என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை அருகே விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ளது பொன்னடிபட்டி கிராமம். இங்குள்ள மெயின் ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு தப்பினர்.

    மறுநாள் காலை கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உலகம்பட்டி போலீசாருக்கும், கோவில் நிர்வா கத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கோவில் அறங்காவலர் பழனிவேல் போலீசில் கொடுத்துள்ள புகாரில் உண்டியல் பணம் 20 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டையில் 4 வீடுகளின் கதவை உடைத்து புகுந்த மர்ம மனிதர்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அண்ணா சாலை முதல் வீதியில் வசிப்பவர் கருப்பையா (வயது 45). கூட்டுறவு சங்க வங்கியில் வீட்டுவசதி பிரிவு தலைவராக உள்ளார்.

    இவரது மகளும், மனைவியும் இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை பஸ் ஏற்றி விடுவதற்காக கருப்பையாவும் வீட்டை பூட்டிச் சென்றார்.

    சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன.

    அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பீரோவில் இருந்த மோதிரம், மூக்குத்தி, தங்கச்சங்கிலி என 12 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பதாக அவர் தெரிவித்தார்.

    அண்ணாசாலை 2-வது வீதியில் வசிப்பவர் ராமநாதன், ஓட்டல் நடத்தி வரும் இவர், இன்று காலை 5 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஓட்டலுக்குச் சென்று விட்டார்.

    இதனை பயன்படுத்தி யாரோ கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ராமநாதன் வீட்டின் மாடியில் வசிப்பவர்கள், வாசல் தெளிக்க கீழே வந்தபோது, கதவு உடைந்திருப்பதை பார்த்து ராமநாதனுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் விரைந்து வந்து பார்த்து விட்டு, வீட்டில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போயிருப்பதாக போலீசில் தெரிவித்துள்ளார்.

    அதே வீதியில் வசிக்கும் போஸ் என்ற செல்லம் என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் கதவை உடைத்து புகுந்துள்ளனர். ஆனால் இங்கு எதுவும் கொள்ளை போனதாக தெரியவில்லை.

    அதே பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமியின் தங்கை வீட்டிலும் மர்ம நபர்கள் கதவை உடைத்து புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்தால் தான் கொள்ளை போன நகை மற்றும் பணம் குறித்த விவரம் தெரியவரும்.

    ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அந்தப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முகமது எர்ஷாத் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    திருப்பத்தூர் தாலுகா வீராமதி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 54 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் கீழச்செவல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டை தாலுகா சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 68). விவசாயியான இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த போது மர்ம நபர்கள் இவரது வீட்டில் புகுந்து 11 பவுன் நகை, எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து சோமநாத புரம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சந்திரசேகர் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    காரைக்குடி அருகே புதுவயல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாச கோபாலன் (65). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து சாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கடந்த ஓராண்டில் மட்டுமே தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாதது போலீசார் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் திடீரென்று வேலையை புறக்கணித்து அரசு ஆஸ்த்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் மானாமதுரை சாலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளது.

    இங்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    இங்த மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள் காவலாளிகள் என 280 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை திடீரென்று வேலையை புறக்கணித்து அரசு ஆஸ்த்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் வார விடுமுறை அளிக்க வேண்டும் சம்பளத்தை 5-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    போராட்டம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை பொறுப்பாளர் குழந்தை ஆதித்தன் அங்கு வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனையில் துப்புரவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட் டது. தற்போது டெங்கு பாதிப்பால் அதிகம் பேர் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வதால் அடிக்கடி குப்பைகள் குவியும். இது நோய்பரவ வாய்ப்பாகி விடும்.

    எனவே மருத்துவமனை நிர்வாகம் விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி துப்புரவு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கிய தனியார் ரத்த பரிசோதனை நிலையத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    காரைக்குடி:

    தமிழகம் முழுமுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜி.டி. நக ரில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் இன்று நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் தலைமையில் அதிகாரிகள் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ரத்த பரிசோதனை நிலையத்தில் தேக்கி வைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் வடிவேலுவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்த மேல் நடவடிக்கைக்காக சப்-கலெக் டர் ஆஷா அஜித்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து ரத்த பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காரைக்குடி-மதுரையில் அங்கன்வாடி ஊழியர்-சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த சங்கராபுரம் அருகே உள்ள ஓ.ஏ. காலனியைச் சேர்ந்தவர் அமராவதி (வயது 60). அந்தப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமராவதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாக வில்லை.

    ரத்த பரிசோதனையில் டெங்கு இருப்பது உறுதியானது. எனவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மருத்துவக்குழுவினர் உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகாமல் அமராவதி பரிதாபமாக இறந்தார்.

    மதுரை அண்ணாநகர், யாகப்பா நகரைச் சேர்ந்த வர் விஜய். வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பாரதிவேல் (3). தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

    காய்ச்சலால் அவதிப்பட்ட பாரதி வேலை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாரதிவேல் பரிதாபமாக இறந்தான்.

    சிவகங்கை அருகே கார் விபத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் பலியானார்.
    சிவகங்கை:

    ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சேவபாண்டியன் (வயது 57). இவர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த சேவபாண்டியன், வெளிநாட்டிற்கு ரெடிமேட் துணிகள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார்.

