என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
மொத்த கடைக்காரர்கள் கள்ளத்தனமாக குட்கா புகையிலையை மறைவான இடத்தில் பதுக்கி வைத்து விற்கிறார்கள். தற்போது ரூ. 10-க்கு விற்ற பாக்கெட் 3 மடங்கு அதிகம் வைத்து 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கட்டுமான வேலை பார்க்கும் கூலி தொழிலாளி கண்ணன் கூறுகையில், குட்கா புகையிலையை என்னைப் போன்ற கூலி தொழிலாளர்கள் தான் வாங்கி பயன்படுத்துகிறோம்.
நான் 3 ஆண்டுக்கு முன் வாங்கும் போது 3 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தினேன். ஆனால் இன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் என்றார்.
சிங்கம்புணரி பகுதியில் குட்கா விற்பனையை அதிகாரிகள் மற்றும் போலீசாரும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் கடைக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனை தடுப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதால் குட்கா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வால் டாக்டர் கனவு தகர்ந்த வேதனையில் அரியலூர் மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய-மாநில அரசுகளே காரணம் என பல்வேறு கட்சிகளும், மாணவ- மாணவிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிவகங்கையில் தூக்குப்போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பாண்டி தலைமையில் மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் உள்பட சிலர் சிவகங்கை காந்தி சிலை முன்பு திரண்டனர். அவர்கள் அங்கு தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்ட முயன்றனர்.
இதனை தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடியில் 2 மாத காலமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கீழமேல்குடியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஒத்தக்கடை அருகே உள்ள வைகை ஆற்று பகுதியில் போர்வெல் போடப்பட்டு அங்கிருந்து பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கீழமேல்குடியில் குடி நீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2 மாத காலமாக குடிநீர் வராததினால் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், குடிநீர் எடுக்க சைக்கிளில் 10 கி.மீ. தூரம் சென்று குடிநீர் பிடித்து வருவதாகவும் முடியாதவர்கள் ஒரு குடம் ரூ.10 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பி.டி.ஓ. சந்திரா கலெக்டரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டையை சேர்ந்தவர் மாணிக்கம். வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மோகனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மோகனா நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த ஆவணங்கள், அடையாள அட்டை போன்றவற்றை எரித்துவிட்டு தப்பினர்.
இன்று காலை வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் மோகனாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டது. கொள்ளைகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தேவகோட்டை டவுன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதுமே தொடர் கொள்ளை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டுகள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சந்தேகப்படும்படி சிலர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையொட்டி அங்கு போலீசார் சோதனை நடத்தினர். லாட்ஜின் ஒரு அறையில் சோதனையிட்டபோது அங்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.
இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் அறையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பசீர் (வயது 42) என்பது தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ரூ.30 லட்சத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், பசீரை கைது செய்தனர்.
இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பர்மா காலனி அசோக் நகரைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது43). சவுதி அரேபியாவில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 18-ந் தேதி காரைக்குடி வந்த முருகேசனுக்கு 24-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்றார். அங்கு காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சோதனையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு பலியான முருகேசனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
காரைக்குடி பகுதியில் 40-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரைக்குடி:
தேவகோட்டையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு தனியார் பஸ் காரைக்குடி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அமராவதி புதூர் அருகே பஸ் சென்றபோது எதிரே லாரி வந்தது. எதிர் பாராத விதமாக லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
விபத்தின்போது லாரியில் இருந்த பனிப்பு லான்வயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம் (வயது 52) என்பவர் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.
மேலும் பஸ்சில் வந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை மற்றும் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட தலைநகரங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட, தாலுகா அளவிலான உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். இதனால் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண முடியும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பதில் கூறப்படும்.
சிவகங்கை மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட லதா மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை வாரியாக அதிகாரிகளை அழைத்தபோது பெரும்பாலான துறை உயர் அதிகாரிகள் வரவில்லை. மேலும் முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் குறித்து ஆய்வு நடத்தியபோது எவ்வித மனுக்கள் உள்ளது என்று கூட அலுவலர்கள் பதில் கூற முடியாமல் திணறினர்.
