என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றால் மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்பது குறித்து தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பதில் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #DMK #Kanimozhi
    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரான கனிமொழி ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    தலைவர் கருணாநிதி சுமார் 50 ஆண்டுகளாக தி.மு.க.வை வழிநடத்தி சென்றதுடன் ஒவ்வொரு தி.மு.க. உறுப்பினரோடு கலந்து இருந்தார். அவர் ஒரு வலுவான வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். நான் மட்டும் அல்ல, எனது சகோதரரும் தலைவர் இல்லாமல் ரொம்பவே தவிக்கிறோம்.

    என்னிடம் எப்போதும் தலைவர் வெளிப்படையாக பேசுவார். அரசியலை விட மற்றவற்றை அதிகமாக பேசுவார். அவரோடு உணர்ச்சி பூர்வமான பந்தம் இருந்தது. குறிப்பிட்ட வயது வரும் நேரத்தில் எல்லோருமே பெற்றோரை இழக்க வேண்டியது உள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் எப்படி பேச வேண்டும் என்பதில் வித்தியாசமான கோணத்தில் யோசித்து ஆலோசனை சொல்வார். அவர் இல்லாததால் இதை இழக்கிறேன்.

    ஆனால் இப்போது அந்த இடத்தில் எனது சகோதரர் மு.க.ஸ்டாலின் இருந்து வழிகாட்டுகிறார். எனக்கு சில சந்தேகங்கள் வரும்போதும், ஆலோசனைகள் தேவைப்படும்போதும் அவர் உதவுகிறார்.

    காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் இருந்து பெண் மந்திரி நியமிக்கப்படுவாரா? என்பது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. பல கட்சிகளும், பெண் வேட்பாளரை நிறுத்தி உள்ளன. அவர்களில் ஒருவர் மத்திய மந்திரி ஆகலாம். இதுபற்றி இரு கட்சி தலைவர்களும் முடிவு செய்வார்கள்.

    எனது மகன் பள்ளி கல்வியை முடித்து விட்டான். 2ஜி வழக்கும் முடிவுக்கு வந்து விட்டது. இந்த இரு வி‌ஷயங்களும் எனது நேரத்தை அதிகம் எடுத்துக்கொண்டன. மேலும் கட்சி பணியில் பாராளுமன்ற பணிகளும் இருந்தன.

    இப்போது மக்களுக்கு பணியாற்ற அதிக நேரம் கிடைத்துள்ளது. இதை உகந்த நேரமாக கருதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். எப்போது நான் அரசியலுக்கு வந்தேனோ அப்போதில் இருந்தே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது எனது எண்ணமாக இருந்தது.

    இது சம்பந்தமாக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கூறும்போது, இது வித்தியாசமானதாக இருக்கும். விரும்பினால் போட்டியிடலாம் என்று கூறி இந்த வாய்ப்பை அளித்தார். உரிய ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.

    எனது தாயார் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால்தான் நான் தூத்துக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுவதற்கு எதிர்க்கட்சி வேட்பாளர் தமிழிசை பதில் கூறி இருக்கிறார்.



    என்னை எந்த சாதியையும் சாராதவர் என்று அவரே கூறி இருக்கிறார். இப்படி அவர் சொன்னதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது தந்தையோ, எனது சகோதரரோ எந்த சாதிக்காகவும் பிரதிநிதியாக இருந்தது இல்லை. அப்படி இருக்க நான் மட்டும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக எப்படி இருக்க முடியும்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டும்தான் வேலைவாய்ப்புகளை தருவதாகவும், வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாகவும் கூற முடியாது. இங்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. பலவகையில் வளர்ச்சிகளை உருவாக்க முடியும். பலகோடி பனை மரங்கள் இங்கு உள்ளன. இதன் மூலம் பனை தொழிலை உருவாக்கலாம். ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தலாம். ஸ்டெர்லைட்டை பொறுத்தவரை மக்கள் இது செயல்படுவதை விரும்பாததால் அது இங்கு தேவை இல்லை.

