search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் செல்லூர் ராஜூ"

    ‘ஆச்சி’ குறித்து கிண்டலான கருத்து கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூக்கு நகரத்தார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு, ‘அவரால்(ரஜினிகாந்த்) காரைக்குடி ஆச்சியை வேண்டுமென்றால் பிடிக்கலாமே தவிர, தமிழக ஆட்சியை பிடிப்பது மக்கள் கையில் தான் இருக்கிறது’ என்று கிண்டலாக பதிலளித்தார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரை கண்டித்து காரைக்குடியில் பல்வேறு இடங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதுதொடர்பாக காரைக்குடி நகரத்தார் சங்க (சென்னை) தலைவர் அ.மு.க.ரெங்கநாதன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-


    ‘ஆச்சி’ என்ற சொல் நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் வழக்கில் இருக்கிறது. ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பாக ‘காரைக்குடி ஆச்சி’ என்று நகரத்தார் சமூகத்தை சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சு. ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல். ஒரு சமூகத்தின் மதிப்புக்குரிய பெண்களை பொறுப்பில் இருக்கிற அமைச்சர் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல்.

    அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்தார் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவால் வீதிக்கு வந்து போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடையும். சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘அமைச்சர் செல்லூர் ராஜூ நகரத்தார் இன பெண்களை பற்றி இழிவாக பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. அவர் பேசிய விதம் எங்கள் மனதை பெரிதும் புண்படுத்திவிட்டது. எனவே முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி அமைச்சர் செல்லூர் ராஜூவை உடனடியாக மன்னிப்பு கேட்க ஆவண செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

    அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்தும், அவரை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரியும் காரைக்குடி நகர சிவன் கோவில் அருகே உள்ள 63 நாயன்மார்கள் மடம் முன்பு நகரத்தார்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத்தார் சமூக ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நகரத்தார் பெண்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் முகவரிக்கு செருப்பு அடங்கிய ஏராளமான பார்சலை அனுப்பி வைத்தனர்.  #ADMK #SellurRaju #Rajinikanth
    ×