search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை மிரட்டல்"

    • செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பொள்ளாதி கிராமம், சின்னத்தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள செல்போன் டவர் உச்சியில் நின்றபடி ஒரு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபரின் பெயர் சந்திரன் (வயது 25) என்பதும், இதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    சின்னத்தொட்டியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சந்திரன் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த வார்டு கவுன்சிலர் சுரேஷ் என்பவர், குடிபோதையில் இருந்த சந்திரனை கண்டித்து உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து வார்டு கவுன்சிலர் சுரேஷை சரமாரியாக தாக்கினார். பின்னர் வீட்டுக்கு சென்ற சந்திரன் அங்கிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கையில் குத்திக்கொண்டு ரத்தக்காயங்களுடன் வெளியேறினார்.

    தொடர்ந்து சின்னதொட்டிபாளையம் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறிய சந்திரன் அங்கிருந்தபடி, நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என மிரட்டல் விடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் டவரை சுற்றிலும் பாதுகாப்பு வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் நைசாக செல்போன் டவரின் மேல் ஏறி சென்று, அங்கு இருந்த சந்திரனை லாவகமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கினார்கள். அப்போது அவருக்கு கையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
    • கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.

    முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.

    அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.

    பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.

    பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி சிவகாமியின் மகளிடம் அவருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • போலீசார் சிவகாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டைபாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி சிவகாமி (வயது 54). இவர் அவரது நிலத்தை மகள் உஷா என்பவருக்கு ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு கொடுத்து இருந்தார். இந்தநிலையில் சிவகாமி, வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தனது வாழ்வாதாரத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் அல்லது நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

    மனுவின்படி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி சிவகாமியின் மகளிடம் அவருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி அவரது மகள் ஒரிரு மாதங்கள் மட்டும் பணம் கொடுத்தார். தொடர்ந்து பணம் கொடுக்க அவர் மறுத்து விட்டார்.

    பின்னர் சிவகாமி கோவில்பாளையம் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் உஷாவை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னால் தொடர்ந்து பணம் தர முடியாது. குத்தகை காலம் முடிந்ததும் நிலத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறினார்.

    ஆனால் சிவகாமி தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மகளிடம் பணம் வாங்கி கொடுக்கும்படி இன்ஸ்பெக்டரிடம் கேட்டு வந்தார். நேற்று மதியம் அவர் விஷ பாட்டிலுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீசாரிடம் அவர் மகளிடம் பணம் வாங்கி தரவில்லை என்றால் விஷத்தை குடித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.

    இதனை பார்த்த போலீசார் அவரிடம் இருந்த விஷ பாட்டிலை பறித்தனர். பின்னர் போலீசார் சிவகாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.போலீஸ் நிலையத்துக்கு விஷத்துடன் வந்து பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தற்கொலை மிரட்டல் விடுத்த முருகன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • தகவல் அறிந்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புது கலைப்புதூர் உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் டவர் 150 அடி உயரத்தில் உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (36) என்பவர் திடீரென அந்த 150 அடி உயரமுள்ள செல்போன் டவர் உச்சிக்கு ஏறினார்.

    பின்னர் செல்போன் டவரில் இருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தற்கொலை மிரட்டல் விடுத்த முருகன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் அதே பகுதி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் செல்போன் டவர் பகுதி அருகே வந்தனர்.

    கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, தாசில்தார் ருத்ரமூர்த்தி ஆகியோர் முருகனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து முருகன் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அந்த பகுதியில் மின்சாரத்தையும் மின்வாரிய ஊழியர்கள் அனைத்து வைத்துள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கியதாகவும், அவரது இருசக்கர வாகனத்தை எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் தேவர் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மதனபிரகாஷ் (36), கூலி தொழிலாளி. இவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கியதாகவும், அவரது இருசக்கர வாகனத்தை எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதனபிரகாஷ் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உயர் செல்போன் கோபுரத்தின்மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் அவர் கீழே இறங்கினார். தற்கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருமங்கலம் போலீசார் மதனபிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மதுபழக்கம் இருந்ததால் யாரும் பெண் தர முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • மரம் மற்றும் கழுத்தில் கட்டப்பட்ட சேலை இறுக்கியதால் ஜாண் சுதர்சன் தூக்கில் தொங்கினார்

    கன்னியாகுமரி :

