என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
    சிவகங்கை:

    காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் குண்டடிப்பட்டு வீரமரணம் அடைந்தனர். இதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 26) ஆவார்.

    இவரது பெற்றோர் பெரியசாமி-மீனாட்சி. இளையராஜாவுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் செல்வி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது செல்வி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இளையராஜா வீரமரணம் அடைந்த செய்திகேட்டு மனைவி செல்வி, பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    இளையராஜாவின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வருகிறது. விமான நிலையத்தில் கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்துகின்றனர்.

    பின்னர் இளையராஜா உடல் ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிவகங்கை கலெக்டர் மலர் விழி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    அதனை தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ படை அதிகாரி செல்வமூர்த்தி செய்து வருகிறார்.

    தங்கள் ஊரை சேர்ந்த வீரர் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த செய்தி கேட்டு கண்டனி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இங்கு கிருஷ்ணஜெயந்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இளையராஜாவின் மரணத்தால் விழா கொண்டாடப்படவில்லை.



    மானாமதுரை அருகே இன்று அதிகாலை நடந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது பதினெட்டாம் கோட்டை கிராமம். இந்த ஊரை சேர்ந்த ராமன் மனைவி பாப்பாத்தியம்மாள் (வயது 65). இவரது மகன்கள் பிச்சை (40), சத்தியநாதன் (35).

    இதில் பிச்சை வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி வனிதா (35). சத்தியநாதனுக்கு திருமணம் ஆகவில்லை. மாற்றுத்திறனாளி. விவசாய குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    இவர்களது வீட்டை சுற்றிலும் இரும்பு வலையால் ஆன வேலி போடப்பட்டு இருந்தது. மானாமதுரை பகுதியல் நேற்று இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. இதில் வீட்டின் மேல் பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார வயர் அறுந்து வேலி மீது விழுந்தது.

    இன்று அதிகாலை வனிதா வீட்டு வாசல் கதவை திறந்து வேலி அருகில் சென்றார். அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. வேலியை தொட்ட வனிதா மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் அலறியபடி சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மாமியார் பாப்பத்தியம்மாளும், மைத்துனர் சத்தியநாதனும் ஓடிவந்தனர். அவர்கள் வனிதா இறந்து கிடந்தது தெரியாமல் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது இரு வரையும் மின்சாரம் தாக்கியது. தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.



    இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியானது, பதினெட்டாம் கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்புவனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல வழக்குகளில் தேடப்பட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 5 பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசார் 5 பேரிடமும் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் கத்திகள் இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் வல்லரசு (வயது 18), அமல்ராஜ் (17), ராஜசேகர் (18), சமயபாண்டி (18), மனோஜ்குமார் (17) என்பதும் இவர்கள் பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி கூறியிருந்தார். அவரது உத்தரவின்பேரில் காளையார்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் உள்ள மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் காளையார்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் மலர்விழி, தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது உத்தரவின்பேரில் நேற்று காளையார்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் கல்யாண்குமார், தாசில்தார் சந்தானலட்சுமி, துணை தாசில்தார் சேதுமாதவன், நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் சங்கரநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் பல நாட்களுக்கு பிறகு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    மானாமதுரை:

    மானாமதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மழை இல்லாத நிலை இருந்தது. நேற்று மாலை 6.40 மணிக்கு பெய்த மழை 1 மணி நேரம் நீடித்தது.

    திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திடீர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மானாமதுரை சுந்தரபுரம் கடை வீதியில் வாரச்சந்தை முதல் தேவர் சிலை வரை சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தேங்காமல் தடுக்க சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பேரூராட்சி வணிக வளாகம் முன்பு மட்டும் அமைக்கப்பட்டும், மீதம் உள்ள தேவர் சிலை வரை சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்படாததால் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபகுதியிலும் சிமெண்டு கற்கள் பதிப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    காரைக்குடியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    காரைக்குடி:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் போஸ். இவரது மகள் ரேவதி என்ற நிஷாந்தி (வயது 24). இவருக்கும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ் பிளம்பராக உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் விரைந்து வந்து இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குப்பதிவு செய்து உள்ளார். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடைபெறுகிறது.