    சென்னையில் இருந்து அடிக்கடி சொந்த ஊரான ராமநாதபுரம் வந்து செல்வது வழக்கம். அதன்படி ராமநாதபுரம் வந்த சேவபாண்டியன் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டார்.

    இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து கார் மூலம் இன்று அதிகாலை அவர் திருச்சி புறப்பட்டார். மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த பாஸ்கரன் காரை ஓட்டினார். சேவபாண்டியனுடன், மணி என்பவரும் காரில் சென்றார்.

    கார் சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் ஒக்கூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேவபாண்டியன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பாஸ்கரன் காயத்துடன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான சேவபாண்டியன் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    பலியான சேவபாண்டியனுக்கு சுதா (44) என்ற மனைவியும், யோகேஸ்வரன், மோகன் என்ற மகன்களும் உள்ளனர். மோகன் சென்னையில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார்.

    மூதாட்டியிடம் நகை பறித்தவர்களை பிடிக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    காரைக்குடி:

    காரைக்குடி செஞ்சை அய்யனார்வீதியைச் சேர்ந்த வையாபுரி மனைவி பெரியாயி அம்மாள் (வயது 67). இவர் நேற்று மதியம் அதே தெருவில் உள்ள மகன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பெரியாயி அம்மாள் அணிந்திருந்த கவரிங் நகையை தங்க நகை என்று நினைத்து பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பவர் திருடர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார். திருடர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை வெட்டிவிட்டு தப்பி விட்டனர்.

    காயமடைந்த வாலிபர் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்.

    தேவகோட்டையில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் சத்திரத்தார் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பஞ்சவர்ணம்.

    இவர் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் பஞ்சவர்ணம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பஞ்ச வர்ணத்திடம் முகவரி கேட்பது போல் நடித்து கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து பஞ்சவர்ணம் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் முகம்மது எர்சத் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, வழிபறி, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பெண்கள் வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

    எந்தவித பயமும் இன்றி கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்ற சம்பவங்களை குறைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆந்திராவில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் வெட்டிக் கடத்தியதாக திருப்பத்தூரை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    ஆந்திர மாநிலம் கடப்பா மற்றும் சேஷாசல வன பகுதியில் செம்மரங்கள் கடத்தலை தடுக்க ஆந்திர தனிப்படையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடப்பா மாவட்டம் வீரயபல்லி மண்டலம் சின்னமாண்டம் வன பகுதியில் உதவி போலீஸ் சூப்பிரெண்டு கிருஷ்ணாராவ் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது செம்மரங்களை கும்பல் ஒன்று வெட்டி அடுக்கி கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்டதும் கும்பல் தப்பி ஓடினர். அவர்களில் 8 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் வெட்டிய 14 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சமாகும் பிடிப்பட்ட 8 பேரும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அவர்கள் குறித்து முழு விவரங்களை ஆந்திர போலீசார் வெளியிடவில்லை.

    அவர்களுடன் எத்தனை பேர் செம்மரம் வெட்ட வந்தனர். அழைத்து வந்த ஏஜெண்டுகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் லதா தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சி இடையமேலூர் ஊராட்சியில் பொது சுகாதாரத்துறை, பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லதா தலைமை தாங்கி டெங்கு ஒழிப்பு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி வரை கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் நடைபெறுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தற்போது இடையமேலூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்துவிதமான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    டெங்கு ஒழிப்பு பணியில் டாக்டர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், டெங்கு கள பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    இதுபோக தனியார் தொண்டு நிறுவனங்களும் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு சிவகங்கை ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் துப்புரவு பணிகளான ஏடிஸ் கொசு புழு ஒழிப்பு, கொசு மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) யசோதாமணி, உதவி இயக்குனர்(பஞ்சாயத்து)ரங்கசாமி, சிவகங்கை ஒன்றிய கிராம ஊராட்சிகள் ஆணையாளர் ஜஹாங்கீர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர், மாணவர் பரிதாபமாக இறந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மேலபூவந்தியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அமுதன் (வயது6). திருப்புவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுதன் காய்ச்சலால் அவதிப்பட்டான். உடனடியாக மேலபூவந்தியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.

    எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதன் பரிதாபமாக இறந்தான்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேக்அப்துல்லா (30). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு காய்ச்சல் குணமாகாததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே அவர் பரிதாப மாக இறந்தார்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சேக் அப்துல்லாவின் உறவினர்கள் நயினார்கோவில்- தேவிபட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் பரமக்குடி தாசில்தார் ஜெயமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்தை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 20 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 321 பேரும், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 15 பேரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேருக்கு டெங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதால் தற்போது டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை.

    மாவட்டம் முழுவதும் 1100 கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஏ.டி.எஸ். கொசு ஒழிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    டெங்குவை கணக்கிடும் “செல் கவுண்டர்” கருவிகள் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 25 கருவிகள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இந்த உபகரணங்கள் வைக்கப்பட உள்ளது.

    டெங்கு காய்ச்சலுக்கு காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்த பெண் பலியானார். இதுகுறித்து சங்கரா புரத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது38), கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (30).

    கணவன்-மனைவி இருவரும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 2-ந்தேதி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த போது முத்துமாரிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்துமாரி பரிதாபமாக இறந்தார். மாரிமுத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சங்கரா புரத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×