    குளச்சல் ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் சுதர்சன் (வயது 37). இவர் கடந்த 8 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜாண் சுதர்சன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். தொடர்ந்து, தாயாரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதன்பேரில் ஜாண் சுதர்சனின் தாயார், வரன் பார்க்க தொடங்கினார். ஆனால் ஜாண் சுதர்சனுக்கு மதுபழக்கம் இருந்ததாகவும், அதனால் யாரும் பெண் தர முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வந்த ஜாண் சுதர்சன், வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கட்டை சுவரில் ஏறி அமர்ந்து உள்ளார். பின்னர் தாயாரின் சேலையை எடுத்து அருகில் நின்ற வேப்ப மரத்தில் கட்டி, தனது கழுத்திலும் மாட்டிக்கொண்டு தாயாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் மது பாட்டிலை கீழே வீசி உடைத்து ரகளை செய்த அவரை தாயார் சமாதானப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து ஜாண் சுதர்சன் கீழே இறங்கி உள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மரம் மற்றும் கழுத்தில் கட்டப்பட்ட சேலை இறுக்கியதால் ஜாண் சுதர்சன் தூக்கில் தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் ஜாண் சுதர்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி ப்பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்தபோது தவறி விழுந்து ஜாண் சுதர்சன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தாய் முனியம்மாள் பேரில் 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது.இந்த நிலத்தை தனது இளைய மகன் சின்னசாமி பெயருக்கு பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குள்ளையன்( வயது 75). இவரது மனைவி முனியம்மாள் (68). இவர்களுக்கு முனியப்பன்(50)சின்னசாமி(47) என 2 மகன்களும், ஜம்பேரி(52) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    இவர்களது தாய் முனியம்மாள் பேரில் 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது.இந்த நிலத்தை தனது இளைய மகன் சின்னசாமி பெயருக்கு பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அவரது மூத்த மகன் முனியப்பன் மற்றும் அவரது அக்கா ஜம்பேரி இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலையில் முனியப்பன் எனக்கு சொந்தமான நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பேரில் சிட்டா மாற்றி விட்டார் என கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து அதேபகுதியில் உள்ள மின்சார டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து தகவல் இதுகுறித்து தகவல் அறிந்து இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தொந்தரவு கொடுத்தால் நானும், எனது குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி எனக்கு மிரட்டல் விடுத்தார்.
    • போத்தனூர் போலீசார் பெண் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    குனியமுத்தூர்:

    மும்பை செம்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 44). இவர் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நான் மும்பையில்சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு நான் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கோவைக்கு வந்தேன்.

    அப்போது எனது உறவினர் மூலம் கோவை போத்தனூரை சேர்ந்த ஹசல் ஜேம்ஸ் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் செல்போனை பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி வந்தோம்.

    அப்போது அந்த பெண், தனது கணவர் இறந்துவிட்டார் எனவும், 2 குழந்தைகளை வைத்து கொண்டு தான் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் தனக்கு நீங்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். நானும் அதனை நம்பி அவருக்கு 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.90 ஆயிரம் பணம், துணிமணிகள், காலணிகள், செல்போன், கார் வாங்கி கொடுத்துள்ளேன். இதன் மதிப்பு மொத்தம் ரூ.20 லட்சம் ஆகும்.

    இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் இறக்கவில்லை என்பதும், அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்வதும் எனக்கு தெரியவந்தது. மேலும் பெண்ணுக்கு வேறு சில நபர்களுடன் பழக்கம் இருப்பதை நான் அறிந்தேன்.

    இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் இருந்தார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்கவே கணவர் இருப்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நான் அவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.

    அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால் நானும், எனது குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி எனக்கு மிரட்டல் விடுத்தார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நான் தற்போது புகார் அளித்துள்ளேன். எனவே அந்த பெண் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் பெண் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பெண்ணை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனையில் செல்வம் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
    • போலீசார் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் செல்போன் கோபுரம் உள்ளது. இன்று காலை அவ்வழியே வந்த வாலிபர் ஒருவர் திடீரென செல்போன் கோபுரத்தில் ஏறினார். அவர் விறுவிறுவென செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.

    அங்கிருந்து அவர் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி கூச்சலிட்டார். இதனை கண்டு அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை கிழே இறங்கும் படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் கிழே இறங்க மறுத்தார். இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    அவரை மீட்பதற்காக போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் முயன்று செல்போன் கோபுரத்தில் ஏறினால் அவர் கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அவர் கீழே இறங்காமல் போக்குகாட்டி அடம்பிடித்தார்.

    இதற்கிடையே அந்த வாலிபரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்தபோது தற்கொலை மிரட்டல் விடுத்தது அதே பகுதியை சேர்ந்த செல்வம்(30) என்பது தெரியவந்தது.

    இதுபற்றி அறிந்ததும் செல்வத்தின் மாமியார் அங்கு வந்தார். இதனை அறிந்த செல்வம் எதுவும் பேசாமல் ஏறிய அதே வேகத்தில் விறு, விறுவென கீழே இறங்கி வந்தார்.

    இதையடுத்து போலீசார் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. குடும்ப தகராறில் அவரது மனைவி பிரிந்து மாமியார் வீட்டுக்கு சென்று இருப்பது தெரிந்தது.

    இதனால் மனவேதனையில் செல்வம் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

      கன்னியாகுமரி:

      கன்னியாகுமரியில் நேற்று முக்கடலும் சங்க மிக்க கூடிய திரிவேணி சங்கமத்தில் முன்னோர் களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று காலை முதலே லட்சக்கணக்கானோர் கன்னி யாகுமரி கடற்க ரைக்கு வந்திருந்தனர்.