கலெக்டர் அவர்களிடம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அல்லது சம அந்தஸ்திலான அதிகாரிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். வரும் வாரம் முதல் காலை 10 மணிக்கு கூட்டத்திற்கு வரவேண்டும். 10.45 மணிக்கு கூட்டம் தொடங்கும்.
எனவே மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை அல்லது எதனால் தாமதம் என்பதை தெரிவிக்க வேண்டும். முதல்வர் தனிப்பிரிவு மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும். அதுகுறித்த பதிவேட்டை கொண்டுவர வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
புதிய கலெக்டரின் அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் அருகே உள்ள அரளிக்கோட்டையை சேர்ந்தவர் சேர்வை (வயது 65), விவசாயியான இவர் நேற்று தனது மனைவி மீனாளுடன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் ரொக்கத்தை திருடி கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய சேர்வை கதவு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோஷ்டியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருப்பத்தூர் எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள தும்பைப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நேற்று தனது மனைவி லதாவுடன் திருமணத்திற்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் வெள்ளி நகை, பாத்திரங்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உட்பட மற்றவர்களின் விடுதலைக்காக சட்டசபையில் சட்டம் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. பேரறிவாளன் உள்ளிட்டோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றியதும் அவர்தான்.
நீட் தேர்வு என்பது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கொண்டு வந்தது. அதனை நாங்கள் தடுத்து நிறுத்த போராடினோம்.
அ.தி.மு.க. என்பது பீனிக்ஸ் பறவை போல. எங்களுக்கு என்றும் அழி வில்லை. அ.தி.மு.க. அரசு மீதமுள்ள 4 ஆண்டுகள் மட்டுமல்ல, வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக ஆட்சியை பிடிக்கும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. கட்சியில் பிளவு ஏற்பட்ட போதும் யாரும் மற்ற கட்சிக்கு செல்லவில்லை.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும், மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் வருகிற 15–ந்தேதிக்குள் 3 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.
பிரிவு 1–ல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி படித்த பட்டதாரிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழில் பழகுனர்கள் கலந்து கொள்ளலாம். 2–வது பிரிவில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் கலந்து கொள்ளலாம். பிரிவு 3–ல் குறுகிய கால பயிற்சி பெற்ற திறமையானவர்கள், செய்முறை அனுபவம் பெற்ற சுயவேலைவாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த திறனாய்வு போட்டிகளில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்திட வேண்டும்.
3 பிரிவுகளில் சிறந்த பொருட்கள் மற்றும் படைப்புகளை தனித்தனியாக தேர்வு செய்து, பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பின்னர் இந்த போட்டிகளில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் மாநில திறனாய்வு போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி மாநிலத்தில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், தகுதி சான்றிதழும் வழங்கப்படும். 2–ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே இந்த திறனாய்வு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் போட்டிகள் குறித்த விவரங்களை சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்து உள்ள முத்துப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் முத்தையா (வயது75). கல்வி துறையில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி பாக்கியம் (65) அரசு தாய்-சேய் நல விடுதியில் பணியாற்றியவர். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். முத்தையா-பாக்கியம் முத்துப்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக 2 பேரின் நடமாட்டமும் இல்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தோட்டத்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் 2 பேரும் பிணமாக மிதந்தனர். மேலும் வீட்டின் பொருட்களும் சிதறி கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகன், மகள்களுக்கு சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக முத்தையாவுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவர்களுடன் வசிக்காமல் முத்தையா அவரது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
வயதான தம்பதிகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. எனவே 2 பேரும் கொலை செய்யப்பட்டு உடல்களை மர்ம நபர்கள் கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொள்ளை கும்பல் பணம்-நகைகளை பறித்துக்கொண்டு 2 பேரையும் கொலை செய்து சென்றார்களா? அல்லது சொத்து பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார்களா? என விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மங்களேசுவரன் தலைமையில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக் டர் ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டுள் ளது.






