அவர் பேசாமல் வேனில் இருந்தபடி கையை அசைத்தவாறு சென்றார். முன்னதாக கோவை வடவள்ளியில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மு என்று டி.டி.வி.தினகரன் பெயர் சூட்டினார். #ttvdinakaran #parliamentelection #tngovt

    மேற்கு வங்காளம் மாநிலம் வளர்ச்சி அடைய முடியாமல் வேகத்தடை போல் மம்தாபானர்ஜி செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Mamata #speedbreakerMamata #Modi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல்
    நடைபெறும் நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்து வருகிறார்.

    சிலிகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

    காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யப் போவதாக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி நமது ராணுவ வீரர்களின் கை, கால்களை கட்டிப்போட்டு அவர்களை கையாலாகாதவர்களாக முடக்கி வைக்க முயற்சிப்பதாக மோடி குற்றம்சாட்டினார்.

    பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு உள்பட மத்திய அரசின் எந்த திட்டங்களின் பலன்களும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஏழை,எளிய மக்களை வந்தடைய முடியாதவாறு உங்கள் முதல் மந்திரி மம்தா பானர்ஜி முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளார்.



    மேற்கு வங்காளம் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அவர் வேகத்தடையாக செயல்படுகிறார். இந்த வேகத்தடை ஒழிக்கப்பட வேண்டும். இந்த மாநிலம் வேகமாக முன்னேற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார். #Mamata #speedbreakerMamata  #Modi
    தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்  ஜெயவர்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #ADMK

    சென்னை:

    தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்  ஜெயவர்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜெயவர்தன் தொகுதி மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர். அதுமட்டுமன்றி தொகுதி மக்களின் நாடி நரம்புகளை உணர்ந்தவர். அதற்கு ஏற்ப திட்டங்களை வாதாடி போராடி பெற்று தரக்கூடிய திறமைமிக்க பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.

    இதுபோன்ற பாராளுமன்ற உறுப்பினர் பணி என்பது இந்தத் தொகுதிக்கு மட்டும் அவசியம் அல்ல. வரும் நாட்களில் தமிழகத்துக்கும் அவசியம் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன் அவருடைய ஆற்றலை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எம்.ஜி.ஆர். நகரில் ஜெயவர்தனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கப் போகிறது. இந்தியாவிலேயே ஒரு இளைஞருக்கு 26 வயதிலேயே பாராளுமன்ற தேர்தலில் நிற்கக் கூடிய வாய்ப்பை புரட்சித்தலைவி கொடுத்து அவரை டெல்லிக்கு அனுப்பி அவரும் பாராளுமன்றத்தில் வரலாறு படைத்த நிகழ்வு தமிழகத்தில் இருக்கிறது.

    இந்த இளைஞர் மீண்டும் பாராளுமன்றத்துக்குசெல்ல வேண்டும் அவருக்கு சாதாரண வெற்றியை இந்த தொகுதி மக்கள் கொடுக்கக் கூடாது. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற வேட்பாளர் ஜெயவர்த்தன் என்பதை 100 சதவீதம் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்கு. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. எனவே மக்கள் விரும்பும் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, பகுதி செயலாளர் மலைராஜன், ஏ.எம்.காமராஜ், வட்ட செயலாளர்கள் கணேசன், கிருஷ்ணமூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர் லோகநாதன்,தேமுதிக தினகரன், பாஜக டால்பின் ஸ்ரீதர், தமாகா சத்யநாராயணன், கொட்டி வாக்கம் முருகன், சைதை மனோகரன், புதிய நீதி கட்சி எஸ்.என்.ரமேஷ், புரட்சிபாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #ADMK

    அருணாச்சல பிரதேசத்தில் முதல்வரின் வாகன அணிவகுப்பின்போது ரூ.1.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #ArunachalCM
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு மாநிலங்களில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பாஜக பண பலத்தைப் பயன்படுத்துகிறது. அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் நகரில் நேற்று இரவு முதலமைச்சர் பீமா காண்டு, துணை முதல்வர் சாவ்னா மெயின், பாஜக மாநில தலைவர் தபீர் காவ் ஆகியோர் சென்றபோது, அவர்களுடன் வந்த வாகன அணிவகுப்பை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


    பிரதமர் நரேந்திர மோடி பாசிகாட் நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று காலை உரையாற்றினார். இதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பணம் மோடியின் பொதுக்கூட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது?

    எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி, அருணாச்சல முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சாவ்னா மெயின் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யவேண்டும். முதல்வர் மற்றும் துணை முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பாஜக தலைவர் தபீர் காவ், அருணாச்சல் மேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ArunachalCM
    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். #LokSabhaElections2019 #DMK

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ. தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம், பழவன்தாங்கல். தாம்பரம் ஆகிய பகுதியில் வீதிவீதியாக மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: -

    டி.ஆர்.பாலு மிசா கொடுமையை அனுபவித்தவர் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர்.மேலும் பல நல்ல திட்டங்களை செய்திட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.அதிமுக மத்திய அரசிடம் கைகட்டி சேவகம் செய்கிறது.

    நீட் தேர்வில் பிஜேபியும், அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு துரேகம் இழைத்துவிட்டது. பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றிட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை லட்சக்கணக்கான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்திடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மாசுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி. எஸ்ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #DMK

    பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேப்போல தேர்தல் விதிமீறல்களை அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி தாஜ் நிஷா தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சம்பவத்தன்று தக்கலை அருகே மேட்டுக்கடை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், எந்தவித அனுமதியும் பெறாமல் திறந்தவெளி ஜீப்பில் கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டும், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #LokSabhaElections2019 #PonRadhakrishnan

    மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #PMK

    வில்லிவாக்கம்:

    மத்திய சென்னை தொகுதி பா.ம.க. வேட்பாளர் முனைவர் சாம்பாலை ஆதரித்து பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்ணா நகர் தொகுதி சூளைமேடு, அண்ணாநகர் சாந்திகாலனி போன்ற பகுதிகளில் திறந்த வேனில் பொதுமக்களிடையே வாக்குசேகரித்தார், அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் . கோகுல இந்திரா, மாணவரணி செயலாளர், எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி.. மாவட்ட செயலாளர்கள். டி.நகர் சத்யா எம்.எல்.ஏ,பா.ம.க. வி.ஜே.பாண்டியன், பாரதிய ஜனதா கட்சி மா..ஜெயசங்கர், தமிழ் மாநில காங்கிரஸ், தே.மு.தி.க, உட்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் சென்று ஆதரவு திரட்டினார்.

    அன்புமணி ராமதாஸ் பேசும்போது, நாங்கள் அமைத்துள்ள கூட்டணி மக்கள் நலனுக்கான கூட்டணி கொள்கை கூட்டணி வன்னியர் சொத்துக்களை நாங்கள் அபகரித்து உள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார்.

    நாங்கள் சி.பி .ஐ விசாரணைக்கு தயாராக உள்ளோம்,விசாரணையின் முடிவில் நாங்கள் குற்றவாளி இல்லை என்று நிருபித்து விட்டால் ஸ்டாலின் தலைவர் பதவியை விட்டு விலக தயாரா,? நிலையான ஆட்சிக்கு ஊழலற்ற நிர்வாகத்திற்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMK

    ×