      எனவே இந்தப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

      அப்போது மயிலாடி பகுதியை சார்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் குடிபோதை யில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு முக்கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது "திடீர்" என்று குடிபோதை யில் கன்னியாகுமரி கடலில் உள்ள மரண பாறையின் மீது ஏறி உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினான்.

      அப்போது பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சந்தோஷிடம் நைசாக பேசி உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன் வா என்று கூறி சந்தோஷை பாறையில் இருந்து இறங்க வைத்தனர். இறங்கிய பிறகு மீண்டும் தப்ப முயற்சித்த சந்தோஷை நீச்சல் அடித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

      அதன்பின்னர் போலீ சார் அவனிடம் விசாரித்த போது சந்தோஷ் குடி போதையில் பாறை மீது ஏறியது தெரியவந்தது. அதன் பின் கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார் சந்தோஷை எச்சரித்து அனுப்பினர்.

      சந்தோஷின் இந்த செயல் சிறிது நேரம் கன்னி யாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வாலி பரை காப்பாற்றிய கட லோர பாதுகாப்புக்கு குழும போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

      • தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார சேவைகளும் சிறிது நேரம் தடைப்பட்டது.
      • உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மாற்று வழிப் பாதையில் மின்சாரத்தைப் பெற்று ரயில்களை இயக்கினர்.

      தாம்பரம்:

      தாம்பரம் சானட்டோரியம், துர்கா நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இவர் குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தாம்பரம் பகுதியை சேர்ந்த மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

      அவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் மாணவி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

      ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாததால் மனமுடைந்த கிஷோர் இன்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள 60 அடி உயர உயர் மின் கோபுரத்தில் திடீரென ஏறினார். மாணவியை திருமணம்செய்து வைக்க வேண்டும் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

      இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

      தகவல் அறிந்ததும் துணை மின் நிலைய செயற்பொறியாளர் பொன்னரசு உடனடியாக அப்பகுதி முழுவதும் மின் இணைப்பை துண்டித்தார். இதற்குள் தாம்பரம் போலீசாரும் அங்கு வந்தனர். உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் உயர் மின் அழுத்த கோபுரத்தின் உச்சியில் நின்று மிரட்டல் விடுத்த கிஷோருடன் மைக் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

      ஆனால் அவர் நீண்ட நேரம் கீழே இறங்க மறுத்து அடம்பிடித்தார். பின்னர் அவரது நண்பர்களை வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

      இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் கிஷோர் கீழே இறங்க சம்மதித்தார். அவரை தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பத்திரமாக கீழே இறக்கி மீட்டனர்.

      கிஷோரின் இந்த திடீர் போராட்டத்தால் காலை 8.30 மணிமுதல் 10.30 மணிவரை 2மணி நேரம் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சானட்டோரியம், குரோம்பேட்டை பகுதிகளில் மின்சார சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

      இதுபோல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார சேவைகளும் சிறிது நேரம் தடைப்பட்டது. உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மாற்று வழிப் பாதையில் மின்சாரத்தைப் பெற்று ரயில்களை இயக்கினர்.

      இது தொடர்பாக கிஷோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
      • ஓமலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லபிள்ளைகுட்டை ஊராட்சியில் கவாண்டபட்டி கிராமம் உள்ளது.

      ஓமலூர்:

      சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லபிள்ளைகுட்டை ஊராட்சியில் கவாண்டபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர் சித்தேஸ்வரன்(வயது60).

      இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில், இவரது மகள்கள் கலாவதி, சங்கீதா ஆகிய இருவரும் இவரை பராமரித்து வந்துள்ளனர். இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து, சத்தம் போட்டுகொண்டு இருப்பார் என்று கூறப்படுகிறது.

      இந்தநிலையில், நேற்று சித்தேஸ்வரன் மது குடித்துவிட்டு மீண்டும் மது குடிப்பதற்காக மகளிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. மகள் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் போதையில் அவர் வீட்டின் அருகில் இருந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறினார்.

      அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். சித்தேஸ்வரன் போதையில் இருந்ததால், அவரை மேலே ஏறி அப்பகுதி மக்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஓமலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

      விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறுகொண்டு மேலே ஏறினர். பின்னர், போதையில் இருந்த அவரை, கயிறு மூலம் கட்டி ஏணி மூலம் மெதுவாக கீழே இறங்க வைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தனது மகள் தன்னை கண்டு கொள்ளவில்லை. அதனால், தண்ணீர் தொட்டி மீது ஏறியதாக கூறினார்.

      இரண்டு மகள்களும், இவரை நன்றாக கவனித்து வருகின்றனர். ஆனால், இவர் தான், தினமும் மது குடித்து விட்டு வந்து, அவர்களிடம் தொல்லை செய்கிறார் என்று கூறினர். இதையடுத்து சித்தேஸ்வரனின் மகள்களுக்கு போலீசார் உரிய ஆலோசனைகளை வழங்கி, கீழே இறங்கிய சித்தேஸ்வரனை வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்தனர்.

      இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      ×