    நான் எம்.பி.யாக தேர்வானால் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். துறைமுகம் மேலும் மேம்படுத்தப்படும். தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவேன். தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன்.

    இவ்வாறு கனிமொழி கூறினார். #LokSabhaElections2019 #DMK #Kanimozhi
    வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தக்கூடாது என்று சென்னையில் இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையம் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #LoksabhaElections2019 #ElectionCommission #ITRaids
    சென்னை:

    தேர்தல் கமி‌ஷனரை சந்தித்த பிறகு அரசியல் கட்சி பிரமுகர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

    அமைச்சர் ஜெயக்குமார் (அ.தி.மு.க.):-

    நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஆனால் தி.மு.க. 2ஜியில் சம்பாதித்த ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள்.

    வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணமும் புது நோட்டுகளாக உள்ளதால் எந்த வங்கியில் யார் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம். அந்த நபருக்கும், துரைமுருகனுக்கும் என்ன நெருக்கம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

    வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தக்கூடாது. வாக்குச் சாவடிகளுக்கும், வாக்காளர்களுக்கும் கொடுப்பதற்காக அந்த பணத்தை வைத்திருந்தது தெரியவந்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் வலியுறுத்தி உள்ளேன்.

    திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தினாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. இப்போது நடத்தினாலும் சரி, பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே நடத்தினாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும்.

    கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் பெயரை சொல்லி அவருக்கு களங்கம் கற்பிக்க கூடாது என்று கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக மேடையில் ஏறி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு களங்கம் கற்பித்து வருகிறார். இது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். இதுகுறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்.

    சென்னையில் குடிசைகளில் தங்கி இருந்தவர்களை அகற்றி குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஓட்டு பழைய தொகுதிகளிலேயே உள்ளது. எனவே அவர்களை சிறப்பு வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

    வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே பணம் பதுக்கி வைத்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையும் தேர்தல் கமி‌ஷனில் எடுத்து சொல்லி இருக்கிறோம். பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    திருமலைசாமி (பா.ஜனதா):-

    வாக்காளர்களுக்கு பண வினியோகம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் நண்பர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பெட்டிபெட்டியாக பிடிபட்டுள்ளது. எனவே அந்த வேட்பாளரை தகுதி இழப்பு செய்ய வேண்டும். அவர் போட்டியிடாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்தபோது பயங்கரவாத சக்திகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலத்த காயம் அடைந்தனர். எனவே எங்களது வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் துணை ராணுவப்படை நிறுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு):-

    தமிழக கவர்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டு பேசுகிறார். எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டங்களில் தேர்தல் முடிந்ததும் ரூ.2000 வழங்கப்படும் வங்கி கணக்குகளுக்கு பணம் வந்துவிடும் என்று பிரசாரம் செய்கிறார். இது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு நிகரான செயலாகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

    வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டி தேர்தல் பணிகளை செய்யவிடாமல் முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். மகாத்மாகாந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளை துணி வைத்து மூடுகிறார்கள். கொடிமரங்கள் அகற்றப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.

    ஆர்.தாமோதரன் (காங்கிரஸ்):-

    இந்த தேர்தலோடு தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலையும் உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் வருமானவரி சோதனையை நடத்துகிறார்கள். இது எதிர்க் கட்சிகள் மீது ஏவப்படும் அடக்குமுறையாகும். இப்போது கோடைகாலமாக உள்ளதால் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சரியான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கேட்டுள்ளோம். தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் இன்றி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

    கலைவண்ணன் (திரிணாமுல் காங்கிரஸ்):-

    மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தையும் நீட்டித்து தர வேண்டும். வேலூரில் துரைமுருகனின் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுகட்டாக பணம் பிடிபட்டுள்ளதால் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #LoksabhaElections2019 #ElectionCommission #ITRaids
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பி.வெற்றிவேல் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வீதி வீதியாகஆதரவு திரட்டி வருகிறார். #LokSabhaElections2019 #AMMK

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பி.வெற்றிவேல் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வீதி வீதியாகஆதரவு திரட்டி வருகிறார்.

    கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஆர்.வி.நகர், சீதாராம்நகர், கட்டம்மன் தெரு, நாராயணசாமி தோட்டம், ஜம்புலி நியூ காலனி உள்ளிட்ட பல இடங்களுக்கு ஆட்டோவில் சென்று ஓட்டு சேகரித்தார்.

    கொடுங்கையூர் மக்கள் பிரச்சினையில் அக்கறை கொண்ட அவர் தன்னை மீண்டும் தேர்வு செய்து அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    வீதி வீதியாக சென்ற வேட்பாளர் பி.வெற்றிவேலுக்கு பெண்கள் வீடுகளின் மாடியில் இருந்து மலர்களை தூவி வரவேற்றனர். மீண்டும் வெற்றிவாகை சூட வேண்டும் என்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    அவருடன் கூட்டணி கட்சி தொண்டர்கள், மகளிர்கள் திரளாக சென்று வாக்கு சேகரித்தனர். நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன், எஸ்.எம்.மாரிமுத்து, பி.சி.ராஜு உள்ளிட்டபலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.#LokSabhaElections2019 #AMMK

    எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது என்று பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    தாம்பரம்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போரூர், ஸ்ரீபெருமந்தூர், பல்லாவரம், கீழ்கட்டளை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. ஸ்ரீபெருமந்தூரில் மூடிய அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்படும் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும்” என்றார்

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராசேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் வெங்கட்ராமன், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், வெங்கடேசன் ஐ.நா.கண்ணன், மாவட்ட செயலாளர் வினாயகம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், பா.ஜனதா தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேத சுப்ரமணியம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தாம்பரம் மணி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் சுரேஷ், பல்லாவரம் நகரமன்ற துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசேகரன், விஸ்வநாதன், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் சந்திரசேகர், ராஜா, வேல் விழி, ஞானசேகரன், பழனி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடசென்னை தொகுதி வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். #LokSabhaElections2019 #AMMK

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடசென்னை தொகுதி வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திறந்த ஜீப்பில் சென்று பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

    ஒவ்வொரு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். டி.டி.வி. தினகரனின் ஆசி பெற்ற வேட்பாளரான தனக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி ஆதரவுடன் வாக்கு சேகரித்த பி.சந்தான கிருஷ்ணனுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்தனர்.

    புதிய சின்னமான பரிசு பெட்டகத்தை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பரிசு பொருள் போன்று பெட்டியை செய்து அதனை சுற்றி கலர் தாள் மூலம் சுற்றி ‘பேக்’ செய்திருந்தனர்.

    இது வாக்காளர்களை கவர்வதாக அமைந்தது. பிரசாரத்தில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.எஸ்.பாபு, பகுதி செயலாளர் சுந்தர், ஆனந்தன், டி.வி.நாசர், காவேரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #AMMK

    பெரம்பூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக ஆர்.டி.சேகர் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #DMK

    சென்னை:

    பெரம்பூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக வக்கீல் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார்.

    கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர் இப்போது அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரசாரம் செய்கிறார். மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்ந்தால்தான் தமிழக மக்களுக்கு விடிவு, ஏழைகள் வாழ்க்கை தரம் உயரும் என வீடு வீடாக ஆதரவு திரட்டினார்.

    35-வது வட்டத்தில் ஆர்.டி.சேகர் வாக்கு சேகரிக்க சென்ற போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், தேர்தல் பொறுப்பாளர்கள் மீ.அ.வைத்திலிங்கம், பாலவாக்கம் சோமு, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.மகேந்திரன், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெயராமர், ஹரிதாஸ் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #DMK

    வயநாடு பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் துஷார் வெள்ளப்பள்ளி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #NDAcandidate #ThusharVellappally #Wayanad
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலத்தில் வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என அமித் ஷா சமீபத்தில் அறிவித்தார்.


