என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் சத்திரத்தார் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பஞ்சவர்ணம்.
இவர் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் பஞ்சவர்ணம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பஞ்ச வர்ணத்திடம் முகவரி கேட்பது போல் நடித்து கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து பஞ்சவர்ணம் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் முகம்மது எர்சத் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்.
தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, வழிபறி, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பெண்கள் வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.
எந்தவித பயமும் இன்றி கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்ற சம்பவங்களை குறைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






