என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சேவை இல்லம்- குழந்தைகள் காப்பக காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு சேவை இல்லம் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் காலியாக உள்ள இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்களில் பணிபுரிய விரும்புவோர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றிருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

    வயது வரம்பு 25 முதல் 35 வயது வரையும், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் எனில் 25 வயது முதல் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

    வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை கண் காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, பையூர் பிள்ளை வயல், வள்ளிச்சந்திரா டவுன்சிப், அரசு குழந்தைகள் காப்பகம் பின்புறம் சிவகங்கை வசம் நேரில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆட்டோ டிரைவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் விபத்தில் சிக்கினாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பதில் மர்மம் நிலவுகிறது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை புதுத் தெருவைச் சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மகன் சாகுல் அமீது (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது.

    நேற்று ஆட்டோ ஓட்டிச் சென்ற சாகுல் அமீது, மாலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள விரிசல் ஆற்றுப் பாலத்தின் இறக்கத்தில் அவரது ஆட்டோ நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தேவகோட்டை நகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது ஆட்டோவும், அதன் அருகே சாகுல் அமீது உடலும் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சாகுல் அமீது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. எனவே அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவரை யாரேனும் தாக்கி கொலை செய்தார்களா? அல்லது குடி போதையில் சாகுல் அமீது ஆட்டோவை ஓட்டியதில் விபத்து ஏற்பட்டு பலியானாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை நகராட்சி மற்றும் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதை பார்த்த அவர், அவற்றை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை பஸ் நிலையத்தில் பார்வையிட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். பின்னர் கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவும், கடைகளில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்தார்.

    மேலும் முத்துப்பட்டியில் ரூ.31¼ கோடி மறுத்திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி உரக்கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது வீடுகளில் உள்ள குப்பைகளை வாங்கும்போதே மக்கும் குப்பை எனவும், மக்காத குப்பை எனவும் பிரித்து வாங்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் நீர்நிலைகளில் மீன் குஞ்சுகளை வளர்த்து உபரி வருமானம் கிடைப்பதற்கு வழி வகுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, சிவகங்கை நகராட்சி ஆணையாளர் அய்யனார், பொதுப்பணி மேற்பார்வையாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் முத்தையா, நாட்டரசன்கோட்டை செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பார்வையற்ற 3 மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் உதவித்தொகை வழங்கினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. பொது மக்களிடமிருந்து கலெக்டர் மனுக்களை பெற்று, மனுக்கள் மீது தீர்வுகாண துறை அலுவலர்களிடம் வழங்கினார்.

    வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், ஊனமுற்றோர் உதவித்தொகை, மறு வாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள், அங்கன்வாடி சமையலர் பணி கோருதல் போன்ற 367 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

    முதலமைச்சர் தனிப் பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் லதா அறிவுறுத்தினார்.

    சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் மினி டிராக்டர் மற்றும் பவர்டில்லர் 2 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு சுழற்கலப்பையும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு விசை உழுவான் ஆக மொத்தம் ரூ.7,68,600 மதிப்பிலான எந்திரங்களுக்கு ரூ.2,45,000 மானியத்தில் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பார்வையற்ற 3 மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம், உயர்கல்வி தொடர மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தில் ரூ.45,000-க்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூரில் வக்கீல் வீட்டு முன்பு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே சின்ன சமுத்திரம் இருசன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 25). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கவிதா என்கிற மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக, பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக ராஜேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார், அவரை கைது செய்தனர்.

    அப்போது, ராஜேஷ்குமாரை ஜாமீனில் எடுப்பதற்காக, திருப்பத்தூர் அட்வகேட் ராமநாதன் நகரை சேர்ந்த ஒரு வக்கீலுக்கு ரூ.33 ஆயிரம் பணத்தை அவரது குடும்பத்தினர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, பெண்ணின் பெற்றோர் வழக்கை திரும்ப பெற்றனர். இதனால், வழக்கு முடித்து வைக்கப்பட்டு ராஜேஷ் குமார் விடுவிக்கப்பட்டார். மைனர் பெண்ணாக இருந்த கவிதாவும் 18 வயது நிரம்பி திருமண வயதை எட்டினார்.

    இதையடுத்து, கவிதாவை அவரது பெற்றோர், ராஜேஷ் குமாருடன் சேர்த்து வைத்தனர். இந்த நிலையில், வழக்கு சம்பந்தமாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, ராஜேஷ்குமாரும், அவரது பெற்றோரும், அந்த வக்கீலை அணுகினர்.

    வக்கீல், பணத்தை தருவதாக கூறினார். ஆனால், பணத்தை இன்னும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ் குமார், தனது தாய் ஜெயந்தி மற்றும் உறவினர்கள் அமுலு, வேளாங்கன்னி ஆகியோருடன் இன்று காலை அட்வகேட் ராமநாதன் நகரில் உள்ள வக்கீல் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வக்கீல் வீட்டில் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வக்கீலின் தந்தை மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார்.

    இதுப்பற்றி, தகவலறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து, ராஜேஷ்குமார் உள்பட தர்ணாவில் ஈடுபட்ட பெண்களை, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

    இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள், கலெக்டர்கள் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப் படங்கள் இடம் பெற்றன.

    மேலும், அரசு திட்டங்கள் குறித்தும், நலத் திட்டங்களை எவ்வாறு பெறுவது,யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

    புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதியாக புகைப்படக் கண்காட்சி உதவியாக இருந்தது என பொதுமக்கள் பாராட்டினர்.

    இப்புகைப்படக் கண் காட்சியை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    காரைக்குடி அருகே குடிபோதையில் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகத்துக்குட்பட்ட சாக்கவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராச்சாமி (வயது47), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர் களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    வீராச்சாமி குடி பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி, கணவரை பிரிந்து விட்டார்.

    அதன் பிறகு வீராச்சாமி தனது தாய் பிடாரி என்ற மாரியாயி வீட்டில் மகன், மகள்களுடன் வசித்து வந்தார்.

    வீராச்சாமியின் மூத்த மகள் முத்துமீனாள் (19), பிளஸ்-2 முடித்துள்ளார். 2-வது மகள் முத்துலட்சுமி காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது சகோதரன், ஆந்திர மாநிலத்தில் வேலை செய்து வருகிறார்.

    இதனால் முத்துமீனாள் மட்டும் பாட்டி வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு, வீராச்சாமி குடிபோதையில் தொந்தரவுகள் கொடுத்ததாக சாக்கோட்டை போலீசில் முத்துமீனா புகார் செய்தார்.

    அதில், தன்னை தந்தை வீராச்சாமி தாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். இதன்பேரில் கைதான அவர், அதன் பிறகு வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீராச்சாமி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அங்கு இருந்த மகள் முத்துமீனாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமீனா சத்தம்போடவே, அவரது காலில் கட்டையால் வீராச்சாமி தாக்கினார்.

    இதற்கிடையில் முத்து மீனா அலறல் சத்தம் கேட்டு அவரது பாட்டியும், வீராச்சாமியின் தாயாருமான பிடாரி என்ற மாரியாயி அங்கு வந்தார். மகனின் செயலை அவர் கண்டித்தார். ஆனால் வீராச்சாமி அவரை பிடித்து கீழே தள்ளினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிடாரி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகனை வெட்டினார். பலத்த வெட்டுக்காயம் அடைந்த வீராச்சாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சாக்கோட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    மானாமதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள காட்டுஉடைகுளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகன் மருது (வயது 9). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    4 நாட்களுக்கு முன்பு மருது காய்ச்சலால் அவதிப்பட்டான். உடனடியாக அவனை மானாமதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருதுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மருதுவை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு மருதுவை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறினார்கள். இந்த நிலையில் மருது பரிதாபமாக இறந்தான்.

