என் மலர்
சிவகங்கை
சிவகங்கை:
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும். 20 சதவீத இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் இணைந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் வேலை நிறுத்தம் குறித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். வேலை நிறுத்தத்துக்கு பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. தமிழ் நாடு ஆசிரியர் சங்க கூட்டமைப்பும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என அறிவித்தது.
அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன.
90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை. இதனால் மாணவ -மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி சென்றனர். சில பள்ளிகளில் விடுமுறை என அறி விக்கப்பட்டு இருந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 8 ஆயிரம் பேர், ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் என 12 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில பங்கேற்றனர். 80 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அரசு பள்ளிகளிலும் இதே நிலைமை நீடித்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகங்களிலும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலை நிறுத்தம் காரணமாக அரசு பணிகள் முடங்கின.
விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை, ஆசிரியர்கள், வளர்ச்சி துறை உள்பட பல்வேறு துறைகளில் முழு அளவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
காளையார்கோவில் ஒன்றியம் வீரமுத்துப்பட்டி லிங்கமுத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வீரமுத்துப்பட்டி-கொல்லங்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 39 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி , சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவாக பந்தயம் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 15 வண்டிகள் பங்கேற்றன. இதில் நகரம்பட்டி கண்ணனின் மாட்டுவண்டி முதல் பரிசையும், 2 -வது பரிசை தவிட்டான்பட்டி அமர்நாத் , 3-வது பரிசை தேனி கூடலூர் ராஜா ஆகியோரது வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயம் மொத்தம் 24 வண்டிகளுக்கு 2 பிரிவாக நடந்தது.
முதல் பிரிவில் முதல் பரிசை பாகனேரி அருள்ஜேசு வண்டியும், 2 -வது பரிசை கல்லல் களஞ்சி அய்யனார், 3-வது பரிசை கொட்டக்குடி கனிஷ்கா ஆகியோரது வண்டியும் பெற்றது.
2-வது பிரிவில் முதல் பரிசை சிவகங்கை இந்திரா நகர் உமர்ராவுத்தர் வண்டியும், 2-வது பரிசை மட்டங்கிப்பட்டி ஜெகநாதன், 3-வது பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு ஆகியோரது வண்டியும் பெற்றன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை:
சிவகாசி அரசு கல்லூரியில் 18 வயது இளம்பெண் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருபவர் சுபாஷ் (வயது 21).
இவர் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்துள்ளார். இதனை மாணவியிடம் தெரிவித்தபோது அவர் காதலை ஏற்க மறுத்துவிட்டார். ஆனாலும் சுபாஷ், தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று கல்லூரி வாசலில் மாணவியை வழிமறித்த சுபாஷ், துப்பட்டாவை பிடித்து இழுத்ததாகவும், அதில் துப்பட்டா கிழிந்து விட்டதாகவும் கல்லூரி முதல்வரிடம், மாணவி புகார் செய்தார்.
இது குறித்து சிவகங்கை நகர் போலீசில் கல்லூரி முதல்வர் அழகுபாண்டி புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் சுபாஷை கைது செய்தார்.
சிவகங்கை:
சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைந்த அரசு முழுவதுமாக மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. அ.தி.மு.க.வில் நடப்பது பதவி சண்டைதான். கொள்கைக்காக அல்ல.
தற்போது அ.தி.மு.க. அணிகள் இணைப்பு என்பது வெறும் கண்துடைப்பு நாடகம். ஜெயலலிதாவின் போயஸ் கார்டனை நினைவில்லமாக்குவது, ஜெயலலிதா மரணம் குறித்த நீதிவிசாரணை போன்றவை ஓ.பி.எஸ். அணியினர் வைத்த நிபந்தனைதான்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஏன் மரணம் குறித்து நீதிவிசாரணை அமைக்க வில்லை. இரு அணியினரும் நன்றாக நாடகமாடி வருகிறார்கள்.
ஆனால் இயக்குநர் யார் என்பதுதான் தெரிய வில்லை. விரைவில் அதுவும் தெரியும். போயஸ் கார்டனை மட்டும் நினைவில்லாமாக்க கூடாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும்.
