search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide threaten"

    குடும்ப தகராறு காரணமாக காவிரியில் குதித்து தற்கொலை செய்வதாக கூறிவிட்டு மகனுடன் மாயமான பெண் சமயபுரம் கோவிலில் தங்கியது அம்பலமானது.
    ஆத்தூர்:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மனைவி சுதா. இவர்களது மகள் ரம்யா (வயது 22).

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கனக சபாபதிக்கும் (35) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாஸ்விக் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது.

    கனக சபாபதிக்கும், ரம்யாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரம்யா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிக்கொண்டு வீட்டை விட்டு தனது குழந்தையுடன் வெளியேறினார்.

    பின்னர் அவர் மொபட்டில் தனது குழந்தையுடன் புறப்பட்டு சென்றார். அப்போது தனது தாய் சுதாவிடம், தான் மகனுடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக செல்போனில் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளையும், குழந்தையையும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் பெற்றோர், கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பேரையும் கொடுமுடி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தேடினர்.

    அப்போது ரம்யாவும், அவரது குழந்தையும் சமயபுரம் கோவிலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று ரம்யா, குழந்தை யாஸ்விக் ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.

    இந்த நிலையில், இருவரும் மீட்கப்பட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    சம்பவத்தன்று கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியேறிய ரம்யா, மொபட்டை எடுத்துக் கொண்டு தற்கொலை செய்வதற்காக நேராக நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பகுதிக்கு சென்றார். அப்போது செல்போனில் பெற்றோரிடம், தினமும் வீட்டில் சண்டை ஏற்படுகிறது. நிம்மதி இல்லை. எனக்கு கணவருடன் வாழ பயமாக இருக்கிறது. இதனால் எனது வாழ்க்கையை ஒரே அடியாக முடித்துக் கொள்ளப்போகிறேன் என்றார். பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறினர். தற்கொலை செய்து கொள்ளாதே, நாங்கள் உனக்கு துணையாக இருக்கிறோம் என்றனர்.

    இருப்பினும் ரம்யா ஆற்றில் குதிக்க சென்றபோது, குழந்தையின் முகத்தை பார்த்து மனம் மாறினார். பின்னர், தனது செல்போன், மொபட் ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு, அந்த வழியாக சென்ற திருச்சி செல்லும் பஸ்சில் ஏறினார்.

    அப்போது, ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று, சாமியை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று கருதிய ரம்யா சமயபுரம் டோல்கேட்டில் இறங்கினார். அங்கு டவுன் பஸ்சில் ஏறி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று குழந்தையுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் முகப்பில் உள்ள மண்டபத்தின் முன்பு உட்கார்ந்து குழந்தையுடன் அவர் தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஆத்தூரை சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, மண்டபத்தின் முன்பு ரம்யா அழுது கொண்டிருப்பதை பார்த்தார். அந்த பெண் புகைப்படம் வாட்ஸ்- அப்பில் வெளிவந்ததை தொடர்ந்து மாயமான பெண் போல் இருக்கிறதே? என சந்தேகத்தில், நீங்கள் யார்? எதற்காக அழுது கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார்.

    அதற்கு ரம்யா, எனது ஊர் கொடுமுடி அருகே உள்ள சாலைபுதூர் என்றும், தான் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன். எங்கு செல்வது என தெரியாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன் என தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த நபர், சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் அங்கு வந்து ரம்யாவையும், குழந்தை யாஸ்விக்கையும் மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரது உறவினர்களுக்கும், கொடுமுடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ரம்யாவின் உறவுக்கார பெண் ஒருவர் சமயபுரம் அருகே வசித்து வருகிறார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீசார் ரம்யாவுக்கு அறிவுரை கூறி, உறவினருடன் அனுப்பி வைத்தனர். மகளும், பேரனும் கிடைத்த தகவல் அறிந்ததும் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ×