என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர்,மாணவர் பலி
    X

    சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர்,மாணவர் பலி

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர், மாணவர் பரிதாபமாக இறந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மேலபூவந்தியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அமுதன் (வயது6). திருப்புவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுதன் காய்ச்சலால் அவதிப்பட்டான். உடனடியாக மேலபூவந்தியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.

    எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதன் பரிதாபமாக இறந்தான்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேக்அப்துல்லா (30). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு காய்ச்சல் குணமாகாததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே அவர் பரிதாப மாக இறந்தார்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சேக் அப்துல்லாவின் உறவினர்கள் நயினார்கோவில்- தேவிபட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் பரமக்குடி தாசில்தார் ஜெயமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்தை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 20 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 321 பேரும், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 15 பேரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேருக்கு டெங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதால் தற்போது டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை.

    மாவட்டம் முழுவதும் 1100 கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஏ.டி.எஸ். கொசு ஒழிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    டெங்குவை கணக்கிடும் “செல் கவுண்டர்” கருவிகள் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 25 கருவிகள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இந்த உபகரணங்கள் வைக்கப்பட உள்ளது.

    Next Story
    ×