என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மேலப்பசலை கிராமம். இங்கு சுமார் 390 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் கிராமத்தின் பெயர் மேலப்பசலை என்பதற்கு பதிலாக மேலபிடவூர் என மாறி இருந்தது. அதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பலரது ஸ்மார்ட் கார்டில் பதிவிடப்பட்டிருந்த விபரங்கள் அனைத்தும் தவறாக இருந்தன.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த கிராமத்தினர் கேட்டபோது, தவறை சரி செய்து தருவதாகவும், தற்போது பொருட்கள் வாங்கி கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் அந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் அந்த கிராம மக்களிடம் ஸ்மார்ட் கார்டுகளை திரும்ப பெற்றுக்கொண்டு விரைவில் அந்த கார்டுகளில் திருத்தம் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்த ஸ்மார்ட் கார்டிலும் கிராமத்தின் பெயரே மாறி உள்ள சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிவகங்கை தாலுகா மதகுபட்டி அருகே உள்ள பெருங்குடியில் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு மானாமதுரையை சேர்ந்த முருகேசன் மகள் விமலா (வயது 18), சிவகங்கை தாலுகா மாத்தூரை சேர்ந்த பிச்சை மணி மகள் லாவண்யா (17) ஆகியோர் தங்கி அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார்கள்.
இதனால் பதட்டமடைந்த மாணவிகளின் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தொண்டு நிறுவன இயக்குநர் ஜீவானந்தம் மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்து 2 மாணவிகளை தேடி வருகிறார்.
சிவகங்கை:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டடவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.மேலும் இந்த காய்ச்சல் பல இடங்களில் உயிர்ப்பலியும் வாங்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கீழாயூர் காலனி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 35) என்பவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
சேலத்தில் வேலை பார்த்து வந்த இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அழகர்சாமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் டெங்குவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறவந்தவர்களில் 4 சிறுவர்கள் உள்பட 7 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்திலும் டெங்குவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள பி.எல்.பி. பேலஸ் மகாலில் இன்று தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காலை தொடங்கியது.
கூட்டத்தில் பங்கேற்பதற் காக கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் 11.30 மணிக்கு காரில் வந்து இறங்கினர். அவர்களுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன் மற்றும் முன்னாள் எம்.எல். ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கட்சி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் பதவி ஏற்க வேண்டும். கட்சியில் எத்தகைய முடிவுகளையும் எடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம் வழங்குவது, துணை செயலாளராக சுதீஷ், அவைத்தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ், பொருளாளராக இளங்கோவன் ஆகியோரை நியமனம் செய்வது, நீட் தேர்வில் குழப்பம் ஏற்படுத்திய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்,

தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள புதிய கவர்னருக்கு வாழ்த்து தெரிவிப்பது, மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை முழுமையாக வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, விஜயகாந்த், பிரேமலதா மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள பி.எல்.பி. பேலஸ் மகாலில் இன்று தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவரது மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங் கோவன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் என 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தே.மு.தி.க. கட்சி கொடியை விஜயகாந்த் ஏற்றினார். தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். அதனை தொடர்ந்து இறுதியாக விஜயகாந்த் பேசுகிறார்.
அப்போது பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
பொதுக்குழுவுக்கு அழைப்பு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கடுமையான கெடுபிடிகள் இருந்ததால் தொண்டர்கள் பொதுக்குழுவுக்கு செல்ல முடியவில்லை.

பொதுக்குழுவையொட்டி காரைக்குடி நகர் முழுவதும் கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர்.