மத்திய-மாநில அரசுகள் மக்கள் பிரச்சினைகள் பற்றி கவலைப்படாமல் தனியார்மயத்தை ஆதரித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த கருத்துக்களே மக்கள் பிரச்சினையில் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.
அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசு அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். இதற்கு உதாரணம் பீகாரில் நடந்த சம்பவங்களே.
நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை. ஜி.எஸ்.டி. வரியால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் மக்கள் பணி பாராட்டுக்குரியது. பொதுமக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மாவட்டந்தோறும் நகரம் முதல் கிராமம் வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடை பயண இயக்கம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, நகர செயலாளர் ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 33). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபெருமாள் (30) என்பவரும் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தனர்.
வேலையை முடித்து விட்டு நேற்றிரவு 2 பேரும் ஊருக்கு திரும்பினர். சிவகங்கை அருகே உள்ள பில்லூர் விலக்கு ரோட்டோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சு எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுந்தரபெருமாள் படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து ஆம்புலன்சு டிரைவர் ராஜாவை தேடி வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட த்தில், சிவகங்கை நகர் காரைக்குடி, இளையான்குடி, திருப்பத்தூர், புதுவயல் ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மேலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகளும் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் இளையான்குடியைச் சேர்ந்த முபாரக் அலியின் 1 வயது மகள் மரியம், புதுவயலைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சூர்யா, அவரது சகோதரி வனஜா மற்றும் 5 ஆண்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். டெங்கு அறிகுறியால் சிகிச்சை பெறுபவர்கள் 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா மதகுபட்டி அருகே உள்ள தட்டம்பட்டியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவரது மகள் பார்வதி (வயது 17).
சம்பவத்தன்று பார்வதி மதகுபட்டிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பார்வதியை காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தேவகோட்டையைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் கவுசிகா (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார்.
நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்ற கவுசிகா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
மானாமதுரை தாலுகா குக்குடியைச் சேர்ந்தவர் மீனாள். இவரது மகன் விக்னேஷ் (16). இவர் சிவகங்கையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்குச் சென்ற விக்னேஷ் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.
இது குறித்து மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது பரகத்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை:
தேவகோட்டை அருகே உள்ள முப்பையூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42), இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 2ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்.
திருப்பத்தூர் அருகே உள்ள அகரம் கதிரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பி.அருண்குமார் (வயது 20), ஏ.அருண்குமார் (19). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஓடை அருகில் நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது மழை வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு பூமியில் புதைந்து கிடந்த மர்ம பொருள் ஒன்று இவர்கள் 2 பேரின் கண்களில் தென்பட்டது. உடனே அவர்கள் அதனை எடுத்து பார்த்தபோது, அந்த பொருள் பழமை வாய்ந்த குவளை என தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த குவளையை உடைத்து பார்த்தனர். அதில் தங்க நகைகள் இருந்தது. பின்னர் யாருக்கும் தெரியாமல் அவர்கள் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர். மேலும் அதிலுள்ள நகைகளை 2 பேரும் பங்கு போட்டு கொள்வது என முடிவு செய்தனர்.
அதற்குள் 2 பேருக்கும் புதையல் கிடைத்த சம்பவம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. அனைவரும் ஒன்று திரண்டு அவர்களிடம் புதையலை காண்பிக்கும்படி கேட்டனர். ஆனால் அவர்கள் காலி பித்தளை குவளை மட்டும் காண்பித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் திருப்பத்தூர் தாசில்தார் ஸ்ரீராமிற்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த தாசில்தார் ஸ்ரீராம் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 2 பேரும் முன்னுக்கு பின் முரணான பதில் தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தாசில்தார் ஸ்ரீராம் புகார் கொடுத்தார்.
இதனிடையே பி.அருண்குமார், ஏ.அருண்குமார் ஆகிய 2 பேரும் தாசில்தார் ஸ்ரீராமிடம், பித்தளை குவளையில் 2 கிராம் மதிப்பில் தாலி சரடில் கோர்க்கும் ஞானகுழல்கள் 15, 100 கிராம் மதிப்பில் வெள்ளி வளையல் ஆகியவை இருந்ததாக கூறி, அவற்றை ஒப்படைத்தனர்.