    இந்நிலையில், வயநாடு தொகுதி தேர்தல் அதிகாரியான அம்மாவட்ட கலெக்டரிடம் துஷார் வெள்ளப்பள்ளி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் பாஜக, பாரத் தர்ம ஜன சேனா கட்சி தொண்டர்களுடன் அவர் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவையும் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துஷார் வெள்ளப்பள்ளி வயநாடு தொகுதியில் உள்ள முஸ்லிம் ஓட்டுகளை குறிவைத்து ராகுல் காந்தி இங்கு போட்டியிடுவதாக குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை இந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். #LokSabhaElections2019 #NDAcandidate #ThusharVellappally #Wayanad
    காங்கிரஸ் கட்சியினர் 48 வயதாகும் பிரியங்கா காந்தியை 'அழகிய இளம்பெண்ணாக' முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்வதாக கேரள மாநில பாஜக தலைவர் பி.எஸ் ஸ்ரீதரன் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். #KeralaBJPPresident #PriyankaGandhi
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலையொட்டி, காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார். உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



    இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை பிரியங்கா காந்தி குறித்து பேசுகையில், 'காங்கிரஸ் கட்சி சீரழிவு நிலையில் உள்ளது. 48 வயதாகும் பிரியங்கா காந்தியை 'அழகிய இளம்பெண்ணாக' முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  நாட்டில் பிரிவினைவாதத்தினை ஆதரிக்கும் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவை நாடியுள்ளார்' என கூறினார்.

    சபரிமலை விவகாரத்தை முன்வைத்து கேரளாவில் பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறும் என சமீபத்தில் பி.எஸ் ஸ்ரீதரன் பிள்ளை கூறினார். மேலும் இவர் ஏற்கனவே பெண்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. #KeralaBJPPresident #PriyankaGandhi 

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019
    சென்னை:

    சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் வாகன சோதனையை முடுக்கி விட்டுள்ளனர்.

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு காரில் குவியல் குவியலாக தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தன. 188.75 பவுன் தங்க நகை காணப்பட்டது. 142.295 கேரட் வெள்ளி நகை இருந்தது. ரூ.75 லட்சம் மதிப்பிலான இந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    காரில் இருந்தவர்கள் நகைக்கடைகளுக்கு இந்த நகைகளை எடுத்துச் செல்வதாக கூறினார்கள். இருப்பினும் போலீசார் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை போலீசார் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

    கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சோதனையில் காரில் இருந்த 80 வெளிநாட்டு மதுபாட்டில்களும், 4 எல்.இ.டி. தொலைக்காட்சிகளும் பிடிபட்டது.

    உடனடியாக பறக்கும் படையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பறக்கும் படை அதிகாரி ஹார்டின் ஓசாரியா காரில் இருந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார், ஸ்டாலின் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விமான நிலையத்தில் இருந்து பொருட்களை எடுத்து வந்ததாகவும், வேறு வியாபாரியிடம் விற்பதற்காக கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். ரசீது ஏதும் இல்லாததால் பொருட்கள் அனைத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுங்கையூர் சகாயம் நகர், ரிஸ்வானி சாலை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது. சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.4 லட்சத்து 24 ஆயிரத்து 460 ரொக்கப் பணம் இருந்தது.

    இதுபற்றி காரில் இருந்த கொடுங்கையூரைச் சேர்ந்த டைல்ஸ் கம்பெனி உரிமையாளரிடம் விசாரித்தனர். ஆனால் அவரிடம் பணத்திற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    புரசைவாக்கத்தில் ராஜ்பத் ஆசீர் என்பவரிடம் ரூ.1.75 லட்சம் பிடிபட்டது.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 90 மற்றும் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம், 200 அரேபியன் ரியால்ஸ் ஆகியவை சிக்கியது.

    பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் மற்றும் 86 ஆயிரத்து 25 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அரூரில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 625 சிக்கியது.

    மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வேனுக்குள் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகளும், நகைகளும் இருந்தன. அவற்றின் எடை 47 கிலோ. மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.

    வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை.

    அதனால் 47 கிலோ தங்க நகைகள், வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    வாக்காளர்களுக்கு சப்பாத்திக்குள் பணத்தை மறைத்து வைத்து கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா வேண்டுகோள் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #RoopaIPS #CashForVote
    பெங்களூரு:

    வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் விடிய விடிய சோதனை செய்து பல வகைகளில் யோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தை விட பல மடங்கு அரசியல்வாதிகள் யோசித்து வருகின்றனர். பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வெவ்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படலாம். அவ்வகையில், இப்போது சமூக வலைத்தளம் மூலம் பரவும் ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்த வீடியோவை கர்நாடகாவை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, தனது டுவிட்டரில் பதிவிட்டு, தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், சப்பாத்தி மாவை உருட்டும் பெண் ஒருவர், அதற்குள் ரூபாய் நோட்டை வைத்து உருட்டி சப்பாத்தி செய்கிறார். பின்னர் அடுப்பில் வேக வைத்த அந்த சப்பாத்தியை பிரித்து பார்த்தால், ரூபாய் நோட்டு எந்தவித சேதமும் இன்றி அப்படியே இருக்கிறது.



    இதனை சுட்டிக்காட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா, இதுபோன்று நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வழி இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவர்தான் சசிகலா சிறையில் சொகுசாக இருந்ததை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #RoopaIPS #CashForVote
    காங்கிரஸ் கட்சி பொய் பித்தலாட்டம் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டு இருப்பதாக என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். #LokSabhaElections2019 #PMModi
    இட்டாநகர்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பாசிகாட்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நேர்மையானதாக இல்லை. முழுவதும் பொய்கள் நிறைந்துள்ளது. சொல்லப்போனால் இது தேர்தல் அறிக்கையே இல்லை. ஒட்டுமொத்தமான போலி ஆவணம்.



    இந்த தேர்தலில் காங்கிரசில் வெற்றி பெற கடுகளவும் வாய்ப்பு இல்லை என்பதால் தவறான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். இதனால் தான் பொய் பித்தலாட்டம் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    ஓட்டுக்காக அப்பாவி விவசாயிகளை ஏமாற்ற முயற்சித்து இருக்கிறார்கள். நாங்கள் ஒரு போதும் இது போன்று விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது இல்லை. விவசாயிகளுக்காக சிறந்த திட்டங்களை உருவாக்கினோம்.

    இப்போது நடப்பது நம்பிக்கைக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் தேர்தல். காங்கிரஸ் சதி திட்டத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    நாங்கள் ஒரு பக்கம் காவலாளியாக நின்று நாட்டை பாதுகாக்கிறோம். மறு பக்கம் அதிகார பசியோடு தேர்தலில் நிற்கிறார்கள். காங்கிரஸ் சமூக விரோதிகளுக்கு ஆதரவான இயக்கமாக உள்ளது, நாட்டில் தீயவர்களை ஒடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டத்தையே காங்கிரஸ் சீர்குலைக்க பார்க்கிறது.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்தார்கள். இந்த பகுதியே நாட்டில் இருந்து விலகிய இடமாக இருந்தது. நாங்கள் இதை இணைப்பு பாலமாக மாற்றி உள்ளோம்.

    இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். #LokSabhaElections2019 #PMModi
    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids
    திருச்சி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதவிர, வருமான வரித்துறையும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    பின்னர் அவருக்கு நெருக்கமானவராக கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான சிமெண்ட் கிடங்கில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    இந்நிலையில், திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ராஜாவின் ரியல் எஸ்டேட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி மன்னார்புரத்தில் உள்ள அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, ரியல் எஸ்டேட் வரவு செலவு கணக்குகள் மற்றும் நிலம் சம்பந்தமான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    முன்னதாக, பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காரில் எடுத்துச் சென்ற ரூ.2.10 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019 #ITRaids
    ×