காரைக்குடி நகர் தே.மு.தி.க. தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள குருந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சவுந்தரம் (வயது 25). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சவுந்தரம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் சவுந்தரத்தின் உடலை எரித்து விட்டனர்.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜா கல்லல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் காரைக்குடி டி.எஸ்.பி. பாஸ்கரன் விசாரணை நடத்தி பெண் தற்கொலை செய்ததை போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரித்ததாக கணவர் பழனியப்பன், அவரது தந்தை சுகுமார், உறவினர்கள் கண்ணன், சரவணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
சிவகங்கை தாலுகா மதகுபட்டி அருகே உள்ள வீட்டனேரியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி வள்ளிமுத்து. கடந்த சில மாதங்களாக 2 பேருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் விரக்தி அடைந்த வள்ளிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஜீவாநகரை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது மகள் ஜனனி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜனனி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த மணிமேகலை மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2016-17ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. தமிழக அரசின் துரித நடவடிக்கையால் ரூ. 80 கோடி நிதி உதவி பெற்று மாவட்டத்தில் வழங்கப்பட்டது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 212 கோடி நிதி உதவி பெறப்பட்டு 60 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் கணக்கு எடுத்ததில் ஒருசில தவறுகளால் 19 கோடி கணக்கில் உள்ளது. இவைகள் விரைவில் சரிசெய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இது தவிர நவம்பர் 31-ந்தேதியுடன் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திய 6 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 40 கோடி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வரவேண்டி உள்ளது. விரைவில் அது பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முன் கூட்டியே விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு நவம்பர் 31-ந்தேதி முடிய இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, கள்ளங்குடி, கல்லல், சாக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஒன்றியங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டு இன்சூரன்ஸ் பணம் கட்ட சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை, வருவாய் துறை ஊழியர்கள் இணைந்து நெல், கரும்பு பயிருக்கு பிரீமியம் செலுத்த வழிகாட்டுவார்கள். இந்த சிறப்பு முகாமை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதே முறையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வாழை பயிரிட்ட விவசாயிகள் இன்சூரன்ஸ் செலுத்த வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதற்குள் பிரீமியம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே வாழை பயிர் பாதிப்பு ஏற்பட்டால் பயிர் காப்பீட்டுத் தொகை பெற முடியும்.
தமிழகத்திலேயே இது வரை மழை அதிகம் பெய்ததில் சிவகங்கை மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. 85 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிட விவசாயிகள் பணிகளை தொடங்கி உள்ளார்கள். பயிர் இன்சூரன்ஸ் தொகை சிவகங்கை மாவட்டத்தில்தான் அதிக தொகையை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை:
மதுரையை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மகள் ஹேமபிரியா (வயது 21). இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா தயாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹேம பிரியா அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து தங்கப் பாண்டி மானாமதுரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
சிவகங்கை தாலுகா மேலச்சாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் வனிதா (20). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று சிவகங்கை செல்வதாக கூறி விட்டு சென்ற வனிதா வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து வனிதாவை தேடி வருகிறார்.
சிவகங்கை நகர் அருகே உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது 32). இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை பூட்டப்பட்டிருந்தது. நேற்று மதியம் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 செல்போன்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம் ஆகும்.
நேற்று மாலையில் அருண் பாண்டியன் கடைக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது செல்போன்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அருண் பாண்டியன் சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
சிவகங்கை:
தேவகோட்டை நகர் ஆலம்பட்டர் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி (வயது 66). இவர், அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மீனாட்சியிடம், பேப்பரை காட்டி அதில் உள்ள முகவரியை கேட்டனர்.
அதனை வாங்கி மீனாட்சி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
அதிர்ச்சிய டைந்த மீனாட்சி, தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற 2 பேரை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் கடந்த 15 நாட்களாக ராஜகம்பீரம், பீக்குளம், காட்டுஉடைகுளம், மேலப்பிடாவூர், கீழமேல்குடி, உள்பட பல ஊர்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
இதனால் மானாமதுரை மருத்துவமனைக்கு தினந்தோறும் சகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.பீக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி (வயது50) மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பலியானார்.
தொடர்ந்து காட்டு உடைகுளம் கிராமத்தில் மருது (17) என்ற மாணவனும், 65 வயது மூதாட்டியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
இந்நிலையில் ராஜ கம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசண்முகம் என்பவரது மனைவி பிரியா (30) காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.