மேலும் புதையல் நகையை பதுக்கி வைத்துவிட்டு நாடகமாடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்தால் தற்கொலை செய்வேன் என அருண்குமார் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிகாரிகள் தற்காலிகமாக விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், மதுரை அருகே மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் இரவில் மதுரையில் தங்கிய தினகரன், காலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் மனைவி, மகளுடன் வழிபாடு செய்தார்.
அதன் பிறகு சென்னை புறப்பட்ட அவர், வழியில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கோவிலிலும் வழிபாடு செய்தார்.
குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட இந்த மலைக் கோவிலில் உள்ள தேனம்மை உடனுறை மங்கை பாகர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. குடவறைக் கோவிலான இங்கு சிவபெருமான், லிங்க வடிவில் இல்லாமல் மணக்கோலத்தில் சிற்பமாக உள்ளார். இங்கு தேன் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
வெள்ளைப்பூ அணிந்து வெள்ளை உடையில் மங்கை பாகர் காட்சி அளிக்கிறார். கோவிலின் காவல் தெய்வமான வடுக பைரவர் சன்னதியில் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.
வடுக பைரவருக்கு எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்ட சத்ரு சம்ஹார பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர் தினகரன், மனைவியுடன் கோ பூஜை செய்தார். தலைமை சிவாச்சாரியார் உமாபதி பூஜைகளை செய்தார். அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பிரான்மலை கோவிலில் தினகரன், குடும்பத்தினருடன் கோ பூஜை செய்தார்.
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளைய ராஜா வீரமரணம் அடைந்தார்.
அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு 42 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. பின்னர் இளையராஜாவின் உடல் அவரது குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜாவின் தந்தை பெரியசாமி (வயது52) வேலை தேடி வெளியூர்களுக்கு செல்வார். சில நாட்களுக்கு பிறகுதான் கிராமத்திற்கு திரும்புவார். மேலும் அவர் செல்போன் பயன்படுத்துவதில்லை.
வேலை தேடி சென்ற அவர், மகன் உடல் அடக்கம் செய்யும்வரை ஊர் திரும்பவில்லை. மகன் இறந்த செய்தியை தெரிவிக்க முடியாமல் குடும்பத்தினர் தவித்தனர்.

இதன் காரணமாக மகனின் இறுதி சடங்குகளை இளையராஜாவின் தாயார் மீனாட்சி செய்தார்.
இந்த நிலையில் பெரியசாமி நேற்று மாலை ஊர் திரும்பினார். அவர், இளையராஜா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மகனின் முகத்தை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர் கூறுகையில், கோவையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்ததாகவும், “மாலைமலர்” செய்தியை பார்த்து ஊர் திரும்பியதாகவும் தெரிவித்தார்.
கோவையில் இருந்து பஸ்சில் புறப்பட்ட பெரிய சாமி, தாராபுரம்-பல்லடம் ரோட்டில் பஸ் பிரேக் டவுன் ஆகிவிட்டதால் மாறி, மாறி பஸ்கள் பிடித்து ஊர் வந்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இளையராஜா வீரமரணம் அடைந்ததை தாங்க முடியாமல் அவரது உறவினர் மணிகண்டன்(22) விஷம் குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
காரைக்குடி:
காரைக்குடியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து நகர,ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன்,மாவட்ட பொருளாளர் துரைராஜ், நகர செயலாளர் குண சேகரன் முன்னிலை வகித்தனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இளைஞரணியின் பங்கு குறித்தும் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் நகரம், ஒன்றியம் வாரியாக ஆலோசனை வழங்கினார்.
இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப் பாளர்குழு தலைவர் ஆனந்த், மகளிர் அமைப்பாளர் ஹேமாசெந்தில்,காரைக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி,துணை அமைப்பாளர் சக்தி, தேவகோட்டை இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், துணை அமைப்பாளர் அப்துல் ஜாபர், காளையார்கோவில் ஒன்றிய துணை அமைப்பாளர் சாய் கார்த்திக், காரைக்குடி நகர துணை செயலாளர் கண்ணன்,மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் சிறப்பாக செய்திருந்தார்.