    காரைக்குடி அருகே சொத்து தகராறில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேது(வயது 58). இவர் கொத்தனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி முத்துலட்சுமி, இவருக்கு 3 மகன், 1 மகள் உள்ளனர். 2–வது மனைவி முனியம்மாள், இவருக்கு குழந்தைகள் கிடையாது. முத்துலட்சுமியின் 3–வது மகன் லட்சுமணன்(25). இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதுவின் முதல் மனைவி முத்துலட்சுமி இறந்துபோனார். இதனையடுத்து ஊருக்கு வந்த லட்சுமணன், அதன்பின்னர் வெளியூருக்கு வேலைக்கு செல்லவில்லை. மேலும் சேதுவிடம், சொத்தை பிரித்து தருமாறு கூறி அடிக்கடி லட்சுமணன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்றும் வழக்கம்போல் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், சேதுவையும், 2–வது மனைவி முனியம்மாளையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றுவிட்டார். அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த கணவன்–மனைவி சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து கீழே விழுந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் இறந்துபோனார். சேதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லட்சுமணனை வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரைக்குடியில் பாத்திர வியாபாரி வீட்டில் 16 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி தேரோடும் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது48). பாத்திரக்கடை உரிமையாளர். இவர் நேற்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். மனைவி மற்றும் மகள் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். மாலையில் கணேசனின் மகன் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.

    இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக கணேசன் தெரிவித்தார். தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த்ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருப்பத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளக்காரம் பட்டி ரெயில் நிலையம் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள் ரெயில் தண்டவாளப் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது சேலம் நோக்கி செல்லும் ரெயில் பாதையில் லேசான விரிசல் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    இது குறித்து அவர்கள் மொளக்காரம் பட்டி ரெயில்வே ஸ்டே‌ஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக ஜோலார்பேட்டை ஸ்டே‌ஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து தண்டவாள பராமரிக்க பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விரிசலை சரி செய்தனர்.

    அந்த நேரத்தில் அந்த வழியாக செல்ல வேண்டிய திருவனந்தபுரம் ரெயில் மொளக்காரப்பட்டி ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டு 1½ மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

    காலை 6.45 மணிக்கு அந்த வழியாக செல்ல வேண்டிய சரக்கு ரெயில், திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, அதிக வெப்ப நிலையில் இருந்து குளிர்ச்சி நிலைக்கு தண்டவாளம் வரும்போது இது போன்ற விரிசல் ஏற்படும். அதுதான் தற்போது நடந்துள்ளது.

    தண்டவாள விரிசலை உடனடியாக கண்டு பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.



    பயிர் காப்பீட்டுத் தொகை பெற விவசாயிகள் வங்கி விவரங்களை கூட்டுறவு சங்கங்களில் கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

    சிவகங்கை மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

    இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறாமல் பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகள் தங்களுக்குரிய இழப்பீட்டு தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க வசதியாக வங்கி விவரங்களை தெரிவிக்கவேண்டும்.

    இதன்படி செல்போன் எண், ஆதார் அட்டை நகல், சேமிப்பு கணக்கு எண், வங்கி கிளை மற்றும் ஐ.எப்.எஸ். எண்ணுடன் கூடிய சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் உள்ளிட்ட வங்கி கணக்கு விவரங்களை தாங்கள் காப்பீட்டு பிரிமியம் செலுத்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 2 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    காரைக்குடி அருகே கணவரின் தொழிலுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மனைவி செண்பகவள்ளி. இவர்களுக்கு சுதா (வயது 29) என்ற மகள் உள்ளார்.

    இவருக்கும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் அருகே உள்ள வம்பரம்பட்டியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் புதுவயலில் உரக்கடை நடத்தி வருகிறார்.

    சுரேஷ் குமார் உரக்கடை தொழிலை விரிவுபடுத்த நினைத்தார். இதன் காரணமாக சுதா தனது உறவினர்களிடம் பண உதவி கேட்டார். ஆனால் போதிய பணம் கிடைக்காததால் மன வேதனை அடைந்த சுதா தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் சுகாதார சீர்கேட்டால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும் பாலான கிராமங்களில் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை உள்ளது.

    பொதுமக்கள் வேறுவழியின்றி சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது.

    இந்நிலையில் மாவட்டத்தில் சிவகங்கை நகர், மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஏராளமானோருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை வழங்கப்பட்டு இது மர்ம காய்ச்சல் தான் என்றும், மாத்திரையையும், சரியான உணவு முறையையும் எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று கூறி அனுப்பி வைக்கின்றனர்.

    ஆனால் தனியார் ஆஸ்பத்திரியில் காண்பித்த போது டெங்கு அறிகுறி என்று கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காரைக்குடியில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இங்குள்ள சங்கராபுரம் ஊராட்சியில் சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி, சாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த் ராஜ், சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் சங்கராபுரத்தில் நேரடி ஆய்வு செய்து டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

    மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டர்வகளுக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிப்பு ஏதும் இல்லை. சங்கராபுரம் ஊராட்சி சார்பில் நில வேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

    ×