    இதனால் காட்டு உடைகுளம் பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உடனே மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி அருகே சுற்றுலா வந்த பஸ் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காரைக்குடி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குடிவாடாவைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு பஸ்சில் சுற்றுலா புறப்பட்டனர்.

    இவர்கள் நேற்று ராமேசுவரம் சென்று விட்டு இரவு திருச்சிக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய மருத்துவமனை அருகில் உள்ள ராமேசுவரம்- திருச்சி ரோட்டில் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வந்த வேன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ரோட்டோரமாக பஸ்சை திருப்பினார். எதிர்பாராத விதமாக பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

    பஸ்சில் இருந்த அனைவரும் கூக்குரலிட்டனர். அக்கம், பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காளையார்கோவிலில் கழுத்தை நெரித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருக்கும், திருவேகம்புத்தூர் குலமங்கத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணு (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 1¼ வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    குடிப்பழக்கம் உள்ள பாலாஜி அடிக்கடி குடித்துவிட்டு மாரிக் கண்ணுவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மாரிக்கண்ணு மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மாரிக் கண்ணு திருவேகம்புத்தூரில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றார். வீடு திரும்பிய போது சில பாத்திரங்களை காணவில்லை. பாத்திரங்கள் எங்கே? என்று கணவரிடம் மாரிக்கண்ணு கேட்டார். அதற்கு அவர் அவற்றை அடகு வைத்து தான் மது குடித்ததாக கூறினார். இதனால் கணவன் -மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாரிக் கண்ணுவின் தாயார் தனது மகளுக்கு போன் செய்தார். அவர் எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் மகள் வீட்டுக்கு விரைந்து வந்தார். கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது.

    இது குறித்து காளையார் கோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கல்யாண குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாரிக்கண்ணு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மாரிக்கண்ணுவை, கணவர் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தற்போது பாலாஜி தலைமறைவாகி உள்ளார். அவர் பிடிபட்டால் தான் முழு விபரமும் தெரியவரும்.

    இதற்கிடையே பாலாஜியின் தந்தை, தம்பியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ.க்கு “எடப்பாடிக்கு ஆதரவளிக்காவிட்டால் குடும்பத்தோடு தீர்த்துகட்டுவோம்” என்று கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மாரியப்பன் கென்னடி. டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது கர்நாடக மாநிலம் குடகில் தங்கி உள்ளார்.

    மாரியப்பன் கென்னடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ளது. இங்கு அவரது உதவியாளர் விஜயகுமார், தினமும் வந்து தொகுதி மக்கள் தரும் மனுக்களையும் தபாலில் வரும் மனுக்களையும் வாங்கி வைப்பது வழக்கம்.

    தபாலில் வந்த கடிதங்களை அவர் பிரித்து பார்த்தபோது ஒரு கடிதம் கொலை மிரட்டல் விடுத்து வந்திருந்தது.

    அந்த கடிதத்தில், “தினகரனுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. எடப்பாடி-ஓ.பி.எஸ். ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மானாமதுரை நகர் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கரூர் முத்துக்குமார் என்ற பெயரில் சென்னையில் இருந்து பதிவுத்தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது. மிரட்டல் கடிதம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



    கண்ணங்குடி வட்டாரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ளது கண்ணங்குடி. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, குடிநீர் திட்டங்கள், வேளாண்மை துறை திட்டம், கண்மாய், ஊருணிகளில் தூர்வாருதல் உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    மேலும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் சென்று அங்குள்ள ரேசன் கடைகள், பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் லதா ஆய்வு செய்தார்.

    கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தானூர் ஊராட்சியில் பிரதான சாலையில் இருந்து குறிச்சிவயல் வரை செல்லும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் லதா நேரடியாக ஆய்வு செய்து, பருவமழை காலம் தொடங்க உள்ளதால் சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கண்ணங்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், ஊராட்சி ஒன்றிய மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து அனுமந்தக்குடி ரேசன் கடையில் ஆய்வு செய்து அரிசி, சீனி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்று அங்கிருந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் கண்ணங்குடி தொடக்கப்பள்ளி சத்துணவு மையம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    ×