என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
    X

    மானாமதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

    மானாமதுரை அருகே இன்று அதிகாலை நடந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது பதினெட்டாம் கோட்டை கிராமம். இந்த ஊரை சேர்ந்த ராமன் மனைவி பாப்பாத்தியம்மாள் (வயது 65). இவரது மகன்கள் பிச்சை (40), சத்தியநாதன் (35).

    இதில் பிச்சை வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி வனிதா (35). சத்தியநாதனுக்கு திருமணம் ஆகவில்லை. மாற்றுத்திறனாளி. விவசாய குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    இவர்களது வீட்டை சுற்றிலும் இரும்பு வலையால் ஆன வேலி போடப்பட்டு இருந்தது. மானாமதுரை பகுதியல் நேற்று இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. இதில் வீட்டின் மேல் பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார வயர் அறுந்து வேலி மீது விழுந்தது.

    இன்று அதிகாலை வனிதா வீட்டு வாசல் கதவை திறந்து வேலி அருகில் சென்றார். அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. வேலியை தொட்ட வனிதா மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் அலறியபடி சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மாமியார் பாப்பத்தியம்மாளும், மைத்துனர் சத்தியநாதனும் ஓடிவந்தனர். அவர்கள் வனிதா இறந்து கிடந்தது தெரியாமல் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது இரு வரையும் மின்சாரம் தாக்கியது. தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.



    இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியானது, பதினெட்டாம் கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×