search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிச்சாமி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது: முத்தரசன்
    X

    எடப்பாடி பழனிச்சாமி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது: முத்தரசன்

    எடப்பாடி பழனிச்சாமி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைந்த அரசு முழுவதுமாக மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. அ.தி.மு.க.வில் நடப்பது பதவி சண்டைதான். கொள்கைக்காக அல்ல.

    தற்போது அ.தி.மு.க. அணிகள் இணைப்பு என்பது வெறும் கண்துடைப்பு நாடகம். ஜெயலலிதாவின் போயஸ் கார்டனை நினைவில்லமாக்குவது, ஜெயலலிதா மரணம் குறித்த நீதிவிசாரணை போன்றவை ஓ.பி.எஸ். அணியினர் வைத்த நிபந்தனைதான்.

    ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஏன் மரணம் குறித்து நீதிவிசாரணை அமைக்க வில்லை. இரு அணியினரும் நன்றாக நாடகமாடி வருகிறார்கள்.

    ஆனால் இயக்குநர் யார் என்பதுதான் தெரிய வில்லை. விரைவில் அதுவும் தெரியும். போயஸ் கார்டனை மட்டும் நினைவில்லாமாக்க கூடாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும்.

    மத்திய-மாநில அரசுகள் மக்கள் பிரச்சினைகள் பற்றி கவலைப்படாமல் தனியார்மயத்தை ஆதரித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த கருத்துக்களே மக்கள் பிரச்சினையில் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.

    அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசு அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். இதற்கு உதாரணம் பீகாரில் நடந்த சம்பவங்களே.

    நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை. ஜி.எஸ்.டி. வரியால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் மக்கள் பணி பாராட்டுக்குரியது. பொதுமக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மாவட்டந்தோறும் நகரம் முதல் கிராமம் வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடை பயண இயக்கம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயலாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, நகர செயலாளர் ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×