என் மலர்
செய்திகள்

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஸ்டிரைக்
சிவகங்கை:
சிவகங்கை நகர் மானாமதுரை சாலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளது.
இங்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இங்த மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள் காவலாளிகள் என 280 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை திடீரென்று வேலையை புறக்கணித்து அரசு ஆஸ்த்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் வார விடுமுறை அளிக்க வேண்டும் சம்பளத்தை 5-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை பொறுப்பாளர் குழந்தை ஆதித்தன் அங்கு வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனையில் துப்புரவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட் டது. தற்போது டெங்கு பாதிப்பால் அதிகம் பேர் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வதால் அடிக்கடி குப்பைகள் குவியும். இது நோய்பரவ வாய்ப்பாகி விடும்.
எனவே மருத்துவமனை நிர்வாகம் விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி துப்புரவு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






